ஞாயிறு, 22 பிப்ரவரி, 2009

குடந்தைக் கல்லூரி

முனைவர் மு.இளங்கோவன் - Muelangovan மதியம் வெள்ளி, பிப்ரவரி 20, 2009 தமிழ்மணம் பரிந்துரை : 0/0

Pathivu Toolbar ©2009thamizmanam.com
குடந்தைக் கல்லூரியில் தமிழ் இணையம், மின் நூல்கள் பற்றிய என் உரை...

குடந்தை(கும்பகோணம்)க் காவிரிக்கரையை ஒட்டியப் பேருந்து நிறுத்தத்தில்(பாலக்கரை) நான் பேருந்திலிருந்து இறங்கும்பொழுது மணி பகல் ஒன்றிருக்கும்.பேராசிரியர் க.துரையரசன் அவர்கள் என்னை அழைத்துச்செல்ல மகிழ்வுந்து ஏற்பாடு செய்திருந்தார்.ஐந்து மணித் துளிகளில் கல்லூரி அண்ணா கலையரங்கை அடைந்தேன்.


தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பாசுகர் அவர்கள் கணிப்பொறி,இணையம் பற்றிய பல்வேறு செய்திகளை எடுத்துரைத்தார்.பசி நேரத்திலும் மாணவர்கள் அதனை ஆர்வமுடம் கேட்டுக்கொண்டிருந்தனர்.பேச்சின் நிறைவில் சில வினாக்களைப் பார்வையாளர்கள் எழுப்பினர்.அதில் ஒரு வினா தமிழ் 99 விசைப் பலகையைப் பயன்படுத்துவது எவ்வாறு?. நேரம் கருதி பிறகு விளக்கப்படும் என்ற அறிவிப்புடன் பகலுணவுக்கு 1.45 மணிக்குப் புறப்பட்டோம்.கருத்தரங்க ஏற்பாட்டாளர்கள் கல்லூரியிலேயே உணவு ஆயத்தம் செய்து வழங்கினர்.
உணவு இடைவேளைக்குப் பிறகு 2.30 மணிக்கு அனைவரும் அரங்கிற்கு வந்தனர்.நானும் துரை மணிகண்டன் உள்ளிட்ட நண்பர்கள் சிலரும் 2.15 மணிக்கே அரங்கிற்கு வந்து கணிப்பொறி,இணைய இணைப்புகளைச் சரிசெய்து தேவையான மென்பொருள்கள், இணையத்தளங்களை இறக்கி,ஆயத்தமாக வைத்துக்கொண்டோம்.


நான் பேசவேண்டிய தலைப்பு மின் நூல்கள் என்றாலும் 15 மணித்துளிகளுக்குத் தமிழில் தட்டச்சுச்செய்யும் முறைகளை விளக்கி தமிழ் 99 விசைப்பலகையின் சிறப்பு,அதனை எவ்வாறு இயக்குவது என்ற விவரங்களை அவைக்குச் சொன்னதும் அவையினர் எளிமையாக என் உரையை உள்வாங்கி மகிழ்ந்தனர்.இவ்வாறு தமிழில் தட்டச்சுச்செய்தால் மிக எளிதாக மின்னஞ்சல் அனுப்பவும் உடன் உரையாடவும் வலைப்பூ உருவாக்கவும் முடியும் என்று சொன்னேன்.


மாதிரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும் உடன் உரையாடவும் அவர்களுக்குப் பயிற்சியளித்தேன். அப்பொழுது முனைவர் கண்ணன்(கொரியா)யுவராசு(சென்னை) குணசீலன்(திருச்செங்கோடு), திருவாளர் அறிவழகன்(சென்னை) முகுந்து(பெங்களூர்) உள்ளிட்ட அன்பர்கள் இணைப்பில் இருந்தனர்.அனைவரும் இணைப்பில் வந்து உரையாடினர்.மாணவர்கள் இது கண்டு மகிழ்ந்தனர்.இப்பொழுது தமிழ்99 விசைப்பலகை அறிமுகம் ஆனது.99 விசைப்பலகையை தமிழா.காம் சென்று பதிவிறக்கம் செய்யும் முறையை எடுத்துரைத்தேன். என்.ச்.எம். நிறவனத்தின் விசைப்பலகையின் சிறப்புப் பற்றியும் எடுத்துரைத்தேன்.அப்பொழுது யுனிகோடு என்ற ஒருங்குகுறி பற்றியும் எடுதுரைத்தேன்.முகுந்து அவர்களின் பங்களிப்பு,கோபி அவர்களின் மென்பொருள்கள் பற்றியும் அறிமுகம் செய்தேன்.


அடுத்து எனக்கு வழங்கப்பட்ட மின்நூல்கள் என்ற தலைப்புக்குச் சென்றேன்.
தமிழில் நூல்கள் வாய்மொழியாகவும் கல்வெட்டு,செப்பேடு,பனை ஓலைகள், நுண்படச் சுருள்கள் வழியாகவும் வளர்ந்து இன்று மின்நூல்கள் நிலைக்கு வந்துள்ளதை நினைவூட்டினேன்.

திரு.கல்யாணசுந்தரம் அவர்களின் மதுரைத்திட்டம் பக்கத்திற்குச் சென்று பல நூல்களைத் தரவிறக்கிப் பார்த்தோம்.அடுத்து தமிழ் மரபு அறக்கட்டளையின் கண்ணன்,சுபா முயற்சி பற்றி விளக்கினேன்.அத்தளத்தையும் பார்வையிட்டு அதில் உள்ள ஓலைச்சுவடிகள், படங்கள் பாதுகாப்பு பற்றி அறிமுகம் செய்தேன்.அடுத்து விருபா தளத்தின் சிறப்புப் பற்றி காட்சி விளக்கத்துடன் உரை இருந்தது.இணையப் பல்கலைக்கழகத்தின் தளம்,காந்தளகம் தளம், சென்னை நூலகம் தளம் பற்றி அறிமுகம் செய்தேன்.


புதுச்சேரி பிரஞ்சு நிறுவன நூலகம்,சிங்கப்பூர் தேசிய நூலகம் பற்றியும் அப்பக்கங்களுக்குச் சென்று விளக்கினேன்.மின் இதழ்கள்,பொங்குதமிழ் எழுத்துருமாற்றி பற்றியும் சுரதா தளம் பற்றியும் காட்சி விளக்கத்துடன் விளக்கினேன்.


விக்கிபீடியா களஞ்சியம் பகுதிக்குச் சென்று தமிழ்க்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளளதை எடுத்துரைத்தேன்.என் கட்டுரைகள் சிலவற்றையும் அவைக்கு அறிமுகப்படுத்தி இதுபோன்ற தேவையான கட்டுரைகளை அனைவரும் வலைப்பூக்கள் உருவாக்கி வெளியிடும்படி வேண்டுகோள் வைத்தேன்.


வலைப்பூ உருவாக்கத்தின் சிறப்புப்பற்றி சிறிய அளவில் அறிமுகம் செய்துவிட்டு இவ்வலைப்பூ உருவாக்கித் தமிழ்மணத்தில் இணைத்தால் உலக அளவில் நம் படைப்புகளை அறிமுகம் செய்ய முடியும் எனக் காட்சி விளக்கத்துடன் எடுத்துரைத்தேன்.நண்பர் காசி ஆறுமுகம் அவர்களின் பணியையும் அமெரிக்காவில் உள்ள திருவாளர்கள் நா.கணேசன், சங்கராபண்டியனார்,சௌந்தர்,தமிழ் சசி உள்ளிட்ட தமிழ்மண நிருவாகிகளின் பணிகளையும் எடுத்துரைத்தேன்.சற்றொப்ப ஒன்றே முக்கால் மணிநேரம் என் உரை அமைந்தது.


பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட திருச்சி பிசப் ஈபர் கல்லூரி. தேசியக்கல்லூரி, வளனார் கல்லூரி புதுக்கோட்டை மகளிர் கல்லூரி,தஞ்சாவூர் கரந்தைக் கல்லூரி, திருப்பனந்தாள் கல்லூரி,குடந்தை மகளிர் கல்லூரி,ஆடவர் கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள்,மாணவர்கள்,ஆய்வாளர்கள் முந்நூறுக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்.


பேராசிரியர்கள் சி.மனோகரன்,முனைவர் சிற்றரசு,முனைவர் குணசேகரன்,முனைவர் துரையரசன்,முனைவர் சிவநேசன்,முனைவர் காளிமுத்து முனைவர் துரை.மணிகண்டன் உள்ளிட்டவர்களின் அன்பில் மகிழ்ந்தேன்.என் மாணவர்(கலவை ஆதிபராசக்திக் கல்லூரியில் பயின்றவர்) தேவராசன் என்பவர் குடந்தைக் கல்லூரியில் முதுநிலைக் கணிப்பொறிப் பயன்பாட்டியல் படிப்பவர் வந்திருந்து என்னை அன்புடன் கண்டு உரையாடினார்.அனைவரின் ஒத்துழைப்பாலும் என் உரை சிறப்பாக அமைந்தது.

அடுத்த பயிலரங்குகளில் சந்திப்போம் என்று அனைவரிடமும் விடைபெற்று, குடந்தையில் உடல்நலமின்றி உள்ள ஐயா கதிர். தமிழ்வாணன் அவர்களை இல்லம் சென்று கண்டு வணங்கி, இரவு 7.15 மணிக்குப் புறப்பட்டேன்.இரவு 11 மணிக்குப் புதுச்சேரி வந்து சேர்ந்தேன்.இடுகையிட்டது முனைவர் மு.இளங்கோவன் நேரம் லேபிள்கள்: குடந்தைக் கல்லூரி, மின் நூல்கள்

திங்கள், 9 பிப்ரவரி, 2009

ஒளவையாரின் சிந்தனைகள்

5. ஒளவையாரின் சிந்தனைகள்

இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மக்களிடையே தொடர்ந்து போற்றப்பெறும் புலவர் பெருமாட்டியருள் ஒளவையாரின் அருமைத் திருப்பெயரை அறியாதோர் யாரும் தமிழ்நாட்டில் இல்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவரை அறிவர்.

ஒளவையார் என்றதும் சுட்டப்¢ பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்ற ஒளவைக்கும் முருகப் பெருமானுக்கும் நடந்த உரையாடலே அனைவருக்கும் நினைவுக்கு வரும். கிடைத்தற்கரிய நெல்லிக்கனியை அதியமான் இவரிடம் அன்புடன் கொடுக்க அதனை ஒளவை உண்டு நீண்ட காலம் உயிர் வாழ்ந்தார் என்ற வரலாற்றுச் செய்தி தமிழில் இலக்கிய வரலாறு அறிந்தோருக்கு நன்கு நினைவுக்கு வரும்.

தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயரவர்கள் என்றால், தமிழ்ப் பாட்டி இந்த ஒளவையார்தான். இப்பெயரில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் வாழ்ந்தார்கள் என்று அறியப்¢பட்டுள்ளது.

