புதன், 4 டிசம்பர், 2013

சோழர்கள் - 2

சோழர்கள் - 2

இராசராச சோழனின் விருதுப் பெயர்கள்

1) மும்முடிச் சோழன் 

2) சயங்கொண்ட சோழன்

3) சிவபாதசேகரன்

4) ஷத்திரிய சிகாமணி

5) ஜனநாதன்

6) நிகரிலி சோழன்

7) சோழமார்த்தாண்டன்

8) இராச மார்த்தாண்டன்

ஞாயிறு, 24 நவம்பர், 2013

அகநானூறு: 99 மலர்கள் 

அகநானூறு: 99 மலர்கள்


ஞாயிறு, 17 நவம்பர், 2013

சோழ மன்னர்கள் - 1

      சோழ மன்னர்கள் - 1

    சங்க காலத்துக்கு முற்பட்ட சோழ மன்னர்கள் பற்றிய குறிப்புகள் கலிங்கத்துப் பரணி, மூவருலா முதலிய நூல்களிலும் திருவாலங்காடு, கர்ந்தை, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் கிடைத்த செப்பேடுகளிலும் காணப்படுகிறது. 

       தங்கள் குல முதல்வர்களாகத் திருமால், பிரம்மா ஆகிய தெய்வங்களைக் குறித்துப் பின் பிரம்மாவின் வழித் தோன்றல்களாக மரீசி, காசியபன் போன்ற முனிவர்களையும், தொடர்ந்து சூரியனையும் குறித்துக் கொள்கின்றனர். மனுவை நீதி தவறாத சோழ மன்னனாகக் குறித்துக் கொள்கின்றனர். 

     இதனைத் தொடர்ந்து தந்தை மகனாகத் தொடரும் சோழ மரபில்  இட்சுவாகு, விகுக்சி, ககுத்தன், காக்சீவதன், சூரியமன், அநலப்பிரதாபன், வேனன், பீரீது, துந்துமாறன், யுவனாசுவன், மாந்தாதா, முசுகுந்தன், வல்லபன், பிரிதுலாக்கன், பார்ரத்திப சூடாமணி, தீரக்கபாகு, சந்திரசித்தன், சங்கிருதி, பஞ்சபன், சகரன், சத்யவிரதன், உசீநரன், சிபி, மருத்தன், துஷ்யந்தன், பரதன், ரிதூபரணன், திலீபன், பகீரதன், ரகு, தசரதன், இராமலட்சுமணன பரதசத்ருகன்னர் ஆகியோரைக் குறிப்பிடுகின்றனர். 

   இவர்களைத் தொடந்து, நாபாகன், வீரசேனன், சித்ரரதன், சித்ராசுவன் ஆகியோர் குறிக்கப்படுகின்றனர். இவர்களுக்குப் பிறகு வந்தவன் கவேரன் (காவிரியின் ஓட்டத்தைச் சோழநாட்டுக்குத் திருப்பியவன்), புலிகேசி (புலிக்கொடி தந்தவன்), புட்பகேது (வானவூர்தி கண்டவன்), சமுத்ரஜித்(பாக் நீரிணைப்பை உருவாக்கியவன்), தொடித்தோட் செம்பியன் (பறக்கும் அசுரக் கோட்டைகளை அழித்தவன்), வசு (வானவூர்தி தொடர்புடையவன்), பெருநற்கிள்ளி (பொறியியல், மருத்துவக் கலைகளில் தேர்ந்தவன்), இளஞ்சேட்சென்னி (தேர்களை விரைந்து செலுத்துவதில் வல்லவன்) இவனது மகன் கரிகாலன் ஆகியோர் சங்க காலத்துக்கு முற்பட்ட சோழ மன்னர்களாகக் குறிக்கப்படுகின்றனர்.. 

    இதில் கரிகால சோழனுக்குப் பிறகுதான் சோழர்களின் வரலாறு கிடைக்கிறது. இது பற்றி பின்னர் கூறப்படும்.(ஆதாரம்: சோழர் வரலாறு- பேரா.சி.கோவிந்தராசனார், முனைவர் சி.கோ.தெய்வநாயகம், பக்.12,13)
திருச்சிராப்பள்ளி தூய வளனார் (தன்னாட்சி) கல்லூரியில் 17-07-2013 அன்று அருள்திரு சி.கே.சுவாமி சே.ச. அறக்கட்டளைச் சொற்பொழிவில் இணையம் வழி தமிழறிவு என்னும் தலைப்பில் நான் உரையாற்றினேன்.

