சனி, 22 மார்ச், 2014

மின்-ஊடகங்களில் பழந்தமிழ் இலக்கியப் பனுவல்கள் – சிலப்பதிகாரம்



மின்-ஊடகங்களில் பழந்தமிழ் இலக்கியப் பனுவல்கள் – சிலப்பதிகாரம்

( 10/03/2014 திங்கட்கிழமை அன்று புனித வளனார் கல்லூரியில் நடைபெற்ற செம்மொழிக் கருத்தரங்கில் ஆற்றிய உரை )


கருத்துரை – சுருக்கம்

மின்–ஊடகங்களில் பழந்தமிழ் இலக்கியப் பனுவல்கள் என்பது பொதுப்பொருண்மை. இதில் மின்–ஊடகங்களில் குறிப்பாக இணையதளங்களில் சிலப்பதிகாரம் பற்றி கிடைக்கும்  செய்திகளைச் சுட்டிக் காட்டி விளக்கப்படுகிறது.  கூகிள் தேடுபொறியில் சென்று சிலப்பதிகாரம் என்று தட்டச்சுச் செய்து தேடினால் 0.29 வினாடிகளில் 1,26,000 முடிவுகள் கிடைக்கின்றன.

இணையதளங்களில் காணலாகும் சிலப்பதிகாரச் செய்திகளைக் கீழ்க்கண்டவாறு பகுத்துரைக்கலாம்.

1) சிலப்பதிகாரம் – நூல்கள் கிடைக்குமிடங்கள்

2) சிலப்பதிகாரம் குறித்த கட்டுரைகள் வெளிவந்த தளங்கள்

3) சிலப்பதிகாரம் குறித்த வலைப்பூக்கள்

4) விக்கிபீடியாவில் சிலப்பதிகாரம்

5) த.இ.க.க. இல் சிலப்பதிகாரம்

6) சிலப்பதிகாரத்திற்கானப் படங்கள்

1) சிலப்பதிகாரம் – நூல்கள் கிடைக்குமிடங்கள்:

·         தமிழ் இணையக் கல்விக் கழகம்

·         மதுரைத்திட்டம்

·         Ex Libries Primo

·         Discovery Book Palace

·         Goodreads.com

·          

2) சிலப்பதிகாரம் குறித்த கட்டுரைகள் வெளிவந்த தளங்கள்:

·         இந்திரா பார்த்தசாரதி

·         தமிழ்க்களஞ்சியம்

·         இலக்கியம்.காம்

·         எழில் நிலா.காம்

·         உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்

·         தமிழ்த்தொகுப்புகள்

·         ஜெயமோகன்

·         சொல்வனம்

·          

3) சிலப்பதிகாரம் குறித்த வலைப்பூக்கள்:

·         மானிடள் (முனைவர் மு.பழனியப்பன்)

·         ஓசை செல்லா (எஸ்.இராமகிருஷ்ணன்)

·         மு.இளங்கோவன்

·         தமிழ் கிறுக்கன் (குவைத் ச.குமரன்)

·         ஐம்பெருங்காப்பியங்கள்

·         முதலூர் மண்

·         பாரதீச்சுடர்

·         சே.கல்பனா

·         க.துரையரசன்

·          

4) விக்கிபீடியாவில் சிலப்பதிகாரம்:

·         சிலப்பதிகாரம் – விக்கி மேற்கோள்

5) த.இ.க.க. இல் சிலப்பதிகாரம்:

·         நூலகம்

·         பாடங்கள் (4.1), (1.2) (2.2)

6) சிலப்பதிகாரத்திற்கானப் படங்கள்:

a) you tube

b) தமிழ் இணையக் கல்விக்கழகம் (ஓலைச்சுவடி)

 1) சிலப்பதிகாரப் பதிப்பு – உ.வே.சா. (1892)

a) http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=220&pno=702#head

b) http://www.heritagewiki.org

1) சிலப்பதிகாரத்தில் புகார்க் காண்டத்தின் மூலத்தை மாத்திரம்
பிரஸிடென்ஸி காலேஜில் தமிழ்ப் பண்டிதராக இருந்த ஸ்ரீநிவாச
ராகவாசாரியரென்பவர் முன்பு பதிப்பித்திருந்தார். சேரமான் பெருமாநாயனார்
இயற்றிய  சிலப்பதிகாரம் என்று அவர் பதிப்பித்தார்.      