ஒளவையார் என்ற பெயர் தமிழில் தாய்க்கும், தெலுங்கில் பாட்டிக்கும், கன்னடத்தில் மூதாட்டியாகிய கிழவிக்கும் வழங்கப்¢படுவதாக கன்னட மொழி அகராதிக்காரரான கிட்டல் என்பவர் குறிப்பிடுகிறார். அம்மை என்ற சொல்லின் திரிபு அவ்வை என்றும் அச்சொல்லுடன் ஆர் என்ற மரியாதைப் பன்மை விகுதி சேர்ந்து அவ்வையார் (ஒளவையார்) என்ற சொல் தோன்றியது என்றும் அறிஞர்கள் குறிப்பிடுவர்.

இன்றைய சான்றோர் சிந்தனைப் பகுதியில் 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப்¢படுகிற ஒளவையாரின் சிந்தனைத் துளிகளைக் காண்போம்;

அறிவால் - குணத்தால்- செய்கைகளால் - மேம்பட்டவர்களை மக்களில் மேலோர் என்ற பொருண்மையில் மேன்மக்கள் என்று அழைப்¢பர். இவர்கள் தங்களின் நல்ல பண்புகளிலிருந்து சிறிதும் பிறழ மாட்டார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மையாகும். இவர்கள் தங்களுக்குக் கேடு வந்துற்றபொழுதும் கூட தங்களின் மேலான குணாதிசயங்களிலிருந்து மாறுபட மாட்டார்கள் என்று ஒளவையார் தௌ¤வுபடக் கூறியுள்ளார். அதற்கு அவர் கூறுகின்ற உவமைகள் மிக அழகானவை - எளிமையானவை - பாமரருக்கும் புரியும் விதத்தில் அமைந்தவை.

பால் சுவை மிகுந்தது. அதனைக் காய்ச்சினால் அதன் சுவை மேலும் அதிகரிக்கும்; சுண்டக் காய்ச்சிக் குடித்தால் அதன் சுவையே தனிதான். சங்கு நல்ல வெள்ளை நிறத்தில் இருக்கும். அதனைச் சுட சுட அதன் நிறம் மேலும் மேலும் மெருகேறும் - வெள்ளை நிறம் பளிச்சிடும்.

இவை பாமரரும் அறிந்த உண்மையாகும். அனைவருக்கும் தெரிந்த இந்த உண்மைப் பொருள்களைக் கூறி - இவை போல மேன்மக்கள் தங்களின் செல்வம் உள்ளிட்ட தகுதி நிலைகளிலிருந்து தளர்ந்து போய்விட்டாலும் - அதாவது கெட்டுப் போய்விட்டாலும் தங்களின் மேலான குண நலன்களிலிருந்து மாறுபட மாட்டார்கள் என்பதை ஒளவையார் தமக்கே உரிய பாணியில் பாடல் புனைந்துள்ளார். இக்கருத்தை வெளிப்¢படுத்தும் பாடல் இதுதான்;

அட்டாலும் பால்சுவையின் குன்றாது அளவளவாய்நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.

மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் அடுத்தவருக்கு உதவி செய்து வாழ்தல் வேண்டும். ஐந்தறிவு படைத்த விலங்கினங்களிடத்திலே கூட இந்த நல்ல பண்பு இருக்கும் பொழுது ஆறறிவு படைத்த மக்களிடத்து மட்டும் இது குறைவாகவே காணப்¢படுவது வருத்தத்திற்குரியது ஆகும்.
ஒருவருக்குச் செய்கின்ற உதவி அவரிடமிருந்து பிறிதொரு பயனை எதிர்பார்த்ததாக இருத்தல் கூடாது. உதவி உதவி வரைத்தன்று என்பது வள்ளுவம். அங்ஙனம் ஒருவர் செய்த உதவியை மறந்து விடவும் கூடாது. ஏனெனில் நன்றி மறப்¢பது நன்றன்று.

உதவி என்பது யார் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் தேவைப்படுகின்ற பொழுது செய்யலாம். நல்லவர்கள் அதனை நினைத்துக் கொண்டே இருப்பார்கள். காலம் காலமாக உதவி செய்தவர்களுக்கு அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டே இருப்பார்கள். நல்லவர்கள் அல்லாதவர்கள் பிறர் செய்த உதவியை விரைவில் மறந்து விடுவர்.

செய்த உதவி ஒன்றுதான். ஆனால் செய்யப்¢பட்டவர்களின் தன்மைக்கேற்ப நினைக்கப்¢படுகிறது அல்லது மறக்கப்¢படுகிறது. இந்த இரண்டும் உலகத்தில் நடக்கின்ற நிகழ்வுகள்தாம். இதனை உள்வாங்கிக்
கொண்ட ஒளவையார் அதனைத் தம் பாடலில் மிகத் தௌ¤வுபட எடுத்துரைக்கிறார். அப்¢பாடல் வரிகள் இதுதான்;

நல்லார் ஒருவருக்குச் செய்த உபகாரம்கல்போல் எழுத்துப்போல் காணுமே - அல்லாதஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்நீர்மேல் எழுத்துக்கு நேர்
கல்மேல் எழுதுகிற வழக்கம் நம் தமிழகத்தைப் பொறுத்தவரை பன்னெடுங்காலத்திற்கு முன்பிலிருந்தே நிலைபெற்றிருக்கிற ஒன்றாகும். அதனால்தான் நம் முன்னோர்கள் பல செய்திகளை அழியாமல் பாதுகாக்கும் பொருட்டு கல்வெட்டுக்களாக வடித்துள்ளனர் - செப்புப் பட்டயங்களாகத் தந்துள்ளனர்.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளான போதிலும் இன்றும் பல கல்வெட்டுச் செய்திகள் அழியாமல் பல உண்மைகளை நமக்குப் பறைசாற்றி நிற்கின்றன. மேலும் மேலும் பல கல்வெட்டுக்கள் புதிதாக கண்டுபிடிக்கப்¢பட்டு வருகின்றன. இன்னும் பல கண்டுபிடிக்கப் படாமலேயே புதைநிலையில் அமிழ்ந்துள்ளன. எனவே கல்வெட்டுச் செய்திகள் சாகா வரம் பெற்றவையாகும்.

இக்கருத்தை ஒளவையார் மிக அழகாகக் கையாண்டுள்ளார். நல்ல மனிதர்களுக்குச் செய்த உதவி கல்மேல் எழுதிய எழுத்துப் போல என்றும் நிலைத்து நிற்கும். பிறர் செய்த உதவியை நல்லவர்கள் என்றுமே மறப்¢பது இல்லை. இதனால்தான் ‘நல்லார் ஒருவருக்குச் செய்த உபகாரம்கல்போல் எழுத்துப்போல் காணுமே’ என்று ஒளவையார் குறிப்பிடுகிறார்.

ஆனால் தீயவர்களுக்குச் செய்த உதவி இதற்கு நேர் மாறானது. அவர்கள் பிறர் செய்த உதவியை உடனேயே மறந்து போய்விடுவர். எனவே இவர்களுக்குச் செய்த உதவி என்பது நீர் மேல் எழுதிய எழுத்துப் போன்றதாகும். நீர் மேல் எழுத முடியாது என்பதும் அப்¢படியே எழுதினாலும் நிலைத்து நிற்காது என்பதும் உலகம் அறிந்த உண்மை.

கல்லெழுத்து, நீர் மேல் எழுத்து என்ற இரண்டு உலக உண்மைகளைப் பயன்படுத்தி - மக்களுக்கு எடுத்துக்கூறி நல்லவர்களுக்கும் அல்லவர்களுக்கும் செய்கின்ற உதவி எப்¢படி இருக்கும் என்பதை ஒளவையார் மிக நேர்த்தியாக விளக்கி உள்ளார். இங்ஙனம் ஒளவையாரின் பாடல்கள் எளிமையாகவும் அதே நேரத்தில் படிப்¢பவர்களுக்கு இனிமையாகவும் அவர்கள் உள்ளத்தில் கருத்துக்கள் பசு மரத்தாணி போல பதிகின்ற விதத்திலும் அமைந்துள்ளமையை ஒவ்வொருவரும் காணலாம். அவர்கள் உதிர்த்த முத்துப் போன்ற கருத்துக்களில் சில;

சோழ நாட்டின் பெருமையையும் வளத்தையும் ஒருசேர எடுத்துரைக்கும் - சோழ வள நாடு சோறுடைத்து.
நாடு வாழ்ந்தால் நாமும் வாழலாம் என்ற உண்மையை வெளிப்¢படுத்தும் - நாடெங்கும் வாழ கேடொன்றும் இல்லை.

நம்மை மதிக்காதவர் வீட்டிற்குச் செல்லுதல் மரியாதைக் குறைவாகப் போய்விடும் என்பதை வலியுறுத்தும் - மதியாதார் முற்றம் மதித்தொருகாற் சென்று மிதியாமை கோடியுறும்.

அகங்காரம் கூடாது - அடக்கமே வேண்டும் என்பதைச் சுட்டும் வகையில் - கற்றது கைமண் அளவு; கல்லாதது உலகளவு.

இவை போன்ற ஒளவையாரின் அமுத மொழிகள் மானுட நெறி சிறக்கவும் - சான்றோர் நிறைந்த நாடாக நம் நாடு செழிக்கவும் - வையத்தை வாழ்வாங்கு வாழ்விப்¢பதற்கும் பேருதவியாய் இருக்கும் என்று நம்பலாம்.

கபிலரின் சிந்தனைகள்

4. கபிலரின் சிந்தனைகள்

தமிழ் இலக்கிய வரலாற்றில் இருவேறு கபிலர் குறிப்பிடப்¢பட்டுள்ளனர். ஒருவர் ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சங்க்காலத்துக் கபிலர்; மற்றொருவர் இன்னாநாற்பது என்ற நூலை எழுதியவர். இவர்கள் இருவரும் ஒருவரே என்று கூறுவாறும் உள்ளனர்.

கபிலர் நட்புக்கு இலக்கணமானவர். பாரி-கபிலர் நட்பு போற்றுதலுக்கு உரியது. பாரி இறந்த பிறகு அவரது மகள்களான அங்கவை, சங்கவை ஆகியோருக்குத் திருமணம் செய்து வைப்¢பதற்கு அரும்பாடுபட்டவர். குறுநில மன்னர்களான விச்சிக்கோ, இருங்கோவேள் ஆகியோரிடம் இம்மகளிரைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்டினர்.

