திங்கள், 5 டிசம்பர், 2022

மன்னர் துரைசிங்கம் அரசு கல்லூரி, சிவகங்கை

மன்னர் துரைசிங்கம் அரசு கல்லூரி, சிவகங்கை.

(ஆதாரம்: கல்லூரி மாணவர் கையேடு 2022-23)

    இக்கல்லூரியின் பவளவிழா நிறைவு ஆண்டில் 4.8.2022 முதல் நான் இக்கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி வருகிறேன். இக்கல்லூரியைப் பற்றிய சில செய்திகளை ஆவணமாக இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

  • இக்கல்லூரி 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 11 ஆம் நாள் அதாவது இந்தியத் திருநாடு சுதந்திரம் அடைவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பாகத் துவங்கப்பட்டது.
  • சிவகங்கைச் சீமையை ஆண்ட மன்னர் துரைசிங்கம் பெயரில் இக்கல்லூரியை அவரது மூத்த மகனார் சண்முகராஜா துவங்கினார்.
  • ராஜா துரைசிங்கம் நினைவுக் கல்லூரி என்று பெயரிடப்பட்டது. 
  • கௌரி விலாஸ் என்ற அரண்மனையின் ஒரு பகுதியில் கல்லூரி வகுப்புகள் நடைபெற்றன.
  • 11.8.1947 அன்று அன்றைய தமிழகக் கல்வி அமைச்சர் தி.க.அவிநாசிலிங்கம் அவர்கள் வகுப்புகளைத் தொடங்கி வைத்தார்.
  • 216.65 ஏக்கர் நிலத்தைக் கல்லூரிக்கென தானமாக வழங்கினார் சண்முகராஜா. (தமிழகத்திலேயே அதிக நிலப்பரப்பு கொண்ட கல்லூரியாக இதுதான் இருக்கும் என்று கருதுகிறேன்)
  • இதுமட்டுமன்றி தான் வைத்திருந்த புத்தகங்களையும் அன்பளிப்பாக வழங்கினார்.
  • விளையாட்டுத் திடல், கிளப்ஹவுஸ் ஆகியவற்றையும் தானமாக வழங்கினார்.
  • 1950 இல் ஜமீன்தார் ஒழிப்புச் சட்டத்தினால் இக்கல்லூரியின் செயல்பாட்டில் தேக்க நிலை ஏற்பட்டது.
  • ஆயினும் நல் உள்ளம் கொண்ட அப்பகுதி மக்களால் இந்நிலை மாற்றப்பட்டு 1951 முதல் கல்லூரி தொடர்ந்து செயல்படத் தொடங்கியது.
  • இண்டர்மீடியட் வகுப்புகளும் பி.ஏ. வகுப்புகளும் நடைபெற்றன.
  • 1952இல் தற்பொழுதைய கருங்கல்லாலான முதன்மைக் கட்டடத்தில் கல்லூரி இயங்கத் தொடங்கியது.
  • 1953 இல் மாணவர் விடுதி வாடகைக் கட்டடத்தில் தொடங்கப்பட்டது.
  • 1955-57 இல் கல் கட்டடத்தின் மேல் தளப்பகுதி பயன்பாட்டுக்கு வந்தது.
  • நடுவண் அரசு வழங்கிய ரூபாய் இரண்டு இலட்சத்தில் கட்டப்பட்ட கல் கட்டத்தின் மேலதளத்தில் மாணவர் விடுதி செயல்படத் தொடங்கியது.
  • 1960 இல் இளமறிவியலில் வேதியியல் பாட வகுப்புத் தொடங்கப்பட்டது.
  • 1962 இல் கல்லூரிக் கலையரங்கம் கட்டப்பட்டது.
  • 1963-64 இல் நூலகப் பகுதியும் இயற்கை அறிவியல் பகுதியும் கட்டி முடிக்கப்பட்டன.
  • 1964 இல் இளமறிவியலில் விங்கியல் பாட வகுப்புத் தொடங்கப்பட்டது.
  • 1966-67 இல் விலங்கியல் துறைக் கட்டடத்தில் மேலும் இரண்டு பெரிய அறைகள் கட்டப்பட்டன.
  • 1967-68 இல் கல்லூரி விடுதி மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டது.
  • இக்கல்லூரியை நிறுவிய மன்னர் சண்முகராஜாவிற்குக் கல்லூரி முன் வாயிலில் 23.10.1969 இல்ஆளுயர சிலை அமைக்கப்பட்டது.
  • 1970 இல்இளங்கலையில் வரலாறு பாட வகுப்புத் தொடங்கப்பட்டது.
  • 1971-72 இல் இளமறிவியலில் இயற்பியல் பாட வகுப்புத் தொடங்கப்பட்டது.
  • பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் நிதியுதவியுடன் 1971-72 இல் மாணவர் பொது வசதிக் கூடமும் (Students Amenities Center) சிற்றுண்டியகமும் அமைக்கப்பட்டன.
  • கல்லூரியின் வெள்ளி விழா 1973 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நான்கு நாட்கள் கொண்டாடப்பட்டது.
  • விழாவின் தொடக்க நாளன்று மன்னர் துரைசிங்கத்திற்கு ஆளுயரச் சிலை கல்லூரி வளாகத்திற்குள் நிறுவப்பட்டது.
  • தனியார் கல்லூரி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்படி (1976) கல்லூரியின் நிர்வாகம் 1.1.1977 முதல் தமிழக அரசின் நேரடிப் பராமரிப்பில் தற்காலிகமாக ஏற்கப்பட்டது.
  • 1.1.1977 முதல் 1.7.1981 வரை தமிழக அரசின் தனி அதிகாரியின் நிர்வாகத்தில் இருந்தது.
  • 1.7.1981 முதல் தமிழக அரசால் ஏற்கப்பட்டு அரசு கல்லூரியாக இயங்கி வருகிறது.
  • அரசு கல்லூரியாக மாறிய பிறகான கல்லூரியின் வளர்ச்சி வரலாறு அடுத்தப் பதிவில் இடம் பெறும்.