2) 1880 ஆம் வருஷத்தில் சோடசாவதானம் சுப்பராய செட்டியார் அக்காண்டத்தின்    மூலத்தை அடியார்க்குநல்லார் உரையோடு அச்சிட்டார்.

இரண்டு பதிப்புக்களும், அக்காலத்தில் சிலப்பதிகாரம் பாடமாக வந்தமையால் வெளியானவை. அவற்றிற் பலவகையான பிழைகள் இருந்தன. செட்டியார், கடின நடையாயுள்ளனவற்றை எளிய நடைகளாகச் செய்தும், வேண்டிய இடங்களில் விரித்துஞ் சுருக்கியும், கானல்வரிக்கு உரையின்மையால் உரையெழுதியும், அரங்கேற்று காதையுள் வரம்பின்றிப் பரந்த இசை நாடக இலக்கணங்கள் பலவிடங்களிலும்  வருதலால் ஆங்காங்குணர இங்குச் சுருக்கியும், அச்சிட்டதாக முகவுரையில் தெரிவித்திருக்கிறார். அதனால் அடியார்க்கு நல்லாருரை முழுதும் அப்படியே அப்பதிப்பில் அமைந் திருக்கவில்லை யென்பது தெரியவரும்.அவர் மதுரைக் காண்டத்தையும் அச்சிட முயன்றும் அது நிறைவேறவில்லை.

2) சிலப்பதிகாரம் – நூல்கள்  (மூலமும் உரையும்) கிடைக்குமிடங்கள்

a) தமிழ் இணையக் கல்விக்கழகம்  www.tamilvu.org

b) மதுரைத் திட்டம் www.projectmadurai

c) சென்னை நூலகம் www.chennailibrary.com

d)  நூலகம் www.noolagam.org

a) சிலப்பதிகாரம் (நூல்கள்) 

3) சிலப்பதிகாரம் குறித்த கட்டுரைகள் வெளிவந்த தளங்கள்

a) சிலப்பதிகாரம் எனும் ஒரே தமிழ் நாடகம் - இந்திரா பார்த்தசாரதி - http://tamil.webdunia.com/miscellaneous/literature/stories/0706/02/1070602014_1.htm
b) ஐம்பெருங்காப்பியங்கள் – சிலப்பதிகாரம் - தமிழ்க்களஞ்சியம் http://www.tamilkalanjiyam.com/literatures/aimperum_kaappiyangal/silappadhikaram.html#.UxdCHs46Vho
c) சிலப்பதிகாரம் – தமிழ் இலக்கியம்

4) சிலப்பதிகாரம் குறித்த வலைப்பூக்கள்

a)  சிலப்பதிகாரம் - வீட்டை விட்டுப் பிரியும் கண்ணகியும் கோவலனும் http://manidal.blogspot.in/2012/07/blog-post_17.html

b) சிலப்பதிகாரம் பற்றி எஸ்.இராமகிருஷ்ணன் http://osaichella.blogspot.in/2007/10/blog-post_8577.html

c) சிலப்பதிகாரம் தமிழரின் இசையறிவுக் கருவூலம்

d) ஐம்பெருங்காப்பியங்கள் http://5bigepics.blogspot.in/p/blog-page.html

f) சிலப்பதிகாரம் - http://tamilkirukkan.wordpress.com

i) காப்பியத்தில் திருப்பு முனை: சிலப்பதிகாரத்தில் கானல் வரி
j) சிலப்பதிகார ‘வரிகள்

5) விக்கிபீடியாவில் சிலப்பதிகாரம்

a) சிலப்பதிகாரம் http://ta.wiktionary.org

c) http://ta.wikisource.org/wiki/

6) த.இ.க.க. இல் சிலப்பதிகாரம்

a) http://www.tamilvu.org/courses/degree/p104/p1041/html/p1041221.htm

b) http://www.tamilvu.org/courses/degree/a011/a0111/html/a011122.htm

c) http://www.tamilvu.org/courses/degree/c031/c0312/html/c03121l2.htm

d) e) http://www.tamilvu.org/courses/degree/a011/a0111/html/a011123.htm

f) http://www.tamilvu.org/courses/degree/a041/a0411/html/a04114l1.htm

7) சிலப்பதிகாரத்திற்கானப் படங்கள்

a) https://www.google.co.in

c) த.இ.க.

