செவ்வாய், 25 நவம்பர், 2008

ஆராய்ச்சிப் பேரறிஞர்

ஆராய்ச்சிப் பேரறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமியின் வாழ்வும் பணியும்

- க.துரையரசன்“தமிழையே வணிகமாக்கித்
தன்வீடும் மக்கள் சுற்றம்
தமிழிலே பிழைப்பதற்கும்
தலைமுறை தலைமுறைக்குத்
தமிழ் முதலாக்கிக் கொண்ட
பல்கலைத் தலைவன் எல்லாம்
தமிழ்ச் சீனி வேங்கடத்தின்
கால்தூசும் பெறாதார் என்பேன்” (தமிழ் நிலம் - 14.10.1952)

என்று பாரதிதாசனாலேயே பாராட்டப்பட்டவர் தமிழறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி ஆவார். இவருக்கு 16.12.1999-இல் நூற்றாண்டு விழா தமிழக அரசால் நடத்தப்பட்டது. நூற்றாண்டு விழா கண்ட நாயகரின் வாழ்வும் பணியும் குறித்து விளக்கியுரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தோற்றம் :

இவர் சென்னையில் உள்ள மயிலாப்பூரில் திரு.சீனிவாச நாயக்கருக்கும் திருமதி.தாயார் அம்மாளுக்கும் மூன்றாவது மகனாராக 16-12-1900-இல் பிறந்தார். இவரது தந்தையாரும் மூத்த சகோதரரும் சித்த மருத்துவத் துறையில் சிறந்து விளங்கினர். இவர்தம் இளைய சகோதரர் சீனி.கோவிந்தராசனாரும் இவரும் தமிழ்ப் பணியில் நாட்டம் மிக்கவர்களாகத் திகழ்ந்தனர்.

இளமையும் கல்வியும் :

இவர்தம் இளைய சகோதரர் திரு.சீனி.கோவிந்த ராசனாரின் தமிழ்ப்பணி நாட்டம் கண்ட இவருக்கும் தமிழ் மொழியின் மீதும் இலக்கியங்களின் மீதும் ஆர்வம் தலைப்பட்டது. கோவிந்தராசனாரிடம் தமிழ் பயிலத் தொடங்கிய இவர் பின்னர் திருமயிலை மகாவித்துவான் சண்முகம் பிள்ளை அவர்களிடமும் சென்னைக் கிறித்தவக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் ச.த.சற்குணம் அவர்களிடமும் கல்வி பயின்றார். இவர் நடுத்தரப் பள்ளி ஆசிரியர் பயிற்சியும், எழும்பூர் நுண்கலைப் பள்ளியில் சித்திரமும் பயின்றார். தமிழ் மொழியில் மட்டுமின்றி ஆங்கிலம், மலையாளம், கன்னடம், துளு ஆகிய மொழிகளிலும் போதிய அறிவுத் திறம் பெற்று விளங்கினார். இவர் தம் பதினாறாம் அகவை முதல் தமிழ் நூல்களைச் சுவைத்துப் படிக்கும் திறம் பெற்றிருந்த இவர் ‘செந்தமிழ்’ முதலிய உயர்ந்த தமிழ் வெளியீடுகளை விடாது படித்துத் தம் புலமையைப் பெருக்கிக் கொண்டார்.

பணி :

வறுமையில் வாடிய தம் குடும்பத்தைக் காக்கும் பொருட்டு மோட்டார் உதிரிப்பாகங்கள் விற்பனைக் கடையில் விற்பனையாளராகப் பணியாற்றினார். அப்பணியினின்றும் விலகி ‘திராவிடன்’ என்ற இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவராகப் பணியாற்றினார். அப்பணியையும் புறந்தள்ளிய இவர் நடுத்தரப் பள்ளி ஆசிரியராக நீண்ட காலம் பணியாற்றினார். இப்பணியில் இருக்கும் போதுதான் தமிழ்ப்பணி ஆற்றுவதற்குரிய வாய்ப்பும் வசதியும் இவருக்கும் பல்கிப் பெருகின எனலாம்.

பண்பு நலன்கள் :

வறியராகப் பிறந்த இவர் பண்பு நலன்களில் வளனாராக விளங்கியதை அறிய முடிகிறது. இவர் அடக்கமும், எளிமையும், மனித நேயப் பற்றும் உடையவர். எப்பொழுதும் தூய, ஒழுங்கான சாதாரண உடையையே அணியும் பழக்கம் உடைய இவர் ஆடம்பர வாழ்க்கையைக் கிஞ்சிற்றும் விரும்பாதவர். பணக்காரர்கள் உள்ள இடங்களுக்கு அழைப்பு இல்லாமல் ஒரு போதும் செல்லவே மாட்டாராம் இவர்.

அறிஞர்களின் மதிப்பீடு :

இவ்வறிஞரைப் பற்றிய சில அறிஞர் பெருமக்களின் கருத்துகளை இங்குச் சுட்டிக் காட்டுவது பொருத்தமாக இருக்கும். “இவர், செய்வனத் திருந்தச் செய்யும் பண்பினர் ; எளிய வாழ்வு மேற்கொண்டு அமைதியாக இருந்து உயரிய தொண்டாற்றும் இயல்பினர்” என்று மு.வரதராசனார் பாராட்டுகிறார். (மறைந்து போன தமிழ் நூல்கள், பக்கம் V)

இவர், நல்லொழுக்கம் வாய்ந்தவர் என்றும் நல்லோருடைய கூட்டுறவைப் பொன்னே போல் போற்றுபவர் என்றும் ஆண்டில் இளையவராயினும் ஆராய்ச்சித் துறையில் முதிர்ந்தவர் என்றும் சுவாமி விபுலானந்தர் இவரது பண்பு நலன்களையும் ஆய்வு நுட்பத்தையும் எடுத்தியம்பியுள்ளார். (கிறித்தவமும் தமிழும், முகவுரை, பக்கம் 9)

திரு.வி.க, இவரைச் சீர்திருத்தக்காரர் ; ஆராய்ச்சியாளர் ; காய்தல் உவத்தல் அகற்றி எதையும் நோக்குபவர் என்று குறிப்பிடுகிறார். (இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம், பக்கம் xiv)

இவரின் தேடல், உழைப்பு, இலக்கிய நோக்கு, விமர்சனப் போக்கு, புலப்பாட்டுத் திறன் யாவராலும் போற்றுதற்குரியன. கலைகள் பற்றிய ஆய்வு நூல் அளித்தவர்களில் இவர் முன்னோடி. இலக்கிய ஆராய்ச்சி, கல்வெட்டாராய்ச்சி, நாணயவியல் முதலிய துறைகளில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே முத்திரை பதித்த முதல் வரிசை ஆய்வாளர். இவரின் நூல்கள் அனைத்தும் சீனியாய், கற்கண்டாய் காலமெல்லாம் இனிப்பவை என்று டாக்டர் ச.மெய்யப்பன் இவரது பணியைப் போற்றுகின்றார். (தமிழர் வளர்த்த அழகுக் கலைகள், பக்கங்கள் V-Vi)

ஒரு தனியார் பள்ளியில் தொடக்க நிலை ஆசிரியராக இருந்து மறைந்த அறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி வரலாற்றுக்கும் தமிழியலுக்கும் அளித்த ஆய்வுப் பங்களிப்புகளுக்கு நிகரான ஒன்றை இதுவரை எந்தப் பல்கலைக்கழகமும் நிகழ்த்தியது இல்லை என்று சுந்தரனார் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் க.ப.அறவாணன் அறுதியிட்டுக் கூறியுள்ளார். (தினமணி-14.12.1998)


தனி ஒரு மனிதன் நிகழ்த்திய ஆய்வுகளை இன்று வரை ஒரு பல்கலைக் கழகம் கூட நிகழ்த்தவில்லை என்பதன் மூலம் இவ்வறிஞர்தம் ஆய்வுப் பணியின் ஆழமும் அகலமும் நன்கு புலப்படும்.

பிறர் சிந்தியாத விதத்திலும், பிறர் கூறாதவகையிலும் உண்மைகளைத் தலைச் சுமைந்து, தமிழ் மக்களுக்கு ஒட்பம் (Wisdom) வழங்குவனவாக இவரது நூல்கள் அமைந்துள்ளன என்று இவ்வறிஞரின் மாணவரான ஊ.ஜெயராமன் குறிப்பிடுவதன் வழி (தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் - பக்கம் xvii) இவரது நூல்களின் தனித்தன்மையை விளங்கிக் கொள்ளலாம்.

கடும் உழைப்பாளி : சிறந்த வரலாற்றாசிரியர் ; நடுநிலை பிறழாத ஆராய்ச்சியாளர் ; தொல்பொருள் ஆய்வாளர் ; மொழியியல் அறிஞர் ; சமயப் பேரறிஞர் ; கலையியல் வல்லுநர் ; இலக்கியத் திறனாய்வாளர் ; தலை சிறந்த பண்பாளர் என்று இவரின் பண்பு நலன்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார் டாக்டர் ம.சத்தியமூர்த்தி அவர்கள். (தமிழுலகம் நினைக்க மறந்த தமிழறிஞர்கள் - பக்கம் 55)

இவை அனைத்திற்கும் மேலாக,
“தமிழுக்குத் தொண்டர் யார்க்கும்
தலைத் தொண்டன் ; அடிமை அல்லன்
. . . . . . .. . . . . . . .. . . . . . . . . . .
கொள்கையில் அசைக் கொணாத
இமயமும் தோற்கும் அண்ணல் . . . .
(தமிழ் நிலம் - 14.10.1952)
என்று பாவேந்தர் பாரதிதாசன் பாராட்டுவது இவரது சீரிய தமிழ்ப் பணிக்குச் சூட்டப்பட்ட வைரக் கீரிடம் ஆகும்.

இவர்களேயன்றி, இப்பெருமகனாரின் ஆராய்ச்சித் திறன், எழுத்துத் திறன், உழைப்புத் திறன் ஆகியவற்றைப் பாராட்டியப் பெருமக்களுள் குறிப்பிடத் தக்கவர்களாக பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார், டாக்டர் இராசமாணிக்கனார், ஒளவை டி.கே.சண்முகம், கி.வா.ஜகன்னாதன், கவிஞர் முடியரசன், டாக்டர். மு.ஆரோக்கியசாமி, ந.சஞ்சீவி, மீ.பா.சோமசுந்தரம், அழ.வள்ளியப்பா ஆகியோரைச் சுட்டலாம்.

அறிஞர் பெருமக்களுடன் தொடர்பு :

சதாசிவப் பண்டாரத்தார், அ.சிதம்பரநாதன், தெ.பொ.மீ., கா.வெள்ளைவாரணம், சாமி.வேலாயுதம், விபுலானந்த சுவாமிகள், பெரியார் ஈ.வெ.ரா., மறைமலையடிகள், ஜீவபந்து, ஸ்ரீபால், யாழ்ப்பாணம் இராஜ.அரியரத்தினம், குல.சபாநாதன், செக்கோஸ்லாவியா நாட்டவர் கமில் சுவலபில் போன்ற தம் சமகால அறிஞர் பெருமக்களோடு மயிலை சீனி.வேங்கடசாமி நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.

பட்டங்களும் பரிசுகளும் :

இவ்வறிஞருக்கு மணிவிழாக் கொண்டாடுவது எனச் சான்றோர்கள் முடிவு செய்தனர். அதன் பொருட்டுச் செந்தமிழ்ச் செல்வியில் மணிவிழா வேண்டுகோள் (சிலம்பு 36, பரல் 4, பக்கம் 177, டிசம்பர் 1960) ஒன்று வெளியிடப்பட்டது. 17.3.1961-இல் சென்னையில் உள்ள கோகலே மண்டபத்தில் சென்னை உயர்நீதிமன்ற நடுவர் மாண்புமிகு எஸ்.கணபதியாபிள்ளை அவர்கள் தலைமையில் இவருக்கு மணிவிழா சிறப்பாக நடைபெற்றது. மணிவிழா மலரைப் பேராசிரியர் மயிலை சிவமுத்து வெளியிட்டார். இவ்வறிஞரின் மணிவிழாச் சிறப்புகளை ‘மணிவிழா மாண்பு’ என்று தலைப்பிட்டுப் படங்களுடன் ‘செந்தமிழ்ச் செல்வி’ வெளியிட்டது. (சிலம்பு 35, பரல் 8, பக்கங்கள் 340-347, ஏப்ரல் 1961)

இம் மணிவிழாவில்தான் உயர்நீதி மன்ற நடுவர் மாண்புமிகு எஸ்.கணபதியா பிள்ளை அவர்களால் வழங்கப்பட்ட ‘ஆராய்ச்சிப் பேரறிஞர்’ என்ற பட்டத்தைச் சீனி.வேங்கடசாமி தம் வாழ்நாளில் கிடைக்கப் பெற்ற முதல் பட்டமாக உவகையுடன் ஏற்றுக் கொண்டார்.

மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தால் ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ என்ற பட்டமும் 4000 வெள்ளிப் பொற்காசுகளும் அன்றைய தமிழக ஆளுநர் மாண்புமிகு பிரபுதாஸ் பட்வாரி அவர்களால் இவருக்கு 29.3.1980-இல் வழங்கப்பட்டது. இவரது உடல்நிலை காரணமாக இவரால் நேரில் சென்று இப்பட்டத்தைப் பெற முடியவில்லை. ஆதலால், இவர் தம் பேத்தி அழகம்மை இப்பட்டத்தைப் பெற்று வந்தார். (சிலம்பு 54, பரல் 8, பக்கங்கள் 409-410, ஏப்ரல்’ 1980) இதே நாளில் ஒளவை.சு.துரைசாமி பிள்ளைக்கும் இப்பட்டம் வழங்கப் பட்டது. இவர் நேரில் சென்று இப்பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.
இவர் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆசிரியர் குழுவிலும் இருந்து பணியாற்றி வந்தார். அக்கழக நூலாசிரியருள் இவர் மிகச் சிறந்து விளங்கினார். எனவே கழகத்தின் 1008-வது வெளியீட்டு விழாவின் போது இவருக்குக் கேடயம் அளித்துப் பாராட்டப்பட்டது. (சிலம்பு 54, பரல் 9, பக்கங்கள் 431-432, மே’ 80)

தமிழ்ப்பணி :

தமிழ் இலக்கியம், இலக்கணம், சமயம், கலை, பண்பாடு, சொல்லாய்வு, மொழியாய்வு, தமிழக வரலாறு, கல்வெட்டு என்று பல துறைகளில் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களையும் நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ள இவ்வறிஞரின் தமிழ்ப்பணி பிறரின் தமிழ்ப் பணியினின்று மேம்பட்டும் உயர்ந்தும் நிற்கிறது. தமிழில் எதையோ எழுதினோம் - வெளியிட்டோம் என்றில்லாமல் கிடைத்தற்கு அரிய செய்திகளை எல்லாம் இவர் தொகுத்தும் வகுத்தும் விரித்தும் ஆய்ந்தும் வெளியிட்டுள்ளார்.

இனி, அவரது நூல்களின் தனித்துவம் குறித்து ஆராயலாம். இந் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் இலக்கிய வரலாறும், தமிழக வரலாறும் மிகுதியும் இருள் சூழ்ந்த நிலையிலேயே இருந்தமையை அனைவரும் அறிவர். அவ்வேளையில் இவர் எழுதிய நூல்கள் அத்துறைகளுக்குக் கலங்கரை விளக்கமாக அமைந்ததோடன்றி புதிய, அரிய கருத்துகளின் கொள்கலன்களாகவும் அமைந்திருந்தன. இவரது நூல்களில் பெரும்பான்மையும் பல துறைகளில் முதல் முயற்சியாக அமைந்துள்ளமையைக் காண முடிகிறது.

நிகழ் நூற்றாண்டின் தமிழ் இலக்கிய வரலாறே முழுமையாகக் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த நூற்றாண்டின் தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதுவது என்பது மிகக் கடுமையாகும். இக்கடும் பணியைப் ‘பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்’ என்ற நூலில் காண முடிகிறது. முறையான தமிழ் இலக்கிய வரலாற்றைப் பிறர் எழுதுவதற்கு முன்னோடியாக இந்நூல் அமைந்துள்ளதைப் பெருமையுடன் நினைத்துப் பார்க்க முடிகிறது.

ஒரு நாள் ஓரிடத்தில் பார்த்துவிட்டு வந்த புத்தகம் மறுநாள் தேடிச் செல்லும்போது அங்கு இருக்காது. மீண்டும் அப்புத்தகத்தைத் தேடிக் கண்டுபிடிப்பது எளிதன்று. அவ்வாறிருக்கையில் இவர் ‘மறைந்து போன தமிழ் நூல்கள்’ என்ற ஒரு நூல் எழுதி வெளியிட்டதை எண்ணிப் பார்க்கும் போது வியப்பே மேலிடுகிறது. அந்நூலை இவர் எழுதுவதற்கு ஒரு துயரச் சம்பவமே காரணமாக இருந்தது. திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்த இவர் இரண்டு குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வந்தார். இவ்விரண்டு குழந்தைகளும் எதிர்பாராத விதமாக இறந்து போயினர். அவ்விழப்பையும், சோகத்தையும் மறக்கும் வகையில் பல புத்தகங்களைத் தொடர்ந்து படித்துக் கொண்டே இருந்தார் இவர். யாப்பருங்கல விருத்தி என்ற நூலைப் படிக்கும் பொழுது அதில் காட்டப்பட்டிருந்த பல மேற்கோள் நூல்கள் மறைந்து போயிருந்ததை உணர்ந்தார். தம் வளர்ப்புக் குழந்தைகளின் மறைவு குறித்து வருத்திக் கொண்டிருந்த இவர் தமிழ்க் குழந்தைகளின் மறைவு (மறைந்து போன தமிழ் நூல்கள்) குறித்து எவரும் வருந்தவில்லையே என்று உணர்வுப் பூர்வமாகச் சிந்தித்ததன் விளைவே இந்நூலாகும். பெயரளவிலும், ஒரு சில பாடல் மற்றும் நூற்பா அளவிலும் காணப்படும் நூல்களைப் பற்றிய வரலாற்றுத் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. இந்நூல் இல்லையெனில் பல தமிழ் நூல்களின் பெயர்கள் கூட நமக்குத் தெரியாமலும் புரியாமலும் போகும் அவல நிலை ஏற்பட்டிருக்கும்.

கலைகள் பற்றிய ஆய்வு நூல் எழுதியவர்களுள் இவர் முன்னோடியாக விளங்குகிறார். கவின் கலைகள் குறித்துத் தமிழில் வெளிவந்த முழுமையான முதல் நூல் என்ற பெருமை இவரது ‘தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்’ என்ற நூலுக்கு உண்டு. தமிழர், தம் பழஞ்சிறப்புகளை எல்லாம் மறந்து போனதை எண்ணி வேதனை மிகுதியுடன் இந்நூலைப் படைத்தளித்தார் இவர். கவின் கலைகள் குறித்து இவர் எழுதிய மற்றொரு நூல் ‘நுண்கலைகள்’ என்பதாகும். இவை இரண்டும் தமிழர்களின் கலை நுட்பத்தை எடுத்தியம்பும் அரிய நூல்களாகும். பழங்காலத்துக் கொங்கு நாட்டின் முழு வரலாற்றை முதன் முறையாக இவர் ‘கொங்கு நாட்டு வரலாறு’ என்று எழுதியுள்ளார். சங்கச் செய்யுள்களிலே ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்ற துளு நாடு பற்றிய செய்திகளை எல்லாம் ஒன்றாகத் திரட்டித் தொகுத்து முறையாக வகைப்படுத்தி ‘துளு நாட்டு வரலாறு’ என்ற நூலை எழுதியுள்ளார்.

பல்லவர்கள் வரலாற்றைக் கூறும் வகையில் ‘மகேந்திர வர்மன்’, ‘நரசிம்ம வர்மன்’, ‘மூன்றாம் நந்தி வர்மன்’ ஆகிய இவரது நூல்கள் அமைந்துள்ளன. தௌ¢ளாற்றெறிந்த நந்திவர்மன் பற்றித் தமிழில் எழுதப்பட்ட முதல் நூல் என்ற பெருமை ‘மூன்றாம் நந்தி வர்மன்’ என்ற நூலுக்கு உண்டு. இவ்வரசனைப் பற்றிய சான்றுகள் முழுமையாக இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இந்நூலின்கண் அமைந்துள்ள இன்றியமையாப் பாடங்கள் இந்நூலுக்கு மேலும் மெருகூட்டுகின்றன. தமிழர்களின் பழைய வரலாற்றை அறிய விரும்புபவர்களுக்குப் ‘பழங்காலத் தமிழர் வாணிகம்’, ‘சாசனச் செய்யுள் மஞ்சரி’ ஆகிய நூல்கள் நல்ல துணையாக நிற்கின்றன.

இவர் சமயப் பொறை உணர்வு மிக்கவர் என்பதும் காய்தல் உவத்தல் இன்றி கருத்துக்களை வெளியிடக் கூடியவர் என்பதும் ஆய்வு நேர்மை உடையவர் என்பதும் சமய வரிசையில் இவர் எழுதிய நூல்களின் வழி வெளிப்படும். அவற்றுள் ‘பௌத்தமும் தமிழும்’ என்ற நூல் பௌத்தர்களின் சமயம், தமிழ்த் தொண்டு ஆகியன பற்றி எடுத்துரைக்கும் முறையான முதல் நூல் ஆகும்.
சமண சமயத்துக்கு எதிரான கருத்துக்கள் பிற சமயத்தாரால் தமிழகத்தில் உருவாக்கப்பட்டன. அதனால், தமிழர்கள் அச்சமயத்தின் மேல் வெறுப்புணர்வு கொள்ளத் தலைப்பட்டனர். ஆனால் அச்சமயத்தினர் தமிழுக்கு ஆற்றிய பணியானது பிற சமயத்தினர் தமிழுக்கு ஆற்றிய பணிகளைக் காட்டிலும் மேம்பட்டது என்பதை நன்கு உணர்ந்த இப்பெருமகனார், சமண சமயத்தின் தமிழ்ப் பணிகளை வெளிப்படுத்தி வரலாற்றை நிலைப்படுத்த முயன்றதன் விளைவே ‘சமணமும் தமிழும்’ என்ற இவரது நூல் ஆகும். சமயங்களின் தமிழ்ப் பணி குறித்த வரிசையில் மேலும் ‘கிறித்தவமும் தமிழும்’, ‘சமயங்கள் வளர்த்த தமிழ்’ ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

மகாபலிபுரத்து ஜைன சிற்பம், இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம், பௌத்தக் கதைகள், புத்தர் ஜாதகக் கதைகள், இசைவாணர் கதைகள் ஆகிய நூல்களின் வழி இப்பெருமகனாரின் பல் சமயப் பொறை உணர்வு வெளிப்படுகிறது. தமிழக வரலாற்றைத் தௌ¤வுறுத்தும் நோக்கில் இவர் களப்பிரர் ஆட்சியில் தமிழகம், சங்க காலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள், சேரன் செங்குட்டுவன், பாண்டியர் வரலாற்றில் ஓர் அரிய புதிய செய்தி ஆகிய நூல்கள் அமைந்துள்ளன. சிறந்த சொல்லாராய்ச்சிக் கட்டுரைகளின் தொகுப்பாக அஞ்சிறைத் தும்பி என்ற நூல் அமைந்துள்ளது. சங்க காலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள், சாசனச் செய்யுள் மஞ்சரி ஆகியவை அரிய கல்வெட்டு ஆராய்ச்சி நூல்களாகும்.