மாமன்னன் இராசராச சோழனின் 1028வது சதயவிழா

மாமன்னன் இராசராச சோழனின் 1028வது சதயவிழா

      இராசராச சோழனின் 1028வது சதயவிழா, தஞ்சையில் அம்மன்னன் எழுப்பிய தஞ்சைப் பெரிய கோயிலில் கடந்த 10, 11-11-2013 ஆகிய இரண்டு  நாட்கள் கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் என்று பல்வேறு நிகழ்ச்சிகளுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

          முதல் நாள் நிகழ்ச்சியில் திருமுறை அரங்கம், வையகம் உயர வான்புகழ் இராசராசனின் பங்களிப்பு என்னும் தலைப்பில் கருத்தரங்கம், மாமன்னனாகத் திகழ இராசராசன் மேற்கொண்டவை என்னும் தலைப்பில் கவியரங்கம் மற்றும் பலரின் இன்னிசை அரங்கங்கள் இடம் பெற்றிருந்தன.

      இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் திருமுறை திருவீதி உலா, தேவார இசை அரங்கு, மோகினி ஆட்டம் ஆகியவை இடம் பெற்றன.

      மேலும் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் உலகம் உவப்ப மாமன்னன் இராசராசசோழன் ஆற்றிய அரும்பணிகள் அரசியல் பணிகளா? அருங்கலைப் பணிகளா? என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. பட்டிமன்றத்தின் நடுவராகக் கரந்தைக் கலைக் கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர் முனைவர் மு.இளமுருகன் செயல்பட்டார். அரசியல் பணிகளே என்னும் அணியில் நான் (முனைவர் க.துரையரசன், தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி(தன்.), கும்பகோணம்) அணித்தலைவராகவும் புலவர் கோ.கலைவாணி, தஞ்சை பிரிஸ்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜெ.மகேசன் ஆகியோர் வாதங்களை எடுத்து வைத்தோம். 

    அருங்கலைப்பணிகளே என்னும் தலைப்பில் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மு.பழனியப்பன் அணித்தலைவராகவும் புலவர் சே.கவிதா, திரு.வி.க.அரசு கலைக் கல்லூரி தமிழ் உதவிப் பேராசிரியர் முனைவர் மு.அருணகிரி ஆகியோர் வாதிட்டனர்.

     இருதரப்பு வாதங்களையும் கேட்ட பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் முனைவர் மு.இளமுருகன், உலகம் உவப்ப மாமன்னன் இராசராசசோழன் ஆற்றிய அரும்பணிகள் அருங்கலைப் பணிகளே என்று தீர்ப்பு வழங்கினார். 

        பட்டிமன்றத்தைக் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கானவர்கள் ஆர்வமுடன் செவிமடுத்துக் கேட்டதோடு பட்டிமன்றம் முடிகின்றவரை கலைந்து செல்லாமல் இருந்தது மாமன்னன் இராசராசசோழனின் பெருமையை இன்றும் மக்கள் போற்றும் வண்ணம் அமைந்திருந்தது.

வெள்ளி, 14 ஜூன், 2013

புதிய கட்டடத் திறப்பு விழா

                    புதிய கட்டடத்தின் முகப்புத் தோற்றம்

                                      திறப்பு விழா பலகை


திறப்பு விழாவில் வாழ்த்துரை வழங்கும் மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் அவர்கள்

திறப்பு விழாவில் நான், மண்டலத்தலைவர் முனைவர் பெ.வடிவேல்


தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் புதிய கட்டடத் திறப்பு விழா 12.06.2013 அதிகாலை 5.30 மணி முதல் 7.00 மணி வரை நடைபெற்றது. புதிய கட்டடத்தை மாண்புமிகு தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் அவர்கள் திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்கள். தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளிலுருந்தும் சுமார் 200 பேர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். தஞ்சை மண்டலத்திலிருந்து நான், மண்டலத் தலைவர் முனைவர் பெ.வடிவேல், ஜே.ஏ.சி. உறுப்பினர் முனைவர் தி.அறிவுடைநம்பி, சரபோஜி கல்லூரி செயலர் முனைவர் வி.பாரி, கும்பகோணம் ஆடவர் கல்லூரி மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் முனைவர் சு.முத்துநடேசன், மன்னார்குடி கல்லூரி முனைவர் மு.வீராசாமி, கிளைச்செயலர் நிலவழகன் ஆகியோர் கலந்து கொண்டோம். கட்டடம் மிகச் சிறப்பான முறையில் கட்டப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் பயன்பாட்டுக்கு உகந்த நிலையில் உள்ளது. சிறந்த முறையில் கட்டடம் அமைவதற்கு உதவிய மாநிலப்பொறுப்பாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள், கிளைப்பொறுப்பாளர்கள், நிதி உதவி நல்கிய அனைத்து உறுப்பினர்கள், கட்ட ஒப்பந்ததாரர் திரு அர்ஜீன்ன் ஆகிய அனைவருக்கும் மனமுவந்த நன்றியும் பாராட்டுகளும்.