ஞாயிறு, 16 மார்ச், 2014

மின்-ஊடகங்களில் பழந்தமிழ் இலக்கியப் பனுவல்கள் – சிலப்பதிகாரம்

மின்-ஊடகங்களில் பழந்தமிழ் இலக்கியப் பனுவல்கள் – சிலப்பதிகாரம்    

    திருச்சி புனித வளனார் (தன்னாட்சி) கல்லூரியில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதி நல்கையுடன்  மின்-ஊடகங்களில் பழந்தமிழ் இலக்கியப் பனுவல்கள் என்னும் பொதுப்பொருண்மையில் நடைபெற்ற பத்து நாள் பயிலரங்கில் நான் 10.03.2014 அன்று காலை 9.30 மணி முதல் 11.00 மணி வரை மின்-ஊடகங்களில் பழந்தமிழ் இலக்கியப் பனுவல்கள் – சிலப்பதிகாரம் என்னும் தலைப்பில் கருத்துரை வழங்கினேன்.

   
 
    மிக நன்முறையில் பங்கேற்பாளர்கள் பயனடையும் வகையில் ஒவ்வொருவருக்கும் இணைய இணைப்புடன் கூடிய கணினி வழங்கப்பட்டிருந்தது. அதனால் நான் ஒரு தளம் பற்றி கூறியவுடன் பங்கேற்பாளர்கள் தாங்களே அத்தளத்திற்குள் சென்று செய்திகளைத் தேடி அறிந்து கொண்டனர். இது அவர்களுக்குப் பயனளிப்பதாக இருந்தது. 

    அது போல நானும் எனது கருத்துரையை 'பென் டிரைவில்' எடுத்துச் செல்லாமல் கூகுள் இயக்ககத்தில் சேமித்து எடுத்துச் சென்றிருந்தேன். அதிலிருந்து நேரடியாக இணைய உதவியுடன் எடுத்துக் கருத்துரை வழங்கிய பங்கேற்பாளர்களுக்கு வியப்பாகவும் புதிய ஒரு செய்தி கிட்டியதாகவும் கருதினர். அவர்களும் கூகுள் இயக்ககம் பற்றி அறிந்துகொண்டு பயன்படுத்தத் தொடங்கினர். நிகழ்ச்சியை நன்முறையில் ஏற்பாடு செய்திருந்து பயலரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் தி.நெடுஞ்செழியன் பாராட்டுதலுக்கு உரியவர்.

   இது போன்ற நேரடி இணைய இணைப்பு வழி கலந்துரையாடல்கள்தான் இன்றைய காலக்கட்டத்தில் தமிழ் மாணவர்களுக்குத் தேவை என்று நான் கருதுகிறேன்.

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

பெருங்கடுங்கோ

பாலை பாடிய பெருங்கடுங்கோ

           பாலை பாடுவதில் வல்லவர் என்பதன் அடையாளமாக இவர் பாலை பாடிய பெருங்கடுங்கோ என்று அழைக்கப்பட்டார். மேலும் இவரது பாடல்கள் ஒன்று தவிர மற்ற அனைத்துப் பாடல்களுமே பாலைத்திணையில் அமைந்துள்ளன என்பதாலும் இவர் அங்ஙனம் அழைக்கப்பட்டார்.  இவர் பாடிய பாடல்கள் எட்டுத்தொகையில் இடம் பெற்றுள்ளன. மொத்தம் 68 பாடல்கள் பாடியுள்ளார். 

        அகநானூற்றில் 12 பாடல்கள் (5, 99, 111, 155, 185, 223, 261, 267, 291, 313, 337, 379) நற்றிணையில் 10 பாடல்கள் (9, 48, 118, 202, 224, 256, 318, 337, 384, 391) குறுந்தொகையில் 10 பாடல்கள் (16, 37, 124, 135, 137, 209, 231,262,283,398), பாலைக்கலியில் 35 பாடல்கள் (1-35), புறநானூற்றில் 1 பாடல் (282) என இவரது பாடல்கள் 67 காணப்படுகின்றன. இவற்றுள் குறுந்தொகையில் இடம் பெற்றுள்ள 231-வது பாடல் தவிர மற்ற அனைத்துப் பாடல்களும் பாலை பற்றியவை.   