இவரது தமிழ்ப் புலமையும் பாராட்டுதலுக்கு உரியது. ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்துவதற்காக குறிஞ்சிப்பாட்டை இயற்றினார். மலையின் இயற்கை வருணனையை நயம்படச் சித்தரித்துக் காட்டியமையால் இவர் குறிஞ்சிக்கோர் கபிலர் என்று பாராட்டப் படுகிறார். இவர் இந்நூலின் 34 அடிகளில் 99 மலர்கள் வரிசைபட யாத்துள்ளத் திறம் பாராட்டத்தக்கதாகும்.
இவர் எழுதியுள்ள இன்னா நாற்பது என்ற நூல் இன்னாத அதாவது துன்பம் தரும் பொருள்களை எல்லாம் எடுத்துரைக்கிறது. ஒவ்வொரு பாடலிலும் நான்கு இன்னாத பொருள்கள் கூறப்¢பட்டுள்ளன. வாழ்க்கையில் இன்னது இன்னது துன்பம் பயக்கும் எனக் கூறும் 40 பாடல்கள் உள்ளமையால் இன்னாநாற்பது என்று பெயர் பெற்றது. இந்நூலில் மனித வாழ்விற்குத் துன்பம் தரத்தக்க 160 பொருள்கள் நயம்படச் சுட்டப்¢பட்டுள்ளன. ஒரு பாடலில் கூறப்¢பட்டுள்ள நான்கு இன்னாத பொருள்களைக் கேளுங்கள்;

பெரியவர்களோடு சேர்ந்து பழகுதல் வேண்டும். அவர்களின் அறிவுரைகளைக் கேட்டு - அவர்களின் சொற்படி நடத்தல் வேண்டும். எந்த செயலையும் பெரியவர்களை ஆலோசிக்காமல் செய்யக் கூடாது. அவ்வாறு ஆலோசிக்காமல் செய்த செயல்கள் பெரிதும் வெற்றி பெறுவதில்லை. இதை வலியுறுத்தும் வகையில், சிறு பிள்ளை விட்ட வேளாண்மை வீடு வந்து சேராது என்ற பழமொழியே வழக்கில் உலவி வருகிறது. பெரியவர்களின் துணை கொண்டு வாழ வேண்டும் எனபதை வலியுறத்த எண்ணிய வள்ளுவரும் பெரியாரைத் துணைக்கோடல் என்றும் பெரியாரைப் பிழையாமை என்றும் இரண்டு அதிகாரங்களைப் படைத்துள்ளார்.

பெரியவர்கள் என்பவர்கள் நம்மை விட வயதால் மூத்தவராக இருக்கலாம்; கல்வியால் உயர்ந்தவராக இருக்கலாம்; பண்பால் உயர்ந்தவராக இருக்கலாம்; ஒழுக்கத்தால் உயர்ந்தவராக இருக்கலாம்.

சுருக்கமாகச் சொல்வதென்றால் நம்மைவிட ஏதோ ஒரு வகையில் - ஏதேனும் ஒரு காரணத்தால் உயர்ந்தவர்களாக இருக்கலாம். பெரியவர்களைத் துணை கொள்ளல் வேண்டும் என்பதை,
பெரியாரோடு யாத்த தொடர்விடுதல் இன்னாஅரியவை செய்தும் எனவுரைத்தல் இன்னாபரியார்க்குத் தாம்உற்ற கூற்றின்னா இன்னாபெரியார்க்குத் தீய செயல்
என்ற பாடல் தௌ¤வுறுத்துகிறது. அதாவது, கல்வி கேள்விகளில் சிறந்த சான்றோர்களோடு கொண்ட நட்பினைக் கைவிடுதல் துன்பம் தரும்; செய்வதற்கு அறிய காரியங்களைச் செய்து முடிப்பேன் என்று வெற்று ஆரவாரம் செய்தல் பெரிய துன்பத்தை விளைவிக்கும்; நம்மிடத்தில் அன்பு கொள்ளாதவர்களிடம் நாம் அடைந்த துன்பங்களை எடுத்துரைத்தல் தன்பத்தைத் தருமேயன்றி இன்பத்தைத் தராது; பெருமையுடன் மதிக்கத்தக்கச் சான்றோர்களுக்குத் தீங்கு செய்வதால் பெருந் துன்பங்களே நேரிடும்.
அற மனத்தார், மற மனத்தார் என்ற இரண்டு அருமையான பொருள் பொதிந்த சொற்களைக் கபிலர் பயன்படுத்தி உள்ளார். அற மனத்தார் என்பவர்கள் அறச் செயல்களைச் செய்பவர்கள். மற மனத்தார் என்பவர்கள் மறச் செயல்களை-வீரச்செயல்களைச் செய்பவர்கள்.

அறமனத்தார் கூறும் கடுமொழியும் இன்னாமறமனத்தார் ஞாட்பின் மடிந்தொழுகல் இன்னாஇடும்பை உடையார் கொடை இன்னாகொடும்பாடு உடையார்வாய்ச் சொல்.

அறத்தை விரும்பும் நெஞ்சத்தை உடைய சான்றோர்களான அறமனத்தார் சொல்லுகின்ற கடுஞ் சொற்கள் துன்பத்தைத் தரவல்லன. அதுபோல வீரத்தன்மை மிக்க நெஞ்சத்தினரான மறமனத்தார் போர்க்களத்தில் சோம்பி இருத்தல் அவர்களுக்கும் அவர்கள் சார்ந்த நாட்டிற்கும் மிகுந்த துன்பத்தைத் தரும். வறுமை உடையவர்கள்

வள்ளல்கள் போல் நடந்து கொள்வது துன்பத்தைத் தரும். நடுவுநிலை தவறி - நியாயம் தவறி பேசுபவர்களின் சொற்களும் மிகுந்த துன்பத்தைத் தரவல்லன.
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு என்று வள்ளுவர் பொருட்தேவையைத் திறம்படக் கூறியுள்ளார்.

கிராமத்தில் வாழ்வோர் குறைவான பண வசதி இருந்தாலும்கூட சிறப்பாக வாழ முடிகிறது; ஆனால் நகரத்தில் வாழ்வோர் வாழ்க்கை அப்¢படி இல்லை. மிகுந்த பணம் தேவைப்படுகிறது. இதனைக் கபிலர் நன்கு உணர்ந்தவராகத் தெரிகிறார். அவர் கூற்றைப் பார்க்கும்பொழுது ஒரு வேளை அவர் நகரத்தில் வாழ்ந்தவராக இருப்பாரோ என்று ஐயம் கொள்ள வேண்டியிருக்கிறது; அல்லது நகரத்தில் வாழ்ந்தவர்களை நன்கு அறிந்தவராக இருத்தல் வேண்டும். அப்பாடல் இதுதான்;

பொருளிலான் வேளாண்மை காமுறுதல் இன்னாநெடுமாட நீள்நகர்க் கைத்தின்மை இன்னாவருமனை பார்த்திருந்து ஊணின்னா இன்னாகெடும்இடம் கைவிடுவார் நட்பு.
செல்வம் இல்லாதவன் பிறர்க்கு உதவி புரிய வேண்டும் என நினைத்துச் செயல்படுதல் அவனுக்கும் அவனைச் சார்ந்து வாழும் குடும்பத்தாருக்கும் மிகுந்த துன்பத்தைத் தரும். நெடிய மாடங்களை உடைய பெரிய நகரத்திலே பொருளின்றி - அதாவது தேவையான பொருளின்றி வாழ்தல் மிகுந்த துன்பத்தைத தரும். தம்மை அழையாதவர் வீட்டுக்குச் சென்று அவர் விரும்பும் வரை காத்திருந்து அவர் இடுகின்ற உணைவை உண்டு வருதல் பெருந்துன்பம் ஆகும். இது அழையாதார் வீட்டு விருந்தாளி போல இழிந்த நிலையை ஏற்படுத்தும். வறுமை உற்றக் காலத்தில் நம்மை விட்டு நீங்குவாரின் நட்பு மிகுந்த துன்பத்தைத் தரும். நண்பர்களாக இருக்கக் கூடியவர்கள் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கெடுத்துக் கொள்ளத்தக்கவர்களாக இருக்க வேண்டும். அங்ஙனம் இல்லாமல் நாம் வளமுடன் இருக்கும் காலத்தில் நம்முடன் நலம் துய்த்துவிட்டு வறுமை உற்றக் காலத்தில் நம்மை விட்டு நீங்குதல் என்பது சிறந்த நட்பாகாது. இதைத்தான் வள்ளுவரும்,

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு என்று கூறியுள்ளார். எனவே, கபிலர் கூறியுள்ள இன்னாதவற்றை நீக்கி இனிமையுடன் வாழ அனைவரும் முயல வேண்டும்.

குமரகுருபரரின் சிந்தனைகள்

3. குமரகுருபரரின் சிந்தனைகள்

சிற்றிலக்கிய வேந்தர் என்ற பாராட்டுக்கு உரியவர் குமரகுருபரர். இவர் 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.


திமிரமது அகற்றுந் தெய்வக் கவிஞன்குமரகுருபரன் குரைகழல் வெல்க
என்ற தனிப்பாடலுக்கு ஏற்பத் தமிழ்க் கவிஞராகவும், தெய்வக் கவிஞராகவும் மலர்ந்து மணம் வீசியவர் குமரகுருபரர். மக்களின் அறியாமை இருளை அகற்றி அறிவு புகட்டிய தமிழ்க் கவிஞர்களுள் குமரகுருபரருக்கு என்று தனித்த இடம் தமிழிலக்கிய வரலாற்றில் உண்டு. இவர், பிற்காலத்தில் தோன்றிய மரபுக் கவிஞர்கள் முதல் பாரதிதாசன் வரை உள்ள வரிசையில் ஒருசேர வைத்து போற்றத்தக்கவர்.


திருவைகுண்டத்தில் பிறந்த இவர் ஐந்து வயது வரை வாய் பேசமுடியாத ஊமையாக இருந்தார். பின்னர் திருச்செந்தூர் முருகப் பெருமான் திருவருளால் பேசுகின்ற திறம் பெற்றார். கந்தர் கலி வெண்பா முதலாக 16 இலக்கியங்களைப் படைத்தருளினார். இவர் எழுதிய மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் நூலைக் கேட்டு மதுரை மீனாட்சியம்மையே நேரில் எழுந்தருளி வந்து அவருக்குத் தம் கழுத்தில் கிடந்த முத்து மாலையை அணிவித்து மகிழ்ந்தாள் என்று கூறுவர்.


இவர் எழுதிய நீதி நெறி விளக்கம் என்ற நூலின் துணை கொண்டு இவர்தம் சிந்தனைகளைத் தொடர்ந்து நோக்குவோம். நூலின் காப்புச் செய்யுளே மனித வாழ்க்கையைப் பற்றி மிக்க நேர்த்தியாக எடுத்துரைக்கிறது. அப்பாடல் இதுதான்;


நீரில் குமிழி இளமை நிறைசெல்வம்நீரில் சுருட்டும் நெடுந்திரைகள் - நீரில்எழுத்தாகும் யாக்கை நமரங்காள் என்னேவழுத்தாதது எம்பிரான் மன்று.

மனிதனின் இளமைப்¢பருவம், மனித உடல், அவனால் முயன்று சேர்க்கப்¢படும் செல்வம் ஆகியவற்றைப் பற்றிய குமரகுருபரரின் சிந்தனைகளை மனிதர்கள் ஒவ்வொருவரும் மனத்துள் இறுத்தினால் மனித வாழ்வில் பொய் இல்லை - புரட்டு இல்லை - மனிதனை மனிதன் ஏய்க்கும் அவலம் இல்லை.