ஞாயிறு, 17 மார்ச், 2013

தமிழ்த் தாத்தா உ.வே.சா.

தமிழ்த் தாத்தா உ.வே.சா.U. Ve. Swaminatha Iyer—Photo: M.Srinath 


வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் 
தெய்வத்துள் வைக்கப் படும்

என்பது வள்ளுவம். அவ்வகையில் தமது 87 வயது வரையிலும் வாழ்வாங்கு வாழ்ந்தவர் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் அவர்கள். வயதால் மட்டுமின்றி தமிழ்ப் பணியிலும் வாழ்வாங்கு வாழ்ந்தவர். இவர் 19.2.1855 ஆம் ஆண்டு திரு. வேங்கட சுப்பையர் அவர்களுக்கும் திருமதி சரசுவதி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார்.  பெற்றோர் இவருக்கு வேங்கட ரத்தினம் என்று பெயரிட்டனர். இப்பெயரை மாற்றி இவருக்கு சாமிநாதன் என்று பெயரிட்டவர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள்.

கல்வி

   இவர் உத்தமதானபுரம் திண்ணைப் பள்ளியிலும், அரியலூர் சடகோப ஐயங்காரிடமும், முத்து வேலாயுதம் பண்டாரத்தாரிடமும், குன்னம் சிதம்பரம் பிள்ளை அவர்களிடமும், கார்குடி கஸ்தூரி ஐயங்காரிடமும், செங்ஙனம் விருத்தாசல ரெட்டியாரிடமும், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடமும் பயின்று தமது கல்வி அறிவைப் பட்டை தீட்டிக் கொண்டார். 

ஆசிரியப் பணி   

   தமது 25வது வயதில் அதாவது 1880 ஆம் ஆண்டு பிப்ரவரி 16ந் தேதி முதல் 1903 ஆம் ஆண்டு வரை 23 ஆண்டுகள் இவர் கும்பகோணம் அரசு கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து 1903 முதல் 1919 ஆம் ஆண்டு வரை 16 ஆண்டுகள் சென்னை மாகாணக் கல்லூரியிலும், 1924 இல் சிதம்பரம் மீனாட்சித் தமிழ்க் கல்லூரியிலும் இவர் ஆசிரியராகப் பணியாற்றினார். ஏறக்குறைய 40 ஆண்டுக் காலம் இவர் கற்பித்தல் பணியில் ஈடுபட்டிருந்தார். 

பதிப்பித்தல் பணி

    ஒரு நூலைத் தேடிக் கண்டுபிடிப்பதும், படிப்பதும்,  அதனைப் பதிப்பிப்பதும் மிக எளிய செயலன்று. அனைத்து வசதிகளும் நிரம்பிய இக்காலத்திலேயே இது சவால் நிறைந்ததாக இருக்கும்பொழுது அக்காலத்தில் இப்பணி எத்துனைத் துன்பம் நிறைந்ததாக இருந்திருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டுவதில்லை. உ.வே.சா. அவர்கள் குறிஞ்சிப் பாட்டைப் பதிப்பிக்க முயலும் பொழுது அதில் கூறப்பட்டுள்ள 99 பூக்களில் மூன்று பூக்களின் பெயர்கள் தெளிவு பெறாமலே இருந்தனவாம். அதனைத் தெளிவுபடுத்திப் பதிப்பித்தாராம். அதனைப் போலவே சிலப்பதிகாரமா அல்லது சிறப்பதிகாரமா என்ற ஐயப்பாடு எழுந்து சிலப்பதிகாரம் தான் என்று அவர் முடிவு எடுப்பதற்கு மிகுந்த காலம் தேவைப்பட்டது என்பர். 

பதிப்புச் சிக்கல்

      ஏடு எடுக்கும்போது ஓரஞ் சொரிகிறது. கட்டு அவிழ்க்கும் போது இதழ் முறிகிறது. ஏட்டைப் புரட்டும் போது துண்டு துண்டாய்ப் பறக்கிறது. இனி எழுத்துக்களோ என்றால் வாலும் தலையும் இன்றி, நாலு புறமும் பாணக் கலப்பை மறுத்து மறுத்து உழுது கிடக்கின்றது என்று சி.வை.தாமோதரம்பிள்ளை பதிப்புப் பணியில் நேரிடும் சிக்கல்களை எடுத்துக் காட்டுகிறார். (கலித்தொகை பதிப்புரை)