இதழ்களின் வழி தமிழ்ப்பணி :

தம் அரிய தேடலாலும் கடும் முயற்சியாலும், நுண்மாண் நுழை புலத்தாலும் கண்டறிந்த ஆய்வு முடிவுகளின் கருத்துப் பெட்டகங்களாக இவரது நூல்கள் மட்டுமின்றி இவர் எழுதிய கட்டுரைகளும் அமைந்துள்ளன.

நண்பன், கல்வி, சௌபாக்கியம், திராவிடன், குடியரசு, செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப்பொழில், கலைக்கதிர், திருக்கோயில், ஈழகேசரி போன்ற இதழ்களில் மயிலை சீனி.வேங்கடசாமியின் நூல்கள் மற்றும் கட்டுரைகளைத் தொகுத்து நோக்குமிடத்து இவர் ஆய்வுப் பணியை முழுநேரப் பணியாக மேற்கொண்டதையும் அவ்வாய்வுப் பணிக்கு இடையூறு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத் திருமணமே செய்து கொள்ளாமல் தமிழ்ப் பணி ஆற்றிய இவரது தன்னலமற்ற சீரிய தியாக உயர்வும் புலப்படும். தமிழில் மறைந்து போனதும் மறந்து போனதுமான மிகுந்த செய்திகளை வெளிக்கொணரும் வகையில் அமைந்துள்ள இவரது தலை சிறந்தத் தமிழ்ப் பணியானது இன்றைய ஆய்வாளர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் முன்னோடி வழிகாட்டியாக அமையும் என்பதில் ஐயமில்லை. இத்தகு அரும்பெரும் தொண்டாற்றிய இப்பெருமகனார் தம் இறுதிக் காலத்தில் மிகுந்த துன்பத்திற்கும், நோய்க்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகி 8-5-1980-இல் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

இவர் எழுதிய நூல்கள் அனைத்தும் இன்று கிடைத்தல் அரிதாகி விட்டன. எனவே அந்நூல்களை எல்லாம் மறுபதிப்பாக வெளியிட வேண்டும். மேலும் இவர் எழுதிய கட்டுரைகளை எல்லாம் தொகுத்து நூல் வடிவில் வெளியிட வேண்டும். இவை இரண்டுமே தமிழ் வளர்த்த இவ்வறிஞர் பெருமகனாருக்குத் தமிழ் ஆர்வலர்களும், சான்றோர்களும், தமிழுலகமும் செலுத்தும் நூற்றாண்டு விழா காணிக்கையும் நன்றியறிதலுமாக இருக்க முடியும் என்று பலரும் நூற்றாண்டு விழா நேரத்தில் பேசினர். இதனைச் செவிமடுத்துத் தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கின. அதன் பயனாக இவரது நூல்களும் கட்டுரைகளும் சீரிய முறையில் வெளிவந்து கொண்டு உள்ளன.
----------------------------------------------------------------
க.துரையரசன்.முதுநிலைதமிழ் விரிவுரையாளர்,
அரசு கல்லூரி (தன்னாட்சி), கும்பகோணம்.

darasan2005@yahoo.com

ஞாயிறு, 26 அக்டோபர், 2008

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

குவலயத் தமிழ்ர்களுக்கு என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

பேராசிரியர் முனைவர் க. துரையரசன்
கும்பகோணம்

சனி, 5 ஜூலை, 2008

அதிவீரராம பாண்டியர்

அன்பிற்கினிய மாணவர்களே!

புவியரசராகவும் கவியரசராகவும் விளங்கிய பழம்பெரும் புலவர் ஒருவரைப் பற்றி இன்று நீங்கள் தெரிந் கொள்ளப் போகிறீர்கள். அவர் பெயர் அதிவீரராம பாண்டியர்.

இவர், பாண்டிய மரபினர். 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். தந்தையார் பெயர் நெல்வேலிப் பாண்டியன். ஏறக்குறய 40 ஆண்டுகள் தென்காசியில் இருந்து
ஆட்சி புரிந்தவர். கொற்கை நகரையும் ஆட்சி செய்தவர். அதனால் கொற்கையாளி என்றும் இவர் அழைக்கப்பட்டார்.

இவர் இயற்பெயர் அழகர் பெருமாள். இவருக்கு,

வல்லபதேவன்
பிள்ளைப்பாண்டியான்
குலசேகரன்
குணசேகரவழுதி
அழகன் சேவகவேள்
தமிழ் வளர்த்த தென்னவன்

என்று சிறப்புப் பெயர்களும் உண்டு.

இவர் எழுதிய நூல்கள்;

1. நைடதம் (காப்பியம்)
2. நறுந்தொகை () வெற்றிவேற்கை (நீதி நூல்)
3. திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி (அந்தாதி நூல்)
4. திருக்கருவை வெண்பா (அந்தாதி நூல்)
5. திருக்கருவை கலித்துறை (அந்தாதி நூல்)
6. கூர்ம புராணம் (புராண நூல்)
7. இலிங்க புராணம் (புராண நூல்)
8. மகா புராணம் (புராண நூல்)
9. காசி காண்டம்
10. வாயு சங்கீதை

இவர் தம் புலமைத் திறத்தைப் பற்றி நீங்கள் அறிந்கொள்வதோடு அவர் காட்டும் வழியில் வாழ்ந்திட வேண்டும் என்பதால்தான் இப்புலவர் பெருமகனாரைப் பற்றி இங்கே குறிப்பிடுகிறேன்.

‘அப்¢படி என்ன புலமைுலமத் திறம் இவருக்கு என்று நீங்கள் முணுமுணுப்¢ப எனக்குத் தெரிகிற.

இவர் எழுதிய காப்பிய நூலான நடதம் ‘புலவருக்கு ஒளடதம்’. ஒளடதம் என்றால் மருந் என்று பொருள். நோயுற்றவர்களின் நோயப் போக்கும் தன்ம கொண்ட மருந். அம்மருந்த நோயாளிக்குப் பரிந்ரப்¢பவர் - வழங்குபவர் மருத்வர்.

அபோல அறிவால் நோயுற்றப் புலவர்களுக்கு மருந்தாகப் பயன்படுவ நடதம். அதாவ இந்நூலப் படிப்¢பவர் தீய செயல்கள் என்ற நோய்ச் செயலினின்றும் விடுபடுவர்.

கற்றாருள் கற்றார் நனி கற்றார்
மருத்வருக்கே மருந் வழங்கும் மருத்வர் மிகச் சிறந்தவர்

அபோல புலவருக்கே கற்றுத்தரும் புலவராக விளங்கியவர் அதிவீரராம பாண்டியன்.

தமிழ முறயாகப் பயில்வோர் இந்நூலத் தொடக்கத்தில் பயில்வர் என்பதில் இருந்தே இந்நூலின் முக்கியத்வத்த நீங்கள் அறியலாம்.

இலக்கியப் பயிற்சிக்குச் சிறந்த நூலாக இதனப் பலரும் பாராட்டுவர்.

புலம சான்றவர்கள் படிப்¢பதற்கு உரிய நடதம் என்ற நூலத் தமிழுலகுக்கு நல்கிய இப்புலவர், மாணவர்களாகிய நீங்கள் பயில்வதற்கு உரிய ஓர் அரிய நூலயும் படத்ள்ளார்.

அந்நூல், நறுந்தொக (அ) வெற்றி வேற்க.

இந்நூலில், நல்ல நீதிகளத் தொகுத்த் தந்ள்ளார். இந்நூலப் படிப்போர் குற்றங்கள எளிதில் நீக்குவர். இந்நூல் ஆழமும் அழகும் எளிமயும் உடய.

இந்நூல், சுருங்கச் சொல்லல்
விளங்க வத்தல்

என்னும் உத்தி முறயில் படக்கப்¢பட்டுள்ள. இதன்கண் 82 பாடல்கள் உள்ளன. இப்பாடல்கள் கொன்ற வேந்தனப் போன்ற அமப்பு உடயவ.

மாணவத் தங்கங்களே!

நீங்கள் எத்தகய பண்பு நலம் மிக்கவர்களாக உங்கள் வாழ்க்கய அமத்க்கொள்ள வேண்டும் என்று இப்புலவர் அறிவுரக்கிறார் என்பதக் கூறி நிறவு செய்ய விரும்புகிறேன்.

பால்; சுவ மிக்க - சுண்டக் காய்ச்சினாலும் சுவ மாறா.

தங்கம்; மின்னும் - ஒளிரும் - சுட்டாலும் தன்ம மாறா - மின்னும்-
ஒளிரும்.
சந்தனம்; மணம் வீசும் - அரத்தாலும் குழத்தாலும் மணம் மாறா.

அகிற்கட்ட; நறுமணம் கமழும் - நெருப்பில் இட்டு எரித்தாலும் மணம்
கமழும்.
கடல்; தௌ¤ந்த நீர் - கலக்கினாலும் சேறாகா; தௌ¤வாகவே
இருக்கும்.

நீங்கள்

பாலாக
தங்கமாக
சந்தனமாக
அகிற்கட்டயாக
கடலாக

என்றும் - எங்கும் - எப்பொழும் - எதிலும் வாழ்வில் மிளிர வேண்டும் என்பதான்

அதிவீரராம பாண்டியர் மூலம் நான் உங்குளுக்குத் தரும் செய்தியாகும்.

நன்றி.

வெள்ளி, 13 ஜூன், 2008

த.இ.ப. மின் நூலகம் - வசதிகளும் வாய்ப்புகளும்

முன்னுரை

உலகு தழுவி வாழும் தமிழ் மக்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பயன்கொள்ளும் வகையில் தமிழக அரசால் உருவாக்கப்பட்டு, தமிழ் இணையப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இப்பல்கலைக்கழகம் அரிச்சுவடி முதல் ஆராய்ச்சி வரையிலான படிப்புகளை வழங்கும் செயல் திட்டத்துடன் இயங்கி வருகிறது. இப்படிப்புகளுக்கான பாடங்கள் கணிப்பொறியின் பல்லூடக வசதிகளைப் பயன்படுத்தி எழுத்து வடிவம், ஒலிவடிவம், ஒளி வடிவம் முதலியவற்றின் வாயிலாக படிப்பவர்களுக்கு ஆர்வமூட்டும் வகையில் அமைக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. தமிழ் இணையப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் சேர்ந்து பயில்வோர் மட்டுமின்றி விரும்புகின்ற அனைவரும் பயன்பெறுகின்ற வகையில் மிகச் சிறந்த மின்நூலகம் ஒன்று இப்பல்கலைக்கழக இணையத் தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நூல்களில் இடம்பெற்றுள்ள செய்திகளைப் பயனாளர் தேவைக்கேற்ப பெறுகின்ற வகையில் பல்வேறு தேடுதல் வசதிகளுடன் இம்மின்நூலகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்ஙனம் தேடுதல் வசதிகளுடன் இந்நூலகம் அமைந்திருப்பது இதன் தனிச் சிறப்பாகும். இந்நூலகத்தின் வசதிகளும் வாய்ப்புகளும் குறித்துத் தொடர்ந்து நோக்கலாம்.

மின் நூலகம்

தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் மின் நூலகம் தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களின் ரோமன் வடிவம், அகராதிகள், பண்பாட்டு நிகழ்ச்சிகள், கலைச்சொற்களம், பிற இணையத்தளங்களுக்குரிய இணைப்புகள் ஆகிய கூறுகளை உள்ளடக்கி உள்ளது.

நூல்கள்

சங்க காலம் முதல் இன்றுவரையிலான இலக்கண, இலக்கிய நூல்கள் அனைத்தும் இணையத்தளத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றன. இதுகாறும் 93817 பக்கங்களைக் கொண்ட 208 நூல்கள் இணையத்தில் இடப்பெற்றுள்ளன. மேலும் 51852 பக்கங்களைக் கொண்ட 110 நூல்கள் இணையத்தில் சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நூலகத்தில் இலக்கணம் என்ற தலைப்பின் கீழ், தொல்காப்பியம், புறப்பொருள் வெண்பாமாலை, தண்டியலங்காரம், வீரசோழியம், நம்பியகப்பொருள் விளக்கம், நன்னூல் ஆகிய நூல்கள் உரைகளுடன் கொடுக்கப்பட்டுள்ளன.

சங்க இலக்கியங்களும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் முழுமையாக உரைகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.

காப்பியங்கள் என்ற தலைப்பின் கீழ், ஐம்பெரும் காப்பியங்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் பெருங்கதை, கம்பராமாயணம், வில்லிபாரதம், இரட்சணியமனோகரம், திருவிளையாடற்புராணம், கந்தபுராணம் ஆகியவையும் இதன்கண் உள்ளன.

சமய இலக்கியங்கள் என்ற தலைப்பில், சைவ இலக்கியங்களான பன்னிரு திருமுறைகள், வைணவ இலக்கியமான நாலாயிர திவ்ய பிரபந்தம், கிறித்துவ இலக்கியங்களான தேம்பாவணி, இரட்சணிய யாத்திரிகம், திருஅவதாரம், இயேசு காவியம், இரட்சணியமனோகரம், இசுலாமிய இலக்கியங்களான சீறாப்புராணம், நெஞ்சில் நிறைந்த நபிமணி ஆகியவை இணையத்தளப் படுத்தப்பட்டுள்ளன.

சிற்றிலக்கியங்கள் என்னும் தலைப்பின்கீழ், குமரேச சதகம், அபிராமி அந்தாதி, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், தண்டலையார் சதகம், திருக்கருவைப்பதிற்றுப்பந்தாதி, கச்சிக்கலம்பகம், குற்றாலக்குறவஞ்சி, தியாகேசர் குறவஞ்சி, கொங்கு மண்டலச் சதகம், பாண்டிமண்டலச் சதகம், திருசெந்தூர் பிள்ளைத்தமிழ், சேக்கிழார் பிள்ளைத்தமிழ், புலவராற்றுப்படை, இரணியவதைப்பரணி, அரிச்சந்திரபுராணம், தணிகைப்புராணம், அஷ்ட பிரபந்தங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

திரட்டு நூல்கள் என்னும் தலைப்பின் கீழ், சிவப்பிரகாச சுவாமிகள் பனுவல் திரட்டு, இராமலிங்க சுவாமிகள் நூல்கள், தாயுமானவர் சுவாமிகள் நூல்கள் ஆகியவை அமைந்துள்ளன.

நெறி நூல்கள் என்ற தலைப்பில், ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, வெற்றிவேற்கை, உலகநீதி, நீதிநெறிவிளக்கம், அறநெறிச்சாரம் ஆகிய நூல்கள் தரப்பட்டுள்ளன.

இருபதாம் நூற்றாண்டு கவிதை இலக்கியங்கள் என்ற தலைப்பில், பாரதியார் கவிதைகள், பாரதிதாசன் கவிதைகள், கண்ணதாசனின் இயேசுகாவியம், கவிமணியின் நீதிநூல் ஆகிய கவிதைகளும், இருபதாம் நூற்றாண்டு உரைநடை இலக்கியங்கள் என்ற தலைப்பின் கீழ், பாரதியார் கதைகள் மற்றும் கட்டுரைகள். சமணமும் தமிழும், பெளத்தமும் தமிழும், தம்மபதம், பெண்மதிமாலை, தமிழ் இலக்கிய வரலாறு, தமிழ்மொழி வரலாறு, பாவாணர் படைப்புகள் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.

நாட்டுப்புற இலக்கியங்கள் வரிசையில் தமிழர் நாட்டுப்பாடல்கள், மலையருவி, காத்தவராயன் கதைப்பாடல் ஆகியவையும் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் பலவும் தமிழ் இணையப் பல்கலைக்கழக இணையத் தளத்தில் உள்ளன.

உரைகள்

பழந்தமிழ் இலக்கண நூல்களும், சங்க இலக்கிய நூல்களும் அனைவரும் எளிதில் படிப்பதற்குரிய வகையில் பதம் பிரித்து வழங்கப்பட்டுள்ளன. அதுபோல் ஆய்வாளர்களுக்கும் அறிஞர்களுக்கும் துணை செய்யும் பல்வேறு உரைகளும் தளத்தில் இடப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டாக, தொல்காப்பியத்தைப் பொறுத்த வரை இளம்பூரணர், நச்சினார்க்கினியர், பேராசிரியர் ஆகியோர் உரைகள் தளத்தில் இடப்பட்டுள்ளன. மேலும், தெய்வச்சிலையார், கல்லாடர், பாவலர் பாலசுந்தரம், ஆ.சிவலிங்கனார் ஆகியோர் தம் உரைகளும் சேர்க்கப்பட உள்ளன.

அதுபோல் திருக்குறளுக்குப் பரிமேலழகர், மணக்குடவர், மு.வரதராசன், தேவநேயப்பாவாணர் ஆகியோரின் உரைகளும் ஜி.யு.போப், சுத்தானந்த பாரதி ஆகியோரின் மொழிபெயர்ப்புகளும் தளத்தில் இடப்பட்டுள்ளன.

தொல்காப்பியம், திருக்குறள் போன்றே பிற இலக்கண, இலக்கிய நூல்களுக்குப் பல்வேறு உரைகளையும், கடின நடை கொண்ட உரைகளைப் பதம்பிரித்தும் வழங்கும் எண்ணம் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்துக்கு உண்டு.

தேடுபொறி வசதிகள்

தமிழ் இணையப் பல்கலைக்கழக மின்நூலகத்தின் சிறப்புக் கூறுகளுள் தலையாயது தேடுபொறி வசதிகள் அமைந்துள்ளமையாகும். இத்தேடுதல் வசதிகளின் துணை கொண்டு தேவையான நூல்களிலிருந்து வேண்டிய செய்திகளை எளிதில் பெறலாம். எடுத்துக்காட்டாக, திருக்குறளை எடுத்துக் கொள்ளலாம்.

திருக்குறளுக்கு மேற்சுட்டியவாறு அறுவரின் உரைகள் உள்ளன. இவற்றில் வேண்டிய உரைகளைத் தேர்வு செய்தும் தகவல்களைப் பெறலாம்; அல்லது அறுவரின் உரைகளையும் ஒருசேரப் பார்க்க வேண்டுமானாலும் தேர்வு செய்து பார்க்கலாம். அதாவது ஒருகுறளைப் படிப்பதற்கு முன் தேவையான உரைகளைத் தேர்வு செய்து கொண்டு படிக்கலாம். இது ஒரு முறை.

சில வேளைகளில் திருக்குறளைப் படித்துக் கொண்டே செல்கின்ற போது உரைகளின் மூலம் தெஒளிவு பெற வேண்டிய அவசியம் ஏற்படலாம் அவ்வேளையில் வேண்டிய உரைகளைப் பெறுகின்ற வசதியும் இத்தளத்தில் செய்து தரப்பட்டுள்ளது.

மேலும், எண் தேடல், சொல் தேடல், அதிகாரம் தேடல் ஆகிய தேடுபொறி வசதிகளும் திருக்குறளுக்குச் செய்து தரப்பட்டுள்ளன. சொல் தேடல் என்பதில் திருக்குறளில் பயின்றுவரும் ஏதேனும் ஒரு சொல்லைக் கொடுத்துக்கூட தேடிப்பெறலாம். இதன் மூலம் ஒரு சொல் திருக்குறளில் எத்தனை இடத்தில் பயின்று வந்துள்ளது; ஒரு சொல் குறளின் தொடக்கத்தில் - இடையில் - இறுதியில் எத்தனை முறை பயின்று வந்துள்ளது என்பன போன்ற புள்ளி விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். அதாவது திருக்குறளில் தெரிந்த ஒரு சொல்லை மட்டுமே கொண்டு ஒருவர், அது குறித்து தேவையான தகவல்களைப் பெறக்கூடிய வகையில் திருக்குறளில் தேடுதல் வசதி அமைந்துள்ளது சிறப்பாகும். இதுபோலவே எண் தேடல், அதிகாரம் தேடல் என்ற வகையிலும் கூட குறள்களையும் அவற்றிற்கான உரைகளையும் பெறலாம்.

மேலும் ஓர் எடுத்துக்காட்டு

எட்டுத்தொகையில் ஒன்றான நற்றிணை என்ற நூல், எண், பாடியோர், பாடப்பட்டோர், வள்ளல்கள், மன்னர்கள், திணை, கூற்று, பாடல் முதற்குறிப்பு, மரங்கள், செடிகள், கொடிகள், மலர்கள், தானியங்கள், பழங்கள், விலங்குகள், பறவைகள், மீன்கள் முதலிய தேடுதல் வசதிகளுடன் இணையத் தளப்படுத்தப்பட்டுள்ளன. இத்தேடுதல் வசதிகளின் துணை கொண்டு நற்றிணையில் இடம் பெற்றுள்ள மலர்கள் எத்தனை - அவை எந்த பாடல்களில் எல்லாம் பயின்று வந்துள்ளன - எத்தனைமுறை பயின்று வந்துள்ளன என்றெல்லாம் கணக்கிட்டுவிட முடியும். இது போலவே மீன்கள், விலங்குள், பறவைகள் ஆகிய அனைத்தையும் கண்டறிந்து புள்ளி விவரங்களாக்கி விட முடியும். இவை மட்டுமின்றி நற்றிணையில் இடம் பெற்றுள்ள சில சிறப்புச் செய்திகளைக் கொண்டு - உதாரணமாக, புலியின் முன்னங்கால்கள் சிறியவை என்ற தகவலை மட்டுமே கொண்டுகூட அப்பாடலைக் கண்டறிந்து கொள்ளும் வகையில் தேடுதல் வசதி செய்து தரப்பட்டுள்ளமை வியக்கத்தக்க ஒன்றாகும்.

