வியாழன், 30 செப்டம்பர், 2010

எனக்குப் பிடித்த கவிதை


பெண்மை



அன்பும் ஆர்வமும் அடக்கமும் சேர்ந்தும்
உண்மைத் தன்மையும் உறுதியும் மிகுந்தும்
தன்னல மறுப்பும் சகிப்புத் தன்மையும்
இயல்பாய் அமைந்தும் இன்பச் சொரூபமாய்த்
தாயாய் நின்று தரணியைத் தாங்கும்
தாரமாய் வந்து தளர்வைப் போக்கும்
உடன் பிறப்பாகி உறுதுணை புரியும்
மகளாய்ப் பிறந்து சேவையில் மகிழும்
அயலார் தமக்கும் அன்பே செய்யும்
நாணம் கெடாமல் நட்பு கொண்டாடும்
சிநேகம் இன்றியும் சிரித்துப் பேசும்
காமம் இல்லாமலும் கொஞ்சிக் களிக்கும்
பெருமை மிக்கது பெண்ணியல் பாகும்
அந்தப் பெருமையை அறியா ஆடவர்
அன்புப் பேச்சை ஆசையென்று அயிர்த்து
சிரித்து விட்டதில் சிற்றின்பம் எண்ணி
களிப்பைக் காமமாய்க் கற்பனை செய்தே
அவமதிப் படைவதும் அடிக்கடி உண்டு
இப்படிப் பலபேர் ஏமாந்து போவதால்
பெண்மனம் என்பதைப் பிழைபடப் பேசிப்
புதிர் என்று சொல்வது புரியாத் தனமே
வஞ்சனை என்பர் வஞ்சகம் உடையோர்

- நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

காவிரி-காவேரி


தமிழ் நாட்டின் புண்ணிய நதியாகக் காவிரி ஆறு தொன்றுதொட்டு கருதப்பட்டு வருகிறது. இந்த ஆறு காவேரி என்றும் காவிரி என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. இப்பெயர்களுள் எது சரியானது என்பது குறித்து மயிலை சீனி.வேங்கடசாமி ஆய்வு செய்துள்ளார்.


முற்கால நூல்களில்; காவிரி என்ற பெயர்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. திருவாஞ்சிய புராணம், மணிமேகலை, அண்ணாமலையார் சதகம், குலோத்துங்கசோழன் உலா முதலிய நூல்களும் ஔவையார், தொண்டரடிப் பொடியாழ்வார் ஆகியோரும் காவிரி என்ற சொல்லைக் கையாள்கின்றனர் என்று கா.ம.வேங்கடராமையா எடுத்துக்காட்டுகிறார். ஆனால் சிலப்பதிகாரத்தில் மட்டும் காவேரி, காவிரி என்ற இரண்டு சொற்களும் இடம் பெற்றுள்ளன. இந்த ஆறு சிலப்பதிகாரத்தின் இயற்றமிழ்ப் பகுதியில் காவிரி என்றும், இசைத்தமிழ்ப் பகுதியில் கானல் வரியில் மட்டும் காவேரி என்றும் கூறப்பட்டுள்ளது.

கலைக்களஞ்சியத்தில் காவிரி, காவேரி என்ற இரண்டு சொற்களுக்கும் விளக்கம் தரப்பட்டுள்ளது. காகத்தால் கவிழ்க்கப்பட்டு விரிந்து பெருகிய ஆறு என்பதால் காகவிரி என்று வழங்கிய பெயரே பின்னர் காவிரி என்று மருவியது என்றும், இந்திரனது நந்தவனம் (கா) செழிக்க விரிந்தமையால் காவிரி என்று பெயர் பெற்றது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், கவேரன் மகளாக வாழ்ந்தமையால் காவேரி என்று அழைக்கப்பட்டாள். இவள் அகத்தியருக்கு மணம் முடிக்கப்பட்டாள்.