   இவர் இசைவாணர்களுக்குப் பெரிதும் உதவியுள்ளார். கொடையிலும் வீரத்திலும் சிறந்தவர். இவர் அறநூல், மரநூல், விலங்குநூல், இயற்றமிழ் நூல், இசைத்தமிழ் நூல், ஓவிய நூல்  ஆகியவற்றில் வல்லவர். இவரது பாடல்களில் உயர்ந்த உவமை, வாழ்க்கை வனப்பு, அறமுறை, ஆண்மைச் செல்வம் ஆகியன அமைந்திருக்கும். ஏறத்தாழ 216 உவமைகள் இவர் பாடல்களில் அமைந்துள்ளதாக இந்திரா இமானுவேல் பாலை பாடிய பெருங்கடுங்கோ என்ற தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

திங்கள், 17 பிப்ரவரி, 2014

முத்தொள்ளாயிரம்... சில சிந்தனைகள்

முத்தொள்ளாயிரம்...  சில சிந்தனைகள்

  • செவ்வியல் இலக்கியங்களுள் ஒன்று
  • செவ்வியல் இலக்கியங்கிளுள் ஆயிரம் என்ற பெயரில் தொடங்கும் ஒரே நூல்
  • முத்தொள்ளாயிரம் போல் வச்சத் தொள்ளாயிரம், அரும்பைத் தொள்ளாயிரம் ஆகிய நூல்கள் இருந்ததாகத் தெரிகிறது.
  • மூவேந்தர்கள் பற்றி 900 பாடல்கள் வீதம் 2700 பாடல்கள் கொண்டது என்பர்.
  • ஆயினும் மூன்று தொள்ளாயிரமா?  முத்தொள்ளாயிரமா? (மூவருக்கும் சேர்த்து தொள்ளாயிரமா) என்ற ஐயம் உண்டு.
  • புறத்திரட்டு நூல்களின் வழி 108 பாடல்கள் கிடைத்துள்ளன.
  • 1905இல் இரா.இராகவையங்கார் 110 பாடல்களைக் கொண்ட முத்தொள்ளாயிரப் பதிப்பை முதன்முதலாக வெளியிட்டார்.
  • டி.கே.சி.இரசிகமணி 99 பாடல்களைக் கொண்ட முத்தொள்ளாயிரப் பதிப்பை வெளியிட்டார். 1946இல் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 130 பாடல்களைக் கொண்ட பதிப்பை வெளியிட்டது. 
  • இதன் பதிப்பாசிரியர் ந.சேதுரகுநாதன். இதில் கடவுள் வாழ்த்து - 1, பாண்டிய மன்னர் பற்றி 60 பாடல்கள், சேழ மன்னர் பற்றி 46 பாடல்கள், சேர மன்னர் பற்றி 23 பாடல்கள் இடம் பெற்றிருந்தன.
  • சிறந்த காதல் கவிதைகளைக் கொண்டது.
  • தாயர் அடைப்ப மகளிர் திறந்திடத் 
        தேயத் திரிந்த குடுமியவே - ஆய்மலர்
       வண்டுலா அங்கண்ணி வயமான்தேர்க் கோதையைக் 
       கண்டுலாஅம் வீதிக் கதவு.
இப்பாடலைப் புதுக் கவிதை நடையில் கீழ் வருமாறு கூறியுள்ளார் ஒரு கவிஞர் (இணையத்தில் படித்தது. பெயர் நினைவிலில்லை)

பறந்தோடும் புரவித் தேரில் 
வண்டுமொய் ம்மாலையணிந்து வரும்
சேரனுலாக் காண கன்னியர்
கதவு திறக்க - அன்னையர்
அக்கதவடைக்க அப்போரில்
தேய்ந்ததே கதவின் குடுமி

மற்றொரு பாடல்:

கடல்தானைக் கோதையைக் காண்கொடாள் வீணில்
அடைத்தாள் தனிக்கதவம் அன்னை - அடைக்குமேல்
ஆயிழையாய்! என்னை அவன்மேல் எடுத்துரைப்பார்
வாயும் அடைக்குமோ தான்

இப்பாடலின் புதுக்கவிதை வடிவம்:

கடலொத்தப் படை
கொண்ட சேரனைப் பாரா
வண்ணம் தாய்
கதவடைத்தாலும் - நான்
கொண்டக் காதலை
ஊர் அவனிடம் சொல்லுமே - தடை
செய்ய இயலுமோ அதை.

செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

புறநானூற்றில் நிர்வாகவியல் சிந்தனைகள்



புறநானூற்றில் நிர்வாகவியல் சிந்தனைகள்


முன்னுரை
            இக்காலத்தில் நிர்வாகவியல் என்பது தனித்துறையாக நன்முறையில் வளர்ந்துள்ளது. சிறந்த நிர்வாகியும் சிறந்த நிர்வாகமும் அனைவராலும் போற்றத்தக்கன. நிர்வாகம் (அ) மேலாண்மைக்காக தனிப்படிப்புகளும் பயிற்சிகளும் சீரிய முறையில் இக்காலத்தில் கிடைக்கின்றன. ஆனால் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் தோன்றிய சங்க இலக்கியங்கிளலும் அதற்கு முன்பு தோன்றிய சிலப்பதிகாரத்திலும் இத்தகைய நிர்வாகவியல் சிந்தனைகள் இடம் பெற்றுள்ளதை எடுத்துரைக்கும் வண்ணம் இக்கட்டுரை அமைகிறது.
புறநானூறு
            எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான புறநானூற்றை வரலாற்றுக் கருவூலம் என்பர் இலக்கிய வரலாற்றறிஞர்கள். இதன்கண் வரிவசூல், தலைமைப் பண்பு, பணிப்பகிர்வு, முதலாளி ஊழியர்களுடன் விருந்துண்ணல், இலாபப் பகிர்வு முதலான நிர்வாகவியல் சிந்தனைகள் இடம் பெற்றுள்ளதைக் காண முடிகிறது.
வரிவசூல்
 பிசிராந்தையார், பாண்டியன் அறிவுடைநம்பியிடம் கூறியதாக அமைந்த கீழ்க்கண்ட பாடல் ஓர் அரசன் வரி வசூல் செய்வதற்குரிய சிறந்த ஆலோசனையை வழங்குவதாக உள்ளது. இவ்வகையில் இப்பாடலைச் சிறந்த நிர்வாகவியல் அணுகுமுறைப் பொதிந்த பாடலாகக் குறிப்பிடலாம்.
காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே,
மா நிறைவு இல்லதும், பல் நாட்கு ஆகும்;
நூறு செறு ஆயினும், தமித்துப் புக்கு உணினே,
வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே,
கோடி யாத்து, நாடு பெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,
பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம் போல,
தானும் உண்ணான், உலகமும் கெடுமே1
இப்பாடலில், ஓர் அரசன் சிறந்த நிர்வாகியாக இருக்க வேண்டும் எனபது புலவர் பிசிராந்தையாரால் எடுத்துரைக்கப்படுகிறது. அத்தகைய அரசனால்தான் உலகும் உய்யும்; அவனும் உய்வடைய முடியும். அரசனுக்கு இருக்க வேண்டிய பல நிர்வாகத் திறன்களுள் வரி வசூலிப்பது என்பதும் ஒன்றாகும். அத்தகைய வரியை முறை தவறி வசூலித்தால் உலகும் கெடும்; தானும் கெடுவான் என்றும்,  முறைப்படி வரி வசூலித்தால் உலகும் மகிழும்;  தானும் மகிழ்ச்சியாக வாழமுடியும் என்ற நிர்வாக நுட்பத்தைப் புலவர் கற்றுத் தருகிறார். இன்றைக்கும் வரி வசூல் செய்வதில் அரசாங்கம் அனைவரும் ஏற்கத்தக்க நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும். அத்தகைய அரசைத்தான் பொதுமக்கள் நல்ல அரசு என்று பாராட்டுவார்கள். இவ்வரி வசூல் சோழர்களின் ஊராட்சி நிர்வாகத்தில் செம்மையாக இருந்ததையும் ஈண்டு நினைவுகூரல் தகும்.
நிறுவனத் தலைவர்
ஒரு நிறுனத்தின் தலைவர் அந்நிறுவன ஊழியர்களுக்கு முன்னோடியாகவும் எடுத்துக்காட்டாகவும் விளங்க வேண்டும். அப்பொழுதுதான் ஊழியர்கள் அவர்களைப் போல் நடந்து கொள்வார்கள். ஓர் ஊழியரைக் காலதாமதமாக வரக் கூடாது என்று கூறுகின்ற நிறுவனத் தலைவர், முதலில் அதை அவர் கடைபிடிக்க வேண்டும். அப்பொழுதுதான் பிறரும் அதனைப் பின்பற்றுவர். அதனை விடுத்துத் தான் காலதாமதமாக வந்து கொண்டு ஊழியர்களைக் காலதாமதமாக வரக்கூடாது என்று கண்டிப்பதில் பயன் ஏதும் விளையாது. இதைப் புறநானூற்றுப் பாடல்,
                        நெல்லும் உயிர் அன்றே நீரும் உயிர் அன்றே
                        மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்
            அதனால் யான்உயிர் என்பது அறிகை
            வேல்மிகு தானை வேந்தற்குக் கடனே2
என்று குறிப்பிடுகிறது. அதாவது மன்னனைப் பொறுத்தே மக்களும் அமைவர் என்பதாம். இதையே அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி என்ற தொடரும் வற்புறுத்துகிறது. அதைப்போலவே ஒரு நிறுவனத்தின் இயக்குநர் (அ) தலைவரைப் பொறுத்தே அந்நிறுவனத்தின் வளர்ச்சியும் அமையும். எனவே தலைமை நிர்வாகிக்குரிய சிறந்த நிர்வாகத் திறனை இஃது எடுத்துரைப்பதாகக் கருதலாம்.