திருக்குறள், நற்றிணை போன்றே இத் தளத்தில் உள்ள வெவ்வேறு நூல்களும் ஆய்வாளர்களின் நலன் கருதி பல்வேறு தேடுதல் வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.

ரோமன் வடிவம்

தொல்காப்பிய நூற்பாக்கள் மற்றும் சங்க இலக்கியப் பாடல்கள் முழுவதும் ரோமன் வடிவத்தில் வழங்கப்பட்டுள்ளன. மேலும் பல நூல்கள் ரோமன் வடிவத்தில் வழங்கப்பட உள்ளன.

அகராதிகள்

மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் அகராதிகள் பெரிதும் பயனளிக்கக் கூடியவை என்பதில் கருத்து வேறுபாடுகள் கிடையாது. இக் கருத்தை ஒட்டியே தமிழ் இணையப் பல்கலைக்கழக மின் நூலகத்தில் தற்பொழுது நான்கு அகராதிகள் இடம் பெற்றுள்ளன. அவை;

(i) சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் - தமிழ் - ஆங்கிலப் பேரகராதி

(ii) பழனியப்பா சகோதர்களின் ஆங்கிலம் - தமிழ் - பால்ஸ் அகராதி

(iii) சென்னைப் பல்கலைக் கழகத்தின் ஆங்கிலம் - தமிழ் அகராதி

(iv) பேராசிரியர் மு.சண்முகம்பிள்ளை அவர்களின் தமிழ் - தமிழ் அகராதி.

இவ்வகராதிகள் சொல் தேடல், பக்கம் தேடல், அகரவரிசைப்படி சொற்களைப் பார்த்தல் ஆகிய தேடுதல் வசதிகளுடன் கூடியவை.

தமிழ்ச் சொற்களைத் தட்டச்சுச் செய்வது பலருக்கும் கடினமாக இருக்கும். இதனைக் கருத்தில் கொண்டு இவ்வகராதிகளைப் பார்ப்பவர்கள் தமிழில் எளிதாகத் தட்டச்சுச் செய்யும் வகையில் தமிழ் விசைப்பலகை (Tamil Key Board) கணினித் திரையில் தெரியும். அவ்விசைப் பலகையில் உள்ள எழுத்துகளைச் சுட்டியின் (Mouse) துணைகொண்டு தேர்வு செய்து வேண்டிய சொற்களுக்கு உரிய பொருளைக் காணும் வசதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும், இத் தளத்தில் தமிழ்-தமிழ், தமிழ்-பிறமொழி, பிறமொழி - தமிழ் என்ற பல வகையான அகராதிகள் இடம் பெற உள்ளன.

பண்பாட்டு நிகழ்ச்சிகள்

உலகெங்கும் வாழும் தமிழர்கள் தங்களுடைய மரபுகளையும், விழுமியங்களையும், பண்பாட்டையும் அறிந்து கொள்வதிலும் பாதுகாப்பதிலும் மிகுந்த ஆர்வம் உடையவர்களாக இருக்கின்றார்கள். அவர்களது ஆர்வத்தை மதிக்கின்ற வகையில் தமிழர்களுக்கே உரிய பண்பாட்டு நிகழ்வுகளைக் காட்டும் ஒலி - ஒளிக் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், புலியாட்டம், தெருக்கூத்து, பாவைக்கூத்து, நாதஸ்வரம், ஜல்லிக்கட்டு, பரதநாட்டியம் போன்ற நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன. இவை போன்ற இன்னும் பிற தமிழ்நாட்டுக் கலைகள் இடம் பெற உள்ளன.

கோயில்களுக்குப் பெயர் போனது தமிழகம். அவ்வகையில் தமிழகத்தில் உள்ள தேர்ந்தெடுத்த கோயில்களின் படக் காட்சிகளும் (Photo Clippings), ஒளிக் காட்சிகளும் (Video Clippings) தமிழ் இணையப் பல்கலைக்கழக இணையத் தளத்தில் உள்ளன. இதுவரை 137 சைவ, வைணவக் கோயில்களின் படக்காட்சிகளும், ஒளிக்காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இதன்கண் மேலும் பல கோயில்கள் சேர்க்கப்பட உள்ளன. சைவ, வைணவக் கோயில்கள் மட்டு மன்றி கிறித்தவ ஆலயங்கள் மற்றும் இசுலாமியரின் பள்ளிவாசல்களும் விரைவில் சேர்க்கப்பட உள்ளன.

கலைச் சொற்களம்

சமுதாயவியல், மருத்துவவியல், கால்நடை மருத்துவவியல், உயிரியல் தொழில்நுட்பவியல், கலை மற்றும் மானிடவியல், தகவல் தொழில் நுட்பவியல், பொறியியல் மற்றும் தொழில் நுட்பவியல், வேளாண்மைப் பொறியியல், அறிவியல், சட்டவியல், மனைஇயல் ஆகிய பல்வேறு துறைகளைச் சார்ந்த 2.5 இலட்சத்திற்கும் மேற்பட்ட கலைச் சொற்கள் இணையத்தளத்தில் இடம் பெற்றுள்ளன. மேலும் 61,786 சொற்கள் விரைவில் இடம் பெற உள்ளன. இக் கலைச் சொற்களம், கலைச் சொல்லாக்கத்தில் ஈடுபடுவோர்க்கும் அதனைத் தரப்படுத்த விழைவோர்க்கும் மிகுந்த பயனளிக்கக் கூடிய ஒன்றாகும்.

பிற இணையத் தளங்களுக்கான இணைப்புகள்

தமிழ் இணையப் பல்கலைக்கழக இணையத்தளத்திலிருந்து பிற இணையத் தளங்களுக்குச் செல்வதற்குரிய இணைப்பு வசதிகள் அமைத்துத் தரப்பட்டுள்ளன. இதன் வழி தற்பொழுது Project Madurai, Upenn, Tamilnet99 ஆகியவற்றிற்கான இணைப்புகள் கொடுக்கப் பட்டுள்ளன. மேலும், தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தோடு இணைப்பு வசதி ஏற்படுத்திக் கொள்ள விரும்புவோர் கட்டணம் ஏதுமின்றி இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தமது இணையத்தளத்தில் பிற தளங்களுக்கான இணைப்புகளை வழங்கவும், பிற இணையத்தளங்களில் தமது தளத்திற்கு இணைப்பு வழங்கவும் தயாராக உள்ளது.

முடிவுரை

தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் மின் நூலகம், தமிழ் நூல்களைக் கொண்ட பிற இணையத்தளங்கள் அளிக்கின்ற வசதிகளை விட, கூடுதலான வசதிகளைக் கொண்டதாக உள்ளதைக் குறிப்பாக சுட்டிக்காட்ட வேண்டும். தமிழ் நூல்களைக் கொண்ட இணையத் தளங்கள் பெரிதும் தமிழ் நூல்களின் பட்டியலைத் தரக் கூடியனவாக உள்ளன அல்லது தமிழில் உள்ள சில நூல்களைப் பக்கம் பக்கமாகப் பார்த்துப் படிக்கின்ற வகையில் அமைந்துள்ளன. ஆனால், தமிழ் இணையப் பல்கலைக்கழக மின் நூலகம், தமிழ் இலக்கண, இலக்கிய நூல் களின் பாடுபொருள்களைப் பயனாளர் தேவை கருதி ஒரு சில வினாடிகளில், அவர்கள் தேடிப் பெறுகின்ற வகையில் தேடுதல் வசதிகளுடன் அமைந்துள்ளது. தமிழக அரசின் நிதியுதவியுடன், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் ஒரு பகுதியாக செயல்படும் தமிழ் இணையப் பல்கலைக்கழகம், அதன் மின் நூலகத்தை மிகுந்த பொருள்செலவில் வடிவமைத்துள்ளது. இருப்பினும்கூட இப்பல்கலைக்கழகத்தின் மின்நூலகத்தைப் பயனாளர்கள் எவரும் - எங்கிருந்தும் - எப்பொழுதும் - எவ்விதக் கட்டணமுமின்றி பயன்படுத்திக்கொள்ள இணையக் கதவுகளைத் திறந்தே வைத்துள்ளது.

இணையக் கதவின் திறவுகோல் : www.tamilvu.org

தமிழ் இணையப் பல்கலைக்கழக மின்நூலகத்தைப்

பார்ப்பீர்... பயன்பெறுவீர்... கருத்துரை வழங்குவீர்...


செவ்வாய், 8 ஏப்ரல், 2008

நா.வானமாமலையின் வாழ்வும் பணியும்தமிழக நாட்டுப்புற இலக்கியத் துறையில் தமக்கென ஓரிடத்தை நிலை நிறுத்திக் கொண்டவர் நா.வானமாமலை ஆவார். இவர்தம் வாழ்க்கை, இலக்கியப் பணி, அரசியல் பணி போன்றவற்றை எடுத்துரைப்பதாக இக்கட்டுரை   உள்ளது.

பிறப்பும் இளமையும்

பேராசிரியர் நா.வானமாமலை 7-12-1917 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நான்குனேரியில் நாராயணன் தாதர், திருவேங்கடத்தம்மாள் தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். இவருக்கு வேங்கடம் என்ற சகோதரியும், ஆழ்வான் என்ற சகோதரனும் உண்டு. இவரது முன்னோர்கள் நான்குனேரி கிராம முன்சீபாக வேலை பார்த்தனர். அதனால் வசதியான வாழ்க்கை அவருடைய இளமைக் காலத்தில் வாய்த்திருந்தது.

கல்வி;

நா.வானமாமலை ஆரம்பக் கல்வியை ஏர்வாடியிலும் நான்குனேரியில் உள்ள ஜில்லாபோர்டு உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். நெல்லையில் இன்டர்மீடியட் முடித்தார். பின்பு இவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.ஏ. இரசாயனப் படிப்பும், சென்னை சைதாப்பேட்டை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் எல்.டி.பட்டப் படிப்பையும் முடித்தார்.


திருமண வாழ்க்கை;

நா.வானமாமலை தமது சொந்த அத்தை மகளான சீதையம்மாள் என்பவரை முதலில் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த அம்மையார் நீண்ட காலம் உயிர் வாழவில்லை. பிறகு இவர் சென்னையைச் சேர்ந்த பத்மாவதி என்பவரை 1948 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு கிருஷ்ணமூர்த்தி, நாராயணமூர்த்தி, ராமமூர்த்தி என்ற மூன்று மகன்களும் கலாவதி, அருணா அம்மணி என்ற மகள்களும் உள்ளனர்.

தமிழ்ப் பற்றும் எழுத்தார்வமும்;

பள்ளிப் பருவத்தில் இருந்தே அரசியலில் இவர் ஆர்வம் காட்டினார். பிரஞ்சுப் புரட்சி, அமெரிக்க விடுதலை இயக்கம், ருஷ்யப் புரட்சி போன்றவை விடுதலையில் ஆர்வம் கொண்டவர்களுக்குக் கலங்கரை விளக்கமாக இருப்பினும் இவருக்கு இவை மனிதாபிமானத்தின் முதிர்ச்சியாகவே தோன்றின.

டால்ஸ்டாய், டிக்கன்ஸ், விட்மன், ஹியூகோ முதலிய ஆசிரியர்களின் எழுத்துக்களால் நா.வானமாமலை ஈர்க்கப்பட்டார். இவர்களின் எழுத்துக்களைத் தமிழகத்தில் பரப்ப வேண்டும்; மனிதனை உயர்த்தும் இத்தகைய எழுத்தோவியங்கள் தமிழில் தோன்ற வேண்டும் என்ற எண்ணத்தின் பிரதிபலிப்புத்தான் இவரின் மொழிபெயர்ப்பு நூல்கள் மற்றும் கட்டுரைகள் ஆகும். மேலும், கல்லூரியில் தமிழைப் பயிற்று மொழியாக்குவது சாத்தியம்தான் என்பதை உணர்த்தும் வகையில் ‘தமிழில் முடியும்’ என்ற கட்டுரைத் தொகுப்பையும் இவர் வெளியிட்டுள்ளார்.


ஆசிரியப் பணி;

1942 இல் மதுராந்தகத்தில் இவர் தற்காலிக ஆசிரியராகவும், ஜில்லாபோர்டு உயர்நிலைப் பள்ளியில் நிரந்தர ஆசிரியராகவும் பணியாற்றினார். கர்நாடகப் பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராகவும், திராவிட மொழியியல் கழகத்தின் தமிழ்ப் பகுதி ஆய்வுப் பொறுப்பாளராகவும் நா.வானமாமலை பணிபுரிந்துள்ளார்.

பொது வாழ்க்கை நடவடிக்கைகள் இவரது ஆசிரியப் பணிக்கு இடையூறாக இருந்ததால் அப்பணியில் இருந்து விலகினார். வாழ்க்கை நெருக்கடியைச் சமாளிக்க இன்டர்மீடியட் வகுப்புகளில் தோல்வியுற்ற மாணவர்களுக்காக பாளையங்கோட்டையில் அவர் தங்கியிருந்த வீட்டிலேயே ‘ஸ்டூடன்ஸ் டுடோரியல் இன்ஸ்டிடியூட’ என்ற பெயரில் தனிப் பயிற்சி வகுப்புகள் நடத்தினார். பின்பு இந்நிறுவனம் வானமாமலை டுடோரியல் கல்லூரி என்று தனிப் பயிற்சிக் கல்லூரியாக வளர்ச்சியடைந்தது. திருச்சி, நாகர்கோவில், தூத்துக்குடி, தக்கலை ஆகிய இடங்களில் இதன் கிளைகள் செயல்பட்டன. பெண்களுக்குத் தனியாகக் கிளைகள் தொடங்கி நடத்தினார்.

நா.வானமாமலை மிகச் சாதாரண உழைப்பாளிகள் முதல் படிப்பாளிகள் வரை பலருக்கும் மார்க்சிய வகுப்புகள் எடுத்தார். மாணவர்களுக்குக் கட்டுரை எழுதும் பயிற்சி முதலியவற்றை அளித்து சிறந்த ஆசிரியராகத் தன் வாழ்நாள் முழுவதும் செயல்பட்டார்.

இலக்கியப் பணிகள்;

நா.வானமாமலையின் இலக்கியப் பணிகளை நான்கு வகையாகப் பிரிக்கலாம். அவை;
1. மொழிபெயர்ப்புப் பணி
2. தமிழ்நாட்டு வரலாறு, பண்பாடு முதலியன பற்றிய
ஆராய்ச்சிப் பணி
3. நாட்டுப்புறப்பாடல் தொகுப்பும் ஆராய்ச்சியும்
4. இலக்கிய விமர்சனப் பணி

மொழிபெயர்ப்புப் பணி;

1939 இல் டால்ஸ்டாயின் நாடகம் ஒன்றை ‘இருளின் வலிமை’ என்ற தலைப்பிலும், இதன் பிறகு அவரது மூன்று குறு நாவல்களைக் குரூயிட்ஸர் சொனோடா, குடும்ப இன்பம், உயிருள்ள பிணம் என்ற பெயரிலும் இவர் வெளியிட்டார்.

நா.வானமாமலை ஆங்கில, ருஷ்ய, அமெரிக்க இலக்கியங்களில் ஈடுபாடு அதிகம் காட்டினார். இவர் எழுதும் கட்டுரைகளுக்கு அந்நாட்டு இலக்கியப் படைப்புகளில் இருந்து மேற்கோள் காட்டுவார். மேலும் மாபஸான், செகாவ், கால்ஸ்வர்த்தி ஆகியோரின் கதைகளையும் மொழிபெயர்த்துள்ளார்.

ஹால்டேனின் கட்டுரையைப் படித்தவுடன் விஞ்ஞான உண்மைகளைத் தமிழில் எழுத வேண்டும் என்ற எண்ணம் நா.வானமாமலைக்குத் தோன்றியது. இதன் விளைவாக ஐன்ஸ்டீன் தத்துவம், லைசெய்கோ தத்துவம், இரசாயன தத்துவங்கள் ஆகிய பல பொருள்கள் பற்றி சராசரித் தமிழரது விஞ்ஞான அறிவை மனத்தில் கொண்டு எளிய முறையில் இவர் நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
1. உடலும் உள்ளமும் - பாவ்லாவின் கட்டுரைத் தொகுப்பு
2. மருத்துவ இயல் விஞ்ஞான வரலாறு - பிரிட்லெண்டு
3. விண்யுகம் - ஸ்டீபன் ஹெய்ம்
4. உயிரின் தோற்றம் - ஏ.ஐ.ஓபார்
போன்றோர்களின் படைப்புகளை இவர் மொழிபெயர்த்துள்ளார்.

தமிழ்நாட்டு வரலாறு, பண்பாடு முதலியன பற்றிய ஆராய்ச்சிப் பணி;

நா.வானமாமலை தமிழ் இலக்கியத்தையும் ஆங்கில இலக்கியத்தையும் ஆர்வத்தோடு கற்றார். இலக்கியங்களை ஆராய வேண்டும் என்றால் சமுதாய வரலாறும், பண்பாடும் தெரிந்திருக்க வேண்டும் என்று கருதினார். சமுதாய மாறுதல்களை அறிய தமிழ்நாட்டு வரலாற்று நூல்களையும் இவர் பயின்றார்.

இலக்கியம், ஆரிய திராவிடர் மூடுதிரை, சோழர் காலத்திய அறப்போர்கள், வலங்கை இடங்கைப் போராட்டம் போன்ற கட்டுரைகளும், தமிழ்நாட்டுச் சமுதாய வரலாறு, தமிழ் நாட்டில் சாதி அமைப்பின் வரலாறு, ஒப்பில்லாத சமுதாயம் ஆகிய நூல்களையும் இவர் எழுதி வெளியிட்டுள்ளார்.

இவர் சின்னத்தம்பி வில்லுப்பாட்டுக் கட்டுரையில் வில்லுப்பாட்டு என்பதன் விளக்கம், அதன் வரலாறு, மற்றும் பண்பாட்டுக் கூறுகளைக் கூறியுள்ளார். மேலும் முதன்முதலில் ‘நாட்டுப் பண்பாட்டியல்’ என்ற தொடரைக் கையாண்டவர் என்ற பெருமைக்கு உரியவர் நா.வானமாமலை ஆவார்.

நாட்டுப்புறப்பாடல் தொகுப்பும் ஆராய்ச்சியும்;

1955 ஆம் ஆண்டு மார்க்சிய அறிஞர் பி.சி.ஜோஷி என்பார் நாட்டார் வழக்காற்றியல் பற்றியும் அதில் ஈடுபடுமாறும் நா.வானமாமலைக்கு வழிகாட்டுதல்களை வழங்கினார். இதன்பிறகுதான் கிராமியப் பாடல்கள் மற்றும் கதைகள் மீது அதிக ஆர்வம் இவருக்கு ஏற்பட்டது. சரஸ்வதி என்ற இதழில் முத்துப்பட்டன் கதையையும், தாமரை இதழில் சின்னத்தம்பி என்ற வில்லுப்பாட்டையும் இவர் வெளியிட்டார்.

1961 ஆம் ஆண்டு தோன்றிய தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் முதல் மாநாட்டில் அமைக்கப்பட்ட நாட்டார் இலக்கியத்தின் குழுப்பொறுப்பை நா.வானமாமலை ஏற்றார். இதில் உற்சாகம் அடைந்தே இவர் நாட்டார் பாடல்களைச் சேகரிக்க ஆரம்பித்தார்.
1. தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்
2. தமிழர் நாட்டுப் பாடல்கள்

என்ற இவரது இரு நூல்களும் திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இரண்டு மாவட்டங்களில் வழங்கும் நாட்டார் பாடல்களை மையமாகக் கொண்டு உருவானவையாகும். நாட்டுக்கதைப் பாடல்களில் சமூக உள்ளடக்கம், கொள்ளைக் காரர்களும் நாட்டுப் பாடல்களும், கன்னட நாட்டுப் பாடல்களின் வீரர் படிமம் போன்ற கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார்.

கதைப் பாடல் பதிப்புகள்;

நா.வானமாமலை தெய்வீகம், புராணம், இதிகாசம், காவியம், சமூக வரலாற்றுக் கதைப் பாடல்கள் ஆகியவற்றைச் சிறப்பான முறையில் பதிப்பித்துள்ளார்.
1. கட்டபொம்மு கதை - 1960
2. வீணாதிவீணன் கதை - 1967
3. வீரபாண்டிய கட்டபொம்மு கதைப் பாடல் - 1971
4. முத்துப்பட்டன் கதை - 1971
5. காத்தவராயன் கதைப் பாடல் - 1971
6. கட்டபொம்மு கூத்து - 1972
7. கான்சாகிபு சண்டை - 1972
8. ஐவர் ராசாக்கள் கதை - 1974
என்பவற்றை மதுரை பல்கலைக்கழகத்தின் உதவியோடும் வீணாதிவீணன் கதை, கட்டபொம்மு கதைப்பாடல் ஆகியவற்றை நியூ செஞ்சுரி பதிப்பகத்தின் மூலமும் வெளியிட்டுள்ளார். இக்கதைப் பாடல்கள் அனைத்தும் 17,18 ஆம் நூற்றாண்டின் சமூக, வரலாற்று ஆவணமாகக் கருதப்படுகிறது. இவர் இப்பதிப்புகளில் முன்னுரையுடன் ஆராய்ச்சிக் கருத்துகளையும் முன் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நா.வானமாமலை நாட்டுப்புறவியலைத் தனித்துறையாக வளர வகை செய்தவர். இவரின் ஆய்வுக் கட்டுரைகள் நூல் வடிவில் வெளிவந்துள்ளன .

இலக்கிய விமர்சனம்;

நா.வானமாமலை சிலப்பதிகாரம் பற்றிய ‘இளங்கோ’ என்ற கட்டுரையில் சிலப்பதிகாரம் கூறும் மூன்று கருத்துகளையும் ஏற்றுக்கொள்கிறார். இருப்பினும், அவை இளங்கோவடிகளின் கருத்துகள் என்று கூறுவோர்¢ சான்றுகள் எதுவும் இல்லாமலேயே கூறுகின்றனர் என்றும் பதிகம் பாடிய யாரோ ஒரு புலவர் கூற்றுப்படியே அவை அமைந்துள்ளன என்றும் விளக்குகிறார்.