நீர்க் குமிழிகள் ( Bubbles) தோன்றுவதும் தெரியாது - மறைவதும் தெரியாது - தோன்றிய மாத்திரத்திலேயே மறைந்துபோகும். இந்த நீர்க்குமிழி போன்றதுதான் மனிதனின் இளமைப் பருவம். இது தெரியாமல் மனிதர்கள் இந்த இளமைப்¢ பருவத்திலே என்னென்ன செயல்களிலே ஈடுபடுகின்றார்கள்?
தண்ணீரில் எழுத முடியுமா? முடியும் என்கிறார் குமரகுருபரர். ஆனால் அந்த எழுத்து நிலைத்து நிற்காது - எவருடைய கண்ணுக்கும் தெரியாது. நீரில் எழுத எழுத அழிந்து கொண்டே போகும். அது போன்றதுதான் மனித உடம்பு. நீர்க் குமிழி கூட கண்ணால் பார்க்க முடியும். சற்று நேரம் நிலைத்து நிற்கும். ஆனால், நீர் மேல் எழுதப்¢படும் எழுத்து அதனினும் வேகமாக அழிந்து போகக் கூடியது.

அரும்பாடுபட்டு மனிதர்கள் சேர்க்கும் செல்வத்தின் கதியோ அதோகதிதான். நீரில் தோன்றுகின்ற அலை போன்றதாம் மனிதர்கள் சேர்க்கும் செல்வம். நீரின் நடுவே தோன்றுகின்ற அலை கரையை அடைவதற்குள் காணாமல் சிதைந்து போய்விடும். அதுபோல மனிதன் பாடுபட்டுத் தேடிய செல்வம் அவனுக்குப் பயன்படுவதற்கு முன்பே காணாமல் போய்விடும் அல்லது அதனைப் பயன்படுத்துவதற்கு முன்பே இவன் இல்லாமல் போய்விடுவான். இருப்¢பது போல இல்லாமல் போகும் அலைபோலவே செல்வமும் இருப்¢பது போல இல்லாமல் போய்விடும்.

எனவே, மனிதன் மிகவும் நம்பிக்கொண்டிருக்கின்ற தன் உடல், இளமை, செல்வம் ஆகியவை விரைந்து அழிந்து போகக் கூடியவை. அதனை நம்பி வாழ்க்கையைத் தொலைத்து நிற்க வேண்டாம் என்பது குமரகுருபரரின் கருத்தாக உள்ளது.

அடுத்து கல்வி பற்றிய அடிகளாரின் கருத்தினை நோக்குவோம்;
கல்வி இம்மைப் பயனாகிய அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றைத் தர வல்லது. கல்வியைப் போன்று மக்களுக்குத் துயர் மிக்க நேரத்தில் துணையாகும் பொருள் வேறு எதுவும் இல்லை. இதனை,
அறம்பொருள் இன்பமும் வீடும் பயக்கும் புறங்கடை நல்லிசையும் நாட்டும் - உறுங்கவலொன்றுஉற்றுழியும் கைகொடுக்கும் கல்வியின் ஊங்கில்லைசிற்றுயிர்க்கு உற்ற துணை என்ற பாடல் மூலம் உணர்த்துகிறார் அடிகளார்.

ஒரு மனிதன் காமத்தை விரும்புகிற அளவிற்குக் கல்வியை விரும்புகிறானா என்றால் இல்லை என்றே கூற வேண்டும். காமத்தைக் காட்டிலும் கல்வியே உயர்ந்தது எனபதை வலியுறத்த முனைகிறார் குமரகுருபரர். கல்வியானது தொடக்கத்தில் துன்பமாய் இருக்கும்; பின்னர் இன்பம் தரும். ஆனால் காமம் தொடக்கத்தில் இன்பமாய்; பின்னர் துன்பம் தரும். எனவே கலவி¢யைப் பற்றி வாழ வேண்டுமே ஒழிய மனிதர்கள் காம நெறியைப் பற்றி வாழ்தல் கூடாது என்று வலியுறுத்துவதற்காக பின்வரும்¢ பாடலைப் புனைந்துள்ளார்.
தொடங்குங்கால் துன்பமாய் இன்பம் பயக்கும்மடங்கொன்று அறிவகற்றும் கல்வி - நெடுங்காமம்முற்பயக்குச் சின்னீர இன்பத்தின் முற்றிழாய்பிற்பயக்கும் பீழை பெரிது.

கல்வியின் பயன் யாது எனில் அறிவு பெறுவதுதான். தான் அறிந்தவற்றைப் பிறர் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் எடுத்துரைக்கும் சொல்லாற்றல் இல்லையாயின் கற்ற கல்வியினால் யாதொரு பயனும் இல்லை என்று வள்ளுவத்தின் கருத்தை அடிகளார் வழிமொழிந்து கூறுகிறார்.
அவையின்கண் எடுத்துரைக்க அஞ்சுவார் பெற்ற கல்வியானது கல்லார் முன் பேசும் ஆரவாரச் சொல்லைப் போலவும், பிறருக்குக் கொடுத்துத் தானும் உண்ணாதார் செல்வம் போலவும், வறுமையில் வாடுபவர் பெற்ற அழகு போலவும் பயனற்றது என்பதை,

அவையஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியும் கல்லார்அவையஞ்சா ஆகுலச் சொல்லும் - நவையஞ்சிஈத்துண்ணார் செல்வமும் நல்கூர்ந்தார் இன்னலமும்பூத்தலின் பூவாமை நன்று

என்ற பாடல்வழி வலியுறுத்துகிறார். இதனை,
கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்நல்லார் அவையஞ்சு வார்
என்று வள்ளுவரும் கூறியிருப்¢பதைக் காணலாம்.

கற்றவற்றை நினைவில் வைத்திருத்தலும் மிக முக்கியமானது என்று அடிகளார் கருதுகிறார். அவ்வாறு கற்றவற்றை நினைவில் வைத்துக் கொள்ளாமல் மேலும் மேலும் புதிது புதிதாக கற்க நினைப்¢பது பாடுபட்டுத் தேடிய செல்வத்தைத் தொலைத்து விட்டு, மீண்டும் கடினப்¢பட்டு உழைத்துச் செல்வத்தை ஈட்டுதற்கு ஒப்பாகும்.

எனவே, கல்வியே பிற அனைத்தையும் விட சிறந்தது என்பதையும் அதனைக் கற்றவாறு நினைவில் வைத்து அதற்கேற்ப ஒழுகுதல் வேண்டும் என்பதும் குமரகுருபரரின் கருத்தோவியமாக இருப்¢பதை அறிய முடிகிறது.

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009

அதிவீரராம பாண்டியர் சிந்தனைகள்

2.அதிவீரராம பாண்டியர் சிந்தனைகள்

புவியரசராகவும் கவியரசராகவும் விளங்கியவர் அதிவீரராம பாண்டியர். இவர் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டிய மரபினர். இவருடைய தந்தையார் நெல்வேலி பாண்டியன். இவர் ஏறக்குறைய 40 ஆண்டுகள் தென்காசியில் இருந்து ஆட்சி செய்தார். மேலும் கொற்கை நகரை ஆட்சி செய்தமையால் கொற்கையாளி என்றும் இவர் அழைக்கப்¢பட்டார். வல்லபதேவன், பிள்ளைப்பாண்டியன், குலசேகரன், குணசேகரவழுதி, அழகன் சேவகவேள், தமிழ் வளர்த்த தென்னவன் என்ற சிறப்புப் பெயர்களும் இவருக்கு உண்டு.
இவர், நைடதம் என்ற காப்பிய நூலையும், நறுந்தொகை அல்லது வெற்றிவேற்கை என்ற நீதி நூலையும், திருக்கருவைப் பதிற்றுப்¢பத்தந்தாதி, திருக்கருவை வெண்பா, திருக்கருவை கலித்துறை என்ற அந்தாதி நூல்களையும், கூர்ம புராணம், இலிங்க புராணம், மகாபுராணம் என்ற புராண நூல்களையும், காசி காண்டம், வாயு சங்கீதை என்ற நூல்களையும் எழுதியுள்ளார். இவற்றின் வழியாக இவரது புலமைத் திறத்தை நன்கு அறியலாம்.


இவர் எழுதிய காப்பிய நூலான நைடதம் பற்றிக் கூறுவோர் நைடதம் புலவர்க்கு ஒளடதம் என்று வியந்து கூறுவர். ஒளடதம் என்றால் மருந்து என்று பொருள். நோயுற்றவருக்கு நோய் தீர்க்க மருந்து உதவுகிறது. அம்மருந்தைக் கொடுப்¢பவர் மருத்துவர். அதுபோல அறிவால் நோயுற்ற புலவர்களுக்கு நைடதம் என்ற மருந்தைக் கொடுத்து நோய்ப் போக்கியவர் அதிவீரராம பாண்டியர். கற்றாருள் நன்கு கற்றவர் நனிகற்றவர்; மருத்துவருக்கே மருந்து கொடுக்கும் மருத்துவர் சிறந்த மருத்துவர். அதுபோல புலவருக்கே கற்றுத்தரும் புலவராக விளங்கியவர் அதிவீரராம பாண்டியர். தமிழைத் தொடக்கத்தில் பயில்வோர் இந்நூலைத் தவறாது படிப்¢பர் என்பதிலிருந்து இவரது புலமைத்திறம் நன்கு வெளிப்¢படும்.
இலக்கியப் பயிற்சிப் பெற விரும்புவோருக்குச் சிறந்த நூலாக நைடதத்தைக் குறிப்பிடுவர். புலமை சான்றவர்கள் மிகுந்த ஆர்வத்தோடு இந்நூலைப் படிப்¢பர். இந்நூலை எழுதி முடித்த உடன் அதனைத் தனது அண்ணியாரிடம் கொடுத்துப் படித்துப் பார்க்கச் சொன்னாராம். அதன் பிறகு நூலின் தன்மை குறித்துக் கேட்டாராம்.


மிகுந்த இலக்கிய வாசிப்பும் அறிவுத்திறமும் பெற்ற அண்ணியார் இந்நூலின் நடை வேட்டை நாயின் ஓட்டம் போல இருக்கிறது என்று கூறி பாராட்டினாராம். அருமையான உவமை நயத்துடன் அமைந்துள்ள இவரின் கருத்து இந்நூலின் நடைப்போக்கை நன்கு வெளிப்¢படுத்துவதாக அமைந்துள்ளது.


அதாவது, வேட்டை நாயானது வேட்டைக் கிடைக்கும் வரை மிக வேகமாகவும் அதே நேரத்தில் கவனமாகவும் ஓடிக்கொண்டே இருக்கும். வேட்டைக் கிடைத்த உடன் அதன் வேகம் குறைந்து விடும். அதுபோல் இந்த நூல் கதையின் உச்சநிலையை (CLIMAX) அடையும் வரை மிக வேகமாகவும் விருவிருப்பாகவும் செல்கிறது. படிப்¢பவர் கவனம் சிதையாது விரைந்து ஆவலோடு படிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதற்குப் பிந்தைய பகுதியானது வேட்டைக் கிடைத்தவுடன் வேட்டை நாயின் வேகம் குறைந்து போனதைப் போல விருவிருப்புக் குறைந்து போயுள்ளதாக இந்நூலைப் பற்றிக் கருத்துக் கூறியுள்ளார். இதன்மூலம் அதிவீரராம பாண்டியர் திறம்பட நூல் யாப்¢பவர் என்பது தௌ¤வாகிறது.