பணிப்பகிர்வு (அ) கடமைகள்:
ஒரு நிறுவனத்தில் பணியாற்றுகின்றவர்களுக்கு உரிய பணிகளைப் பிரித்து ஒதுக்கீடு செய்திட வேண்டும். அதுதான் நன்முறையில் வேலை நடைபெறுவதற்குரிய வழியாகும். இதை இக்காலத்தில் பல நிறுவனங்கள் செயல் திட்டம் (Project) என்ற பெயரில் ஒரு குறிப்பிட்டவருக்கோ அல்லது ஒரு குறிப்பிட குழுவினருக்கோ பணிகளை ஒதுக்கிக்  கால வரையறையும் செய்து விடுகின்றனர். இத்தகைய சிறந்த நிர்வாக அணுகுமுறையை,
            ஈன்று புறந்துருதல் என்தலைக் கடனே
            சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே
ஒளிறுவாள் அருஞ்சமம் முறுக்கிக்
களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே3
என்று புறநானூறு குறிப்பிடுகிறது.
பெருஞ்சோற்று நிலை
            பெருஞ்சோற்று நிலை என்பதை, அரசன் படைத்தலைவர்களுக்கு அளிக்கும் பேருணவு என்று தமிழ்-தமிழ் அகரமுதலி குறிப்பிடுகிறது. இதனைத் தொல்காப்பியர் பிண்டமேய பெருஞ்சோற்றுநிலை என்று குறிப்பிட்டுள்ளார்4. 
பிறந்த நாள் விழா, திருமண நாள் விழா போன்ற சிறப்பு நாட்களில் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் விருந்து வைத்து மகிழ்ச்சியாய் இருப்பதை இன்று பெரு வழக்காகக் காண முடிகிறது. அது போலவே சங்க காலத்திலும் ஓர் அரசன் தான் பெற்ற வெற்றியைக் கொண்டாடும் வகையிலும் அவ்வெற்றிக்குப் பாடுபட்ட வீரர்களுக்கு நன்றி பாராட்டும் வகையிலும் பெருஞ்சோறு வழங்கும் விழாவைக் கொண்டாடியுள்ளான்.
இவ்விழாவில் போரில் ஈடுபட்ட வீரர்களை ஒன்று கூட்டி அவர்களுக்குக் கள்ளும் இறைச்சியும் கலந்த உணவைத் தயார் செய்து விருந்துக்கு ஏற்பாடு செய்வான். அவ்விருந்தில் வீரர்களோடு அவ்வரசனும் சரிசமமாக அமர்ந்து உணவு உண்பான். இது வீரர்களுக்கு மகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் அரசன்பால் மேலும் பற்றையும் ஏற்படுத்தும். இஃது ஒரு சிறந்த நிர்வாகப்பண்பு ஆகும்.
            இக்காலத்திலும் ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு மேற்குறிப்பிட்டதைப் போல  தனது பிறந்த நாள் விழா (அ) திருமண நாள் விழா (அ) நிறுவன நாள் விழா (அ) தீபாவளி (அ) பொங்கல் (அ) கிறிஸ்துமஸ் (அ) புத்தாண்டு தினம் போன்ற ஏதாவது ஒரு நாளில் ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்குவது (அ) விருந்துக்கு ஏற்பாடு செய்வது போன்ற நிகழ்வுகளைக் காண முடிகிறது.
            இத்தகைய நிகழ்வுகள் ஊழியர்களுக்கும் உரிமையாளருக்குமிடையே ஒரு நெருக்கமான பிணிப்பை ஏற்படுத்தும் என்பதை நிர்வாக உத்தியாக இன்று குறிப்பிடுகிறார்கள். இத்தகைய நிர்வாக உத்தி புறநானூற்றின் கீழ்க்கண்ட பாடலில் இடம் பெற்றிருப்பதைக் காண முடிகிறது.
                                    மண்திணிந்த நிலனும்
                                    நிலன் ஏந்திய விசும்பும்
                                    விசும்பு தைவரு வளியும்
                                    வளித்தலைஇய தீயும்
                                    தீமுரணிய நீரும் என்றாங்கு
                                    ஐம்பெரும் பூதத்தியற்கை போல
                                    ...................................................
                                    ஈர்ஐம்பதின்மரும் பொருது களத்தொழிய
                                    பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்5.
இலாபப் பகிர்வு    