     ஏட்டுச் சுவடியிலுள்ள ஒரு நூலை ஆராய்ந்து, வெளியிடுவதில் உண்டாகும் துன்பம் மிக அதிகம். அச்சுப் பிரதியில் உள்ளவாறு ஏட்டுச் சுவடி அமைந்திராது. சுவடியில் எழுதுவோரால் நேரும் பிழைகள் குறியீடுகள் கொம்பு கால் புள்ளி முதலியவை இரா. நெடிலுக்கும் குறிலுக்கும் வேறுபாடு தெரியாது. அடிகளின் வரையறைகளும் இரா. இது மூலம், இஃது உரை, இது மேற்கோள் என்று அறியவும் இயலாது. எல்லாம் ஒன்றாகவே எழுதப்பட்டிருக்கும். ஏடுகள் அவிழ்ந்தும் முறை பிறழ்ந்தும் முன் பின்னாக மாறியும் முழுதும் எழுதப் படாமலும் இருக்கும் என்று உ.வே.சா. பதிப்புப் பணியின் சிக்கல்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார். இத்துணை இடையூறுகளுக்கு இடையிலும் உ.வே.சா. அவர்கள் பதிப்பித்த நூல்கள் ஏராளம். அவை:

1.வேணு வனலிங்க விலாசச் சிறப்பு (1878) - தமது 23வது வயதில் பதிப்பித்தார்.

காப்பிய வரிசையில்,

2. சீவகசிந்தாமணி (1887)
3. சிலப்பதிகாரம் (1892)
4. மணிமேகலை (1898)
5. பெருங்கதை (1924) 
6. உதயகுமார காவியம் (1935)

சங்க இலக்கிய வரிசையில்,

7. பத்துப்பாட்டு (1889)
8. புறநானூறு ( 1894)
9. ஐங்குறுநூறு (1903)
10. பதிற்றுப்பத்து (1904)
11. பரிபாடல் ( 1918)
12. குறுந்தொகை ( 1937)

இலக்கண வரிசையில்,

13. புறப்பொருள் வெண்பாமால் (1895)
14. நன்னூல் மயிலைநாதர் உரை (1925)
15. நன்னூல் சங்கர நமசிவாயர் உரை (1928)
16. தமிழ் நெறி விளக்கம் (1937)

பிரபந்தங்கள் வரிசையில்,

17. மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிரபந்தத் திரட்டு
18. சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தத் திரட்டு
19. குமரகுரபரர் பிரபந்தத் திரட்டு
20. தக்கயாகப் பரணி
21. பாசவதைப் பரணி
22. மூவருலா
23. கப்பற் கோவை
24. தென்றல் விடு தூது

ஆகியவற்றைப் பதிப்பித்துள்ளார். மேலும் 1883 முதல் 1940 வரை 14 
புராணங்களைப் பதிப்பித்துள்ளார். இவர் ஏறக்குறைய 84 நூல்களைப் பதிப்பித்துள்ளார். (மேலும் ஆய்விற்குரியது) இதனைக் கீழ்க்கண்டவாறு பகுக்கலாம்.

சங்க இலக்கியங்கள்       -     18 
காப்பியங்கள்                     -      05
புராணங்கள்                        -     14
உலா                                      -      09
கோவை                               -      06
தூது                                        -      06
வெண்பா நூல்கள்            -     13
அந்தாதி                                -      03
பரணி                                    -      02
மும்மணிக்கோவை      -       02
இரட்டை மணிமாலை -       02
இதர பிரபந்தங்கள்         -       04

சிறப்புகள்

    இங்ஙனம் தமிழ்ப் பணியைத் தனது உயிர் மூச்சாகக் கொண்டு செயல்பட்ட உ.வே.சா அவர்கள் பெற்ற பட்டங்களும்  சிறப்புகளும் ஏராளம். அவை:

1. பெசண்ட நகரில் 1942 இல் உ.வே.சா. நூல் நிலையம்
2. 2006 இல் அஞ்சல் தலையை இந்திய அரசு வெளியிட்டது
3. ஜி.யு.போப், சூலியஸ் வின்கோன் ஆகியோரின் பாராட்டு 
4. 1905இல் அரசாங்கம் 1000 ரூபாய் பரிசு
5. 1906 இல் மகாமகோபாத்தியாய விருது (பெரும் பேராசிரியர்)
6. பாண்டித்துரை தேவரின் 4வது தமிழ்ச் சங்கத்தின் வாழ்நாள் புலவர்
7. 1917 திராவிட வித்தியா பூஷணம் பட்டம்
8. 1925இல் தாஷிணாத்ய கலாநிதி
9. 1925 இல் மதுரைத் தமிழ்ச் சங்கம் 5000 ரூபாய் பரிசு 

     உ.வே.சா. அவர்களின் தமிழ்ப்பணி தமிழின் பெருமையை உலகறியச் செயவித்தது. அவர்தம் பணியால் தமிழ் செம்மொழித் தகுதியைப் பெற்று விளங்குகிறது எனில் மிகையன்று. இன்றைய இளைஞர்களும் மாணவர் சமுதாயமும் அறிஞர் பெருமக்களும் அவரது பணியைப் பாராட்டுகின்ற வகையில் தமிழைக் காத்து நிறபதோடு அகிலமெங்கும் தழைத்தோங்க சபதம் மேற்கொள்ள வேண்டும்.