‘திருவள்ளுவரது அறிவுத் தோற்றம்’, தாமரை இதழில் வெளியான ‘தொல்குடி மக்களின் உலகக் கண்ணோட்டம்’ போன்ற கட்டுரைகள் இவரது இலக்கிய விமர்சனங்களாகவே காணப்படுகின்றன.

சிறுவர் நூல்கள்;
1962 ஆம் ஆண்டு அழ.வள்ளியப்பா மூலமாக நா.வானமாமலை சிறுவர் நூல்கள் எழுதும் பணியை மேற்கொண்டார். இதில் முதலில் வெளிவந்தது ‘ரப்பரின் கதை’ என்ற சிறு நூல் ஆகும். 1962 ஆம் ஆண்டு இந்நூல் ஜவஹர்லால் நேரு பரிசைப் பெற்றது. மேலும், இரும்பின் கதை, காகிதத்தின் கதை, பெட்ரோலியத்தின் கதை போன்ற நூல்களை வெளியிட்டார்.

அரசியல் ஈடுபாடு;

1936 ஆம் ஆண்டு விடுதலைப் போராட்டம் தீவிரமாக நடைபெற்ற காலத்தில் தேசிய இயக்கம் தவிர பொதுவுடைமை இயக்கமும், சுயமரியாதை இயக்கமும் இயங்கின. இவற்றின் இடதுசாரிக் கருத்துகளால் நா.வானமாமலை ஈர்க்கப்பட்டார். பொதுவுடைமை இயக்கம் தடை செய்யப்பட்டிருந்ததால் அது காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி என்ற பெயரில் இயங்கியது. இதனோடு தன்னை இவர் இணைத்துக் கொண்டார்.

இவர் 1948 ஆம் ஆண்டு நெல்லைச் சதி வழக்கில் கைது செய்யப்பட்டுப் பின்னர் விடுதலையானார். கட்சியை ஒழுங்குபடுத்துவதில் மிகுந்த ஆர்வம் கொண்டு அதில் வெற்றியும் கண்டார். நா.வானமாமலை 1959 ஆம் ஆண்டு பாளையங்கோட்டை நகராட்சி உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். கொக்கிர குலத்திற்கு குடி பெயர்ந்த பின் வார்டு உறுப்பினராகப் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். நகர்மன்றக் கூட்டங்களில் மக்களுக்கு எதிரானத் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டால் அவற்றை வன்மையாக எதிர்த்துப் போராடினார். 1965 ஆம் ஆண்டு வரை இவர் உறுப்பினராக இருந்து சொந்த காரணங்களுக்கு இப்பணி இடையூறாக இருந்ததால் இப்பதவியில் போட்டியிடுவதை நிறுத்திக் கொண்டார்.மார்க்சிய ஈடுபாடு;

நா.வானமாமலை ஆரம்பக் காலத்திலிருந்தே மார்க்சிய தத்துவத்தில் ஈடுபாடு கொண்டவர். காலப்போக்கில் இலக்கியம் பற்றிய அவரது அணுகுமுறையில் மாரக்சியம் இரண்டறக் கலந்திருந்தது. ‘பண்டைய வேத தத்துவங்களும் வேத மறுப்புப் பௌத்தமும்’ என்ற நூலில் இந்திய தத்துவ மரபையும் பண்பாட்டின் வளர்ச்சியையும் விளக்கி உள்ளார்.
1. மார்க்சிய சமூகவியல் கொள்கை
2. மார்க்சிய தத்துவம் இயக்கவியல் பொருள் முதல் வாதம்
3. மார்க்சிய அழகியல்

இந்திய நாத்திகமும், மார்க்சிய தத்துவமும் போன்ற நூல்களை இவர் எழுதி வெளியிட்டார். இவரது ‘மார்க்சிய அழகியல்’ தமிழ் இலக்கிய சூழ்நிலைக்கு ஏற்ப மாரக்சிய அழகியலின் சில அம்சங்களை விளக்கும் நூலாக விளங்குகிறது.

சிறப்புகள்;

நான்குனேரியில் ஆசிரியராகப் பணியாற்றியபொழுது நா.வானமாமலை இளைஞர் சங்கம், விவசாயிகள் சங்கம் ஆகியவற்றை அமைத்து அதன் போராட்டங்களில் கலந்து கொண்டார். தொ.மு.சி.ரகுநாதன், சோ.சண்முகம் பிள்ளை ஆகியவர்களோடு சேர்ந்து இவர் நெல்லை எழுத்தாளர் சங்கம் ஒன்றை உருவாக்கினார். இச்சங்கத்தின் தாக்கம் காரணமாகவும் நா.வானமாமலையின் வழிகாட்டுதலாலும் வந்தவர் விமர்சகர் தி.க.சிவசங்கரன் ஆவார்.
நெல்லை ஆராய்ச்சிக்குழு;
முதல் இரண்டு உலகத் தமிழ் மாநாட்டின் மூலம் தமிழ் ஆராய்ச்சிப் பின் தங்கிய நிலையில் உள்ளதை அறிந்து அதன் மேம்பாட்டிற்காக பத்திரிகைத் தொடங்குவது என முடிவு செய்தார் நா.வானமாமலை. இதன் விளைவாக தோன்றியதே நெல்லை ஆராய்ச்சிக்குழு. இக்குழு துவக்கத்தில் சிறியதாக இருந்தாலும் நாளடைவில் நல்ல வளர்ச்சி அடைந்தது. இதில் நடைபெற்ற முகாம் ஒன்றில் வரலாறு, தத்துவம், இலக்கியம் பற்றிய வகுப்புகளை இவர் நடத்தினார்.

ஆராய்ச்சி இதழ்;

ஆராய்ச்சி இதழ் தமிழ் ஆராய்ச்சியின் எல்லையை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு விளங்கியது. 1969 ஆம் ஆண்டு இதன் முதல் இதழ் வெளியானது. இந்த முதல் இதழில் ரகுநாதன், டி.வி.வீராசாமி, இராமசுந்தரம், அ.இராகவன், தேவி பிரசாந்த், சட்டோபாத்தியாயா போன்றவர்களின் கட்டுரைகளை இவர் வெளியிட்டார். இவ்விதழ் ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் கட்டுரைத் தொகுப்புகளை வெளியிட்டு வருகிறது.

தார்வார் பல்கலைக்கழகத்தில் 1975-76 ஆம் ஆண்டுகளில் இவர் திராவிட மொழியியல் ஆய்வினைச் சிறப்பாக முடித்தார். அந்த ஓராண்டு ஆய்வின் தொகுப்பு நா.வானமாமலையின் மறைவிற்குப் பிறகு 1981 இல் நூலாக வெளியானது . இந்நூலின் அடிப்படையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருக்கு டி.லிட். பட்டம் வழங்கியது.

நா.வானமாமலையின் இறுதிக் காலம்;

நா.வானமாமலையின் பொதுப்பணிகள் அனைத்தும் அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதித்தது. அவர் தொடங்கிய தனிப் பயிற்சிக் கல்லூரியும் ஆராய்ச்சி இதழும் சீராக நடைபெறவில்லை. 1980 ஆம் ஆண்டு தமது மகளைக் காண மத்தியப் பிரதேசத்தில் உள்ள கோர்பா என்ற இடத்திற்குச் சென்றார். அங்குச் செல்வதற்கு முன்னர் சென்னை கிறித்துவ இலக்கியச் சங்கத்தில் தமிழ் நாவல் பற்றிய ஒரு கட்டுரையை அளித்தார். இதுவே இவரது கடைசிக் கட்டுரை ஆகும். இவர் 2-2-1980 ஆம் ஆண்டு மறைந்தார்.

நா.வானமாமலையின் அறுபத்து மூன்றாண்டு கால வாழ்க்கையில் முப்பத்தைந்து ஆண்டுகள் தமிழ்ப் பணி ஆற்றியுள்ளார். இவரின் ஆய்வுகள் தொல்லியல், தொல்பொருள் வரலாறு, மானிடவியல், சமூகவியல், அறிவியல் என்ற முறைகளை உள்ளடக்கியது. ஆராய்ச்சி இதழ் மூலம் பல ஆராய்ச்சியாளர்களை உருவாக்கியவர். நாட்டுப்புறவியல், தமிழியல் ஆய்வுலகில் தம் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தி ஆய்வுலகில் வேரூன்றச் செய்தவர்.


வெள்ளி, 4 ஏப்ரல், 2008

தமிழ் இணைய இதழ்கள்

     
  முனைவர் க.துரையரசன்
தமிழ் இணைப்பேராசிரியர்முன்னுரை;

செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படங்கள் முதலானவற்றைத் தகவல் தொடர்பு ஊடகங்கள் என்று கூறுவர். அவ்வரிசையில் இணையத்தையும் இணைத்துக் கொள்ள வேண்டும். பிற தகவல் தொடர்பு ஊடகங்களைக் காட்டிலும் முழு வீச்சில் இணையம் வளர்ச்சியுற்று வருகிறது என்றே கூற வேண்டும். எதிர்காலத்தில் பிற ஊடகங்களைப் புறந்தள்ளிவிட்டு இது முன்னணி இடத்தைப் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.

இத்துணை சிறப்பு வாய்ந்த இணையத்தின் வழி இதழ்கள் வெளி வருகின்றன. இதனை இணைய இதழ்கள் அல்லது மின்னிதழ்கள் (e-journals /e-zines) என்று குறிப்பிடுவர். அச்சு வடிவில் வெளி வருகின்ற இதழ்களைப் போலவே காலம் (நாளிதழ், வார இதழ்) மற்றும் பொருண்மை அடிப்படையில் (அரசியல் இதழ், பக்தி இதழ்) மின்னிதழ்களையும் வகைப்படுத்தலாம். அனைத்து வகை மின்னிதழ்களைப் பற்றியும் இங்குக் குறிப்பிடின் இக்கட்டுரை மிக நீளும் என்பதால் தமிழ் இலக்கியம் சார்ந்த படைப்புகளைத் தாங்கி, அச்சில் வெளிவராமல் இணையத்தில் மட்டுமே வெளிவருகின்ற குறிப்பிடத்தக்க மின்னிதழ்கள் பற்றி மட்டும் இக்கட்டுரை விளக்க முற்படுகிறது.

திண்ணை;

வீட்டில் திண்ணை வைத்துக் கட்டுவது தமிழர் மரபு. நாகரிக உலகில் இம்மரபு மெல்ல அற்றுப் போய்விட்டது என்றே கூற வேண்டும். இன்றைய காலக்கட்டத்தில் கிராமத்தில் கட்டப்படுகின்ற வீடுகளில்கூட திண்ணைகளைக் காணோம்.

இத்திண்ணைகளில் அமர்ந்து உள்ளூர் செய்தி முதல் உலகச் செய்தி வரை பேசப்படும். இது வெறும் திண்ணைப் பேச்சாக (வெட்டிப் பேச்சு) இல்லாமல் அறிவார்ந்த செய்திகளை ஆராய்கின்ற பேச்சாக இருக்கும். திண்ணையில் அமர்ந்து பலரும் பல விதமான செய்திகளைப் பேசுவதைப் போல திண்ணை மின்னிதழிலும் யார் வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். இதன்பொருட்டுத்தான் இவ்விதழுக்குப் இப்பெயர் ஏற்பட்டதாக அறியமுடிகிறது.

இம் மின்னிதழில் கலை, அரசியல், அறிவியல், சமூகம், கதை, கட்டுரை, கவிதை, இலக்கியம் சார்ந்த செய்திகள் எனப் பல்வகைச் செய்திகள் இடம் பெறுகின்றன.

இவ்விதழ் இலாப நோக்கமின்றி செய்திகளைக் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் மட்டுமே செயற்படுகிறது. இதனைப் பார்வையிடுவதற்கோ, படைப்புகளை வெளியிடுவதற்கோ கட்டணம் கிடையாது. அதுபோல படைப்பாளிகளுக்கும் இவ்விதழ் எவ்விதமான கட்டணங்களும் வழங்குவதில்லை. அதாவது வாங்குவதும் இல்லை; கொடுப்பதும் இல்லை.

இம்மின்னிதழ் ஒருங்குறியீட்டு (Unicode) முறையில் இயங்குதல், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று புதுப்பிக்கப்படுதல், தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக வெளிவருதல், பழைய இதழ்களைப் பார்வையிடும் வசதி வழங்கல், பிற இணைய தளங்கள் மற்றும் மின்னிதழ்களுக்குச் செல்ல இணைப்பு வழங்கல் உள்ளிட்டவை இதன் சிறப்புகளாக அமைந்துள்ளன. இதன் இணைய முகவரி; www.thinnai.com

தட்ஸ் தமிழ்;

திண்ணையைப் போல முழுக்க முழுக்க இலக்கிய இதழாக இல்லாமல் நாளிதழைப் போல இம்மின்னிதழ் வெளி வருகிறது. இதில் பல்துறைச் சார்ந்த விரிவான செய்திகள் வெளிவந்தாலும்கூட இலக்கியச் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்து வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

இது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளில் வெளிவருகிறது என்பதும், இதில் செய்திகள் உடனுக்குடன் வெளியிடப்படுகின்றன (Update) என்பதும் வியத்தகு செய்தியாகும். இதில் தமிழகச் செய்திகள் மட்டுமின்றி இந்தியா, இலங்கை உள்ளிட்ட உலகச் செய்திகளும் கவிதை, கட்டுரை, சிறுகதை முதலான இலக்கியச் செய்திகளும் இடம் பெற்றுள்ளன. மேலும், திரைத்துறை உள்ளிட்ட ஒளிக்காட்சிகளையும் இதில் காணலாம். இதன் இணைய முகவரி; www.thatstamil.oneindia.in

வார்ப்பு;

இது, கவிதைக்கென்று வெளிவருகின்ற இணைய இதழ்; வாரம் தோறும் வெளிவருகின்றது. இது 1998 ஆம் ஆண்டு ‘நிக்குமோ நிக்காதோ’ என்ற பெயரில் இணைய இதழாக வெளிவந்தது. கவிஞர் இசாக் அவர்களின் ஆலோசன்ப்படி கவிஞர் மாலியன் அவர்களால் வார்ப்பு என்ற பெயர் மாற்றம் பெற்றது. இவ்விதழின் பதிப்பாசிரியர் பா.மகாதேவன். இதுநாள் (21-03-2008) வரை இதன்கண் 285 கவிஞர்களின் 1195 கவிதைகள் இடம் பெற்றுள்ளன. கவிஞர்கள், கவிதைகள், விமர்சனங்கள், நேர்காணல்கள், கட்டுரைகள் என்னும் தலைப்புகளில் செய்திகளைப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் அறிவுமதி, கனிமொழி போன்ற புகழ் பெற்ற கவிஞர்களின் கவிதைகள் வெளிவந்துள்ளமை கொண்டு இதன் சிறப்பை வெளிப்படுத்தும்.

இதன்கண் அமைந்துள்ள நூலகம் என்ற இணைப்பின் வழி சென்று புதிதாக வெளிவந்துள்ள தமிழ் நூல்களைப் பற்றிய விமர்சனத்துடன் கூடிய தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம் என்பது மிகச் சிறப்பான ஒன்றாகக் கருதலாம். இவ்விதழ் ஒருங்குறியீட்டு முறையில் வெளிவருவதால் எழுத்துரு (Fonts) சிக்கல் ஏதுமில்லை.

நாட்டுப்புறப் பாடல்களை நாட்டின் சொத்து என்று கருதுகின்ற இவ்விதழின் பதிப்பாசிரியர் பா.மகாதேவன் அதனைப் பாதுகாத்து வைக்க வேண்டிய கட்டாயமும் அவருக்கு இருப்பதாகக் குறிப்பிடுகிறார். எனவே எதிர்காலத்தில் நாட்டுப்புறப் பாடல்களையும், மொழிபெயர்ப்புக் கவிதைகளையும் வகை தொகைப்படுத்தி எளிதில் பெறுகின்ற வகையில் வெளியிடுகின்ற திட்டமும் இவருக்கு இருப்பதை அறிய முடிகிறது. இதன் இணைய முகவரி; www.vaarappu.com


பதிவுகள்;

2000 ஆம் ஆண்டிலிருந்து கனடாவிலிருந்து வெளிவருகின்ற இந்த இதழின் ஆசிரியர் வ.ந.கிரிதரன். இது ஒருங்குறியீட்டு முறையில் மாதந்தோறும் வெளிவருகின்ற மின்னிதழ் ஆகும். அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம் என்ற முழக்கத்துடன் வெளிவருகின்ற இதன்கண் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, நூல் விமர்சனம், அறிவியல், நூல் அங்காடி ஆகிய இலக்கியம் சார்ந்த செய்திகளைக் காண இயலும். தமிழ்க் கலைக்களஞ்சியம் போன்று இணையத்தில் தகவல் களஞ்சியமாக திகழ்கின்ற விக்கிபீடியா, மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க தமிழ் இணைய தளம் மற்றும் இணைய இதழ்களுக்கான இணைப்புகளும் இதன்கண் வழங்கப்பட்டுள்ளன.

இலவசமாக கிடைக்கின்ற இவ்விதழில் ஆக்கங்களை வெளியிடவும், பார்வையிடவும் கட்டணம் ஏதுமில்லை. ஆயினும் இதன் வளர்ச்சிக்காக ஆண்டுக் கட்டணமாக 24 டாலர்களை விருப்பமுடையவர்கள் வழங்குமாறு கோருகின்றனர். இதன் இணைய முகவரி; www.pathivukal.com

மரத்தடி;

மரத்தடியில் உட்கார்ந்து இளைப்பாறலாம். வெட்டிக் கதை பேசலாம். உருப்படியான கதைகளைப் பேசி அறிவைப் பெருக்கலாம். மரத்தடி என்ற இம்மின்னிதழ் இளைப்பாறவும், உருப்படியான தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவும் வகை செய்கிறது. மரத்தடிக் குழுமத்தில் உறுப்பினராக உள்ளவர் மட்டுமே இதில் தங்கள் படைப்புகளை இட முடியும். ஆயினும் வரும்பும் எவரும் இதில் உறுப்பினராகலாம். கட்டணம் எதுவும் கிடையாது. கதை, கவிதை, கட்டுரை முதலியவற்றை இவ்விதழ் வெளியிடுகிறது. படைப்புகளை ஒருங்குறியீட்டு முறையில் வெளியிடுவது இதன் சிறப்பாகும். ஆயினும் இது குறித்த காலத்தில் வெளிவருவதில்லை. இதன் இணைய முகவரி; www.maraththadi.com

தமிழம் நெட்;

மாதந்தோறும் வெளிவரும் இம்மின்னிதழைப் பொள்ளாச்சி நசன் நடத்தி வருகிறார். இவ்விதழ் பல அரிய செய்திகளைத் தாங்கி வெளிவருகிறது. தமிழறிஞர்களின் வாழ்க்கைக் குறிப்புகள். தமிழறிஞர்களின் படங்கள் (இதுவரை 276 படங்கள்), அரிய புகைப்படங்கள், நூல் மதிப்புரை, இலக்கிய நிகழ்வுகள் உள்ளிட்ட செய்திகள் இதன்கண் இடம் பெற்றுள்ளன. ஆங்கிலம் வழியாக தமிழ் கற்பிக்கின்ற அரும்பணியையும் இவ்விதழ் செய்து வருகிறது. கட்டணம் ஏதுமின்றி நடைபெற்றுவரும் இப்பணி அனைவராலும் பாரட்டப்படுகின்ற பயனுள்ள பணியாக அமைந்துள்ளது. இதன் இணைய முகவரி; www.tamizham.net

தமிழ்க்கூடல்;

இம்மின்னிதழ் தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்குப் பயன்படும் வகையில் அமைந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன. கட்டுரைகளை இலக்கியம், சமூகம், அரசியல், பொருளாதாரம் என்றும் கவிதைகளை மரபுக் கவிதை, புதுக் கவிதை, ஹைக்கூ கவிதை என்றும் வகைப்படுத்தி வெளியிடுவதன் மூலம் இது பிற இதழ்களினின்றும் வேறுபட்டு விளங்குகிறது.


ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ்ச் சான்றோர்கள் பற்றிய சுருக்கமான தகவல்களைக் கொண்ட பட்டியல் ஒன்றையும் இது வெளியிட்டுள்ளது. இதன் இணைய முகவரி; www.koodal.com

நிலாச்சாரல்;

இம்மின்னிதழ் ஒவ்வொரு திங்கட்கிழமையன்றும் வெளிவருகிறது. இது ஒருங்குறியீட்டு எழுத்துரு முறையைப் பயன்படுத்துகிறது. தொடர்கள், கதைகள், கவிதைகள், சுவடுகள், பூஞ்சிட்டு முதலிய வகையில் இலக்கியச் செய்திகளை இவ்விதழ் வழங்குகிறது. பூஞ்சிட்டு என்ற பகுதியில் சிறுவர்களுக்கான கதைகள் வெளிவருகின்றன. பல்சுவை என்ற பகுதியில் கைமணம், கைமருந்து, சுவடுகள் ஆகிய தலைப்புகளில் செய்திகள் வெளிவருகின்றன. இதன் இணைய முகவரி; www.nilacharal.com

தமிழோவியம்;

இம்மின்னிதழின் ஆசிரியர் மீனாக்ஷி. ஒருங்குறியீட்டு எழுத்துருவைப் பயன்படுத்தி வாரந்தோறும் இவ்விதழ் வெளிவருகிறது. கவிதை, கட்டுரை. சிறுகதை, திரை விமர்சனம், நூல் விமர்சனம் உள்ளிட்ட செய்திகளைத் தாங்கி இவ்விதழ் வெளிவருகிறது. தமிழ் ஈபுக் (Tamil e-books) என்ற இணைப்பும் இதன்கண் உள்ளது. இதன் மூலம் தமிழில் வெளிவருகின்ற மின் நூல்களையும் காண முடிகிறது. இதன் இணைய முகவரி; www.tamiloviam.com

முடிவுரை;

இலக்கியச் செய்திகளை வெளியிடுகின்ற இணைய இதழ்களில் மேற்காட்டியவை குறிப்பிடத் தக்கவையாகும். இவை போன்ற இன்னும் பல நூற்றுக்கணக்கான இதழ்கள் இணையத்தில் காணக்கிடைக்கின்றன. இவ்விதழ்களை எல்லாம் ஆய்வாளர்களும், ஆர்வலர்களும், ஆசிரியர்களும் கண்டு பயனுற வேண்டும். ‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்’ என்பது பாரதியின் அமுத வரிகள். ஆனால் இன்று எட்டுத் திக்கும் செல்ல வேண்டியதில்லை; இணையத்திற்குச் சென்றாலே எல்லாத் திக்குகளும் நம்மை நோக்கி இணையக் கரம் நீட்டும்.