ஞாயிறு, 4 டிசம்பர், 2022

அணிந்துரை - ஆசிரியர் மோகன்

 

அணிந்துரை


மரபுக் கவிதைகள் எழுதுவதும் படிப்பதும் அருகி வரும் இக்காலக் கட்டத்தில்  சித்திரக் கவிதைகளைப் பற்றி கூறத்தேவையில்லை. சித்திரக் கவிதைகளைப்  படிப்பதற்கே தனித்திறன் தேவை. எழுதுவதற்கோ மீத்திறன் வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அத்தகைய மீத்திறனைப் பெற்றவராக வெண்பா மோகன் திகழ்கிறார் என்பதன் வரலாற்று சாட்சியமாக இந்நூல் விளங்குகிறது.

‘சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்

நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்

கொடையும் பிறவிக் குணம்’

என்ற தமிழ்ப்பாட்டி ஔவையின் கூற்றுக்கு நிகழ்கால விளக்கமாகத் திகழும் இவர்  மிகக் குறுகிய காலத்திலேயே மரபுக் கவிதை படைக்கத் தொடங்கி சித்திரக் கவி எழுதுகிற அளவிற்குத் தன்னை மேம்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆம், ‘நாளும் ஒரு நல்வெண்பா’ என்ற குறிக்கோளோடு கவிதை படைக்கத் தொடங்கிய இவர்  சுமார் மூன்று ஆண்டுகாலப் பயிற்சியிலேயே இத்தகைய சாதனையைச் சாத்தியமாக்கி உள்ளார்.

இதனை, ‘நாளும் ஒரு நல்வெண்பா என்று தினமும் ஒரு வெண்பாவைத் தத்தித் தவறித் தவழ்ந்து எழுதிப் புலனத்தில் பதிவு செய்து கொண்டிருந்த என்னை எழுதக் கற்றுக் கொடுத்தும் ஊக்கப்படுத்தியும், படிப்பவர்கள் தவறுகளைத் திருத்தி எழுதத் தூண்டிய வேட்கையானது நூல் வெளியிடும் அளவிற்கு வரும் என்று நான் நினைக்கவில்லை. முதலில் எழுதுங்கள் என்று தூண்டிய குடந்தை இலக்கியப் பேரவை அன்பர்களுக்கும்……’ என்று அவர் தம் முதல் நூலில் ‘என்னுரை’யில் தந்துள்ள அகச்சான்றின் மூலமும், 15.1.2017 இல் தான் இவர் குறிப்பிடும் குடந்தை இலக்கியப் பேரவை தொடங்கப்பட்டது என்ற புறச்சான்றின் மூலமும் உறுதிப் படுத்த முடிகிறது.