அகத்தியர் இவளது தெய்வத்தன்மையை உணர்ந்து கமண்டலத்தில் நீராக மாற்றினார். பிரமன் தவத்திற்கு இறங்கி திருமால் நெல்லி மரமாக தோன்றினார். அகத்தியரின் கமண்டலம் சூறைக் காற்றால் கவிழ்ந்து கமண்டல நீரான காவேரி ஓடியது. அது காவேரி ஆறாக மாறியது என்று கலைக்களஞ்சியம் கூறுகிறது. ஆனால் காவிரி, காவேரி என்ற இரண்டு பெயர்களில் எது சரி என்பது பற்றிய விளக்கம் கலைக்களஞ்சியத்தில் இல்லை.

இவ்வாறு இரண்டு வகையாக இந்த ஆறு இளங்கோ அடிகளால் சுட்டப்பட்டாலும் காவிரி என்பதுதான் சரியான சொல் வழக்கு. காவேரி என்பது பேச்சு வழக்கு என்று மயிலை சீனி.வேங்கடசாமி குறிப்பிடுகிறார். பேச்சு வழக்கு சொல்லான காவேரி என்ற சொல்லை இளங்கோ அடிகள் பயன்படுத்த வேண்டியதன் இன்றியமையாமையை அவர், "வரிப்பாட்டுகளின் கடைசி சொற்கள் மூவைச் சீராக முடிகின்றன. அதனால் காவிரி என்னும் ஈரசை சொல்லைக் காவேரி என்று மூவசைச் சீராக அமைத்துள்ளார். அவ்விடத்தில் காவிரி என்னுஞ் சொல்லை யமைத்தால் ஈரசைச் சீராக்கித் தலை தட்டுப்பட்டுச் செய்யுளோசை குறையுமாகையால் இவ்வாறு மாற்றியமைத்தார்" என்று காரணம் காட்டி விளக்குகிறார்.

எனவே காவேரி என்ற சொல் பேச்சு வழக்கு என்பதும், காவிரி என்ற சொல் இலக்கிய வழக்கு என்பதும் மயிலை சீனி. வேங்கடசாமியின் ஆய்வு மூலம் புலப்படுகின்றது.

திங்கள், 8 பிப்ரவரி, 2010

நவக்கிரக நந்தவனம்



தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்துக்கு அருகில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் பட்டீஸ்வரம் என்னும் தளம் உள்ளது. இத்தளத்தில் நவக்கிரக நந்தவனம் உள்ளது.
இராகு - மந்தாமரை
சனி - கருங்குவளை, நீலோற்பவம்
கேது - செவ்வல்லி
செவ்வாய் - செவ்வரளி
சூரியன் - செந்தாமரை
குரு - முல்லை
சந்திரன் - வெள்ளை அரளி
சுக்கிரன் - வெண்டாமரை
புதன் - வெண்காந்தள்
நவகிரகங்களை அந்தந்த மலர்களால் வழிபட்டால் இறை அருள் கைகூடும் என்பது நம்பிக்கை.

வியாழன், 14 ஜனவரி, 2010

பொங்கல் வாழ்த்துகள்

பொங்கல் பொங்கட்டும்
புதுமைகள் நிறையட்டும்

பாவங்கள் விலகட்டும்
புண்ணியங்கள் பெருகட்டும்

தீமைகள் ஒழியட்டும்
நன்மைகள் வளரட்டும்

நல்வாழ்த்துகளுடன்

பேராசிரியர் க.துரையரசன்
கும்பகோணம்

திங்கள், 30 நவம்பர், 2009

திருமாவுண்ணி - கண்ணகி

சங்க இலக்கியத்தில் திருமாவுண்ணி என்னும் பத்தினிப் பெண் கூறப்படுகிறாள். சிலப்பதிகாரத்தில் கண்ணகி கூறப்படுகிறாள். இருவருமே கணவனை இழந்தவர்கள். ஒரு முலையை இழந்தவர்கள். இதன் காரணமாக இருவரும் ஒருவரே என்று சொல்லப்படுவதைக் காண முடிகிறது. ஆனால் இருவரும் வேறானவர்கள். இதற்கான காரணத்தை மயிலைசீனி.வேங்கடசாமி நன்கு ஆராய்ந்து விளக்கிக் கூறுகிறார்.
இருவரும் ஒருவரே என்பதற்கான காரணங்கள்:


1 இருவருமே கணவனை இழந்தவர்கள்
2 இருவருமே ஒரு முலையை இழந்தவர்கள்
3 வேங்கை மர நிழலில் அமர்ந்து இருந்தவர்கள்


இருவரும் வேறானவர்கள் என்பதற்கான காரணங்கள்: தினைப்புனம் காவல் காக்கும் பொருட்டு வேங்கை மர நிழலில் தங்கினாள்.