செவ்வாய், 18 மார்ச், 2008

இணையமே......... இணையுமே !

உலகையே குவலயக் கிராமமாக மாற்றிவிட்ட ஆற்றல் வாய்ந்த தொழில்நுட்பம்தான் இணையம். இணையத்தில் இல்லாதது எதுவுமே இல்லை என்ற அளவிற்கு அனைத்துத் தகவல்களையும் தன்னகத்தேக் கொண்டதாக இணையம் திகழ்கிறது. கேட்டவர்களுக்குக் கேட்ட வரங்களை - தகவல்களை அள்ளி வழங்கும் அமுதசுரபியாக இது விளங்குகிறது. கேட்டதை எல்லாம் கொடுக்கும் கற்பக விருட்சம் என்று முன்னோர்கள் கூறக் கேட்டிருக்கிறோம்; ஆனால் கண்ணால் கண்டதில்லை. ஆனால் இன்று கேட்டதை எல்லாம் கொடுக்கும் கற்பக விருட்சமாக இணையத்தை பார்க்க முடிகிறது.

இணையத்தில் செய்திகள் படிக்கலாம்; படங்கள் பார்க்கலாம்; பாடல்கள் கேட்கலாம்; அரட்டை அடிக்கலாம்; பொழுதுப் போக்கலாம்; அறிவைப் பெருக்கலாம். ‘எண்ணிய எண்ணியாங்கு எய்துப’ என்று வள்ளுவர் கூறுவதைப் போல நீங்கள் எதைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதனை இணையத்தில் சென்று ஒரு சில நொடிகளில் தேடித் தெரிந்து கொள்ளலாம்.

எங்கும் - எதிலும் - எப்பொழுதும்

உங்கள் ஊரைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருப்பதை விட இணையத்திற்குக் கூடுதலாகத் தெரிந்திருக்க வாய்ப்புகள் அதிகம். கூகிளில் (இதனைப் போன்ற பிற தேடு பொறிகளிலும்) சென்று உங்கள் ஊரின் பெயரைத் தட்டச்சுச் செய்து இணையத்தில் தேடினால் இந்த உண்மையை நீங்கள் அறிவீர்கள். அது போலவே உங்களின் நண்பர்கள், உங்களின் போற்றுதலுக்கு உரியவர்கள், சான்றோர்கள், அறிஞர்கள், கவிஞர்கள், உலகத்தாரால் பரவலாக அறியப்பட்டவர்கள் என்று எவரைப் பற்றியும் - எதனைப் பற்றியும் - எப்பொழுது வேண்டுமானாலும் - எங்கிருந்து வேண்டுமானாலும் தேடிப் பெறலாம்.

முன்பெல்லாம் ஒன்றைப் பற்றி அல்லது ஒருவரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமாயின் நூலகங்களுக்கு அலையாய் அலைய வேண்டும்; நடந்து நடந்து கால்கள் தேய்ந்து போகும்; தேடித் தேடி கைகள் ஓய்ந்து போகும். அப்பொழுதெல்லாம் ‘இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே’ என்ற திரையிசைப்பாடல் நம் காதுகளில் விட்டு விட்டு ஒலிக்கும். இந்த அலைச்சலுக்கும் தேடலுக்கும் விடையாற்று விழா நடத்திய பெருமை இணையத்தையே சாரும்.

இணையத்தின் பயன்கள்

இணையம், உலகையேக் குவலயக் கிராமமாக மாற்றும். ‘தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்’ என்ற பாரதியின் கனவை நனவாக்கும். தமிழினம் ஒரே குடும்பமாய் வாழ வழி வகுக்கும். ஆதாரங்களைக் கண் முன்னே கொண்டு வந்து தரும். கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள உதவும்.

தகவல்களைப் பெறலாம் - அளிக்கலாம் - தொகுக்கலாம். பொருள்களை விற்கலாம் - வாங்கலாம். கல்வி பயிலலாம் - பயிற்றுவிக்கலாம். புதியனப் புகும் - அறிவுப் பெருகும் - சிந்தனை செழிக்கும். ஆதலால், தொலைக்காட்சிப் பார்த்து நேரத்தை வீணாக்குவதை விடுத்து இணையத்தைப் பார்த்து அறிவைப் பெருக்குங்கள்.

இணைய வரலாறு

இன்றைய உலகம் இணைய வழிகாட்டுதலின்படி பீடுநடை போடுகிறது எனில் அது மிகையன்று. இத்தகைய அரிய கண்டுபிடிப்புக்கு வித்திட்டவர்கள் பிரிட்டானிய நாட்டு அறிஞர்களான சார்லஸ் காவ் மற்றும் ஜார்ஜ்ஸ் ஹாக்மேன் என்பார் ஆவர். இவர்கள் 1966 இல் ஃபைபர் (Fiber) நூலிழையின் உதவியால் தகவல்களை ஒளிப் பிம்பங்களாக மாற்றி நெடுந்தொலைவு அனுப்ப முடியும் என்று கண்டுபிடித்தனர்.

இணையம் - சொற்பொருள்

உலகம் முழுவதும் உள்ள அனைத்துக் கணினிகளையும் ஒரே மின்னனு வலையில் சங்கிலி இணைப்பு செய்யப்பெற்று ஒன்றாக்கப்பட்டதுதான் இணையம். இதனை ஆங்கிலத்தில் World Wide Web என்பர். இதன் சுருக்கம்தான் www. இதனை w3, the web என்றும் அழைப்பர். ஆயினும் www என்பதுதான் பெருவழக்காகும்.

முதல் இணைய தளம்

உலகின் முதல் இணைய தளம் அர்பாநெட் (ARHANET ௲ Advanced Research Project Administration) ஆகும். கலிஃபோர்னியா மற்றும் ஃவுடா மாகாணங்களில் இருந்த கணினிகளை இணைத்து அமெரிக்க நாட்டின் பாதுகாப்புத் துறையில் எதிரிகளுக்குத் தெரியாமல் இராணுவ வீரர்கள் செய்திகளைப் பகிர்ந்து கொள்ள குறியீடுகளைப் பயன்படுத்தினர். இதனைத் தொடர்ந்து 1972இல் ஐம்பது பல்கலைக்கழகங்கள் இணைக்கப்பட்டன. 1983இல் பல்வேறு நாடுகளின் 562 கணிப்பொறிக் கட்டமைப்புகள் இதில் இடம் பெற்றன.

தொலைபேசிக் கம்பி வழித் தகவலறியும் சேவை

1980 இல் பிரான்ஸ் நாட்டில் மினிடெல்(MINITEL) என்பவர் தொலைபேசிக் கம்பி வழியிலான தகவலறியும் சேவையைத் துவக்கினார். 1992 நவம்பர் மாதம் டெல்ஃபி (Delphi) என்ற நிறுவனம் பெரிய அளவிலான தகவல் சேவையைத் தொடங்கியது.
1993 செப்டம்ர் 15இல் மிகப்பெரும் அளவிலான தேசியத் தகவல் பரவலுக்கானத் திட்டம் ஒன்றை அமெரிக்க அரசு வரைவு செய்தது.

1993இல் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின்¢ National Centre for Super Computing
என்ற மையத்தைச் சார்ந்த மாணவர்கள் பல வசதிகள் கொண்ட இணைய தேடலுக்கான மென்பொருள் திரையைக் கண்டறிந்தனர். இது மொசைக் (Mosaic) என்றழைக்கப்பட்டது. இதனை மார்க் ஆண்டர்சன் மொசைக் என்பவர் கண்டறிந்தார்.

வலைப்பின்னல்

1994இல் www என்ற வலைப்பின்னலாக அமைந்த அமைப்பு உலகின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் கருவியாக உருமாற்றம் பெற்றது. இதன் மூலம் தகவல்களை
மட்டுமல்லாது படங்களையும் பார்க்க முடிந்தது. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள செர்ன் (Cern) என்னும் அணுத்துகள் இயற்பியல் நிறுவனம் உலகு தழுவிய விரிவு வலைமுறையைக் (www) கொண்டு வந்தது.

1995இல் கொரிய நாட்டில் பிறந்து பின் அமெரிக்க நாட்டில் குடியுரிமைப் பெற்ற
நாம் ஜூன் பெய்க் (Nam June Paik) என்பவர் Cyber Town என்ற ஒன்றை நிறுவி அதன் மூலம் பல்லாயிரக் கணக்கான மக்களை இணைத்தார்.

தமிழில் முதல் இணைய தளம்

தமிழை இணைய தளத்தில் கொண்டு சேர்க்கின்ற முயற்சியில் முதலிடத்தில் இருப்பவர்கள் சிங்கப்பூர் மற்றும் இலங்கைத் தமிழர்கள் ஆவர். தமிழ் இணைய தளத்தின் தந்தை என்று போற்றப்படுபவர் சிங்கப்பூர் பேராசிரியர் நா.கோவிந்தசாமி ஆவார். இவர் சீனாவிற்குச் சென்ற பொழுது அவரது நண்பரிடம் தமிழின் பெருமைகளை எடுத்துக் கூறியுள்ளார். இதனைக்கேட்டு வியந்து அவரது நண்பர் எங்களின் சீன மொழியைப் போல பெருமை வாய்ந்த மொழி உங்களின் தமிழ் மொழி. ஆகவே எங்கள் மொழியைப் போலவே உங்கள் மொழியையும் இணையத்தில் ஏற்றலாம் என்று கூறினாராம். அதன் விளைவாக தமிழை இணையத்தில் ஏற்றும் முயற்சியில் ஈடுபட்ட கோவிந்தசாமி அவர்கள் உருவாக்கிய தளம்தான் கணியன் இணையம் (www.kanian.com). இத்தளம் பேச்சு நடையில் அமைந்த செய்திகளைத் தொகுத்தளித்தது.

தமிழ் நூல்களை வழங்கும் தளங்கள்

தற்பொழுது தமிழ் நூல்களை இணையத்தில் இடும் பணி அரசாங்கத்தாலும், தனியார் நிறுவனங்களாலும், தனி மனிதர்களாலும் ஆங்காங்கே நடைபெற்று வருவதைக் காண முடிகிறது.

தமிழ் இணையப் பல்கலைக்கழகம்

தமிழ் நூல்களை இணையத்தில் வழங்கும் அரசு நிறுவனங்களில் முதன்மையான இடம் சென்னையில் உள்ள தரமணியில் அமைந்துள்ள தமிழ் இணையப் பல்கலைக்கழகத்திற்கு உரியது ஆகும். இதன் இணைய முகவரி; www.tamilvu.org
என்பதாகும். இப்பல்கலைக்கழகம் உலகு தழுவி வாழும் தமிழர்களும் தமிழ் ஆர்வலர்களும் அரிச்சுவடி முதல் ஆராய்ச்சி வரை தமிழ்ப் படித்துப் பட்டம் பெறுவதற்கான வாய்ப்பு வசதிகளை இணையவழி ஏற்படுத்தித் தருகிறது.

இத்தளத்தில் தொல்காப்பியம், சங்க இலக்கியம் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள் (ஏறக்குறைய 1,50,000 பக்கங்களுக்கு மேல்) உரையுடன் இடம் பெற்றுள்ளன. இவற்றுள் தொல்காப்பியம், திருக்குறள் போன்ற நூல்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட உரைகளும் காணக்கிடைக்கின்றன. இதனுள் தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களேயன்றி அகராதிகள், கலைச்சொல் களஞ்சியங்கள், சைவ, வைணவக் கோயில்கள் பற்றிய ஒலி-ஒளிக் கட்சிகள், தமிழ்ப்பண்பாட்டுக் கூறுகளை உணர்த்தும் வகையிலான பரதநாட்டியம், நாதஸ்வரம், பொம்மலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், காவடியாட்டம் உள்ளிட்ட தொகுப்புகள் இடம் பெற்றுள்ளன.

மதுரைத் திட்டம்

உலகளாவிய தமிழர்கள் இணையம்வழி ஒன்றுகூடி, தமிழ் இலக்கியங்களின் மின்பதிப்புகளை உருவாக்கி அவற்றை இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் தமிழார்வலர்களும் இலவசமாகப் பெற வசதி செய்யும் ஒரு தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டமே மதுரைத் திட்டம் ஆகும். இதனைச் சுவிட்சர்லாந்து நாட்டில் வாழும் தமிழர் டாக்டர் கே.கல்யாணசுந்தரம் அவர்கள் தொடங்கினார்¢. தனி மனிதரால் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் 300க்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள் இடம் பெற்றுள்ளன. இதன் இணைய முகவரி; www.tamil.net/projectmadurai

இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம்

நடுவண் அரசின் நிறுவனமான இது மைசூரில் உள்ள மானசகங்கோத்ரியில் இயங்கி வருகிறது. தென்னிந்திய மொழிகளின் வளர்ச்சியில்¢ இந்நிறுவனத்தின் பங்கு அளப்பரியதாகும். நடுவண் அரசால் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது முதல் இதுநாள் வரை இந்நிறுவனம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு அரும்பணி ஆற்றி வருகிறது. தமிழ் இலக்கண, இலக்கியங்களின் பழம் பதிப்புகளைப் பிழையில்லாமல் செம்பதிப்பாக வெளியிடும் பணியை இந்நிறுவனம் முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் தமிழ் மொழியின் பழமையும் பெருமையும் பொருண்மையும் பாதுகாக்கப்படும் என்று நம்பலாம். இப்பணியின் முதற்கட்டமாக சங்க இலக்கியங்களைச் செம்பதிப்பாக வெளியிடுவதற்குத் தமிழகமெங்கும் சங்க இலக்கியப் பயிலரங்குகளை இந்நிறுவனம் நடத்தி வருகிறது. மேலும் தொல்காப்பியம் உள்ளிட்ட இலக்கண நூல்களையும்கூட இசைவடிவில் வெளியிட இந்நிறுவனம் முயன்று வருகிறது. இதன் இணைய முகவரி; www.ciil.org

தமிழ் மொழியின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட அனைவரும் அம்மொழியின் அருமைகளையும் பெருமைகளையும் சிதைவுபடாமல் இளைய தலைமுறைக்குக் கொண்டு செல்ல முயன்றிட வேண்டும். இம்முயற்சியில் இரண்டு நிலைகள் உண்டு. இருக்கின்ற தமிழ் இலக்கண, இலக்கியங்களை மாணவர்களுக்கும் இளைய தலைமுறையினருக்கும் எடுத்துக்கூறுவது ஒன்று; இருக்கின்ற தமிழ் இலக்கண, இலக்கியங்களைச் சிதைவுபடாமலும் சீர்குலைக்காமலும் பாதுகாப்பது மற்றொன்று. இந்த இரண்டு முயற்சிகளுக்கும் இணையில்லா ஆற்றல் வாய்ந்த இணைய வசதியை வழங்கும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்திக் கொள்ளுதல் அறிவுடைமை மட்டுமன்று; இன்றியமையாததும் கூட.


செவ்வாய், 26 பிப்ரவரி, 2008

எனது கட்டுரைகள்

1 நீதிகேட்ட நாயகியே நீ செய்தது நியாயம்தானா?
2 சர்ச்சைக்குரிய பாரதம்
3 பாம்பு பசியை நினைக்க...
தேரை விதியை நினைக்க...
நான் எதை நினைக்க... ?
4 சினிமாப்பாடல்களின்வழி தமிழிலக்கணம் கற்பித்தல்
5 அறிவறிந்த மக்கட்பேறு
6 நகைச்சுவை மன்¢னன் காளி.என்.இரத்தினம்
7 பெரிய புராணப் பெண்டிர்கள் - 1
8 பெரிய புராணப் பெண்டிர்கள் - 2
9 குமரகுருபரர் பார்வையில் வேந்தர்கள்
10 ஆராய்ச்சிப் பேரறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி
11 ஒரு குறளுக்குப் புது விளக்கம்
12 மயிலை சீனி.வேங்கடசாமி வாழ்வும் பணியும்
13 சேக்கிழார்ப் பிள்ளைத்தமிழும் மீனாட்சியம்மைப்
பிள்ளைத்தமிழும்
14 திருச்சேய்ஞலூர்¢
15 பண்டைத் தமிழர்களின் அணிகலன்கள்
16 கொங்குநாடு ஒரு வரலாற்றுப்பார்வை
17 திருச்சேய்ஞலூர்¢ கல்வெட்டு உணர்த்தும் கிராம
ஆட்சிமுறை
18 ஆத்திசூடி, கொன்றை வேந்தன் - ஓர் ஒப்பீடு
19 தமிழியல்ஆராய்ச்சி அறிஞர்கள்-தன்விவரக்கட்டுரை
20 தமிழர்களின் மரபுசார் உழவுத் தொழில்
21 தமிழ் இணையப் பல்கலைக்கழக மின் நூலகம்-
வசதிகளும் வாய்ப்புகளும்
22 மின் நூலகம் - ஒரு பார்வை
23 சங்க இலக்கியங்களில் தமிழர்களின் மரபுசார்
உழவுத் தொழில்
24 இணையமும் இனிய தமிழும்

புதன், 20 பிப்ரவரி, 2008

உள்ளம்

உள்ளம்


கண்ணாடி
கையாள்வதில் தேவை
கவனம்

சில
முகங்காட்டும்

சில
முகந்திரிந்து
மூர்ச்சையாக்கும்

சில
அழகூட்டும்

சில
சிதறும் தொட்டவுடன்

சில
சிதற
காலந்தாழ்த்தும்

சில
சிதற
அடம் பிடிக்கும்

உள்ளமும்
அப்படித்தான்


செவ்வாய், 15 ஜனவரி, 2008

பொங்குக பொங்கல்


பொங்குக எங்கும் பொங்கல்
உள்ளத்திலும் இல்லத்திலும்
உவகைப் பொங்கட்டும்
கனவிலும் நனவிலும்
இனியவை தங்கட்டும்
மங்கலம் பொங்கட்டும்
மாண்புகள் பெருகட்டும்

இருள் விலகி
ஒளி பிறக்கட்டும்
நாளைய விடியல்
நமக்காக இருக்கட்டும்

வாழ்வில் வசந்தம்
மலரட்டும்
செல்வம் செழிக்கட்டும்
தமிழர்த் திருநாளாம்
பொங்கல் திருநாளில்
மகிழ்ச்சிப் பொங்கட்டும்


இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

வளர் அன்புடன்
முனைவர் க.துரையரசன்
திங்கள், 14 ஜனவரி, 2008

தமிழர்த் திருநாள்

தமிழர்த் திருநாளாம்
தைத் திருநாளில்
தரணியெங்கும்
தமிழ்த் தையர்களெல்லாம்
மண் பானைப் பொங்கலிட்டுக்
கதிரவனுக்குப்
பணிவுடனே படையலிடுவர்.

உழைப்பின் அடையாளமாம்
உழவர்களின் உற்ற துணைவனாம் காளைகள்
உழைத்து உழைத்து
உன்னதமான செல்வங்களை
உழவர்களுக்கு
உயர்வு பெற வழங்கிடும்

உதவும் பொருள்களை
உத்தமனாம் உழவனுக்கு
அளித்திட்ட காளைகள்
பயனற்றப் பொருட்களாம்
வைக்கோல் தவிடு உள்ளிட்ட
தேவையற்றப் பொருள்களைத் தானுண்டு
உயிர் வாழ்ந்திடும்

இத்தகு
உத்தமக் குணம் படைத்த
உழவாரப் படையாளிகளுக்கு
உண்மையாய் நன்றிகாட்டும்
உயர்வான விழாவாக
மாட்டுப் பொங்கலை
உளம் குளிர நிகழ்த்திடுவான்
உழவன்ஞாயிறு, 13 ஜனவரி, 2008

வாழ்த்து

தமிழர் திருநாளாம் தைத் திருநாளில்
தமிழ் மீது அன்பு கொண்ட
உங்கள் அனைவருக்கும்
என் இதயம் கனிந்த
நல் வாழ்த்துகள்

வெள்ளி, 4 ஜனவரி, 2008

சங்க இலக்கியங்களில் தமிழர்களின் மரபுசார் உழவுத்தொழில்நோக்கம்:

தமிழக மக்கள் பெரிதும் வேளாண் தொழிலையே நம்பியுள்ளனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் வேளாண் உற்பத்திப் பெரும் பங்காற்றி வருகிறது. இதனால்தான், அறிவியல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வேளாண் தொழிலை வளர்ப்பதில் அறிவியலார் முனைப்புக் காட்டி வருகின்றனர். அறிவியல் தொழில் நுட்பத்துடன் கூடிய வேளாண்மையை அறிவியல் வேளாண்மை என்றும் கூறுகின்றனர். அறிவியலும் வேளாண்மையும் இணைந்து நடைபோடுவதால் நல்லதொரு வளர்ச்சிப் பாதையில் இத்துறை முன்னேறி வருகிறது. வேளாண் துறையில் இன்று உள்ளது போல் அறிவியல் தொழில்நுட்பங்களின் பங்களிப்பு மிகப் பழங்காலத்தில் இல்லை. ஆயினும், அக்கால வேளாண்குடி மக்களிடம் உழவு சார்ந்த அறிவியல் சிந்தனைகளின் சுவடுகள் இருந்தமையை விளக்குவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சான்றாதாரங்கள்:

இக்கட்டுரை, சங்க இலக்கியங்களில் காணலாகும் மரபுசார் உழவுத்தொழில் பற்றிய சிந்தனைகளை வெளிப்படுத்துகிறது. அவற்றை இக்கால வேளாண் அறிவியல் சிந்தனைகளோடு ஒப்பிட்டுப் பார்க்க முனைகிறது. இக்கட்டுரைக்குச் சங்க இலக்கியங்கள் முதன்மை ஆதாரங்களாகவும், தொல்காப்பியம், திருக்குறள் உள்ளிட்ட நூல்கள் துணைமை ஆதாரங்களாகவும் கொள்ளப்படுகின்றன.