‘நாளும் ஒரு நல் வெண்பா – கதம்பமாலை என்ற முதல் தொகுதியை ஆகஸ்டு 2021 இல் வெளியிட்ட இவர், ‘நாளும் ஒரு நல் வெண்பா – சிந்தனைச் சிந்தியல் நாற்பொருள் ஆயிரம்’ என்ற இரண்டாம் தொகுதியை ஜனவரி 2022 இல் வெளியிட்டுள்ளார். தற்பொழுது இந்நூல் மூன்றாம் தொகுதியாக வெளிவருகிறது. சுமார் இரண்டு ஆண்டு கால இடைவெளியில் மூன்று மரபுக் கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார் என்பதிலிருந்தே இவரின் தீராத் தமிழ்த் தாகத்தையும் கவிதை மோகத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது. ‘முயற்சி திருவினையாகி’ இருக்கிறது. இது இன்றைய மாணவச் செல்வங்களுக்கும் – ஏன் தமிழாசிரியர்களுக்கும் கூட முயன்றால் முடியாதது ஏதுமில்லை என்ற செய்தியை குறிப்பால் உணர்த்துகிறது.

   

‘வண்ணந்தானே நாலைந்தென்ப’ என்ற தொல்காப்பியரின் சிந்தனைகளைச் சித்திரக்கவிக்கான வித்தாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தண்டி ஆசிரியர் 12 வகை சித்திரக்கவிகளைக் குறிப்பிட்டுள்ளார். அதன் உரையாசிரியர்கள் மேலும் 8 வகை சித்திரக் கவிதைகளைக் குறிப்பிடுகின்றனர்.

சித்திரக் கவிதைகளை ‘ஓவியக் கவிதைகள்’ என்று பேராசிரியர் ச.திருஞானசம்பந்தம் அவர்கள் குறிப்பிடுகிறார். பாடுபவர் தம் மொழிப் புலமையையும் மொழியின் செழுமையையும் பிறருக்கு வெளிப்படுத்தும் பாங்கில் சித்திரக் கவிதைகளைப் படைக்கின்றனர். தமிழ் மொழியைத் தவிர வேறு மொழிகளில் சித்திரக்கவிதைகள் இருப்பதாகத் தெரியவில்லை.

மொழி வளத்தையும் கவிஞர்களின் புலமைத் திறத்தையும் காட்டக்கூடிய இத்தகைய கவிதை வடிவம் ஏறக்குறைய அழிந்த நிலைக்குப் போய்விட்டது என்ற மனக் காயத்திற்கு மருந்து போடும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது. இக் கவிதை வடிவத்தை அழியாமல் பாதுகாப்பதும் வளர்த்தெடுப்பதும் இன்றைய தலைமுறையினர் மனம் வைத்தால் சாத்தியமாகும். 

பாவலர் மோகன் அவர்கள் படைத்துள்ள இந்நூலின்கண் 30க்கும் மேற்பட்ட சித்திரக் கவிதைகளின் வகைப்பாடுகளுள் அடக்கத்தக்கவையாக 72 சித்திரக் கவிதைகள் இடம் பெற்றுள்ளன. இவற்றைப் படிக்கவும் புரிந்து கொள்ளவும் ஏதுவாகப் படிக்கும் முறைமை மற்றும் பொருள் குறிப்புகளையும் நூலாசிரியர் வழங்கி உள்ளார். இது படிப்பவர்களின் தடுமாற்றத்தைத் தடுக்கும் என்று உறுதிபட நம்பலாம்.

நூலாசிரியருக்குக் கவிதை இயல்பாகவே வருவதை அவரது சொல்லாட்சித் திறனும் கவிதைப் பொருளும் கவிதை நடையும் தெற்றெனப் புலப்படுத்துகிறது. சொற்களைத் தேடி கவிஞர் அலைவதைக் கவிதையில் காணமுடியவில்லை. சொற்கள் அவரைத் தேடி வந்து கவிதையில் இடம் பிடித்து விடுகின்றன. இது இவரது கவிதைக்குக் கூடுதல் பலம். கலைமகளின் திருவருள் இவருக்குக் கைகூடப் பெற்றதனால் இது சாத்தியமாயிற்று என்றே நான் கருதுகிறேன். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகப் புதுப்புதுக் கவிதைகளைப் படைப்பதை நோக்கமாகக் கொண்டு இவர் செயல்பட்டு வருகிறார். எனவே இவரைக் கார்மேகப் புலவர் என்பது போல இவரைக் ‘கவிமேகப் புலவர்’ என்று அழைப்பது சாலப் பொருந்தும்.