(குறிப்பு: திருப்பாற்கடனாத கவிராயர் இறப்பிற்குப் பின் அவர் வீட்டிலிருந்து 500 ஓலைச் சுவடிகளை உ.வே.சா. எடுத்து வந்ததாகவும் அதில்தான் பத்துப்பாட்டு முழுவதும் உரையுடனும், எட்டுத்தொகை, பதிணென்கீழ்க்கணக்கு, சீவகசிந்தாமணி, கொங்குவேள் மாக்கதை ஆகிய நூல்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது)

சனி, 9 பிப்ரவரி, 2013

இணையத்தில் தமிழ்த் தரவுகள்

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற தொல்காப்பிய மரபுவழிப் பார்வையும் மொழியியல் பார்வையும் என்னும் தலைப்பிலான செம்மொழிக் கருத்தரங்கில் இணையத்தில் தமிழ்த் தரவுகள் என்னும் தலைப்பில் 09-02-2013 அன்று உரையாற்றுகையில்....


                                           கலந்து கொண்டோர்


வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

திணை நிலை நோக்கில் ஐந்திணை ஐம்பது பயிலரங்கம்

  அமர்வு அறிமுக உரையில்  முனைவர் சா.உதயசூரியன்
        
                           அமர்வில் உரையாற்றுகையில்.
                        
                      அமர்வில் உரையாற்றுகையில்....
                     மாணவர்களுடன் கலந்துரையாடல்
                         நன்றி கூறும் மலேசிய மாணவி
                        நினைவுப் பரிசு வழங்கல்
                    அமர்வை நிறைவு செய்கிறார் ஒருங்கிணைப்பாளர்

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் , சென்னை இணைந்து 28-01-2013 முதல் 06-02-2013 வரை  மலேசியத் தமிழ் மாணவர்களுக்கானப் பயிலரங்கத்தைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்  நடத்துகின்றன. திணை நிலை நோக்கில் தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்கள் என்னும் மையப் பொருண்மையிலான இப்பயிலரங்கத்தில் நான் திணை நிலை நோக்கில் ஐந்திணை ஐம்பது என்னும் தலைப்பில் 01-02-2013 முற்பகல் 11.30 மணி முதல் 1.00 மணி வரை பயிலரங்க உரை நிகழ்த்தினேன். இப்பயிலரங்கில் மலேசிய நாட்டின் சுல்தான் இட்ரிசு கல்வியியல் பல்கலைக்கழகத்தின் 40 மாணவ - மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர். என் உரையைக் கூர்ந்து அவர்கள் கேட்டமை, ஆர்வமுடன் வினாக்கள் தொடுத்தமை முதலானவை எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதத்தில் இருந்தன. அவர்கள் நல்ல தமிழிலும் பேசுகின்றனர்.

சனி, 26 ஜனவரி, 2013

திருக்குறளில் அணி இலக்கணக் கூறுகள்

                                               

 கருத்தரங்கில் உரையாற்றுகையில்

முன்னுரை

       கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள், அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள் ஆகிய புகழ் மொழிகளுக்கு உரியது பொய்யில் புலவனின் பனுவல். பொருட் செறிவு மட்டுமின்றி சுவை மிக்கதாகவும் அறிவுறுத்தும் ஆற்றலில் உயர்ந்தும் குறட்பாக்கள் நிற்கின்றன. இக்குறட்பாக்களில் அணி இலக்கணக் கூறுகளுக்கும் பஞ்சமில்லை. இக்காலத்தார் விரித்துக் கூறுகின்ற அனைத்து வகை அணிகளையும் குறட்பாக்களில் காணமுடிகின்றது.

அணி விளக்கம்  

அணி என்பதைப் பொதுவாக அழகுக்கு அழகுக் கூட்டுவது என்று குறிப்பிடலாம். இதனை,
படையினது உறுப்பும் ஒப்பனையும் அழகும்
                      பெருமையும் கலனும் அன்பும் அணி எனல்         (3050)
   
என்று பிங்கல நிகண்டும்,

அணி பெருமை ஒழுங்கு அழகு ஆபரணம்  முனை எல்லை
   அலங்காரம் மாலை அச்சின் அணி படை வகுப்பின்     (286)

என்று நாநார்த்த தீபிகையும் குறிப்பிடுகின்றன. பவனந்தி முனவர்,

மாடக்குச் சித்திரமும் மாநகர்க்குக் கோபுரமும்   
                              ஆடமைத் தோள் நல்லார்க்கு அணியும் போல்    (நன்னூல் 45)

என்று சுட்டுகிறார்.