உழவின் சிறப்புகள்:

உலகில் நடைபெறும் தொழில்களில் தலைமைத் தன்மை வாய்ந்தது உழவுத் தொழில் எனலாம். இதனால்தான், "சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்" (1031) என்று வள்ளுவர் கூறினார் போலும். இந்த உண்மையை வெளிப்படுத்தும் வகையில்,

"எங்க ஏரோட்டம் நின்னு போனா
உங்கக் காரோட்டம் என்னவாகும்"

என்று கேள்வி எழுப்புகிறார் கவிஞர் கண்ணதாசன்.

உழவுத் தொழிலின் மேன்மையை உணர்ந்தே அரசாங்கமும் வேளாண்மை உற்பத்தியைப் பெருக்கும் வகையில் ஐந்தாண்டுத் திட்டங்கள் உள்ளிட்ட நல்ல பல திட்டங்களின் வழி வேளாண் துறைக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

உழவரின் சிறப்பு:

உழவுத் தொழிலைச் (வேளாண் தொழிலை) செய்வோர் உழவர். இவர்கள் இவ்வுலகத்தைத் தாங்கும் அச்சாணியாகத் திகழ்வதை,

"உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து" (1032)

என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

இவ்வுலகில் வாழும் எவரும் உழவருக்கு அடுத்த நிலையில் வைத்தே எண்ணத்தக்கவர்கள் என்பதை,

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றுஎல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்" (1033)

என்றும் அவர் தெளிவுருத்துதிறார்
இதனால்தான்,
"கடவுள் என்னும் முதலாளி
கண்டெடுத்தத் தொழிலாளி
விவசாயி"
என்று கவிஞர் மருதகாசி பாடுகிறார் போலும்.

மரபுசார் உழவுத் தொழிலின் கூறுகள்:


தமிழகத்தில் தொன்றுதொட்டு நடைபெற்றுவரும் மரபுவழிப்பட்ட உழவுத் தொழிலின் நடைமுறைகளைப் பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்.
1. உழுதல் 2. சமன்செய்தல் 3. விதைத்தல் 4. நடுதல் 5. நீர்ப்பாசனம் 6. எருவிடுதல் 7.களையெடுத்தல் 8. பயிர்ப்பாதுகாப்பு 9.அறுவடை 10. தூய்மை செய்தல்

இக்கூறுகள் சங்க இலக்கியங்களில் பயின்று வந்துள்ளமையை விளக்கும் முன் உழவுத் தொழிலுக்கு அடிப்படைத் தேவையான நிலம் பற்றிய தொல்காப்பியரின் சிந்தனையைத் தெரிந்து கொள்வோம்.

மருதம்:

பழந்தமிழகம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகையாகப் பகுக்கப்பட்டது. இப்பாகுபாடு, தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே இருந்தமையை,
"முற்படக் கிளந்த எழுதிணை என்ப" (தொல்.பொருள்.அகத்.1) என்று அவர் கூறுவதன் மூலம் அறியலாம்.

மருத நிலம் என்பது வயலும் வயல் சார்ந்த பகுதியும் ஆகும். இப்பகுதி வேளாண்மை செய்வதற்கு ஏற்றப் பகுதி என்ற உணர்திறனைப் பழந்தமிழர்கள் பெற்றிருந்தனர். உழவுத் தொழிலில் ஈடுபட்ட ஆடவர்கள் உழவர்கள்; பெண்டிர்கள் உழத்தியர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

தொல்காப்பியத்துக்கு முன்பு தொடங்கி இக்கால இலக்கண நூல்கள் வரையிலும் மருத நிலம் பற்றிய முதல், உரி, கருப்பொருள்களில் காணலாகும் உழவு சார்ந்த சிந்தனைகள் உழவுத் தொழிலின் பழைமையை எடுத்துக் காட்டுவனவாகும்.

1. உழுதல்:

உழவுத் தொழிலின் இன்றியமையாதத் தொடக்கக் கூறு உழுதல் ஆகும். உழுதல் என்றால் நிலத்தின் மேற்பரப்பில் காணப்படும் கடினத் தன்மை கொண்ட மண்ணை மென்மைத் தன்மை உடையதாக ஆக்குகின்ற வகையில் மேலும் கீழுமாகப் புரட்டுவது. இச்செயல் முறைப்பட செய்யப்படவில்லை என்றால் விளைச்சல் பெருகாது.

நன்செய், புன்செய் நிலங்களில் நன்கு ஆழமாக உழவு செய்து, மண்ணை மேலும் கீழுமாகப் புரட்டி உலரவிடவேண்டும். அப்பொழுதுதான் மண்ணுக்கு நல்ல காற்றோட்டம் கிடைக்கும்; விளைச்சல் பெருகும். இஃது அறிவியல் உண்மை. இதனால்தான் இன்று வேளாண்துறையினர் கோடைப் புழுதி செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை உழவர்களிடையே வற்புறுத்தி வருகின்றனர். கோடைப் புழுதி செய்வதன் மூலம் மண்ணின் தன்மை காத்தல், நீர்ச் சிக்கனம் உள்ளிட்ட நன்மைகள் கிட்டும் என்பது வேளாண் துறையினரின் முடிபு. இந்த உண்மையைப் பழந்தமிழர்கள் உணர்ந்திருந்ததை,

"தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்து எருவும்
வேண்டாது சாலப் படும்" (1037)
என்ற வள்ளுவரின் வாக்கு சுட்டுகிறது.

அஃதாவது, ஒரு பலம் புழுதி கால் பலம் புழுதி ஆகும்படி உழுது காயவிட்டால் அந்நிலத்தில் பயிர் நன்கு செழித்து வளருமாம். இவ்வாறு உழவு செய்வோரைப் பலமுறை உழவு செய்வோர் என்ற பொருள்பட "செஞ்சால் உழவர்" (196) என்று பெரும்பாணாற்றுப்படைச் சுட்டுகிறது. இச்செய்தியை,

"........... உறுபெயல்
தண்துளிக்கு ஏற்ற பல உழு செஞ்செய்
மண்போல் நெகிழ்ந்து" (26:23-25)

என்று அகநானூறு குறிப்பிடுகிறது.

கலப்பை:

நிலத்தை உழுவதற்குக் கலப்பை என்ற உழவு கருவியைப் பழந்தமிழர் பயன்படுத்தினர்; இன்றும் பயன்படுத்தி வருகின்றனர். "இது உழவர் நிலத்தைப் பண்படுத்த உபயோகிக்கும் கருவி. இது நிலத்திலுள்ள உறுதியாகிய மண்ணினைக் கீழ் மேலாகக் கலப்பது" என்று அபிதான சிந்தாமணி (ப.365) விளக்குகிறது.

இச்சொல், இசைக்கலங்கள் இட்ட பை என்ற பொருளில் புறநானூற்றிலும் (206: 10), உழுதலுக்கு உரிய கருவி என்ற பொருளில் பெரும்பாணாற்றுப்படையிலும் (188) பயின்று வந்துள்ளது. இக்கலப்பையின் அடிப்பகுதி - நிலத்தைக் கிளரும் பகுதி கொழு எனப்படும். இச்சொல்,

"......................... நாஞ்சில்
உடுப்பு முகமுழுக்கொழு மூழ்க ஊன்றி" (பெரும்பாண். 199-200)
"கொழுவல்சி" (மதுரைக்காஞ்சி 141)
"நாஞ்சில் ஆடிய கொழுவழி மருங்கின்" (பதிற்றுப்பத்து 58: 17)

என்று பயின்று வந்துள்ளமையைக் காணமுடிகிறது.

இக்கலப்பையினால் மிகக் கடினமாக உள்ள நிலப்பகுதியை உழுவதில் இடையூறு ஏற்பட்டது. எனவே, கொழுவுடன் கூடிய ஏர்க்கலப்பையைப் பழந்தமிழர் பயன்படுத்தியுள்ளமையைக் காணமுடிகிறது. (கொழு - கலப்பையின் அடிப்பகுதி கூர்மையான இரும்புத்தகடு அல்லது இரும்புத் தண்டினால் ஆனது)

இரு வகை உழவு:

உழவர்கள், நன்செய் நிலங்களில் சேற்று உழவும் புன்செய் நிலங்களில் புழுதி உழவும் செய்தனர். "கொல்லை உழுகொழு" (117) என்று கொல்லை நிலத்தை உழுத கொழுவைப் பொருநராற்றுப்படை குறிப்பிடுகிறது.

"ஊன்கிழித்தன்ன செஞ்சுவல் நெடுஞ்சால்
வித்திய மருங்கின் விதைபல நாறி" (194:4-5)

என்பது செம்மண் நிலத்தின் இருபுறமும் புழுதி கீழ் மேலாகப் புரண்டு விழுந்துப் புலருமாறு, கொல்லையில் உழவர்கள் ஏர்கொண்டு உழுதது ஊனைக் கிழித்தாற் போன்று இருந்ததாக அகநானூறு புழுதி உழவு குறித்து இயம்புகிறது.

"அரிகால் போழ்ந்த தெரிபகட்டு உழவர்" (41: 6) என்று அறுவடை செய்த வயல்களில் அரிதாள் பிளவுபடும்படி சேற்று உழவு செய்ததை அகநானூறு குறிப்பிடுகிறது.

எனவே, சேற்று உழவு செய்வதற்கு மரத்தினால் ஆன கொழு கலப்பைகளையும் புழுதி உழவு செய்வதற்குக் கூரிய இரும்புத்தகடு அல்லது இரும்புத் தண்டினால் ஆன கொழுவுடன் கூடிய கலப்பைகளையும் தமிழர்கள் தொன்றுதொட்டுப் பயன்படுத்தி வருவதைச் சங்க இலக்கியங்கள் வழி உணரமுடிகிறது.
இன்றைய உலகில் டிராக்டர் உள்ளிட்ட உழவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த எந்திரங்களிலும் சேற்று உழவிற்கும் புழுதி உழவிற்கும் வெவ்வேறு கலப்பைகள் பயன்படுத்தப் படுகின்றன. இவைப் பழந்தமிழர் பயன்படுத்திய இருவேறு கலப்பைகளோடு ஒப்பு நோக்கத்தக்கன.

2 .சமன்செய்தல:


நிலத்தை நன்கு உழவு செய்த பிறகு அதைச் சமன் செய்வர். அதாவது நிலத்தின் மேற்பரப்பை மேடு பள்ளங்கள் இல்லாதவாறு இயன்றவரை சரி செய்வர். மேடான பகுதிகளை மண் வெட்டியால் வெட்டித் தாழ்வான பள்ளங்களில் இட்டு உயர்த்துவர். இதனால் நிலத்தில் உள்ள ஒழுங்கற்ற மேடு பள்ளங்கள் சரி செய்யப்படுவதுண்டு. இதனால் நிலம் சமனடையும். இவ்வாறு செய்வதால் நிலத்தின் நீர்ப்பாசனம் ஒரே சீராக இருக்கும். சேற்று நிலத்தில் இவ்வாறு செய்து பரம்பு வைத்த பிறகு விதை விதைப்பதோ அல்லது நடவு செய்வதோ நடைபெறும்.
நன்றாக உழவு செய்த பிறகு சேற்றினை உழவர்கள் கால்களால் நன்கு மிதித்து சமப்படுத்தினர் என்பதை,

"............... செறுவின்
உழாஅ நுண்தொளி நிரவிய வினைஞர்" (210-211)

என்று பெரும்பாணாற்றுப்படைக் குறிப்பிடுகிறது.

3. விதைத்தல்:

நிலத்தை நன்கு உழவு செய்து பண்படுத்திய பிறகு விதை விதைப்பர். இச்செய்தி சங்க இலக்கியங்களில் பல இடங்களில் பயின்று வந்துள்ளன. நெல் விதைத்தல், வரகு விதைத்தல், சாமை விதைத்தல் முதலியவை முல்லை மற்றும் மருத நில மக்களின் தொழில்கள் என்பது இங்கு நினைவில் கொள்ளத்தக்கதாகும்.
"பல்விதை உழவின் சில்ஏராளர்" (76:11) என்று பதிற்றுப்பத்தும், உழவர்கள் காலையில் விதைப்பதற்காகச் சிறிய கூடைகளில் விதைகளை எடுத்துச் சென்ற செய்தியை,

".............உழவர்
விதைக்குறு வட்டி போதொடு பொதுளப்" (155: 1-2)

என்று குறுந்தொகையும் குறிப்பிடுகிறது.

விதைப்பதற்கு உரிய வித்துகளைப் பழந்தமிழர்கள் நன்கு உலர (காய) வைத்ததற்கான சான்றும் கிடைக்கிறது. "வெண்ணெல் வித்தின் அறைமிசை உணங்கும்" (211:6) என்று அகநானூறு குறிப்பிடுகிறது. அதாவது , உழவர்களின் விதை நெல்லைப் போன்று கடம்ப மலர்கள் பாறையின் மீது நன்கு காய்ந்து கிடக்கிறதாம்.

இருவகை விதைத்தல்:

இக்காலத்தார் புழுதி விதை, சேற்று விதை என்று இருவகை விதைப்பு முறைகளைச் செய்கின்றனர்.

புழுதி விதை:

நிலத்தை நன்கு உழுது, புலர விட்டு அதன் பிறகு நீர்ப் பாய்ச்சி விதைகளைத் தௌதப்பர். இது பெரும்பாலும் கோடைக் காலங்களில் அல்லது நீர்த் தட்டுப்பாடு உள்ள காலங்களில் நடைபெறும்.

சேற்று விதை:

நிலத்தில் நீர்ப்பாய்ச்சி, நன்கு உழுது சேறாக்கி, தண்ணீர் நிரப்பிய பிறகு விதைகளைத் தௌதப்பர். இது பெரும்பாலும் நீர்த்தட்டுப்பாடற்றக் காலங்களிலும் மழைக் காலங்களிலும் நடைபெறும். இவ்விருவகை செயல்பாடுகளையும் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.

"................. கான்உழு குறவர்
சில வித்து அகல இட்டென, பல விளைந்து" (209: 2-3)

என்று குறவர் கொல்லையாகிய காட்டினை உழுது பரவலாக விதைத்த விதைகள் பலவாக விளைந்தமையை நற்றிணை காட்டுகிறது.

செம்மண் நிலத்தின் இருபுறமும் புழுதி கீழ் மேலாகப் புரண்டு விழுந்து புலருமாறு, கொல்லை உழவர்கள் ஏர்கொண்டு உழுதனர். ஊனைக் கிழித்தாற் போன்ற சிவந்த மேட்டு நிலத்தைப் பிளந்து சென்ற நெடிய உழவுச் சாலிடத்து விதைத்த விதைகள் முளைத்து வளர்ந்தன. இச்செய்தியை,

"ஊன்கிழித் தன்ன செஞ்சுவல் நெடுஞ்சால்
வித்திய மருங்கின் விதைபல நாறி" (194: 4-5)

என்று அகநானூறு விவரிக்கிறது.
]
நற்றிணையும் அகநானூறும் புழுதியில் விதை விதைத்த செயலைக் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம். சேற்றில் விதை விதைத்த செய்தியைப் பின்வரும் புறநானூற்று வரிகளில் காணமுடிகிறது.

"கயத்து இட்ட வித்து வறத்தின் சாவாது
கழைக் கரும்பின் ஒலிக்குந்து" (137: 5-6)

அதாவது, நீர் நிறைந்த பள்ளத்தில் விதைத்த, வித்து, நீரின்மையால் சாவாது; கரும்பு போலத் தழைக்குமாம்.

இங்ஙனம் புழுதியிலும் சேற்றிலும் விதைத்த விதைகள் கடும் மழை, கூளம் போன்றவற்றால் பாதிக்கப்படுவதை இன்றும் கண்கூடாகக் காண முடிகிறது. விதைகளைத் தெளித்த ஓரிரு நாட்களில் கடும் மழை பெய்து பரவலாக உள்ள விதைகளைக் குவித்து விடுவது உண்டு. இதை உழவர்கள் விதை குவிந்து போயிற்று (குவிச்சுப் போட்டது) என்று கூறுகின்றனர்.

இது போன்ற ஒரு நிகழ்ச்சி பரிபாடலில் காணப்படுகிறது. உழவர்கள் விதைத்த விதைகளை உடைய நாற்றங்கால், வௌ஢ளத்தால் அடித்து வரப்பட்ட வண்டல் மண்மூடி மேடாகிப் போயிற்று என்ற செய்தியை, "வித்து இடுபுலம் மேடு ஆயிற்றென" (7:35) என்று பரிபாடல் சுட்டுகிறது.

எனவே, விதை விதைத்தலுக்கு உரிய நிலத்தைத் (நாற்றங்காலை) தயார் செய்தல், புழுதியில் விதை தௌதத்தல், சேற்றில் விதை தௌதத்தல், விதைகள் சேதப்படுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தொன்றுதொட்டு நடைபெற்று வருகின்றன. இச்செயல்களைச் செய்ய இன்று விதை தௌத எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றிலும் மேற்சுட்டிய செயல்முறைகளே பின்பற்றப்படுகின்றன.

4. நடுதல்:

சேற்று நிலத்தில் நாற்றுக்களைப் பரவலாக ஊன்றும் செயலை நடுதல் என்பர். நடவு செய்வோரை நடுநர் என்று நற்றிணைக் குறிப்பிடுகிறது. மேலும் நாற்றினைச் சேற்றில் அழுத்தி நடுவதை,

"நீர் உறு செறுவின் நாறு முடி அழுத்த
நடுநரொடு சேறி ஆயின்" ( 60: 7-8)

என்றும் அவ்விலக்கியம் விளக்குகிறது.

நடவு செய்தல் குறித்த செய்தி பெரும்பாணாற்றுப்படையிலும் "முடிநாறு அழுத்திய நெடுநீர்ச் செறுவில்" (212) என்று சுட்டப்படுகிறது. நடுநர்கள் செய்த செயலை இன்று நடவு எந்திரங்கள் செய்யத் தொடங்கியுள்ளன.

5. நீர்ப்பாய்ச்சுதல்:

வேளாண்மையின் வெற்றி, நீர்ப்பாசனத்தைப் பொறுத்து அமைகிறது. நீரின்றி அமையா உலகு என்பதை நீரின்றி அமையா உழவு என்று கூறின் மிகையன்று. நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் நீர் நிர்வாகம் பற்றிய புரிதல் உழவர்களுக்கு ஊட்டப்படுகிறது. பயிர் விளைவதற்கு நீர் இன்றியமையாதது என்பதை, அன்னையின் கடுஞ்சொல்லை நீராகக் கொண்டு காம நோய் என்ற பயிர் வளர்ந்தது என்பதை "அன்னை சொல் நீராக நீளும் இந்நோய்" (1147) என்று உவமை நயம்பட வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

பாசனத்துக்குத் தேவையான ஆற்று நீர் வாய்க்கால் வழியாக ஓடி வயல்களில் பாய்ச்சப்படுகின்ற அறிவுத் திறம் தமிழர்களுக்குப் பழைமையானது என்பதை,"நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடி" என்ற ஔவையாரின் வாக்குப் புலப்படுத்துகிறது.

இங்ஙனம் வாய்க்கால் வழியாக ஓடுகின்ற நீரைத் தேவைப்படும் இடங்களில் வாய்க்கால்களின் குறுக்கே சிறு தடுப்புகளை (அணைகளை) ஏற்படுத்தி நீர்ப் பாய்ச்சுகின்றப் போக்கை அகநானூறு மிக அழகாகச் சித்திரிக்கிறது.
உழவர்கள் நெற்பயிரை உடைய தம் வயல்களில் காஞ்சி மரத்தின் சிறு துண்டுகளை நட்டு, இனிய சுவைமிக்க கரும்பின் சிறந்த பல கழிகளைக் குறுக்கே நெருக்கமாக வைத்து அடைத்து அணையாகக் கோலி, அப்பள்ளங்களில் நீரைத் தேக்கிப் பாய்ச்சுவர். இக்காட்சி,

"......கலிமகிழ் உழவர்
காஞ்சிஅம் குறுந்தறி குத்தி, தீம்சுவை
மென்கழைக் கரும்பின் நன்பல மிடைந்து
பெருஞ்செய் நெல்லின் பாசவல் பொத்தி
வருத்திக்கொண்ட வல்வாய்க் கொடுஞ்சிறை
மீதுஅழி கடுநீர் நோக்கி..........." (346: 5-10)

என்று அகநானூற்றில் அழகுறக் காட்டப்பட்டுள்ளது.

வாய்க்கால்களின் நடுவே சிறு தடுப்பு அணைகளை உண்டாக்கி நீர்ப் பாய்ச்சுகின்ற பழந்தமிழர்களின் அறிவுத் திறத்தோடு வாய்க்கால்களில் தடுப்பு மதகுகளை ஏற்படுத்தித் தரும் அரசாங்கத்தின் செயற்பாட்டை ஒப்பிடத் தோன்றுகிறது. எனவே, நீர் நிர்வாகம் பற்றிய புரிதல் பழந்தமிழர்களிடையே இருந்ததாகக் கொள்ளலாம்.

6. எருவிடுதல்:

உழவுத் தொழிலின் அடிப்படைச் செயல்களுள் ஒன்று எருவிடுதல் ஆகும்.
"ஏரினும் நன்றால் எருவிடுதல்" (1038) என்று வள்ளுவர் எரு இடுதலின் இன்றியமையாமையைப் புலப்படுத்துகிறார். விளைச்சலைப் பெருக்கும் வகையிலும் மண் வளத்தைக் காக்கும் வகையிலும் இச்செயல் பழங்காலந்தொட்டே நடைபெற்று வருகிறது. பழந்தமிழர்கள் இயற்கை உரங்களையேப் பயன்படுத்தினர். இன்றைய உழவர்கள் பெரிதும் செயற்கை உரங்களையேப் பயன்படுத்துகின்றனர். செயற்கை உரங்கள் மண்ணின் தன்மையைச் சீர்குலைப்பதோடு சுற்றுச் சூழலையும் மாசுபடுத்துகிறது. எனவேதான் இயற்கை உரங்களின் முக்கியத்துவத்தைப் பலரும் தற்பொழுது வற்புறுத்தி வருகின்றனர்.