இந்நூலுக்கு அணிந்துரை வழங்குவதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. ஒன்று, அழிந்து வரும் சித்திரக் கவிதைகளுக்கு இவர் உயிர்ப்பு தந்துள்ளார். மற்றொன்று, தன்னை இந்த அளவிற்கு உயர்த்தியதாக இவர் குறிப்பிடும் குடந்தை இலக்கியப் பேரவையைத் தலைமையேற்றுத் தொடங்கி வைத்தவன் நான். அப்பேரவைத் தொடங்கி வைக்கும் நல்வாய்ப்புக் கிடைக்கப் பெற்ற நான் அப்பேரவைப் பெற்றெடுத்து ஆளாக்கிய இக்கவிப் புதல்வனின் இந்நூலுக்கு அணிந்துரை வழங்குவதிலும் பெருமை கொள்கிறேன். பாவலர் மோகன் அவர்கள் மேலும் பல அரிய கவி மாலைகளைப் புனைந்து அன்னைத் தமிழுக்கு அணிகலன்களாக சூட்ட வேண்டும்; தமிழ் கூரும் நல்லுலகு இவரைப் புரந்தருளி ஊக்கப்படுத்த வேண்டும் என்று மனங்குளிர பாராட்டுகிறேன்.

                                                                                         வளர் அன்புடன்,

கும்பகோணம்,

24.10.2022.                                                                          (முனைவர் க.துரையரசன்)

கவிதைச் சிற்பி

 


கவிதைச் சிற்பி

 

‘சீரூடைச் சிற்பிகள்’ என்ற நூலாசிரியர் அன்பிற்கினிய சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் என் கல்விப் பயணத்தில் நான் சந்தித்த ஓர் அற்புத மனிதர். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது கும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரியில் வாக்குப் பெட்டிகளின் பாதுகாப்புப் பணியில் இவர் இருந்தபொழுது இக்கல்லூரியின் முதல்வராகிய என்னை ஆர்வமுடன் சந்தித்து உரையாடினார். உரையாடலின் ஊடே கல்லூரியின் மீது அவர் கொண்ட ஆழ்ந்த பற்றும் அன்றைய இவரது ஆசிரியர்கள் மீது இவர் காட்டிய பசுமை மாறா அன்பும் எனக்கு இவர் மீதான மதிப்பை மிகுதிப்படுத்தியது.

இவரது இயல்பான பேச்சு, அதிகாரத் தோரணையற்ற அணுகுமுறை, பெற்றோரை நினைந்து உருகும் பாங்கு, தன் பழைய வறிய வாழ்க்கையை மறைக்காமல் இயம்பியது, சமூகத்தின் மீதான அக்கறை, கடமையை மனித நேயத்தோடு செயற்படுத்துவது போன்ற அரிய குணங்களை இவரிடத்து காண முடிந்தது.

இத்தகைய எதிர்பாரா நட்பு பின்னர் ஆழ்நட்பாக மாறிப்போனது. கல்லூரி மாணவர்களை ஊக்கப்படுத்தவும் நெறிப்படுத்தவும் கல்லூரி மீதும் மாணவர்கள் மீதும் அன்பும் அக்கறையும் கொண்டவரான இவரைக் கல்லூரியில் விழா ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தேன். அன்றைய இவரது இயல்பான, உருக்கமான பேச்சு மாணவர்களையும் ஆசிரியர்களையும் வெகுவாகக் கவர்ந்ததை இங்கு நன்றியுடன்  நினைவு கூர்கிறேன். 1983 முதல் 1986 வரை இக்கல்லூரியில் புவியியல் துறையில் இளமறிவியல் பயின்ற இவர், தன் உயிரினும் மேலாக மதிக்கும் – தன் வாழ்க்கையில் கல்விச் செல்வத்தை வாரி வழங்கிய – தான் பயின்ற கல்லூரியில் காவல்துறை உயர் அதிகாரியாக வந்து பணியாற்றியதைப் பெருமையாக நினைத்து புலகாங்கிதம் கொண்டார். அது மட்டுமின்றி கல்லூரி விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு தான் பங்கு கொண்டதை வாழ்க்கையின் பெரும்பேறாக எண்ணி எண்ணி மகிழ்ந்தார். இம்மனப்போக்கு அவரது நன்றியறிதலின் – எளிய குணத்தின் வெளிப்பாடாகவே எண்ண வேண்டியுள்ளது.