தொல்காப்பியத்தில் அணி

        ஒல்காப் புகழ் தொல்காப்பியர் உவமை அணியை மட்டுமே குறிப்பிட்டுள்ளார். அவர் உள்ளுறை உவமம், ஏனை உவமம் என்று இரண்டனைக் குறிப்பிட்டுள்ளார். பின்னர் தோன்றிய அணி இலக்கண நூல்கள் அணிகளை  28 (திவாகரம்), 35 (தண்டியலங்காரம்), 64 (மாறனலவ்காரம்), 100 (சந்திரலோகம்), 102 (அணியிலக்கணம்), 120 (குவலயானந்தம்) என்று பலவாறாகக் கூறுகின்றன.

திருக்குறளில் அணிகள்


        திருக்குறளில் இடம் பெற்றுள்ள அணிகளை உவமையணி, சொல்லணி, பொருளணி, சுவையணி என்று விளக்கிக் காட்டுகிறார் முனைவர் இ.சுந்தரமூர்த்தி  (திருக்குறள் அணிநலம், சென்னைப் பல்கலைக்கழகம், 1971). பிற்காலத்து அணி இலக்கண ஆசிரியர்கள் கூறும் வகையெல்லாம் திருக்குறளில் இடம் பெற்றுள்ள அணிகளை விளக்கிக் காண இயலுமாயினும் மேற்கண்ட பாகுபாட்டின் அடிப்படையில் திருக்குறள் அணிகளைக் காணலாம்.

உவமையணி

        அணிகளில் தலையாயது உவமையணி ஆகும். தொல்காப்பியர் இவ்வணியை மட்டுமே குறிப்பிட்டுள்ளார். இவர் சுட்டிய உவமையணியைப் பிற்காலத்தார் வெவ்வேறு அணிகளாக விரித்துக் கூறினர்.

  சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
     கோடாமை சான்றோர்க்கு அணி                                                     (118)

 சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பின்
     பட்டுப் பாடூன்றும் களிறு                                                          (597)

இக்குறட்பாக்களைப் போன்றே 109, 274, 279, 308, 532, 576, 624, 650, 828, 929, 969, 1010, 1073, 1076, 1082, 1122, 1124, 1260 முதலான குறட்பாக்களிலும் உவமையணி பயின்று வந்துள்ளது.

சொல்லணி

        பொருளணி அளவிற்கு இவ்வணிகளை அறிஞர்கள் சிறப்புடையதாக ஏற்றுக் கொள்ள மாட்டார். ஆயினும் இவ்வணி செய்யுளுக்கு அழகூட்டுவன என்பதில் ஐயமில்லை. இதனை ஒரு வகை சொல் விளையாட்டு என்று கூறலாம்.
                இவ்வணியை, சொற்பின் வருநிலை அணி, சொற்பொருட்பின் வருநிலை அணி, நிரல் நிறை அணி, முரண் அணி, தீவக அணி, அந்தாதி அணி, விற்பூட்டணி என்று வகைப்படுத்தலாம்.

சொற்பின் வருநிலை அணி

 இறந்தார் இறந்தார் அனையர்  சினத்தைத்
         துறந்தார் துறந்தார் அனையர்                                 (310)

இக்குறட்பாவில் சினத்தை இறந்தார் (அளவு கடந்தார்) இறந்தவராகக் (செத்தவராக) கருதப்படுவார். அதைப்போல சினத்தைக் கைவிட்டார் (துறந்தார்) துறவியாகக் (துறந்தார்) கருதப்படுவார். இதனைப் போலவே,

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்                         (965)
என்ற குறட்பாவையும் இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். மேலும் 225, 739, 973, 985 ஆகிய குறட்பாக்களிலும் இவ்வணியைக் காண முடிகிறது.


சொற்பொருள்பின் வருநிலை அணி

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க  
    சொல்லில் பயன்இலாச் சொல்                                       (200)

      நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
   வாய்நாடி வாய்ப்பச் செயல்                                        (948)

இக்குறட்பாக்களில் ஒரே சொல் திரும்பத் திரும்ப ஒரே பொருளில் வந்துள்ளது. 12, 202, 297, 320, 350, 359, 365, 411, 428, 466, 504, 553, 602, 603, 623, 641, 645, 666, 672, 841, 849, 881, 948, 962, 973, 1041, 1194, 1279, 1286 முதலிய குறட்பாக்களிலும் இவ்வணி பயின்று வந்துள்ளது.நிரல் நிறை அணி

                நிரல் நிறை அணி என்பது வரிசையாகச் சொல்லப்பட்ட பொருள்களுக்குத் தொடர்புடையவற்றைத் தொடர்ந்து அவ்வரிசை முறையிலேயே கூறுவது ஆகும். சொற்களை நேர் நேராக இணைத்துப் பொருள் கொண்டால் நேர் நிரல் அணி; சொற்களை வரிசை மாற்றிப் பொருள் கொண்டால் எதிர் நிரல் நிறை அணி.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
               பண்பும் பயனும் அது                                              (45)

இதில் அன்பும் அறனும் என்ற சொற்களை வரிசையாக நிறுத்தி, பண்பும் பயனும் என்ற சொற்களை முறைபடக் கூறியுள்ளமையால் இது நிரல் நிறை அணி ஆகும். இவ்வணி 182, 254, 856, 876, 926 ஆகிய குறட்பாக்களிலும் பயின்று வந்துள்ளது.