தொழு உரமும் தழை உரமும்:


பண்டைத் தமிழர்கள் கால்நடைகளின் கழிவுப் பொருள்களாலான தொழு உரத்தையும் இலை, தழைகளாகிய பசுந்தாள் உரத்தையும் பயன்படுத்தினர். இவற்றை உரமாகப் பயன்படுத்தும் வழக்கம் இன்றும் காணப்படுகிறது.
ஆடு, மாடு, கோழி முதலானவற்றின் கழிவுப் பொருள்கள் மற்றும் குப்பைக் கூளங்கள் ஆகியவற்றைக் குப்பைக் குழிகளில் இட்டு மக்கச் செய்து அவற்றை வயல்களுக்கு உரமாகப் பயன்படுத்துவர். இந்நடைமுறையை இன்றும் சில உழவர்களிடையே காண முடிகிறது. இதில் கால்நடைகளின் கழிவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. சில வேளைகளில் ஆடு, மாடுகளை இரவு நேரத்தில் வயல்களில் மந்தையாகத் தங்கச் செய்வர். இவ்வாறு செய்வதைக் கிடை கட்டுதல் என்பர்.

கிடைகட்டுகின்ற இச்செயலைப் பதிற்றுப்பத்து, "தொறுத்த வயல் ஆரல் பிறழ்நவும்" (13:1) என்று குறிப்பிடுகிறது. தொறுத்த வயல் என்பதற்கு ஆட்டுக்கிடை கட்டப்பட்ட வயல் என்பர் உரையாசிரியர்.

குப்பைக் கூளங்கள் உரமாகப் பயன்படுத்தப் பட்டமையைச் சங்க இலக்கியங்களில் பல இடங்களில் காண முடிகிறது.

தாது எரு மறுகின்ஒ (நற்றிணை 343: 3, புறநானூறு 33: 11, 215:2, 311: 3)
தாது எரு மறுகின் மூதூர் (அகநானூறு 165: 4)
தாது எரு மறுத்த கலி அழிமன்றத்துஒ (பதிற்றுப்பத்து 13: 17)
தாது எருத் ததைந்தஒ (மலைபடுகடாம் 531)
இடுமுள் வேலி எருப்படு வரைப்பின்ஒ (பெரும்பாணாற்றுப்படை 154)

போன்ற இடங்களில் பூக்கள் எருவாகிக் கிடந்தன என்று குறிப்பிடப்பட்டுள்ளன.

அஃதாவது, தெருக்களில் பூக்கள் எல்லாம் உதிர்ந்து எருவாகின என்று கவிஞர் கற்பனை செய்தாலும் அதில் உண்மை இல்லாமல் இல்லை. உதிர்ந்த இலைகளும் தழைகளும் மலர்களும் குப்பை எருவாதல் என்பது இன்று நாம் கண்கூடாகக் காணும் உண்மை ஆகும்.

உழுந்தின் வேர் முடிச்சுகள் நைட்ரஜன் சத்தைச் சேமித்து வைப்பதாக அறிவியலார் கூறுவர். இதைச் சங்க காலத்தில் பயிரிட்டுள்ளனர். உழுந்து பயிரிடப்பட்ட செய்தி சங்க இலக்கியங்களில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளன.
சான்றாக,

".............உழுந்தின்
அகல இலை அகல வீசி" (நற்றிணை 89: 5-6)
"பூழ்க்கால் அன்ன செங்கால் உழுந்தினி" (குறுந்தொகை 68: 1)
"உழுந்துடை கழுந்தின்" (குறுந்தொகை 384: 1)
"நெய்யொடு மயக்கிய உழுந்து நூற்றன்ன" (ஐங்குறுநூறு 211: 1)
"உழுந்து தலைப்பெய்த தொழுங்களி மிதவை" (அகநானூறு 86: 1)
முதலியவற்றைக் குறிப்பிடலாம். உழுந்து மட்டுமின்றி பயிறும் விளைவித்தமையைப்
"பைம்பயறு உதிர்த்த கோதின்" (297: 3)

என்று புறநானூறு குறிப்பிடுகிறது.

எனவே வேளாண் தொழிலுக்குத் தேவையான இயற்கை உரங்களைப் பழந்தமிழர் பயன்படுத்தி உள்ளமை தௌதவாகிறது. மேலும், இயற்கை உரங்களின் பயன்பாடே சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிக்காதது என்பதால் அதை அறிவியலார் இன்று வற்புறுத்துவதும் பழந்தமிழரின் சிந்தனை வளத்தை வௌதக்காட்டுகிறது.

7. களையெடுத்தல்:

வேளாண் தொழிலில் பயிர் செய்யும் விளைபொருள்களுக்குத் தீங்குச் செய்யும் தாவரங்களும் அப்பயிர்களினூடே வளர்வதுண்டு. அவை விளை பயிர்களுக்குக் கிடைக்கும் நீர், உரம் போன்றவற்றை எடுத்துக்கொண்டு வளர்கின்றன. இவற்றைக் களைகள் என்பர். இதை ஔவையார்,

"நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடி
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்"

என்று குறிப்பிடுகிறார்.

இக்களைகளை நீக்குவது மிகவும் அவசியமானதாகும். இல்லையெனில் விளைச்சல் குறையும். பழந்தமிழர்கள் களைகளை நீக்கியமைக்குச் சான்றுகள் கிடைக்கின்றன.

"களைகால் கழீஇய பெரும்புன வரகின்" (194:9) என்ற அகநானூற்று வரி, தினைப்புனத்தில் வளர்ந்த களைகளைக் களைக் கொட்டினால் பறித்து தினைப் புனத்தைத் தூய்மை செய்த செய்தியைக் குறிப்பிடுகிறது.
அதுபோல நன்செய் நிலத்தில் கோரை, நெய்தல் பூ போன்றவை களைகளாக வளரும். அவற்றை உழவர்கள் நீக்குவர்.

சாயும் நெய்தலும் ஓம்புமதி (60: 9) என்ற நற்றிணைப் பாடலில் களைகளாகிய கோரைகளையும் நெய்தல் பூக்களையும் நீக்காதே. அவை இற்செறிப்பில் உள்ள தலைவி வளையலாகவும் ஆடையாகவும் உடுத்தப் பயன்படும் என்று தோழி கூறுகிறாள்.

எனவே, விளை பொருள்களுடன் உண்டாகும் களைகளைப் பழந்தமிழர்கள் நீக்கியமைப் புலனாகிறது. இச்செயலில் தற்பொழுது களை வாரும் எந்திரங்கள் பயன்படுகின்றன.

8. பயிர்ப்பாதுகாப்பு:

களைகளிலிருந்து பயிர்களைப் பாதுகாத்தது போல பூச்சிகள், விலங்குகள், பறவைகள் போன்றவைகளிடமிருந்தும் பயிர்களைக் காப்பது பயிர்ப் பாதுகாப்பு எனப்படும். பழந்தமிழர்கள் இப்பயிர்ப் பாதுகாப்பிலும் இயற்கையோடு இயைந்த முறைகளையே பின்பற்றி உள்ளனர். தினைப் புனம் காத்தல் போன்ற செயல்களைப் பயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளாகக் கொள்ளலாம். "காவல் கண்ணினம் தினையே" (92: 7) என்றும், "சிறுதினைப் படுகிளி கடீஇயர் (32: 5) என்றும் அகநானூறு குறிப்பிடுகிறது. தினைப் புனம் காத்த செய்திகளைச் சங்க இலக்கியங்களில் பல இடங்களில் காண முடிகிறது.

9. அறுவடை:

நெல் அறுவடை செய்த செயல் பெரும்பாணாற்றுப்படையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
"பைதுஅற விளைந்த பெருஞ்செந் நெல்லின்
தூம்புடைத் திரள்தாள் துமித்த வினைஞர்" (230-231)
என்ற வரிகளில் துமித்த வினைஞர் என்பது அறுவடை செய்யும் உழவரைக் குறிக்கிறது.

பழங்கால உழவர்கள் நெல்லை அறுத்து வந்து போராகக் களத்தில் குவித்து வைத்தனர். அதன் பிறகு கடாக்களை விட்டு நெல்லைப் பிரித்து எடுத்தனர் என்ற செய்தி,

"............ போரின் முழுமுதல் தொளைச்சி
பகடுஊர்பு இழிந்த பின்றை ..................." (237-238)

என்று பெரும்பாணாற்றுப்படையில் சுட்டப்படுகிறது. இச்செய்தியை,

"நீர்சூழ் வியன்களம் பொலிய போர்பு அழித்து
கள்ஆர் களமர் பகடுதலை மாற்றி" (366: 2-3)

என்று அகநானூறு சுட்டுகிறது.

கடாவிடுதல் என்ற செயலானது விடியற் காலையில் நடைபெறுவது என்பதையும் அகநானூறு வைகுபுலர் விடியல் வைபெயர்த்து ஆட்டி (37:5) என்று குறிப்பிடுகிறது.

மருத நில மக்களின் தொழில்களான நெல்லரிதல், கடாவிடுதல் ஆகிய செயல்கள் அறுவடைத் தொழிலைக் குறிப்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.
உழவர்கள் அறுவடை செய்த நெற்கதிர்களைக் கட்டாகக் கட்டிக் களத்திற்குக் கொண்டு செல்வர். இவ்வாறு கட்டாகக் கட்டும்பொழுது அரிந்த தண்டுப் பகுதிகளைத் தலைப்பு மாற்றி வைத்துக் கட்டுவதை இன்றும் காணமுடிகிறது.
இங்ஙனம் தலைப்பு மாற்றிக் கட்டுகள் கட்டுவதை அகநானூறு,

"எரிபுரை பல்மலர் பிறழ வாங்கி
அரிஞர் யாத்த அலங்கு தலைப்பெருஞ்சூடு
கள்ஆர் வினைஞர் களம்தொறும் மறுகும்" (84: 11-13)

என்று அகநானூறு காட்டுகிறது.

அஃதாவது அரிந்த நெற்கதிர்களுடன் கூடிய நெருப்புப் போன்ற மலர்களை மாற்றிவைத்துக் கட்டியக் கட்டுகளை உழவர்கள் களத்தில் கொண்டு சேர்த்தனராம்.

10. தூய்மை செய்தல்:நெல்லரிந்து, கடா விட்டு நெல்லை வைக்கோலினின்றும் உழவர்கள் பிரித்தெடுத்தனர். அங்ஙனம் பிரித்தெடுத்த நெல்லைக் காற்றில் தூற்றித் தூசு துரும்புகளை அகற்றித் தூய்மை செய்தனர். அவ்வாறு தூற்றும் பொழுது எழும்பிய தூசு துரும்புகள் இருண்ட மேகம் போல தோன்றியது என்பது அகநானூற்றுக் காட்சி.

"பொங்கழி முகந்த தாஇல் நுண்துகள்
மங்குல்வானின் மாதிரம் மறைப்ப" (37: 3-4)

விரைந்து வீசும் காற்றில் உழவர்கள், நெல்லைத் தூற்றினர். அதிலிருந்து பிரிந்து சென்ற தூசு துரும்புகள் உப்பளப் பாத்திகளில் வீழ்ந்ததை,

"கடுங்காற்று எறிய, போகிய துரும்பு உடன்
காயல் சிறுதடிக் கண்கெடப் பாய்தலின்" (366: 4-5)
என்றும் அகநானூறு காட்டுகிறது.
எனவே, உழவர்கள் நெல்லை அரிந்து, கடாவிட்டுத் தூற்றித் தூய்மை செய்தனர் என்பது புலனாகிறது.

முடிவுரை:

இதுகாறும் கண்ட செய்திகளைத் தொகுத்து நோக்குமிடத்து தமிழர்களின் மரபுசார் உழவுத் தொழிலை நன்கு விளங்கிக்கொள்ள முடிகிறது. பழந்தமிழரின் உழவியல் சிந்தனைகள் இன்றைய அறிவியல் சிந்தனைக்குப் படிக்கற்களாக இருந்துள்ளமை விளங்குகிறது. மேலும், பழந்தமிழர்கள் இயற்கையோடு இயைந்த உழவுத் தொழிலையே செய்து வந்தனர் என்பது புலனாகிறது.


முனைவர் க.துரையரசன்
உதவி இயக்குநர்
தமிழ் இணையப் பல்கலைக்கழகம்
சென்னை - 113. 
பழமொழிகள்

1. அகத்தின் அழகு முகத்திலே.
2 ஆனை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
3. ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
4. இக்கரைக்கு அக்கரை பச்சை.
5. இனம் இனத்தையே சாரும்.
6. இரக்கப் போனாலும் சிறக்கப் போ.
7. இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.
8. ஈர நாவிற்கு எலும்பில்லை.
9. உலை வாயை மூடலாம், ஊர் வாயை மூட முடிய
10. உறவு போகாமல் கெட்டது, கடன் கேட்காமல் கெட்டது.
11. உளவு இல்லாமல் களவு இல்லை.
12. உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்ப
13. உற்றது சொன்னால் அற்றது பொருந்தும்.
14. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
15. ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சினேகம் இழுக்கும்.
16. எளiயாரை வலியார் வாட்டினால் வலியாரைத் தெய்வம் வாட்டும்.
17. எத்தனை ப
18. எத்தால் வாழலாம்? ஒத்தால் வாழலாம்.
19. எரிகிற கொள்ளiயில் எண்ணெய் ஊற்றினாற்போல்.
20. எருமை வாங்கும் முன் நெய் விலை பேசாதே,
பிள்ளை பெறுமுன் பெயர் வைக்காதே.
21. எலி வளையானாலும் தனி வளைவேண்டும்.
22. எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?
23. எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
24. எடுக்கிறது பிச்சை, ஏறுகிறது பல்லக்கு.
25. எங்கே பர வாசனை?
26. கற்கையில் கல்வி கசப்பு, கற்றப்பின் அதுவே இனிப்பு.
27. கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு
28. கண்கெட்ட பிறகா சூரிய வணக்கம்?
29. கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.
30. கல்லைக் கண்டால் நாயைக் காணோம்,
நாயைக் கண்டால் கல்லைக் காணோம்.
31. கடுகு சிறுத்தாலும் காரம் குறைய
32. கரும்பு கட்டோடு இருந்தால் எறும்பு தானே வரும்.
33. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரைய
34. கடன் இல்லாக் கஞ்சி கால் வயிறு போதும்.
35. கரும்பு தின்னக் கூலியா?
36. காலம் போகும் வார்த்தை நிற்கும்.
37. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
38. காலைச் சுற்றின பாம்பு கடியாமல் விடாது.
39. காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு.
40. காற்றுள்ளே போதோ தூற்றிக்கொள்.
41. கிடைக்கப்போகும் பலாக்காயினும் கிடைக்கும் களாக்காய் மேல்.
42. குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
43. குடல் காய்ந்தால் குதிரைய
44. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.
45. குளiக்கப் போய்ச் சேறு பூசிக் கொள்ளலாமா?
46. கெண்டையைப் போட்டு வராலை இழு.
47. கெடுவான் கேடு நினைப்பான்.
48. கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே.
49. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.
50. கைவில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்?
51. கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
52. கையாளாத ஆய 85. கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
53. கோழி மிதித்து குஞ்சு முடமாகுமா?
54. சர்க்கரை என்றால் தித்திக்குமா?
55. சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்.
56. சிறு துரும்பு பல்லுக்கு உதவாது.
57. சிறுகக் கட்டிப் பெருக வாழ்.
58. சுவரை வைத்துக் கொண்டல்லவா சித்திரம் எழுத வேண்டும்.
59. சொப்பனத்தில் கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா?
60. சொல்லாது பிறவாது, அள்ளாது குறையாது.
61.சோம்பல் இல்aலத் தொழில், சோதனை இல்லாத் துணை.
62. தன் வீட்டு விளக்கென்று முத்தமிடலாமா?
63. தன் கையே தனக்கு உதவி.
64. தன் முதுகு தனக்கு உதவி.
65. தன் வினை தன்னைச் சுடும்.
66. தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும்.
67. தன் பலம் கொண்டு அம்பலம் ஏறவேண்டும்.
68. தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்காதே.
69. தான் ஆடாது போனாலும் தன் தசை ஆடும்.
70. தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும்.
71. தானே கனியாத பழத்தைத் தடிகொண்டு அடிப்பதா?
72. தினை விதைத்தவன் தினை அறுப்பான்,
வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
73. துணை போனாலும் பிணை போகாதே.
74. துள்ளுகிற மாடு பொதி சுமக்காது.
75. தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளiர்ச்சி.
76. தூங்குகிற பசு பால் கறக்காது.
77. நத்தையின் வயிற்றில் முத்துப் பிறக்கும்.
78. நாய் வேடம் போட்டால் குரைத்துத்தான் தீர வேண்டும்.
79. நிறைகுடம் நீர் தளும்பாது.
80. நிழலின் அருமை வெய்யிலில் தெரிய
81. நிறை குடம் நீர் தளும்பாது.
82. நீருள்ள மட்டும் மீன் துள்ளும்.
83. நெருப்பு இல்லாமல் புகை இருக்காது.
84. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
85. பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும்.
86. பகலில் பக்கம் பார்த்துப் பேசு, இரவில் அதுவ
87. பனங்காட்டு நரி சலசலப்புக்கு பதுங்காது.
88. பாம்பின் கால் பாம்பு அறியும்.
89. பாலுக்குக் காவல் பூனைக்கும் தோழன். 136. பார்த்தால் பூனை. பாய்ந்தால் புலி.
90. மெய் சொல்லிக் கெட்டவனும் இல்லை,
பொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை.
91. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
92. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.
93. வாய் சர்க்கரை, கை கருணைக்கிழங்கு.
94. விளையாட்டு வினையாயிற்று.
95. வெள்ளம் வருமுன் அணைகோல வேண்டும். 165. வெறுங்கை முழம் போடுமா?
96. வெளுத்ததெல்லாம் பாலாமா, கறுத்ததெல்லாம் தண்ணீராமா?
97. வெறுங்கை முழம் போடுமா?
98. வேண்டாப் பெண்டாட்டி கைப்பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்.
99. வேலியே பயிரை மேய்ந்தால், விளைவது எப்படி?
100. படித்தவன் பாட்டைக் கெடுத்தான்
        எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்

புதன், 2 ஜனவரி, 2008

List of 64 arts /அறுபத்துநாலு கலைகள்

List of 64 arts /அறுபத்துநாலு கலைகள்
"ஆய கலைகள் அறுபத்துநான்கினையும்" என்று பலரும் சொல்லக் கேள்விபட்டிருக்கின்றோம்.
ஆனால் அந்த அறுபத்துநாலுகலைகள் தான் யாவை என்று தெரிவதில்லை. தமிழ் இணைய மின்அஞ்சல் தளத்தில் இது பற்றி கேள்வி, பதில் தொடர் ஒன்று நடைபெற்றது. மலேசியா தமிழ் நண்பர் மா. அங்கையாவின் தொகுப்பை தமிழ் இணைய நண்பர்களுக்காக இந்த தமிழ் மின் நூலகத்தில் கொடுத்துள்ளேன்.
Source courtesy: From Maa.Angaiah of Malaysia
http://www.geocities.com/ResearchTriangle/5828/64kalai.htm
________________________________________
'நாலு வேதம், ஆறு சாத்திரம், பதினெண் புராணம், அறுபத்துநாலு கலைஞானம்' என்பது ஆரிய இலக்கியப் பாகுபாடாதலால், 'அறுபத்துநாலு கலை' என்பது தமிழ் மரபன்று. 'அறுபத்துநாலு கலை' என்னும் பொருட்டொகப் பெயர் தமிழாதலாலும், அறுபத்துநாலாக வகுக்கப்பட்ட கலைகள் அனையவும் தமிழர்க்கும் உரியனவாதலாலும், தமிழ்க்கலைகள் ஆரியக் கலைகட்குக் காலத்தால் முந்தியனவாதலாலும், அறுபத்துநாலு கலைப்பட்டி இங்குத் தரப்பட்டுள்ளது.

முதற்பட்டி ஆரிய நூன்மரபை முற்றுந் தழுவியது. வடசொற்களெல்லாம் மொழிபெயர்க்கப்பட்டு, தென்சொற்கள் முன்னும் வடசொற்கள் பிறைக்கோட்டுட்பின்னும் குறிக்கப்பட்டுள்ளன. இருமொழிக்கும் பொதுச் சொற்கள் அல்லது ஏற்கெனவே தமிழாயிருக்குஞ் சொற்கள், பிறைக்கோட்டுச் சொல்லின்றித் தமித்து விடப்பட்டுள்ளன.

இரண்டாம் பட்டி பிற்காலத்ததாதலால், சிறிது வெறுபட்டும் பெறும்பாலும் தமிழ்ச் சொற்களைக் கொண்டும் உள்ளது.

அறுபத்துநாலுகலை என்னும் தொகுப்பு, வடமொழிக் காமசூத்திரம் (Kaama Suutra) என்னும் இன்பநூலின் ஆசிரியரான வாத்சாயன (Vaatsaayana) ருடையதாதலால், அந் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பாளரான பர். சந்தோச குமார முக்கர்சி (Dr. Santhosh Kumar Mukherji) பாகுபடுத்திக் கூறிய அறுபானாற்கலை ஆங்கிலப் பட்டியலை இங்குத் தருகின்றேன்.

அந்த அறுபத்துநாலுகலைகளின் பட்டியலை
மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் தொகுத்த
செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி
(A Comprehensive Etymological Dictionary of the Tamil Language )
Vol. 1 , Part - 1 பக்கம் 545-548 வரையிலும் கண்டுள்ளபடி
இங்கே பட்டியலிட்டுள்ளேன். தெரிந்துகொள்ளுங்கள்.அறுபத்துநாலுகலை (பெ.) `காமசூத்திரம்' என்னும் பழைய சமற்கிருத நூலிற் சொல்லப்பட்டுள்ள அறுபத்துநான்கு கலைகளும் அறிவியல்களும்.