திருமாவுண்ணி:

இவள் வேங்கை மர நிழலில் உயிர் விடவில்லை.

இவள் தங்கியிருந்த வேங்கை மரத்தில் பரண் கட்டப்பட்டிருந்தது.
இவள் தன் கொங்கையை அறுத்தது வேங்கை மரத்துக்கு அருகில்.


கண்ணகி:

இவள் வழிநடைப் பயணக் களைப்பு நீங்கும் பொருட்டு வேங்கை மர நிழலில் தங்கினாள்.

இவள் வேங்கை மரத்து நிழலில் உயிர் விட்டாள்.


இவள் தங்கியிருந்த வேங்கை மரத்தில் பரண் கட்டப்படவில்லை.
இவள் கொங்கை அறுத்து வீசியது மதுரை மாநகரத்தில்.

எனவே திருமாவுண்ணியும் கண்ணகியும் வெவ்வேறானவர்கள்.

ஞாயிறு, 29 நவம்பர், 2009

நிகண்டனார் கலைக்கோட்டுத் தண்டனார்

நிகண்டனார் கலைக்கோட்டுத் தண்டனார் - இவர் சங்கப் புலவர். நற்றிணையில் 382 ஆம் செய்யுள் இவர் பாடியது. நிகண்டு நூல் ஒன்றை எழுதியமையால் நிகண்டனார் என்ற பெயர் பெற்றார் என்றும் மான் கொம்பை நிமிர்த்திக் கைக்கோலாகக் (கைத்தடியாக) கொண்டமையால் கலைக்கோட்டுத் தண்டனார் என்ற பெயர் பெற்றார் என்றும் பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் குறிப்பிடுகிறார்.

இதனை மயிலை சீனி. வேங்கடசாமி பின்வருமாறு மறுத்துரைக்கிறார்:

நிகண்டு நூல் செய்தமையால் நிகண்டனார் என்று பெயர் பெற்றிருக்க மாட்டார். மாறாக நிகண்டாசிரியர் என்றே அழைக்கப் பெற்றிருப்பார். நிகண்டன் என்றால் சமண சமயத்தார் என்று பொருள். எனவே இவர் சமணசமயத்தவராக இருக்கலாம். எனவே இவர் நிகண்டனார் என்று அழைக்கப்பட்டிருக்கலாம்.

மான் கொம்பை கைக்கோலாகக் கொண்டமையால் கலைக்கோட்டுத் தண்டனார் என்று அழைக்கப்பட்டார் என்பதும் சரியானது இல்லை. சமதண்டம் என்பது ஓர் ஊரின் பெயர். அதுபோல கலைக்கோட்டுத்தண்டம் என்பதும் ஓர் ஊரின் பெயராக இருக்கலாம். அவ்வூரைச் சேர்ந்தவரான இப்புலவர் அவ் ஊரின் பெயரால் கலைக்கோட்டுத் தண்டனார் என்று அழைக்கப்பட்டிருக்கலாம்.

எனவே, சமண சமயத்தைச் சேர்ந்த நிகண்ட வாதியான இவர் நிகண்டனார் கலைக்கோட்டுத் தண்டனார் என்று அழைக்கபட்டார் என்பது மயிலாரின் ஆய்வு முடிபு ஆகும்.

வியாழன், 26 நவம்பர், 2009


காக்க... காக்க... சுற்றுச் சூழல் காக்க


உலகம் முழுவதும் சுற்றுச் சூழல் சீர்கேடு நிலவி வருவதை அனைவரும் அறிவோம். ஆயினும் சுற்றுச் சூழல் சீர்கேட்டைக் களைவதைப் பற்றியோ அல்லது அது பற்றிய விழிப்புணர்வோ நமக்கு இருப்பதில்லை. இந்த ஆதங்கத்தின் விளைவாக எழுந்தது இக்கட்டுரை ஆகும். இக்கட்டுரையைப் படிப்பவர்களில் எவரேனும் ஒருவருக்கேனும் சுற்றுச் சூழல் பற்றிய தாக்கம் சிறிதளவேனும் ஏற்பட்டாலும் கூட நான் பெரிதும் மகிழ்வேன்.