எதிர் நிரல் நிறை அணி

விலங்கொடு மக்கள் அணையர் இலங்குநூல்
    கற்றாரோடு ஏனை யவர்                                              (410)

சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
    நோயும் பசலையும் தந்து                                            (1183)

முதல் குறளில் விலங்கு, மக்கள் என்ற சொற்களுக்கு ஏற்புடைய கல்லாதவர், கற்றோர் என்று சொற்களை வரிசைப்பட நிறுத்தாது வரிசை மாற்றிக் கூறியுள்ளமையால் இது எதிர் நிரல் நிறை அணி ஆகும். இதனைப்போலவே அடுத்தக் குறட்பாவிலும் சாயல், நாண் என்ற சொற்களுக்கு ஏற்ப பசலை, நோய் என்ற சொற்களை வரிசைப்படக் கூறாமல் முறைமாற்றி அமைத்துள்ளமையால் எதிர் நிரல் நிறை அணி ஆகும்.  

முரண் அணி

ஒன்றற்கு ஒன்று மாறுபடக் கூறுவது முரண் அணி ஆகும். அதாவது நன்மை, தீமை என்பன போல் முரணான சொற்களை ஒரு செய்யுளில் அமைப்பது முரண் அணி ஆகும்.

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
    கூடலில் காணப் படும்                                              (1327)

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
    அணியுமாம் தன்னை வியந்து                                     (978)

மேற்கண்ட குறட்பாக்களில் தோற்றவர் வென்றார், பெருமை - சிறுமை ஆகிய முரண்பட்ட சொற்களை அருகருகில் அமைத்து முரண்படக் கூறியுள்ளமையால் இது முரண் அணி ஆகும்.


தீவக அணி

        செய்யுளில் ஓரிடத்தில் பயின்று வந்துள்ள சொல் செய்யுளின் வெவ்வேறு இடங்களிலும் சென்று பொருந்திப் பொருள் தருவது தீவக அணி ஆகும். செய்யுளின் முதலில் உள்ள சொல் அங்ஙனம் வேறிடத்திற்குச் சென்று பொருள் தந்தால் அது முதல் நிலைத் தீவகம்; செய்யுளின் இடையில் உள்ள சொல் அங்ஙனம் வேறிடத்திற்குச் சென்று பொருள் தந்தால் அது இடைநிலைத் தீவகம்; செய்யுளின் கடையில் உள்ள சொல் அங்ஙனம் வேறிடத்திற்குச் சென்று பொருள் தந்தால் அது கடைநிலைத் தீவகம் ஆகும். இதனை நன்னூலார் தாப்பிசைப் பொருள்கோள் என்பர்.

  ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
     இழிந்த பிறப்பாய் விடும்                           (133)   - முதல் நிலைத் தீவகம்

 உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன் உண்ண
     அண்ணாத்தல் செய்யாது அளறு                  (255)  - இடைநிலைத் தீவகம்

 உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
     கள்ளுக்கில் காமத்திற் குண்டு                  (1281)   - கடைநிலைத் தீவகம்

தீவக அணி 371, 617, 773, 1094, 1196, 1281 ஆகிய குறட்பாக்களிலும் பயின்று வந்துள்ளது.

அந்தாதி

        நீரின்றி அமையாது உலகெனின்  யார்யார்க்கும்
        வானின்று அமையாது ஒழுக்கு                                                      (20)

        ஒழுக்கத்து நீத்தார் பெருமை  விழுப்பத்து
            வேண்டும் பனுவல் துணிவு                                                        (21)

     ஒரு குறளின் இறுதிச் சொல் அடுத்தக் குறளின் முதற் சொல்லாக வந்துள்ளமையால் இது அந்தாதி அணி ஆகும். திருக்குறளில் அந்தாதி அணி மிக அருகிய நிலையிலேயே காணப்படுகிறது.

விற்பூட்டணி

        முதற்சொல்லோடு இறுதிச் சொல் வந்து பொருந்திப் பொருள் தருவது விற்பூட்டணி ஆகும். அதாவது வில்லின் இரு முனைகளையும் நாண் கொண்டு பூட்டினாற் போல முதற் சொல்லுடன் இறுதிச் சொல் வந்து நின்று பொருள் தருவது எனலாம். இதனை நன்னூலார் பூட்டு வில் பொருள்கோள் என்பர்.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
        சான்றோன் எனக்கேட்ட தாய்                                                  (9)

இக்குறட்பாவில் தாய் என்னும் ஈற்றுச் சொல் ஈன்ற என்னும் முதற் சொல்லோடு சேர்ந்து பொருள் தருகிறது.