பெரும்பாலான அரசு நிறுவனங்களும் சரி, தனியார் நிறுவனங்களும் சரி தங்களின் ஊழியர்களுக்குத் தீபாவளி (அ) பொங்கல் பண்டிகையை முன்னிட்டுத் தங்களின் இலாபத்தில் ஒரு சிறு பகுதியை ஊழியர்களுக்குப் ‘போனஸ்’ என்ற பெயரில் வழங்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன. அதாவது வருகின்ற இலாபத்தில் ஊழியர்களுக்கும் பங்கு என்பது, தாங்கள் பணியாற்றுகின்ற நிறுவனம் தங்களது நிறுவனம் என்னும் பிடிப்பை ஏற்படுத்தக் காரணமாக இருக்கிறது. மேலும் இலாபம் அதிகரிக்க அதிகரிக்கத் தங்களின் ‘போனஸ்’ அதிகரிக்கும் என்ற எண்ணத்தில் ஊழியர்கள் சிறப்பாகப் பணியாற்றுவர் என்பது நிர்வாகவியல் அணுகுமுறையாகும்.
            இத்தகையப் போக்குப் புறநானூற்றில் காணப்படுகிறது. மேலே கூறிய பெருஞ்சோற்று நிலையையும் இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். இதன் வளர்ச்சி நிலையாகப் போரில் பகை அரசனிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொன், பொருள் முதலியவற்றை வெற்றி பெற்ற அரசன் தன் வீரர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்பப் (வரிசையறிந்து) பகிர்ந்தளிப்பான் என்ற செய்தியைப் புறநானூற்றில் பல இடங்களில் காண முடிகிறது.  
இதனைத் தொல்காப்பியர் வெட்சித்திணையின் 12வது துறையாகப் பாதீடு என்ற பெயரில் குறிப்பிட்டுள்ளார். பாதீடு என்றால் பங்கிடுகை, பங்கீடு என்று அகராதிகள் பொருள் தருகின்றன. கவர்ந்த பசுக்களை வீரர்கள் மற்றும் படை தொடர்பானவர்களுக்குப் பகிர்ந்தளித்தல் என்பதே இதன் பொருளாகும். இதனைத் தொல்காப்பியர் தந்துநிறை, பாதீடு, கொடை என்ற துறைகளாகக் குறிப்பிட்டுள்ளார்6.
சிலப்பதிகாரம்
            இத்தகைய நிர்வாகவியல் தொடர்புடைய சிந்தனைகள் தமிழின் முதல் காப்பியமான சிலப்பதிகாரத்திலும் காணப்படுகின்றன.  சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு செய்திகள் கீழே விளக்கப்படுகின்றன.
பொற்கைப் பாண்டியன்
பொற்கைப் பாண்டியன் என்பவன் பாண்டிய நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். பாண்டிய மன்னர்களுள் நீதி தவறாது வாழ்ந்தவர்களில் முதன்மையானவனாக இவன் கருதப்படுகின்றான். இவன் தன் நாட்டு மக்களைக் கண்ணும் கருத்துமாகக் காத்து ஆட்சி செய்து வந்தான். தன் குடிமக்கள் அச்சமற்ற வகையிலும் பாதுகாப்பான முறையிலும் வாழ்வதற்கு உரிய முறைமைகளைச் செய்திருந்தான். சில நேரங்களில் அதனைத் தானே நேரடியாக ஆய்வு செய்து நிறைகுறைகளை நிவர்த்தி செய்து வந்தான்.
            அவ்வகையில் ஒரு நாள் இரவு தன் நகரை வலம் வந்து இரவுப் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தான். ஒரு வீட்டில் பேச்சுக் குரல் கேட்டது. இதனால் ஐயமுற்ற அரசன் அவ்வீட்டின் கதவைத் தட்டினான். அப்பேச்சுக் குரல், வெளியூர் சென்றிருந்த ஒருவன் தன் மனைவியுடன் பேசிக்கொண்டிருந்தது என்பதை அறிந்தான். அவ்வீட்டின் கதவை மட்டும் தட்டினால் அவள் மீது கணவன் ஐயம் கொள்ளக் கூடும் என்று அஞ்சிய அவ்வரசன் அவ்வீதியிலிருந்த அனைத்து வீட்டுக் கதவுகளையும் தட்டினான். மறுநாள் அரசனிடம், நேற்று இரவு யாரோ ஒரு திருடன் நம் நகரின் அனைத்து வீட்டுக் கதவுகளையும் தட்டியுள்ளான் என்று அனைவரும் புகார் கூறினர். உடனே அரசன் அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று ஆலோசனை வழங்குமாறு கேட்க, அனைவரும் அவனது கையை வெட்ட வேண்டும் என்று கூறினர். உடனே அரசன் தன் கையை வெட்டிக் கொண்டான். வெட்டுப்பட்ட அக்கையைப் பொன்னால் செய்து அவன் பொருத்திக் கொண்டமையால் பொற்கைப் பாண்டியன் என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறுவர்.
            குடிமக்களைப் பாதுகாத்தல், தவறு செய்கின்றவன் யாராக இருந்தாலும் – நாட்டை ஆளும் அரசனாகவே இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்னும் சிறந்த நிர்வாக முறையை எடுத்துரைப்பதாக இச் செய்தி அமைந்துள்ளது7.