உயிரனங்களின் சூழலுக்கேற்ற செயல்பாடுகள் பற்றிய சிந்தனைகளைச் சுற்றுப்புறச் சூழல் சிந்தனை என்று கூறலாம். சூழலியல் என்ற சொல் அய்காஸ் (eicos) என்ற கிரேக்கச் சொல்லை மூலமாகக் கொண்டு தோன்றியது ஆகும்.
மனிதன் தன் உறைவிடத்தையும் உறைவிடத்தின் பண்புகளையும் சிறப்புக் கூறுகளையும் அறிந்து தெரிந்து கொள்ளும் சிந்தனை முறையே சுற்றுப்புறச் சூழல் சிந்தனை என்று ஏர்னெஸ்ட் ஹெகல் குறிப்பிடுகிறார்.


எனவே, சுற்றுச் சூழல் என்பது உயிரினத் தொகுதிகள் வசிக்கும் இடங்களைச் சுற்றி நிலவுகின்ற தன்மை அல்லது சூழ்நிலை. அதாவது நம்மைச் சுற்றி உள்ள இடங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்ள முயற்சிக்கின்ற போக்கு இன்று சமூகத்தில் பெரிதும் வற்புறுத்தப்படுகின்றது. இதைத்தான் சுற்றுச்சூழல் காப்பு அல்லது சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்றெல்லாம் கூறுகின்றோம்.
சூழலியல் அறிஞர்கள் சுற்றுப்புறச் சூழலைச் சமூகவியல் நோக்கில் சூழலியல், மானிடவியல் சூழலியல், பண்பாட்டுச் சூழலியல் என்று பகுத்துக் காட்டுகின்றனர். இம்மூன்றும் சமூக உருவாக்கத்தை, வாழ்க்கை முறைகளை மையமாகக் கொண்ட நிலையில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையனவாகும்.


சமூகவியல் நோக்கில் சூழலியல் ஒவ்வொரு சமூகத்திலும் சாதி, சமயம், கல்வி, தொழில் போன்ற நிறுவனங்கள் உண்டு. இந்தச் சமூக நிறுவனங்கள் தமக்குள் ஒன்றுக்கொன்று இணக்கமான உறவைப் பெற வேண்டுமெனில், அவை இயற்கையுடன் இணக்கமான தொடர்பைக் கொண்டிருக்க வேண்டும். சமூக ஆரோக்கியத்தைப் பற்றிய சிந்தனை சுற்றுப்புறச் சூழலாக மாறியது என்று சமூகவியலார் விளக்குவர்.


மானுடவியல் நோக்கில் சூழலியல் மானுடச் சமூகத்திற்கும், அவர்களின் சுற்றுப்புறச் சூழலுக்கும் இடையே உள்ள உறவை ஆராய்ந்து விளக்குவது மானுடச் சுற்றுப்புறச் சூழலியல் எனப்படும்.


பண்பாட்டுச் சூழலியல் ஒரு குறிப்பிட்ட சூழலில், சில குறிப்பிடத்தக்க பண்பாட்டுக் கூறுகளைத் தழுவிக் கொள்ளுதல் அல்லது அச்சூழலுக்கு ஏற்றவாறு தம் வாழ்வியல் முறைகளைப் பொருத்தமுற மாற்றியமைத்துக் கொள்ளுதலை விளக்குவது பண்பாட்டுச் சூழலியல் என்று அழைக்கப்படுகிறது.


சூழலியல் அறிஞர்கள் பல கோணங்களில் சூழ்நிலைக் காரணிகளை அணுகுவதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. எனவே, ஒல்லும் வகையெல்லாம் சுற்றுச் சூழல் பற்றிய அறிவை நாம் பெற முயல வேண்டும் - சூழலியல் பற்றிய அறிவைப் பொதுமக்களுக்கு அறிஞர்களும் கற்பிக்க வேண்டும். அப்பொழுதுதான் பாமர மக்களுக்கும்கூட சுற்றுச் சூழல் பற்றிய புரிதல் ஏற்படும்.