சுவையணி

        தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ள நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை ஆகிய எண்வகை சுவைகளும் திருக்குறளில் காணப்படுகின்றன. இச்சுவைகளை வள்ளுவர் தம் குறட்பாக்களில் சிறப்பாக அமைத்துள்ளார் என்று கூறலாம்.

நகை

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
        ஐந்தும் அகத்தே நகும்                                                                ( 271)

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
        தான்நோக்கி மெல்ல நகும்                                                         (1094)

இக்குறட்பாக்களில் நகும் என்ற சொல் வெளிப்படையாகவே வந்துள்ளது. இவ்வணி 167, 774, 839, 946, 1040, 1071, 1073, 1095, 1098 ஆகிய குறட்பாக்களிலும் பயின்று வந்துள்ளது.

அழுகை

    வழுத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள்
        யாருள்ளித் தும்மினீர் என்று                                                      (1317)

தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
        எம்மை மறைத்திரோ என்று                                                    (1318)

இக்குறட்பாக்களில் அழுதாள் என்ற சொல் வெளிப்படையாகவே வந்துள்ளது. இவ்வணி 1029, 1045, 1049 ஆகிய குறட்பாக்களிலும் பயின்று வந்துள்ளது.


இளிவரல்

இளிவரல் என்றால் வருத்தம் என்று பொருள்.

அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
        பிறன்போல நோக்கப் படும்                             (1047)

    பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
        ஏதில் பிணந்தழீஇ யற்று                                 (913)

இக்குறட்பாக்களில் வறுமையும் பொருட் பெண்டிர் முயக்கமும் வருத்தம் தரத்தக்கன என்று இளிவரல் சுவைபடக் கூறப்பட்டுள்ளன. இவ்வணி 257, 923, 925, 1029, 1044, 1045, 1049, 1261, 1266, 1269 ஆகிய குறட்பாக்களிலும் பயின்று வந்துள்ளது.

மருட்கை

        மருட்கை என்றால் வியப்பு என்று பொருள்.

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
        மாதர்கொல் மாலும்என் நெஞ்சு                       (1081)

தொடின்சுடின் அல்லது காமநோய்         போல
        விடின்சுடல் ஆற்றுமோ தீ                              (1159)

இவ்வணி 336, 337, 889, 1088, 1104, 1116 ஆகிய குறட்பாக்களிலும் பயின்று வந்துள்ளது.

அச்சம்

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
        கொன்றது போலும் நிரப்பு                                                      (1048)

இக்குறட்பா நாள்தோறும் வறுமையால் துன்பமுற்ற ஒருவனின் உள்ள நிலையையும் அவனது அச்ச உணர்ச்சியையும் நன்கு காட்டுகிறது.

பெருமிதம்

என்ஐமுன் நில்லன்மின் தெவ்விர் பலர்என்னை
        முன்னின்று கல்நின் றவர்                                                      (971)

இக்குறட்பா, வீரன் ஒருவன் தன் அரசனின் வீரத்தைப் பெருமைபடக் கூறுவதாக அமைந்துள்ளது.

வெகுளி


வெகுளி என்றால் கோபம் என்று பொருள்.

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
        அவியினும் வாழினும் என்                                  (420)

இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து
        கெடுக உலகுஇயற்றி யான்                            ( 1062)

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
        வல்வரவு வாழ்வார்க்கு உரை                          ( 1151)

இவ்வணி 144, 329, 848, 1050, 1080 ஆகிய குறட்பாக்களிலும் காணப்படுகின்றது.உவகை

கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
        ஒண்தொடி கண்ணே உள                                                                  (1101)

மகிழ்ச்சி என்னும் சுவையைக் கூறும் இவ்வணி 394, 1101, 1107, 1113, 1121 ஆகிய குறட்பாக்களிலும் இடம் பெற்றுள்ளது.

முடிவுரை

        குறள் வெண்பா வடிவில் கருத்துகளை வரைவதே கடினமான வேலை. இதில் வள்ளுவர் கருத்துகளைச் செறிவுடன் அமைத்துள்ளார் என்பதை அறிஞர்கள் வியக்கப் பார்த்திருக்கிறோம். ஆனால் இக்குறட்பாக்களில் அணிநலச் சிறப்பும் மேலோங்கி நிற்கிறது என்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் செய்தியாகும். திருக்குறளில் அணி நலம் என்ற பார்வையில் ஆய்வுகள் பெருமளவில் நடத்தப்பெற வேண்டும்.