இவர் எழுதிய நீதி நூலான கொன்றைவேந்தன் ஓர் அரிய நூலாகும். இதனுள் சிறந்த நீதிக்கருத்துகள் அமைந்துள்ளன. இந்நூல் ஆழமும் அகலமும் எளிமையும் உடையது ஆகும். இந்நூலைப் படிப்போர் குற்றங்களை எளிதில் நீக்கி சிறப்புடன் வாழ்வர். இதன்கண் 82 பாடல்கள் உள்ளன. இவை அமைப்பு முறையில் ஒளவையார் அருளிய கொன்றைவேந்தன் போன்றவை. இந்நூற் பாடல்கள் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற உத்தி முறையில் நன்கு அமைந்துள்ளது.


இந்நூற்கண் உள்ள சில பாடல்களின் கருத்தினைக் கேளுங்கள்; யார் யாருக்கு எது அழகு என்று கூறுகிறார்.


• கல்விக்கு அழகு கசடற மொழிதல் - கற்ற கல்வியைப் பிழையில்லாமல் எடுத்துரைப்¢பதே கல்விக்கு அழகாம்.• செல்வர்க்கு அழகு செழுங்கிளைத் தாங்குதல் - செல்வம் படைத்தோர் - வசதி படைத்தோர் என்போர் உற்றார் உறவினரையும் அக்கம் பக்கத்தாரையும் அரவணைத்து வாழ வேண்டும். அதுவே அவர்களுக்கு அழகாம். • மன்னவர்க்கு அழகு செங்கோல் முறைமை - சிறந்த ஆட்சியாளர்கள் என்போர் முறை தவறாது மக்கள் நலம் கருதி அவர்களுக்கு வேண்டுவனவற்றை மக்கள் கேட்காமலேயே செய்து தருவதாகும்.


உழவர்க்கு அழகு இங்கு உழுதூண் விரும்பல் - உழவர்கள் தங்கள் நிலங்களில் நன்கு பயிர் செய்து அப்பொருள் மூலம் உண்டு வாழ்தல் அழகாம்.• உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல் - விருந்தோடு உண்பதுதான் உணவுக்கு அழகாம்.

அறிஞர்க்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல் - பல நூல்களையும் கற்றவர்கள் அடக்கமுடன் இருத்தல் அவர்களுக்கு அழகாம்.• வறிஞர்க்கு அழகு வறுமையில் செம்மை - வறுமை உற்ற காலத்திலும் வறியவர்கள் சிறந்த நெறியினின்று வழுவாது வாழ்தல் அவர்களுக்கு அழகாம்.
இங்ஙனம் பல தரப்¢பட்ட மனிதர்களும் எவ்வாறு வாழ்தல் வேண்டும் என்பதை ஒரு வரியிலேயே தௌ¤வுபட எடுத்துக் கூறுகிறார் அதிவீரராம பாண்டியர்.


இதுபோலவே ஒற்றை வரியில் அழுத்தமான வாழ்வியல் சிந்தனைகளை அதிவீரராம பாண்டியர் பதிவு செய்து வைத்துள்ளார். அவற்றுள் சில;


• பெரியோரெல்லாம் பெரியோரும் அல்லர்.

• உற்றோர் எல்லாம் உறவினர் அல்லர்

• கொண்டோர் எல்லாம் பெண்டிரும் அல்லர்

• அடினும் ஆவின்பால் தன்சுவை குன்றாது

• சுடினும் செம்பொன் தன்னொளி கெடாது

• அரைக்கினும் சந்தனம் தன் மணம் மாறாது

• புகைக்கினும் காரகில் பொல்லாங்கு கமழாது

இங்ஙனம் அதிவீரராம பாண்டியர் தம் சிந்தனைகள் எளிய முறையில் அமைந்து தௌ¤ந்த கருத்தை வெளிப்¢படுத்தும் வகையில் உள்ளன.

திருவள்ளுவரின் சிந்தனைகள்

1. திருவள்ளுவரின் சிந்தனைகள்


ஒழுக்கம் பற்றி கூறாத அறநூல்களே உலகில் இல்லை. ஆன்மீகத்தின் இருப்பிடமான இந்தியத் திருநாட்டில் தோன்றிய வேதங்கள், ஞானநூல்கள், ஐம்பெருங் காப்பியங்கள், இராமாயணம், மகாபாரதம், இயேசு காவியம், சீறாப்புராணம் போன்ற மாபெரும் இலக்கியங்கள் அனைத்துமே மனித இனத்திற்குத் தேவையான பல்வேறு நல்லொழுக்க நெறிகளை வலியுறுத்துவதை அடிப்¢படை நோக்கமாகக் கொண்டு எழுந்துள்ளமையைக் காண முடிகிறது. இந்த ஒழுக்க நெறிதான் விலங்கு வாழ்க்கையினின்று மனித வாழ்க்கையை வேறுபடுத்திக் காட்டுகிறது.


ஒழுக்கம் பற்றிய வரையறை நாட்டுக்கு நாடு - இனத்துக்கு இனம் - காலத்துக்குக் காலம் வேறுபட்டுக் கொண்டே இருக்கும். ஒவ்வொருவரின் நம்பிக்கை, மரபு, சூழல் இவற்றிற்கு ஏற்பவும் ஒழுக்கம் பற்றிய விளக்கம் மாறுபட்டுப் போகிறது.


இச்சொல் ‘ஒழுகு’ என்ற சொல்லிலிருந்து பிறந்ததாகும். ‘ஒழுகு’ என்றால் ஒன்றை இடைவிடாது கடைபிடித்தல் ஆகும். இன்னும் தௌ¤வாகச் சொல்ல வேண்டுமானால் வாழ்க்கைக்குத் தேவயான நல்ல - சிறந்த - உயர்ந்த நெறிகளை எந்த நேரத்திலும் விட்டு விடாமல் கடைபிடிப்¢பதாகும்.
ஒழுக்கம் என்பதற்கு நடை, சீலம், சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளப்¢பட்ட நல்ல பண்புகள், கடமை தவறாது நடத்தல், உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்றெல்லாம் பொருள் கூறலாம்.


ஒழுக்கத்தின் அங்கங்களாக அன்பு, அருள், கருணை, இரக்கம், பாசம், தியாகம், தொண்டு, பண்பு, பொறை, பணிவு முதலியன உள்ளன. இவற்றைப் பின்பற்றி வாழ்கின்றவர்கள் சிறந்த ஒழுக்க சீலர்களாக உலகில் வலம் வருவர்.


• ஒழுக்கம் என்பது கெட்ட செய்கையிலிருந்து விலகி இருப்¢பது அல்ல; கெட்ட செய்கையை செய்யாமல் இருப்¢பதுதான் என்பார் அறிஞர் பெர்னாட்சா.

• யாவர்க்குமாம் இறைவதற்கு ஒரு பச்சிலையாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறையாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடியாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே என்று மனித ஒழுக்கத்திற்கு இலக்கணம் கூறுகிறார் திருமூலர்.

அதாவது நம் பங்கில் ஒரு பிடியையாவது நம் எதிரில் பசியோடு இருப்¢பவனுக்குத் தருதல் வேண்டும்; அது முடியாது போகுமிடத்து மனதார ஒரு வாழ்த்தையாவது- இன்சொல்லையாவது கூறுதல் மனித குலத்திற்கு இன்றியமையாத ஒழுக்கமாகும். • இராமலிங்க வள்ளலார் ஒழுக்கங்களை நான்கு வகைப்¢படுத்திக் காட்டுகிறார். அவை;


1. இந்திரிய ஒழுக்கம் 2. கரண ஒழுக்கம் 3. ஜீவ ஒழுக்கம் 4. ஆன்ம ஒழுக்கம்

 இந்திரிய ஒழுக்கம்; உடலால் தூய்மையாக இருத்தல் தீயதைக் கேளாமல் இருத்தல் பிறர் மனம் புண்படப் பேசாமல் இருத்தல் பிறரைக் குரூரமாக பாராமல் இருத்தல் இனிய சொற்களைக் கூறல் இரக்கம் காட்டல் கருணை உள்ளம் உடையவராக இருத்தல் சத்தியம் நிறைந்திருத்தல்


 கரண ஒழுக்கம்; அன்பு, அருள், உயிர், இரக்கம் ஆகியவற்றை மனத்தில் இறுத்தி வாழ்தல். காமக்குரோதம், லோபம், மோகம், மத மாச்சர்யம் ஆகியவற்றை மனத்தில் இருந்து விலக்கி மனத்தை என்றும் தூய்மையாக வைத்திருத்தல்.
பிறர் குற்றம் காணாதிருத்தல்

 ஜீவ ஒழுக்கம்; எல்லா உயிர்களையும் தன் உயிராக எண்ணி வாழ்தல். அவ்வுயிர்களுக்கு ஏற்பட்டத் துன்பத்தைத் தனக்கு ஏற்பட்டதாகக் கருதி அதனைப் போக்கிட முனைதல்.
ஜீவகாருண்யம் என்று சொல்லப்¢படுகின்ற உயிரிரக்கத்தோடு எப்பொழுதும் வாழ்தல் - அதனைக் கடைபிடிக்க எத்தகைய தியாகத்தையும் செய்தல்.


 ஆன்ம ஒழுக்கம்; எல்லா உயிர்களையும் இறைவனுடைய திருக்கோயிலாகக் கருதி அவ்வுயிர்களின் உள் ஒளியை வழிபடுதல்.
இந்த ஒழுக்கம் பற்றிய செய்தித் திருக்குறள் முழுவதும் பரக்கக் காணப்படுகிறது.

அடக்கமுடைமை, அருளுடைமை, அவா அறுத்தல், அவை அறிதல், அழுக்காறாமை, அறன் வலியுறுத்தல், அறிவுடைமை, அன்புடைமை, ஆள்வினையுடைமை, இடன் அறிதல், காலம் அறிதல், இல்வாழ்க்கை, இறைமாட்சி, இனியவை கூறல், இன்னா செய்யாமை, ஈகை, ஊக்கம்உடைமை, ஒப்புரவறிதல், கண்ணோட்டம், கயமை, கல்லாமை, கள்ளாமை, கள்ளுண்ணாமை, கல்வி, குடிசெயல் வகை, குடிமை, குறிப்¢பறிதல், குற்றங்கடிதல், கூடா ஒழுக்கம், கூடா நட்பு, கேள்வி, கொடுங்கோன்மை, கொல்லாமை, சான்றாண்மை, சிற்றினம் சேராமை, சுற்றந்தழால், செய்ந்நன்றி அறிதல், தெரிந்து செயல் வகை, தெரிந்து தௌ¤தல், தெரிந்து வினையாடல், நடுவுநிலைமை, நாணுடைமை, பண்புடைமை, பயனில சொல்லாமை, பிறனில் விழையாமை, புலால் மறுத்தல், புறங்கூறாமை, பெரியாரைத் துணைக்கோடல், பெரியாரைப் பிழையாமை, பொறையுடைமை, மடியின்மை, வாய்மை, விருந்தோம்பல், வினைசெயல்வகை, வினைத்திட்பம், வினைத்தூய்மை, வெகுளாமை, வெஃகாமை உள்ளிட்ட அறுபதுக்கும் மேற்பட்ட அதிகாரங்களில் மனிதர்கள் பின்பற்ற வேண்டிய ஒழுக்கங்களைத் திருவள்ளுவர் எடுத்துக்கூறுகிறார்.