மனிதன் இயற்கையைச் சார்ந்தே வாழ்கின்றான். இயற்கையைப் பயன்படுத்திக் கொள்ளாமல் அவனால் வாழவே முடியாது. சங்க காலத்திலும் சரி - இன்றும் சரி மனிதர்கள் இயற்கையைப் பயன்படுத்தியே வாழ்ந்து வந்தனர; வாழ்ந்து வருகின்றனர்.
சங்க கால மக்கள் இயற்கை வளங்களை, ஆற்றல்களை அழிக்கவேயில்லை என்று கூற முடியாது. ஓரளவு அழித்தார்கள். ஆனால் அழித்த ஆற்றலைப் புதுப்பித்தலையும் செய்து கொண்டு இருந்தனர். இன்று ஆற்றலைப் புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் வளங்கள் (Renewable Energy Resources) என்றும் புதுப்பிக்க இயலாத ஆற்றல் வளங்கள் (Non Renewable Energy Resources) என்றும் பிரிக்கின்றனர். சங்க கால மக்கள் புதுப்பிக்க கூடிய ஆற்றலையே அதிகம் பயன்படுத்தினர். மரங்களை அழித்து வீடுகளைக் கட்டிக் கொண்ட மக்கள் வெட்டிய மரங்களையும் வளர்க்கத் தவறவில்லை. வீட்டைச் சுற்றி நொச்சி மரம் வளர்த்தனர் சங்க மக்கள். ஏதோ ஒரு மரம் வளர்க்க வேண்டும் என்று எண்ணாமல் மருத்துவப் பண்புகள் நிறைந்த, இதயத்திற்கும், சுவாச உறுப்புகளுக்கும் நலம் தரக் கூடிய தாவரங்களை வளர்த்தனர்.
சங்க காலத்தில் வாழ்ந்த மக்களைக் காட்டிலும் இன்றைய நவீன காலத்தில் வாழும் மக்களுக்கு மிகுந்த சுற்றுச் சூழல் அறிவு இருக்கும் என்று கூறலாம். ஆனால், சங்க கால மக்கள் சுற்றுச் சூழலிடத்துக் கொண்டிருந்த பய பக்தி இன்றைய மக்களிடம் இல்லை என்றே கூற வேண்டும்.


ஏனெனில், இன்றைய மக்கள் வீடுகள் கட்டுவதற்குக் காடுகளையும், விளை நிலங்களையும், ஏரிகளையும் அழிக்கின்றனர். அவற்றில் வீடுகளைக் கட்டிக் கொள்கின்றனர். அதனால் விளைகின்ற சுற்றுச் சூழல் கேடுகள் சொல்லி மாளாது.
சமீபத்தில் செய்தித் தாள்களில் வந்திருந்த செய்திகளை அனைவரும் கண்டிருப்பீர்கள். அரசு அலுவலராக இருந்த சிலர் புறம்போக்கு நிலங்களையும் ஏரி, குளங்களையும் பட்டா போட்டு விற்று விட்டனர். இது போன்று தெரிந்தே செய்கின்ற சுற்றுச் சூழல் கேடுகள் இன்று ஏராளம் ... ஏராளம்.


உங்களுக்கு ஆச்சிரியமாக இருக்கிறதா? புறம்போக்கு நிலங்களையும், ஏரி குளங்களையும் பட்டா போட்டது எப்படி சுற்றுச் சூழல் கேடாகும் என்று. சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக சென்னை மாநகரமே மிதந்ததே! இதற்கு என்ன காரணம்?


மழைநீர் செல்லக் கூடிய வடிகால் வசதிகளை அரசு செய்து கொடுத்திருந்தும் அவற்றைச் சரிவர பயன்படுத்திக் கொள்ளாமையே ஆகும்.


மழைநீர் சென்று அடையக் கூடிய ஏரி மற்றும் குளங்களை ஆக்கிரமிப்பு செய்து கொண்டது - மழைநீர் செல்லக் கூடிய பாதைகளை அடைத்து கடைகள், வீடுகள் கட்டிக் கொண்டது - மழைநீர் செல்லக் கூடிய பாதைகளில் வீணான திடப் பொருள்களைப் போட்டமையால் நீரோட்டம் தடைப்பட்டது - இவை போன்ற பலவித காரணங்களால் தான் சென்னை நகரம் மிதக்கக் காரணமாயிற்று.