அறுபத்து நாலு கலைகளாவன:

1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்);
2. எழுத்தாற்றல் (லிகிதம்);
3. கணிதம்;
4. மறைநூல் (வேதம்);
5. தொன்மம் (புராணம்);
6. இலக்கணம் (வியாகரணம்);
7. நயனூல் (நீதி சாத்திரம்);
8. கணியம் (சோதிட சாத்திரம்);
9. அறநூல் (தரும சாத்திரம்);
10. ஓகநூல் (யோக சாத்திரம்);
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);
16. மறவனப்பு (இதிகாசம்);
17. வனப்பு;
18. அணிநூல் (அலங்காரம்);
19. மதுரமொழிவு (மதுரபாடணம்);
20. நாடகம்;
21. நடம்;
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);
23. யாழ் (வீணை);
24. குழல்;
25. மதங்கம் (மிருதங்கம்);
26. தாளம்;
27. விற்பயிற்சி (அத்திரவித்தை);
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);
30. யானையேற்றம் (கச பரீட்சை);
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை);
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்);
35. மல்லம் (மல்ல யுத்தம்);
36. கவர்ச்சி (ஆகருடணம்);
37. ஓட்டுகை (உச்சாடணம்);
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);
39. காமநூல் (மதன சாத்திரம்);
40. மயக்குநூல் (மோகனம்);
41. வசியம் (வசீகரணம்);
42. இதளியம் (ரசவாதம்);
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);
47. கலுழம் (காருடம்);
48. இழப்பறிகை (நட்டம்);
49. மறைத்ததையறிதல் (முஷ்டி);
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);
51. வான்செலவு (ஆகாய கமனம்);
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);
54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்);
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);
64 சூனியம் (அவத்தைப் பிரயோகம்).

வேறொரு பட்டியல்

1. பாட்டு (கீதம்);
2. இன்னியம் (வாத்தியம்);
3. நடம் (நிருத்தம்);
4. ஓவியம்;
5. இலைப்பொட்டுக் (பத்திர திலகம்) கத்தரிக்கை;
6. பல்வகை யரிசி பூக்களாற் கோலம் வைத்தல்;
7. பூவமளியமைக்கை;
8. ஆடையுடை பற்களுக்கு வண்ணமமைக்கை;
9. பள்ளியறையிலும் குடிப்பறையிலும் மணி பதிக்கை;
10. படுக்கையமைக்கை;
11. நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை (ஜலதரங்கம்);
12. நீர்வாரி யடிக்கை;
13. உள்வரி (வேடங்கொள்கை);
14. மாலைதொடுக்கை;
15. மாலை முதலியன் அணிகை;
16. ஆடையணிகளாற் சுவடிக்கை;
17. சங்கு முதலியவற்றாற் காதணியமக்கை;
18. விரை கூட்டுகை;
19. அணிகலன் புனைகை;
20. மாயச்செய்கை (இந்திரசாலம்);
21. குசுமாரரின் காமநூல் நெறி (கௌசுமாரம்);
22.கைவிரைவு (ஹஸ்தலாவகம்);
23. மடைநூலறிவு (பாகசாத்திர வுணர்ச்சி);
24. தையல்வேலை;
25. நூல்கொண்டு காட்டும் வேடிக்கை;
26. வீணை யுடுக்கைப் பயிற்சி (வீணை டமருகப் பயிற்சி);
27. விடுகதை (பிரேளிகை);
28. ஈற்றெழுத்துப் பாப் பாடுகை;
29. நெருட்டுச் சொற்றொடரமக்கை;
30. சுவைத்தோன்றப் பண்ணுடன் வசிக்கை;
31. நாடகம் உரைநடை (வசனம்) யிவற்றினுணர்ச்சி;
32. குறித்தபடி பாடுகை (ஸமஸ்யாபூரணம்);
33. பிரம்பு முத்தலியவற்றாற் கட்டில் பின்னுதல்;
34. கதிரில் நூல் சுற்றுகை;
35. மரவேலை;
36. மனைநூல் (வாஸ்து வித்தை);
37. காசு, மணி நோட்டம் (நாணய ரத்னங்களின் பரிசோதனை);
38. நாடிப்பயிற்சி (தாதுவாதம்);
39. மணிக்கு நிறமமைக்கையும் மணியின் பிறப்பிட மறிகையும்;
40. தோட்டவேலை;
41. தகர்ப்போர் சேவற்போர் முதலிய விலங்கு பறவைப்போர்;
42. கிளி நாகணங்கட்குப் பேச்சுப் பயிற்றுவகை;
43. உடம்பு பிடிக்கையும் எண்ணைய் தேய்க்கையும்;
44. குழூவுக்குறி (சங்கேதாக்ஷரங்களமத்துப் பேசுகை);
45. மருமமொழி (ரகசிய பாஷை);
46. நாட்டுமொழி யறிவு (தெசபாஷை யுணர்ச்சி);
47. பூத்தேர் (புஷ்பரதம்) அமக்கை;
48. முற்குறி (நிமித்தம்) அமைக்கை;
49. பொறியமைக்கை;
50. ஒருகாலிற் கொள்கை (ஏகசந்தக்கிராகித்வம்);
51. இருகாலிற் கொள்கை (துவிசந்தக்கிராகித்வம்);
52. பிதிர்ப்பா (கவி) விடுக்கை;
53. வனப்பு (காவியம்) இயற்றுகை;
54. உரிச்சொல்லறிவு (நிகண்டுணர்ச்சி);
55. யாப்பறிவு;
56. அணியறிவு (அலங்காரவுணர்ச்சி);
57. மாயக்கலை (சாலவித்தை);
58. ஆடையணியுந் திறமை (உடுத்தலிற் சாமர்த்தியம்);
59. சூதாட்டம்;
60. சொக்கட்டான்;
61. பாவை (பொம்மை), பந்து முதலியன வைத்தாடுகை;
62. யானயேற்றம், குதிரையேற்றம் பயிற்சி;
63. படக்கலப் பயிற்சி;
64. உடற் (தேகப்) பயிற்சி (சது.).

இணையமும் இனிய தமிழும்

இணையமும் இனிய தமிழும்


முன்னுரை

உலகையே குவலயக் கிராமமாக மாற்றிவிட்ட ஆற்றல் வாய்ந்த தொழில்நுட்பம்தான் இணையம். இணையத்தில் இல்லாதது எதுவுமே இல்லை என்ற அளவிற்கு அனைத்துத் தகவல்களையும் தன்னகத்தே கொண்டதாக இணையம் திகழ்கிறது. கேட்டவர்களுக்குக் கேட்ட வரங்களை - தகவல்களை அள்ளி வழங்கும் அமுதசுரபியாக இது விளங்குகிறது. தகவல் களஞ்சியமாகத் திகழ்கிற இணையத்தில் கிடைக்கும் தமிழ் இலக்கியங்கள், அதனை வழங்கும் நிறுவனங்கள் பற்றிய செய்திகளை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.

எல்லாம் இணையம்தான்

இணையம் என்ற ஆற்றல் வாய்ந்த ஆயுதத்தைக் கல்வியாளர்கள் பரவலாகப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் தமிழ் ஆசிரியர்களும - பேராசிரியர்களும், மாணவர்களும் - ஆய்வாளர்களும் எந்த அளவிற்கு இதனைப் பயன்படுத்துகின்றனர் என்பது கேள்விக்குறியே. இவர்கள் இணையத்தைப் பயன்படுத்துவதன் இன்றியமையாமையை விளங்கிக் கொள்வதோடு அதில் போதிய பயிற்சியும் பெற வேண்டும்.

ஏனெனில், இன்று எல்லா தகவல்களையும் இணையத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டிய கட்டாய நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறோம். பாட நூல்கள், பாடத்திட்டங்கள், வினா வங்கிகள், தேர்வு முடிவுகள், வேலை வாய்ப்புச் செய்திகள் என அனைத்தும் இணையத்தில் வழங்கப்படுகின்றன.

எனவே, இணையத்தில் அனைத்துத் தகவல்களும் கிடைப்பதனால் அதனைப் பயன்படுத்த முனைவதும் முழுவதும் பயன்படுத்திக் கொள்ளும் திறம் பெறுவதும் நலம் பயக்கும். இதனைப் பிற துறை சார்ந்தவர்கள் நன்கு பயன்கொள்வது போல தமிழ்த்துறை சார்ந்தவர்களும் பயன்கொள்ள வேண்டும்.

மூன்று ‘எ’

முன்பெல்லாம் ஒரு நூலைத் தேடிப் பல்வேறு இடங்களுக்கும், நூலகங்களுக்கும் செல்ல வேண்டும். அங்கு அவை கிடைக்கலாம் அல்லது கிடைக்காமல் போகலாம். ஆனால் இணையத்தில் தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள் வெகுவாக கிடைக்கின்றன; இலவசமாகக் கிடைக்கின்றன; நூல்வடிவில் கிடைப்பனவற்றை விட பன்மடங்கு வசதிகளோடு கிடைக்கின்றன. எவையெவை - எங்கெங்கு - எவ்வெவ்வாறு கிடைக்கின்றன என்பதைத் தெரிந்து கொண்டால்,
தங்களின் பொன்னான காலத்தை வீணடிக்காமல் கடமையைக் கண்ணாகக் கருதி செயல்பட்டு வெற்றியடைய முடியும்.


தமிழ் இணையப் பல்கலைக்கழகம்

தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களை இணையத்தில் வழங்கும் நிறுவனங்களில் முன்னணியில் நிற்பது தமிழ் இணையப் பல்கலைக்கழகம் ஆகும். இந்நிறுவனம் தமிழக அரசினால் 17-02-2001 இல் சென்னையில் உள்ள

தரமணியில் துவங்கப்பட்டது. உலகு தழுவி வாழும் தமிழர்களும் தமிழ் படிக்கும் ஆர்வலர்களும் அரிச்சுவடி முதல் ஆராய்ச்சி வரை பயில்வதற்கு உரிய வகையில் இப் பல்கலைக்கழகச் செயற்திட்டங்கள் வகுக்கப்பட்டன. இங்கு தற்பொழுது இளங்கலைப் பட்டம் (B.A.) வரையிலான படிப்பு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இதன் செயல்திட்டங்களுள் ஒன்றுதான் இப்பல்கலைக்கழகத்தின் மின் நூலகம்.

த.இ.ப. மின் நூலகம்

இப்பல்கலைகழக மின் நூலகத்தில் தொல்காப்பியம் முதற்கொண்டு இக்கால இலக்கியம் வரையிலான 200க்கும் மேற்பட்ட நூல்கள் இடம் பெற்றுள்ளன. ஏறக்குறைய 75,000 பக்கங்களுக்கு மேல் இம்மின்நூலகத்தில் இடம் பெற்றுள்ளன.இலக்கண நூல்கள்

இன்றைய நிலையில் தமிழகத்தில் பெரிதும் பயன்பாட்டில் உள்ளதும் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பாடமாக அமையப் பெற்றதுமான இலக்கண நூல்கள் முழுவதும் த.இ.ப.வின் மின் நூலகத்தில் உள்ளன. தொல்காப்பியம்,
நன்னூல், புறப்பொருள் வெண்பாமாலை, நம்பியகப்பொருள், தண்டியலங்காரம், வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், தமிழ் நூல், முத்துவீரியம், சுவாமிநாதம், அறுவகை இலக்கணம் ஆகிய இலக்கண நூல்கள் உரையுடன் அமைந்துள்ளன.

இலக்கிய நூல்கள்

சங்க இலக்கியம், பதினெண் கீழ்க்கணக்கு, ஐம்பெரும் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்களுள் நாககுமார காவியம், உதயணகுமார காவியம், யசோதர காவியம், நீலகேசி, பெருங்கதை, கம்பராமாயணம், வில்லிபாரதம், திருவிளையாடற் புராணம் ஆகிய நூல்கள் இதன்கண் இடம் பெற்றுள்ளன.

சமய இலக்கியங்கள்

பன்னிரு திருமுறைகள், நாலாயிர திவ்ய பிரபந்தம், தேம்பாவணி, இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய மனோகரம், இயேசு காவியம், சீறாப்புராணம், நெஞ்சில் நிறைந்த நபிமணி, நாயகம் எங்கள் தாயகம், நாயகம் ஒரு காவியம், யூசுப் ஜூலைகா ஆகிய பல்சமய இலக்கிய நூல்களும் இந்நூலகத்தில் இடம் பெற்றுள்ளன.

சிற்றிலக்கியக்கங்கள்

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், கேக்கிழார் பிள்ளைத்தமிழ், திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ், அபிராமி அந்தாதி, திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி, கச்சிக்கலம்பகம், தண்டலையார் சதகம், அறப்பளீசுர சதகம், குமரேச சதகம், கொங்கு மண்டல சதகங்கள், பாண்டிமண்டல சதகம், திருக்குற்றாலக் குறவஞ்சி, தியாகேசர் குறவஞ்சி, தணிகைப் புராணம், அட்டபிரபந்தம், புலவராற்றுப்படை, அழகர் கிள்ளைவிடு தூது, தமிழ்விடு தூது, இரணியவதைப் பரணி, கலிங்கத்துப் பரணி, நளவெண்பா, நந்தனார் சரித்திர கீர்த்தனைகள் ஆகிய சிற்றிலக்கிய நூல்கள் இந்நூலகத்தில் உள்ளன.

பிற நூல்கள்

மேற்காட்டிய நூல்களேயன்றி சிவப்பிரகாச சுவாமிகள், தாயுமானவ சுவாமிகள், குமரகுருபர சுவாமிகள், பாரதியார், பாரதிதாசன், முடியரசன், அழ.வள்ளியப்பா, தமிழ் ஒளி, தேவநேயப் பாவாணர் ஆகியோரின் படைப்புகள் பலவும் இந்நூலகத்தில் காணக்கிடைக்கின்றன.

மயிலை சீனி.வேங்கடசாமியின் சமணமும் தமிழும், பௌத்தமும் தமிழும், மு.வ.வின் தமிழ் இலக்கிய வரலாறு, தெ.பொ.மீ.யின் தமிழ் மொழி வரலாறு, ந.சி.க.வின் தமிழகம், தமிழ் இந்தியா, கா.அப்பாதுரையின் குடியாட்சி, சுந்தரம்பிள்ளையின் மனோன்மணீயம், நா.வானமாமலையின் தமிழர் நாட்டுப்பாடல்கள், காத்தவராயன் கதைப்பாடல், முத்துப்பட்டன் கதை, கி.வா.ஜகந்நாதனின் மலையருவி உள்ளிட்ட பல் வகைமை நூல்கள் இதன்கண் இடம் பெற்றுள்ளன.

அகராதிகளும் கலைச்சொற்களும்

த.இ.ப.வின் மின் நூலகத்தில் இலக்கண, இலக்கிய நூல்களேயன்றி சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி, சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ் அகராதி, பால்ஸ் அகராதி, மு.சண்முகம்பிள்ளையின் தமிழ்-தமிழ் அகரமுதலி ஆகிய நான்கு அகராதிகளும், முப்பதுக்கும் அதிகமான துறைகளைச் சார்ந்த 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட கலைச்சொற்களும் உள்ளன.சிறப்பம்சங்கள்

ஃ குறிப்பிட்ட நூல்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட உரைகள்
கிடைக்கின்றன.

ஃ திருக்குறளுக்கு தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியின்
உரை உள்ளிட்ட எழுவரின் உரைகள் கிடைக்கின்றன.

ஃ சங்க இலக்கியங்களுக்கு எண், சொல், பக்கம், பாடினோர்,
வள்ளல்கள், மன்னர்கள், திணை, கூற்று, பாடல் முதல்
குறிப்பு, மரங்கள், செடிகள், கொடிகள், மலர்கள், தானியங்கள், பழங்கள், விலங்குகள், பறவைகள், மீன்கள் என்ற அடிப்படையில் வேண்டிய செய்திகளை உடனடியாகத் தேடிப் பெறுகின்ற வசதி.

ஃ தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளை உலகத்தார்க்கு
எடுத்துக்காட்டும் வகையில் அமைந்த 143 சைவ, வைணவக் கோயில்களின் ஒலி, ஒளிக் காட்சிப் பதிவுகள், பரதநாட்டியம், பொம்மலாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம், நாதசுரம், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பல்வேறு பண்பாட்டுக் காட்சியகம்.
ஃ தேவாரப்பாடல்களை இசையுடன் கேட்கும் வசதி.

ஃ அனைவரும் படித்து விளங்கிக் கொள்ள ஏதுவாக எளிய
முறையில் பதம் பிரிக்கப்பட்ட கடின நூல்கள்.

இத்துணை சிறப்பு வாய்ந்ததும் அரியதுமான நல்லதொரு மின் நூலகத்தைத் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் உருவாக்குவதில் அப்பல்கலைக்கழகத்தின் முதல் இயக்குநரும் இந்நாள் பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தருமான முனைவர் பொன்னவைக்கோ அவர்களுக்குப் பெரும்பங்கு உண்டு.

மதுரைத் திட்டம்

இஃது உலகளாவிய தமிழர்கள் இணையம்வழி ஒன்றுகூடி தமிழ் இலக்கியங்களின் மின்பதிப்புகளை உருவாக்கி அவற்றை இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் தமிழார்வலர்களும் இலவசமாகப் பெற வசதி செய்யும் ஒரு தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம் ஆகும். இதனை சுவிட்சர்லாந்து நாட்டில் வாழும் தமிழர் டாக்டர் கே.கல்யாணசுந்தரம் அவர்கள் தொடங்கினார்கள். இத்திட்டம் எதிர்வரும் சனவரி 2008 இல் தனது பத்தாம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாட இருக்கிறது.

________________________________________


இத்திட்டத்தில் ஏறக்குறைய 300 தமிழ் நூல்கள் இணையப் பார்வையாளர்களுக்குக் கிட்ட வகை செய்யப்பட்டுள்ளது. இந்நூல்களை அகர வரிசை, நூல் வரிசை, கால வரிசை அடிப்படையில் டிஸ்கி (TISCII) குறியீட்டு முறையிலும், ஒருங்குறியீட்டு (UNICODE) முறையிலும் இத்திட்டம் வழங்குகிறது.

இத்திட்டத்தின் சிறப்பம்சம் யாதெனில் யார் வேண்டுமானாலும் தமிழ் இலக்கியங்களை மின்பதிப்பு செய்து இவர்களின் அனுமதியோடு இம்மின்தொகுப்பில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் இத்தொகுப்பில் உள்ள நூல்கள் ஒருங்குறியீட்டு (UNICODE) முறையிலும் கிடைப்பதனால் எழுத்துரு (Fonts) பிரச்சினை இல்லாமல் நூல்களைப் படிக்க முடியும். ஆனால் இத்தொகுப்பில் வேண்டிய தகவல்களைத் தேடிப் பெறும் வசதி ஒருசில நூல்களுக்கு மட்டுமே டிஸ்கி (TISCII) குறியீட்டில் உள்ளது. தமிழ் இணையப் பல்கலைக்கழக நூலகத்தில் வேண்டிய தகவல்களைத் தேடிப் பெறுவது போல இத்திட்டத்தில் தகவல்களைப் பெற இயலாது. ஆனால் தமிழ் இணையப் பல்கலைக்கழக மின் நூலகத்தில் நூல்கள் ஒருங்குறியீட்டு முறையில் இல்லாமையால் அதனைக் கண்ணுறுவதில் எழுத்துரு பிரச்சினை ஏற்படுகிறது.

இந்திய மொழிகளுக்கான நடுவண் நிறுவனம் (Central Institute of Indian Languages - CIIL)

மைய அரசு நிறுவனமான இது மைசூரில் உள்ள மானசகங்கோத்ரியில் அமைந்துள்ளது. இந்நிறுவனம் தமிழ் நூல்களை அதன் பழைமை குன்றாமல் அதாவது மூலப் பிரதியில் உள்ளவாறே இணையவழியில் அளிப்பதற்கான முயற்சியில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. விரைவில் தமிழ் நூல்களை இதன் இணைய தளத்தில் காணலாம்.

தற்பொழுது தொல்காப்பிய நூற்பாக்கள் சிலவற்றையும், சங்க இல்கியப் பாடல்கள் சிலவற்றையும் இசைவடிவில் இணையத்தில் வழங்கியுள்ளது. பாடல்கள் மட்டுமின்றி நூற்பாக்களைக்கூட இசை வடிவில் வழங்க முற்பட்டுள்ள இந்நிறுவனத்தின் முயற்சிப் பாராட்டுக்குரியதாகும்.

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்

ரோஜா முத்தையா செட்டியாரின் நினைவால் சிக்காகோ பல்கலைக்கழகம் இந்நூலகத்தை 1989 முதல் நடத்தி வருகிறது. ஏறக்குறைய 1 இலட்சம் அரிய நூல்களும், இதழ்களும் இந்நூலகத்தில் உள்ளன. நூலாசிரியர், நூலின் தலைப்பு, நூல் வெளிவந்த ஆண்டு என்ற அடிப்படையில் இந்நூலகத்தில் உள்ள நூல்களின் பட்டியல் ஆராய்ச்சியாளர்கள் தேடிப்பெறும் வகையில் இணையத்தில் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. இருந்த இடத்தில் இருந்துகொண்டே ஆய்வுக்குத் தேவையான நூல்கள் உள்ளனவா என்பதை அறிந்து கொண்டு வேண்டிய நூல்கள் இருந்தால் இந்நூலகத்திற்குச் சென்று பயன் கொள்ளலாம்.

பிற நிறுவனங்கள்

மேலே கூறப்பட்ட நிறுவனங்கள் மட்டுமன்றி, 1. Institute of Indology and Tamil Studies, Univ of Koeln, Germany 2. Tamil Heritage Foundation 3. Million Ebooks Project ஆகிய நிறுவனங்களும் தமிழ் நூல்களை இணையத்தில் நேரடியாக வழங்காமல் மதுரைத் திட்டத்தில் இருந்து எடுத்து வழங்குகின்றன. எனவே இவை பற்றி தனித்தனியே குறிப்பிடப்படவில்லை.முடிவுரை
பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினானே

என்பதற்கேற்ப வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தமிழ் பயில்வோரும் - பயிற்றுவிப்போரும் தங்களின் பணியை எளிமையும் ஏற்றமும் உடையதாக மாற்றிக் கொள்ள இணையம் பெருந்துணையாய் நிற்கும். எனவே, போட்டிகள் நிறைந்த இருபத்தோராம் நூற்றாண்டினைத் தமிழ் படிக்கும் மாணவர்கள் திறனுடன் எதிர்கொள்ள இணையப் பயன்பாட்டில் அவர்களை மேலோங்கச் செய்வோம்.


பயன்கொள்ள வேண்டியவை;

1. தமிழ் இணையப்பல்கலைக்கழகம் - www.tamilvu.org
2. மதுரைத் திட்டம் - www.tamil.net/projectmadurai
3. இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் - www.ciil.org
4. ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் -
www.lib.uchicago.edu/e/su/southasia/rmrl.html