இக்கருத்துக்களின் முத்தாய்ப்பாக ஒழுக்கமுடைமை என்றஅதிகாரத்தில்,
மனித உயிர் விலை மதிக்க முடியாதது. மனிதர்கள் எக்காரணத்தை முன்னிட்டும் தம் உயிரை இழப்¢பதற்கு ஒப்¢ப மாட்டார்கள். அந்த விலை மதிக்க முடியாத உயிரைக் காட்டிலும் ஒழுக்கமே சிறந்தது என்பதை
ஒழுக்கம் விழுப்¢பம் தரலான் ஒழுக்கம்உயிரினும் ஓம்பப் படும்
என்று ஓங்கிக் குரல் கொடுக்கிறார் வள்ளுவர். மேலும் அவர்,
ஒழுக்கத்தை எப்பாடுபட்டாவது காத்தல் வேண்டும்.
ஒழுக்கம் உடையவரின் வாழ்க்கையே உயர்ந்த குடியில் பிறந்தாரின் வாழ்க்கையாகும்.


கற்றக் கல்வியை மறந்தால் மீண்டும் கற்றுக் கொள்ளலாம். ஆனால், ஒழுக்கத்தை மறந்தால் மீண்டும் பெற இயலாது.
ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்வு உயர்வடைவதில்லை.
மன வலிமை உடையவர்கள் ஒழுக்கத்தினின்றும் தவறார்.
ஒழுக்கம் உடையவர்கள் எப்பொழுதும் மேன்மை அடைவர்; ஆனால், ஒழுக்கம் இல்லாதவர்கள் எப்பொழுதும் கீழ்மை அடைவர். நல்லொழுக்கம் எப்பொழுதும் நன்மையைச் செய்யும்; தீயொழுக்கம் எப்பொழுதும் தீமையைச் செய்யும்.
ஏனெனில், இவ்வுலகில் ஒவ்வொரு தனி மனிதனும் நல்லொழுக்கம் தவறாது வாழ்ந்தால் ஒட்டு மொத்த சமுதாயமும் நல்லொழுக்க நெறியில் மேன்மையடையும். ஏனெனில் தனி மனிதர்களால் உருவாக்கப்¢படுவதுதான் சமுதாயம். இதைத்தான் வள்ளுவரும்,
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்
என்று கூறுகிறார் போலும்.

புதன், 14 ஜனவரி, 2009

ஆறாவது ஊதியக் குழு பரிந்துரை

ஆறாவது ஊதியக் குழு பரிந்துரை:

பொதுவாக பரிந்துரைகள் ஏற்புடையதாகவும் பாராட்டத்தக்கதாகவும் உள்ளன.


தேர்வு நிலை /ரீடர் தொடர்பான பரிந்துரைகள் ஏமாற்றம் அளிக்கின்றன.

1. முன்பு முனைவர்ப் பட்டம் முடித்தவர்கள் மட்டும் ரீடர் ஆகலாம் என்று இருந்தது. முனைவர்ப் பட்டம் முடிக்காதவர்கள் தேர்வுநிலை விரிவுரையாளர்கள்; ஆனால் ஊதியத்தில் வேறுபாடு இல்லை. இதுவே பாரபட்சமான முடிவு ஆகும். தற்பொழுது முனைவர்ப் பட்டம் முடித்தாலும் முடிக்காவிட்டாலும் Associate Professeor என்று கூறப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஒரே விதமான ஊதியம். அதாவது 37400 + இதனால் மேற்காட்டிய முரண்பாடு தொடர்ந்து கொண்டே வருகிறது. உயர் கல்வியை வளப்படுத்த நினைக்கும் அரசு அதற்கேற்ப முனைவர்ப் பட்டத்தையும் கட்டாயமாக்க வேண்டும். அதனை முடித்தவர்களுக்கு உரிய மரியாதையையும் பயனையும் தொடர்ந்து கிடைக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.


எனவே, முனைவர்ப் பட்டம் முடித்தவர்களுக்கு அனைத்து நிலைகளிலும் (grade) ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.


2. முன்பு ரீடர் நிலைக்கு முனைவர்ப் பட்டம் முடித்தவர்களுக்கு 9 ஆண்டுகள் தேவை. அதை ஒத்த நிலையாகக் கருதப் பட்ட தேர்வு நிலைக்கு வருவதற்கு M.Phil. முடித்தவர்களுக்கு 10 ஆண்டுகள் தேவை. இது தற்பொழுது முறையே 12/13 ஆண்டுகள் என்று உயர்த்தப் பட்டுள்ளது. இது பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். பணி அடைவதற்கான காலம் நீண்டுகொண்டே செல்ல செல்ல பணி மேல் ஆர்வம் குறைந்து போவதற்கு வாய்ப்பு உண்டு.


எனவே முன்பு போலவே முனைவர்ப் பட்டம் முடித்தவர்களுக்கு 9 ஆண்டுகள் / M.Phil. முடித்தவர்கள் 10 ஆண்டுகள் என்ற நிலையில் Associate Professeor பணி மேம்பாடு கிடைக்க வழிவகை செய்தல் வேண்டும்.


மேலும் தேர்வு நிலை/ரீடர் நிலையில் 3 ஆண்டுகள் கட்டாயம் பணியாற்றிய பிறகே Associate Professeor நிலைக்கு வர முடியும் என்பதையும் மாற்றி பழைய நிலை போலவே முனைவர்ப் பட்டம் முடித்தவர்கள் 9 ஆண்டுகள் / M.Phil. முடித்தவர்கள் 10 ஆண்டுகள் என மாற்றி அமைத்தல் வேண்டும்.
இவ்விரண்டு மாற்றங்களும் செய்தால் மட்டுமே இளைஞர்களாகவும் ஏறக்குறைய் 10 ஆண்டுகள் பணியாற்றியவர்களாகவும் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அவர்களை இப் பணியில் நிலை நிறுத்தவும் முடியும். அதுபோல் புதிதாக பணியில் சேர்ந்தவர்களுக்கும் விரைந்து பணி மேம்பாடு கிடைக்கும்.


பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் மிக்க ஆர்வத்துடன் இதை எதிர் பார்த்துக் காத்துக்கிடக்கின்றனர்.

நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

செவ்வாய், 25 நவம்பர், 2008

ஆராய்ச்சிப் பேரறிஞர்

ஆராய்ச்சிப் பேரறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமியின் வாழ்வும் பணியும்

- க.துரையரசன்



“தமிழையே வணிகமாக்கித்
தன்வீடும் மக்கள் சுற்றம்
தமிழிலே பிழைப்பதற்கும்
தலைமுறை தலைமுறைக்குத்
தமிழ் முதலாக்கிக் கொண்ட
பல்கலைத் தலைவன் எல்லாம்
தமிழ்ச் சீனி வேங்கடத்தின்
கால்தூசும் பெறாதார் என்பேன்” (தமிழ் நிலம் - 14.10.1952)

என்று பாரதிதாசனாலேயே பாராட்டப்பட்டவர் தமிழறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி ஆவார். இவருக்கு 16.12.1999-இல் நூற்றாண்டு விழா தமிழக அரசால் நடத்தப்பட்டது. நூற்றாண்டு விழா கண்ட நாயகரின் வாழ்வும் பணியும் குறித்து விளக்கியுரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தோற்றம் :

இவர் சென்னையில் உள்ள மயிலாப்பூரில் திரு.சீனிவாச நாயக்கருக்கும் திருமதி.தாயார் அம்மாளுக்கும் மூன்றாவது மகனாராக 16-12-1900-இல் பிறந்தார். இவரது தந்தையாரும் மூத்த சகோதரரும் சித்த மருத்துவத் துறையில் சிறந்து விளங்கினர். இவர்தம் இளைய சகோதரர் சீனி.கோவிந்தராசனாரும் இவரும் தமிழ்ப் பணியில் நாட்டம் மிக்கவர்களாகத் திகழ்ந்தனர்.

இளமையும் கல்வியும் :

இவர்தம் இளைய சகோதரர் திரு.சீனி.கோவிந்த ராசனாரின் தமிழ்ப்பணி நாட்டம் கண்ட இவருக்கும் தமிழ் மொழியின் மீதும் இலக்கியங்களின் மீதும் ஆர்வம் தலைப்பட்டது. கோவிந்தராசனாரிடம் தமிழ் பயிலத் தொடங்கிய இவர் பின்னர் திருமயிலை மகாவித்துவான் சண்முகம் பிள்ளை அவர்களிடமும் சென்னைக் கிறித்தவக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் ச.த.சற்குணம் அவர்களிடமும் கல்வி பயின்றார். இவர் நடுத்தரப் பள்ளி ஆசிரியர் பயிற்சியும், எழும்பூர் நுண்கலைப் பள்ளியில் சித்திரமும் பயின்றார். தமிழ் மொழியில் மட்டுமின்றி ஆங்கிலம், மலையாளம், கன்னடம், துளு ஆகிய மொழிகளிலும் போதிய அறிவுத் திறம் பெற்று விளங்கினார். இவர் தம் பதினாறாம் அகவை முதல் தமிழ் நூல்களைச் சுவைத்துப் படிக்கும் திறம் பெற்றிருந்த இவர் ‘செந்தமிழ்’ முதலிய உயர்ந்த தமிழ் வெளியீடுகளை விடாது படித்துத் தம் புலமையைப் பெருக்கிக் கொண்டார்.

பணி :

வறுமையில் வாடிய தம் குடும்பத்தைக் காக்கும் பொருட்டு மோட்டார் உதிரிப்பாகங்கள் விற்பனைக் கடையில் விற்பனையாளராகப் பணியாற்றினார். அப்பணியினின்றும் விலகி ‘திராவிடன்’ என்ற இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவராகப் பணியாற்றினார். அப்பணியையும் புறந்தள்ளிய இவர் நடுத்தரப் பள்ளி ஆசிரியராக நீண்ட காலம் பணியாற்றினார். இப்பணியில் இருக்கும் போதுதான் தமிழ்ப்பணி ஆற்றுவதற்குரிய வாய்ப்பும் வசதியும் இவருக்கும் பல்கிப் பெருகின எனலாம்.

பண்பு நலன்கள் :

வறியராகப் பிறந்த இவர் பண்பு நலன்களில் வளனாராக விளங்கியதை அறிய முடிகிறது. இவர் அடக்கமும், எளிமையும், மனித நேயப் பற்றும் உடையவர். எப்பொழுதும் தூய, ஒழுங்கான சாதாரண உடையையே அணியும் பழக்கம் உடைய இவர் ஆடம்பர வாழ்க்கையைக் கிஞ்சிற்றும் விரும்பாதவர். பணக்காரர்கள் உள்ள இடங்களுக்கு அழைப்பு இல்லாமல் ஒரு போதும் செல்லவே மாட்டாராம் இவர்.