நான் ஏன் இதை எடுத்துக்காட்டினேன் என்றால் ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்பு என்பது நாம் கண்கூடாகக் காணும் ஒன்று. இதன் விளைவாக சென்னை நகரம் மிதந்ததும் நாம் கண் கூடாகக் கண்ட ஒன்று. இதுபோல் இன்னும் எவ்வளவோ எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்.


எனவே, சுற்றுச் சூழலைச் சரிவரப் பாதுகாக்கவில்லை என்றால் மனித சமுதாயமே மிகுந்த துன்பத்திற்கு ஆளாகும் நிலை மட்டுமின்றி மனித சமுதாயமே அழிந்து போகின்ற அபாயம்கூட ஏற்படும். தமிழகத்தில் ஒரு பழமொழி உண்டு.


வேலியில ஓடுற ஓணாண
மேல தூக்கிப் போட்டுக்கிட்டு
குத்துதே குடையுதே


என்பது அப்பழமொழி.


சுற்றுச் சூழல் கவனம் நம் அனைவருக்கும் உடனடியாக ஏற்பட வேண்டும். இல்லை என்றால் மேற்சுட்டிய பழமொழி உண்மையாகி விடும்.

புதன், 25 நவம்பர், 2009

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுகள்

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுகள் :

திருமாவுண்ணியும் கண்ணகியும் ஒன்றா?

கண்ணகி மதுரையை எரித்தாளா ?

காவிரியா? காவேரியா?

கோழி பாம்பைப் பார்த்திருக்கிறீர்களா?

இவை தொடர்பாக விரைவில் எழுதுவேன்.

திங்கள், 23 நவம்பர், 2009

இணையமும் இனிய தமிழும்


இனிய தமிழ் ஆர்வலர்களே

வணக்கம். எங்கள் பதிப்பகத்தின் முதல் பதிப்பாக இணையமும் இனிய தமிழும் என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது. இணையத்தில் கிடைக்கும் தமிழ் தகவல்கள் பற்றி விரிவாக எடுத்துரைக்கும் வகையில் இந்நூல் வெளியிடப் பட்டுள்ளது. நூலின் விவரம் வருமாறு:

இணையம்: அறிமுகமும் வரலாறும்
இணையவழி தமிழ் கற்றலும் கற்பித்தலும்
மின் நூலகம்
ஒருங்குறியீட்டு முறை
இணைய இதழ்கள்
வலைப்பூக்கள்
தமிழகப் பல்கலைக்கழகங்கள்
கல்விசார் இணைய தளங்கள்
வேலை வாய்ப்பு இணைய தளங்கள்

ஆகிய தலைப்புகளில் செய்திகள் விவரிக்கப்பட்டுள்ளன.

விலை; ரூபாய் 60

வெளியீடு: இசைப் பதிப்பகம்
சபரி நகர், டாக்டர் மூர்த்தி சாலை,
கும்பகோணம் - 612 001, தமிழ்நாடு.

ISBN: 978-81-908398-0-8௦

பக்கங்கள்: 128
ஆண்டு: சூன் 2009

வியாழன், 12 நவம்பர், 2009

இனிய தமிழ் ஆர்வலர்களுக்கு,

இனிய தமிழ் ஆர்வலர்களுக்கு,

வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களை இணையத்தில் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இணையமும் இனிய தமிழும் என்னும் தலைப்பில் நூல் ஒன்றை எழுதி உள்ளேன். இணையம் பற்றி அனைவரும் எளிதில் அறிந்து கொள்ளும் வகையிலும் இணையத்தில் தமிழ் அத்தகவல்கள் கிடைக்கும் இடங்கள் பற்றியும் மிகத் தெளிவாக எடுத்துரைக்கப் பட்டுள்ளது.

கிடைக்கும் இடம்: ௨௪ இசை இல்லம், சபரி நகர், டாக்டர் மூர்த்தி ரோடு, கும்பகோணம்612001. தமிழ்நாடு .