தீர ஆய்தல்
            எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
            மெய்ப்பொருள் காண்பது அறிவு8
என்ற வள்ளுவனின் குறளுக்கேற்ப  ஓர் அரசன் எதனையும் தீர ஆராய்ந்தே முடிவெடுக்க வேண்டும். இம்முறைமையை மீறினால் அரசனே ஆனாலும் அழிந்து விடுவான் என்பதை சிலப்பதிகாரத்தில் வரும் பாண்டிய நெடுஞ்செழியன் வரலாறு காட்டுகிறது. எனவே இவ்விடத்தில் சிலப்பதிகாரம் மன்னனுக்குரிய தீர ஆய்தல் என்ற நிர்வாகத்திறனை வற்புறுத்துகிறது. இத்திறனற்ற அவ்வரசன் அழிவதையும் சிலப்பதிகாரம் படம் பிடித்துக் காட்டுகிறது9.
முடிவுரை
            மேற்கண்ட செய்திகளைத் தொகுத்து நோக்கும்பொழுது, புறநானூறு, சிலப்பதிகாரம் ஆகிய நூல்களில் இக்கால நிர்வாகவியல் அணுகுமுறைகள் இடம் பெற்றுள்ளதைக் காண முடிகிறது. இக்காலத்தில் தனித்துறையாக வளர்ச்சிப் பெற்றுள்ள நிர்வாகவியல் (அ) மேலாண்மையியல் துறைசார்ந்த சொல்லாட்சிகள் வேண்டுமானால் இந்நூல்களில் இடம் பெறாமல் இருக்கலாம். ஆனால், இத்தகு கருத்தோட்டங்கள், சிந்தனையாக்கங்கள் இந்நூல்களில் இருக்கின்றன என்பதை இக்கடுரையின் வழி அறியலாம். இது தொடர்பாக மேலும் ஆய்வு செய்யுமிடத்து விரிவான, ஆழமான நிர்வாகவியல் செய்திகள் கிட்டும் என்று உறுதிபடக் கூறலாம்.

அடிக்குறிப்புகள்



1.    பாண்டியன் அறிவுடைநம்பியை இடித்துரைக்குமாறு பிசிராந்தையார் பாடிய புறநானூற்றுப் பாடல், எண் 184.
2.    மோசிகீரனார் பாடிய புறநானூற்றுப் பாடல், எண் 186.
3.    பொன்முடியார் பாடிய புறநானூற்றுப் பாடல், எண் 312.
4.    தொல்காப்பியப் புறத்திணையியல், நூ.7.
5.    சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகனார் பாடிய புறநானூற்றுப் பாடல், எண் 2.
6.    தொல்காப்பியப் புறத்திணையியல், நூ.3.
7.    சிலப்பதிகாரத்தில் கண்ணகியிடம் தெய்வம் கூறியதாகக் கூறப்பட்டுள்ளது.
8.    திருக்குறள், 423.
9.    காண்க: சிலப்பதிகாரம் வழக்குரை காதை