அறிஞர்களின் மதிப்பீடு :

இவ்வறிஞரைப் பற்றிய சில அறிஞர் பெருமக்களின் கருத்துகளை இங்குச் சுட்டிக் காட்டுவது பொருத்தமாக இருக்கும். “இவர், செய்வனத் திருந்தச் செய்யும் பண்பினர் ; எளிய வாழ்வு மேற்கொண்டு அமைதியாக இருந்து உயரிய தொண்டாற்றும் இயல்பினர்” என்று மு.வரதராசனார் பாராட்டுகிறார். (மறைந்து போன தமிழ் நூல்கள், பக்கம் V)

இவர், நல்லொழுக்கம் வாய்ந்தவர் என்றும் நல்லோருடைய கூட்டுறவைப் பொன்னே போல் போற்றுபவர் என்றும் ஆண்டில் இளையவராயினும் ஆராய்ச்சித் துறையில் முதிர்ந்தவர் என்றும் சுவாமி விபுலானந்தர் இவரது பண்பு நலன்களையும் ஆய்வு நுட்பத்தையும் எடுத்தியம்பியுள்ளார். (கிறித்தவமும் தமிழும், முகவுரை, பக்கம் 9)

திரு.வி.க, இவரைச் சீர்திருத்தக்காரர் ; ஆராய்ச்சியாளர் ; காய்தல் உவத்தல் அகற்றி எதையும் நோக்குபவர் என்று குறிப்பிடுகிறார். (இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம், பக்கம் xiv)

இவரின் தேடல், உழைப்பு, இலக்கிய நோக்கு, விமர்சனப் போக்கு, புலப்பாட்டுத் திறன் யாவராலும் போற்றுதற்குரியன. கலைகள் பற்றிய ஆய்வு நூல் அளித்தவர்களில் இவர் முன்னோடி. இலக்கிய ஆராய்ச்சி, கல்வெட்டாராய்ச்சி, நாணயவியல் முதலிய துறைகளில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே முத்திரை பதித்த முதல் வரிசை ஆய்வாளர். இவரின் நூல்கள் அனைத்தும் சீனியாய், கற்கண்டாய் காலமெல்லாம் இனிப்பவை என்று டாக்டர் ச.மெய்யப்பன் இவரது பணியைப் போற்றுகின்றார். (தமிழர் வளர்த்த அழகுக் கலைகள், பக்கங்கள் V-Vi)

ஒரு தனியார் பள்ளியில் தொடக்க நிலை ஆசிரியராக இருந்து மறைந்த அறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி வரலாற்றுக்கும் தமிழியலுக்கும் அளித்த ஆய்வுப் பங்களிப்புகளுக்கு நிகரான ஒன்றை இதுவரை எந்தப் பல்கலைக்கழகமும் நிகழ்த்தியது இல்லை என்று சுந்தரனார் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் க.ப.அறவாணன் அறுதியிட்டுக் கூறியுள்ளார். (தினமணி-14.12.1998)


தனி ஒரு மனிதன் நிகழ்த்திய ஆய்வுகளை இன்று வரை ஒரு பல்கலைக் கழகம் கூட நிகழ்த்தவில்லை என்பதன் மூலம் இவ்வறிஞர்தம் ஆய்வுப் பணியின் ஆழமும் அகலமும் நன்கு புலப்படும்.

பிறர் சிந்தியாத விதத்திலும், பிறர் கூறாதவகையிலும் உண்மைகளைத் தலைச் சுமைந்து, தமிழ் மக்களுக்கு ஒட்பம் (Wisdom) வழங்குவனவாக இவரது நூல்கள் அமைந்துள்ளன என்று இவ்வறிஞரின் மாணவரான ஊ.ஜெயராமன் குறிப்பிடுவதன் வழி (தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் - பக்கம் xvii) இவரது நூல்களின் தனித்தன்மையை விளங்கிக் கொள்ளலாம்.

கடும் உழைப்பாளி : சிறந்த வரலாற்றாசிரியர் ; நடுநிலை பிறழாத ஆராய்ச்சியாளர் ; தொல்பொருள் ஆய்வாளர் ; மொழியியல் அறிஞர் ; சமயப் பேரறிஞர் ; கலையியல் வல்லுநர் ; இலக்கியத் திறனாய்வாளர் ; தலை சிறந்த பண்பாளர் என்று இவரின் பண்பு நலன்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார் டாக்டர் ம.சத்தியமூர்த்தி அவர்கள். (தமிழுலகம் நினைக்க மறந்த தமிழறிஞர்கள் - பக்கம் 55)

இவை அனைத்திற்கும் மேலாக,
“தமிழுக்குத் தொண்டர் யார்க்கும்
தலைத் தொண்டன் ; அடிமை அல்லன்
. . . . . . .. . . . . . . .. . . . . . . . . . .
கொள்கையில் அசைக் கொணாத
இமயமும் தோற்கும் அண்ணல் . . . .
(தமிழ் நிலம் - 14.10.1952)
என்று பாவேந்தர் பாரதிதாசன் பாராட்டுவது இவரது சீரிய தமிழ்ப் பணிக்குச் சூட்டப்பட்ட வைரக் கீரிடம் ஆகும்.

இவர்களேயன்றி, இப்பெருமகனாரின் ஆராய்ச்சித் திறன், எழுத்துத் திறன், உழைப்புத் திறன் ஆகியவற்றைப் பாராட்டியப் பெருமக்களுள் குறிப்பிடத் தக்கவர்களாக பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார், டாக்டர் இராசமாணிக்கனார், ஒளவை டி.கே.சண்முகம், கி.வா.ஜகன்னாதன், கவிஞர் முடியரசன், டாக்டர். மு.ஆரோக்கியசாமி, ந.சஞ்சீவி, மீ.பா.சோமசுந்தரம், அழ.வள்ளியப்பா ஆகியோரைச் சுட்டலாம்.

அறிஞர் பெருமக்களுடன் தொடர்பு :

சதாசிவப் பண்டாரத்தார், அ.சிதம்பரநாதன், தெ.பொ.மீ., கா.வெள்ளைவாரணம், சாமி.வேலாயுதம், விபுலானந்த சுவாமிகள், பெரியார் ஈ.வெ.ரா., மறைமலையடிகள், ஜீவபந்து, ஸ்ரீபால், யாழ்ப்பாணம் இராஜ.அரியரத்தினம், குல.சபாநாதன், செக்கோஸ்லாவியா நாட்டவர் கமில் சுவலபில் போன்ற தம் சமகால அறிஞர் பெருமக்களோடு மயிலை சீனி.வேங்கடசாமி நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.

பட்டங்களும் பரிசுகளும் :

இவ்வறிஞருக்கு மணிவிழாக் கொண்டாடுவது எனச் சான்றோர்கள் முடிவு செய்தனர். அதன் பொருட்டுச் செந்தமிழ்ச் செல்வியில் மணிவிழா வேண்டுகோள் (சிலம்பு 36, பரல் 4, பக்கம் 177, டிசம்பர் 1960) ஒன்று வெளியிடப்பட்டது. 17.3.1961-இல் சென்னையில் உள்ள கோகலே மண்டபத்தில் சென்னை உயர்நீதிமன்ற நடுவர் மாண்புமிகு எஸ்.கணபதியாபிள்ளை அவர்கள் தலைமையில் இவருக்கு மணிவிழா சிறப்பாக நடைபெற்றது. மணிவிழா மலரைப் பேராசிரியர் மயிலை சிவமுத்து வெளியிட்டார். இவ்வறிஞரின் மணிவிழாச் சிறப்புகளை ‘மணிவிழா மாண்பு’ என்று தலைப்பிட்டுப் படங்களுடன் ‘செந்தமிழ்ச் செல்வி’ வெளியிட்டது. (சிலம்பு 35, பரல் 8, பக்கங்கள் 340-347, ஏப்ரல் 1961)

இம் மணிவிழாவில்தான் உயர்நீதி மன்ற நடுவர் மாண்புமிகு எஸ்.கணபதியா பிள்ளை அவர்களால் வழங்கப்பட்ட ‘ஆராய்ச்சிப் பேரறிஞர்’ என்ற பட்டத்தைச் சீனி.வேங்கடசாமி தம் வாழ்நாளில் கிடைக்கப் பெற்ற முதல் பட்டமாக உவகையுடன் ஏற்றுக் கொண்டார்.

மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தால் ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ என்ற பட்டமும் 4000 வெள்ளிப் பொற்காசுகளும் அன்றைய தமிழக ஆளுநர் மாண்புமிகு பிரபுதாஸ் பட்வாரி அவர்களால் இவருக்கு 29.3.1980-இல் வழங்கப்பட்டது. இவரது உடல்நிலை காரணமாக இவரால் நேரில் சென்று இப்பட்டத்தைப் பெற முடியவில்லை. ஆதலால், இவர் தம் பேத்தி அழகம்மை இப்பட்டத்தைப் பெற்று வந்தார். (சிலம்பு 54, பரல் 8, பக்கங்கள் 409-410, ஏப்ரல்’ 1980) இதே நாளில் ஒளவை.சு.துரைசாமி பிள்ளைக்கும் இப்பட்டம் வழங்கப் பட்டது. இவர் நேரில் சென்று இப்பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.
இவர் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆசிரியர் குழுவிலும் இருந்து பணியாற்றி வந்தார். அக்கழக நூலாசிரியருள் இவர் மிகச் சிறந்து விளங்கினார். எனவே கழகத்தின் 1008-வது வெளியீட்டு விழாவின் போது இவருக்குக் கேடயம் அளித்துப் பாராட்டப்பட்டது. (சிலம்பு 54, பரல் 9, பக்கங்கள் 431-432, மே’ 80)

தமிழ்ப்பணி :

தமிழ் இலக்கியம், இலக்கணம், சமயம், கலை, பண்பாடு, சொல்லாய்வு, மொழியாய்வு, தமிழக வரலாறு, கல்வெட்டு என்று பல துறைகளில் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களையும் நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ள இவ்வறிஞரின் தமிழ்ப்பணி பிறரின் தமிழ்ப் பணியினின்று மேம்பட்டும் உயர்ந்தும் நிற்கிறது. தமிழில் எதையோ எழுதினோம் - வெளியிட்டோம் என்றில்லாமல் கிடைத்தற்கு அரிய செய்திகளை எல்லாம் இவர் தொகுத்தும் வகுத்தும் விரித்தும் ஆய்ந்தும் வெளியிட்டுள்ளார்.

இனி, அவரது நூல்களின் தனித்துவம் குறித்து ஆராயலாம். இந் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் இலக்கிய வரலாறும், தமிழக வரலாறும் மிகுதியும் இருள் சூழ்ந்த நிலையிலேயே இருந்தமையை அனைவரும் அறிவர். அவ்வேளையில் இவர் எழுதிய நூல்கள் அத்துறைகளுக்குக் கலங்கரை விளக்கமாக அமைந்ததோடன்றி புதிய, அரிய கருத்துகளின் கொள்கலன்களாகவும் அமைந்திருந்தன. இவரது நூல்களில் பெரும்பான்மையும் பல துறைகளில் முதல் முயற்சியாக அமைந்துள்ளமையைக் காண முடிகிறது.