‘காவலும் குடும்பமும் இரு கண்களாகப் பாதுகாத்தேன்’ என்ற தன்னிலை விளக்கத்தை இக்கவிதை நூலில் கவிஞர் பதிவு செய்துள்ளார். இரட்டை  மாட்டு வண்டியான  பணியையும் குடும்பத்தையும் தடம் புரளாமல் செலுத்தியுள்ளார் என்பதற்கான சாட்சிய வரிகளாக இவை உள்ளன.

தான் பயின்ற இக்கல்லூரியை ‘ஆளாக்கிய அரசு ஆடவர் கல்லூரி’, ‘அறிவுச் செல்வத்தை அள்ளித்தந்த ஆடவர் காலேஜ்’ என்று ஆலாபனை செய்கிறார். இக்கவிதையில்,  ‘இனிமையான வாழ்க்கைக்கு அறிவூட்டிய போதகர்கள்’ என்று தனது ஆசிரியர்களை நினைவு கூர்கின்ற இவர், ‘திரும்பவும் இவர்களிடம் கல்வி கற்க முடியுமா?’ ஏன்ற ஏக்கத்தையும் வெளிப்படுத்தி உள்ளார். இவ்வரிகள் இக்கால மாணவர்களை ஆற்றுப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தவை ஆகும்.

மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகியவற்றை ‘நாட்டைக் காக்கும் நான்கு சக்கரங்கள்’ என்று குறிப்பிடும் இவர் தன் வறிய பெற்றோர்களை அன்றும் இன்றும் என்றும் மதிக்கும் மதிநுட்பம் கொண்டவராக விளங்குவதை,

‘என் தாய் இருக்கும்போது காக்கி தந்தார்

இறந்த பிறகு கவிதை தந்தார்’

 

‘என் நேச தந்தையே

வாழ்வின் உன் வழியில்

வளர்வேன் உன் நினைவில்’

ஆகிய வரிகளில் கம்பீரமாய் காட்சிப்படுத்தி உள்ளார்.

எல்லாரும் ஓர் குலம், எல்லாரும் ஓரினம் – என்ற பாரதியின் சமூகப் பார்வையை

‘பிறக்கும் உயிரெல்லாம் உலகத்தில் ஒண்ணுதான்’ என்ற வரியின் மூலம்

சமத்துவ சமூகத்தைக் காணும் தன் வேட்கையை வெளிப்படுத்தி உள்ளார்.

தனக்கு உயிர் தந்த தாயை எண்ணிக் கவிதை படைத்த இவர் 

கவிதை உயிர் தந்த தாய் தமிழை

தேன்தமிழ், இன்தமிழ், முத்தமிழ், இன்பத்தமிழ், நற்றமிழ், இலக்கியத் தமிழ், இலக்கணத் தமிழ், கன்னித் தமிழ், இயற்கைத் தமிழ், செந்தமிழ், இசைத்தமிழ், சங்கத்தமிழ் என்றெல்லாம் மனங்குளிர விளித்து மகிழ்கிறார்.

இவர், சீருடை சிற்பிக்குள் முகிழ்த்த ஒரு கவிதைச் சிற்பி. இவர் தம் கவிதையில் கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு கரைபுரண்டோடுகிறது. கவிதையில் இனிமை, எளிமை, நேர்மை, உண்மை கொடிகட்டி பறக்கிறது. கவிதை நெடுக மனிதாபிமானம் இழையோடுகிறது. இதற்குக் கட்டியங்கூறும் வகையில் இவரது பணி அனுபவப் பகிர்வு கவிதைகள் அமைந்துள்ளன.

இவருக்குக் கவிதை நடை மிக இயல்பாய் வாய்த்திருக்கிறது. எந்த இடத்திலும் முயற்சித்தும் வலிந்தும் சொல்லாடல்களைக் கையாளவில்லை என்பதால் இவரை இயல்புக் கவிஞர் என்றே அழைக்கலாம். காவல்துறையின் கடும் பணியிலும் கடுமை காட்டாத இவருக்கு வாய்த்துள்ள இளகிய மனமும் நேரிய பார்வையும் பாராட்டுதற்குரியது. கவிஞர் மேலும் பல நூல்களைத் தமிழ் உலகிற்கு உவந்தளித்திட மனமுவந்து வாழ்த்துகிறேன்.

கும்பகோணம்,                                                                              வளர் அன்புடன்,

10-06-2022.                                                                          (முனைவர் க.துரையரசன்)

மன்னர் துரைசிங்கம் அரசு கல்லூரியில் ஆசிரியர் தின விழா