நிகழ் நூற்றாண்டின் தமிழ் இலக்கிய வரலாறே முழுமையாகக் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த நூற்றாண்டின் தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதுவது என்பது மிகக் கடுமையாகும். இக்கடும் பணியைப் ‘பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்’ என்ற நூலில் காண முடிகிறது. முறையான தமிழ் இலக்கிய வரலாற்றைப் பிறர் எழுதுவதற்கு முன்னோடியாக இந்நூல் அமைந்துள்ளதைப் பெருமையுடன் நினைத்துப் பார்க்க முடிகிறது.

ஒரு நாள் ஓரிடத்தில் பார்த்துவிட்டு வந்த புத்தகம் மறுநாள் தேடிச் செல்லும்போது அங்கு இருக்காது. மீண்டும் அப்புத்தகத்தைத் தேடிக் கண்டுபிடிப்பது எளிதன்று. அவ்வாறிருக்கையில் இவர் ‘மறைந்து போன தமிழ் நூல்கள்’ என்ற ஒரு நூல் எழுதி வெளியிட்டதை எண்ணிப் பார்க்கும் போது வியப்பே மேலிடுகிறது. அந்நூலை இவர் எழுதுவதற்கு ஒரு துயரச் சம்பவமே காரணமாக இருந்தது. திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்த இவர் இரண்டு குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வந்தார். இவ்விரண்டு குழந்தைகளும் எதிர்பாராத விதமாக இறந்து போயினர். அவ்விழப்பையும், சோகத்தையும் மறக்கும் வகையில் பல புத்தகங்களைத் தொடர்ந்து படித்துக் கொண்டே இருந்தார் இவர். யாப்பருங்கல விருத்தி என்ற நூலைப் படிக்கும் பொழுது அதில் காட்டப்பட்டிருந்த பல மேற்கோள் நூல்கள் மறைந்து போயிருந்ததை உணர்ந்தார். தம் வளர்ப்புக் குழந்தைகளின் மறைவு குறித்து வருத்திக் கொண்டிருந்த இவர் தமிழ்க் குழந்தைகளின் மறைவு (மறைந்து போன தமிழ் நூல்கள்) குறித்து எவரும் வருந்தவில்லையே என்று உணர்வுப் பூர்வமாகச் சிந்தித்ததன் விளைவே இந்நூலாகும். பெயரளவிலும், ஒரு சில பாடல் மற்றும் நூற்பா அளவிலும் காணப்படும் நூல்களைப் பற்றிய வரலாற்றுத் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. இந்நூல் இல்லையெனில் பல தமிழ் நூல்களின் பெயர்கள் கூட நமக்குத் தெரியாமலும் புரியாமலும் போகும் அவல நிலை ஏற்பட்டிருக்கும்.

கலைகள் பற்றிய ஆய்வு நூல் எழுதியவர்களுள் இவர் முன்னோடியாக விளங்குகிறார். கவின் கலைகள் குறித்துத் தமிழில் வெளிவந்த முழுமையான முதல் நூல் என்ற பெருமை இவரது ‘தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்’ என்ற நூலுக்கு உண்டு. தமிழர், தம் பழஞ்சிறப்புகளை எல்லாம் மறந்து போனதை எண்ணி வேதனை மிகுதியுடன் இந்நூலைப் படைத்தளித்தார் இவர். கவின் கலைகள் குறித்து இவர் எழுதிய மற்றொரு நூல் ‘நுண்கலைகள்’ என்பதாகும். இவை இரண்டும் தமிழர்களின் கலை நுட்பத்தை எடுத்தியம்பும் அரிய நூல்களாகும். பழங்காலத்துக் கொங்கு நாட்டின் முழு வரலாற்றை முதன் முறையாக இவர் ‘கொங்கு நாட்டு வரலாறு’ என்று எழுதியுள்ளார். சங்கச் செய்யுள்களிலே ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்ற துளு நாடு பற்றிய செய்திகளை எல்லாம் ஒன்றாகத் திரட்டித் தொகுத்து முறையாக வகைப்படுத்தி ‘துளு நாட்டு வரலாறு’ என்ற நூலை எழுதியுள்ளார்.

பல்லவர்கள் வரலாற்றைக் கூறும் வகையில் ‘மகேந்திர வர்மன்’, ‘நரசிம்ம வர்மன்’, ‘மூன்றாம் நந்தி வர்மன்’ ஆகிய இவரது நூல்கள் அமைந்துள்ளன. தௌ¢ளாற்றெறிந்த நந்திவர்மன் பற்றித் தமிழில் எழுதப்பட்ட முதல் நூல் என்ற பெருமை ‘மூன்றாம் நந்தி வர்மன்’ என்ற நூலுக்கு உண்டு. இவ்வரசனைப் பற்றிய சான்றுகள் முழுமையாக இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இந்நூலின்கண் அமைந்துள்ள இன்றியமையாப் பாடங்கள் இந்நூலுக்கு மேலும் மெருகூட்டுகின்றன. தமிழர்களின் பழைய வரலாற்றை அறிய விரும்புபவர்களுக்குப் ‘பழங்காலத் தமிழர் வாணிகம்’, ‘சாசனச் செய்யுள் மஞ்சரி’ ஆகிய நூல்கள் நல்ல துணையாக நிற்கின்றன.

இவர் சமயப் பொறை உணர்வு மிக்கவர் என்பதும் காய்தல் உவத்தல் இன்றி கருத்துக்களை வெளியிடக் கூடியவர் என்பதும் ஆய்வு நேர்மை உடையவர் என்பதும் சமய வரிசையில் இவர் எழுதிய நூல்களின் வழி வெளிப்படும். அவற்றுள் ‘பௌத்தமும் தமிழும்’ என்ற நூல் பௌத்தர்களின் சமயம், தமிழ்த் தொண்டு ஆகியன பற்றி எடுத்துரைக்கும் முறையான முதல் நூல் ஆகும்.
சமண சமயத்துக்கு எதிரான கருத்துக்கள் பிற சமயத்தாரால் தமிழகத்தில் உருவாக்கப்பட்டன. அதனால், தமிழர்கள் அச்சமயத்தின் மேல் வெறுப்புணர்வு கொள்ளத் தலைப்பட்டனர். ஆனால் அச்சமயத்தினர் தமிழுக்கு ஆற்றிய பணியானது பிற சமயத்தினர் தமிழுக்கு ஆற்றிய பணிகளைக் காட்டிலும் மேம்பட்டது என்பதை நன்கு உணர்ந்த இப்பெருமகனார், சமண சமயத்தின் தமிழ்ப் பணிகளை வெளிப்படுத்தி வரலாற்றை நிலைப்படுத்த முயன்றதன் விளைவே ‘சமணமும் தமிழும்’ என்ற இவரது நூல் ஆகும். சமயங்களின் தமிழ்ப் பணி குறித்த வரிசையில் மேலும் ‘கிறித்தவமும் தமிழும்’, ‘சமயங்கள் வளர்த்த தமிழ்’ ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

மகாபலிபுரத்து ஜைன சிற்பம், இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம், பௌத்தக் கதைகள், புத்தர் ஜாதகக் கதைகள், இசைவாணர் கதைகள் ஆகிய நூல்களின் வழி இப்பெருமகனாரின் பல் சமயப் பொறை உணர்வு வெளிப்படுகிறது. தமிழக வரலாற்றைத் தௌ¤வுறுத்தும் நோக்கில் இவர் களப்பிரர் ஆட்சியில் தமிழகம், சங்க காலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள், சேரன் செங்குட்டுவன், பாண்டியர் வரலாற்றில் ஓர் அரிய புதிய செய்தி ஆகிய நூல்கள் அமைந்துள்ளன. சிறந்த சொல்லாராய்ச்சிக் கட்டுரைகளின் தொகுப்பாக அஞ்சிறைத் தும்பி என்ற நூல் அமைந்துள்ளது. சங்க காலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள், சாசனச் செய்யுள் மஞ்சரி ஆகியவை அரிய கல்வெட்டு ஆராய்ச்சி நூல்களாகும்.

இதழ்களின் வழி தமிழ்ப்பணி :

தம் அரிய தேடலாலும் கடும் முயற்சியாலும், நுண்மாண் நுழை புலத்தாலும் கண்டறிந்த ஆய்வு முடிவுகளின் கருத்துப் பெட்டகங்களாக இவரது நூல்கள் மட்டுமின்றி இவர் எழுதிய கட்டுரைகளும் அமைந்துள்ளன.

நண்பன், கல்வி, சௌபாக்கியம், திராவிடன், குடியரசு, செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப்பொழில், கலைக்கதிர், திருக்கோயில், ஈழகேசரி போன்ற இதழ்களில் மயிலை சீனி.வேங்கடசாமியின் நூல்கள் மற்றும் கட்டுரைகளைத் தொகுத்து நோக்குமிடத்து இவர் ஆய்வுப் பணியை முழுநேரப் பணியாக மேற்கொண்டதையும் அவ்வாய்வுப் பணிக்கு இடையூறு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத் திருமணமே செய்து கொள்ளாமல் தமிழ்ப் பணி ஆற்றிய இவரது தன்னலமற்ற சீரிய தியாக உயர்வும் புலப்படும். தமிழில் மறைந்து போனதும் மறந்து போனதுமான மிகுந்த செய்திகளை வெளிக்கொணரும் வகையில் அமைந்துள்ள இவரது தலை சிறந்தத் தமிழ்ப் பணியானது இன்றைய ஆய்வாளர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் முன்னோடி வழிகாட்டியாக அமையும் என்பதில் ஐயமில்லை. இத்தகு அரும்பெரும் தொண்டாற்றிய இப்பெருமகனார் தம் இறுதிக் காலத்தில் மிகுந்த துன்பத்திற்கும், நோய்க்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகி 8-5-1980-இல் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

இவர் எழுதிய நூல்கள் அனைத்தும் இன்று கிடைத்தல் அரிதாகி விட்டன. எனவே அந்நூல்களை எல்லாம் மறுபதிப்பாக வெளியிட வேண்டும். மேலும் இவர் எழுதிய கட்டுரைகளை எல்லாம் தொகுத்து நூல் வடிவில் வெளியிட வேண்டும். இவை இரண்டுமே தமிழ் வளர்த்த இவ்வறிஞர் பெருமகனாருக்குத் தமிழ் ஆர்வலர்களும், சான்றோர்களும், தமிழுலகமும் செலுத்தும் நூற்றாண்டு விழா காணிக்கையும் நன்றியறிதலுமாக இருக்க முடியும் என்று பலரும் நூற்றாண்டு விழா நேரத்தில் பேசினர். இதனைச் செவிமடுத்துத் தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கின. அதன் பயனாக இவரது நூல்களும் கட்டுரைகளும் சீரிய முறையில் வெளிவந்து கொண்டு உள்ளன.
----------------------------------------------------------------
க.துரையரசன்.முதுநிலைதமிழ் விரிவுரையாளர்,
அரசு கல்லூரி (தன்னாட்சி), கும்பகோணம்.

darasan2005@yahoo.com

ஞாயிறு, 26 அக்டோபர், 2008

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

குவலயத் தமிழ்ர்களுக்கு என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

பேராசிரியர் முனைவர் க. துரையரசன்
கும்பகோணம்