செவ்வாய், 18 மார்ச், 2008

இணையமே......... இணையுமே !

உலகையே குவலயக் கிராமமாக மாற்றிவிட்ட ஆற்றல் வாய்ந்த தொழில்நுட்பம்தான் இணையம். இணையத்தில் இல்லாதது எதுவுமே இல்லை என்ற அளவிற்கு அனைத்துத் தகவல்களையும் தன்னகத்தேக் கொண்டதாக இணையம் திகழ்கிறது. கேட்டவர்களுக்குக் கேட்ட வரங்களை - தகவல்களை அள்ளி வழங்கும் அமுதசுரபியாக இது விளங்குகிறது. கேட்டதை எல்லாம் கொடுக்கும் கற்பக விருட்சம் என்று முன்னோர்கள் கூறக் கேட்டிருக்கிறோம்; ஆனால் கண்ணால் கண்டதில்லை. ஆனால் இன்று கேட்டதை எல்லாம் கொடுக்கும் கற்பக விருட்சமாக இணையத்தை பார்க்க முடிகிறது.

இணையத்தில் செய்திகள் படிக்கலாம்; படங்கள் பார்க்கலாம்; பாடல்கள் கேட்கலாம்; அரட்டை அடிக்கலாம்; பொழுதுப் போக்கலாம்; அறிவைப் பெருக்கலாம். ‘எண்ணிய எண்ணியாங்கு எய்துப’ என்று வள்ளுவர் கூறுவதைப் போல நீங்கள் எதைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதனை இணையத்தில் சென்று ஒரு சில நொடிகளில் தேடித் தெரிந்து கொள்ளலாம்.

எங்கும் - எதிலும் - எப்பொழுதும்

உங்கள் ஊரைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருப்பதை விட இணையத்திற்குக் கூடுதலாகத் தெரிந்திருக்க வாய்ப்புகள் அதிகம். கூகிளில் (இதனைப் போன்ற பிற தேடு பொறிகளிலும்) சென்று உங்கள் ஊரின் பெயரைத் தட்டச்சுச் செய்து இணையத்தில் தேடினால் இந்த உண்மையை நீங்கள் அறிவீர்கள். அது போலவே உங்களின் நண்பர்கள், உங்களின் போற்றுதலுக்கு உரியவர்கள், சான்றோர்கள், அறிஞர்கள், கவிஞர்கள், உலகத்தாரால் பரவலாக அறியப்பட்டவர்கள் என்று எவரைப் பற்றியும் - எதனைப் பற்றியும் - எப்பொழுது வேண்டுமானாலும் - எங்கிருந்து வேண்டுமானாலும் தேடிப் பெறலாம்.

முன்பெல்லாம் ஒன்றைப் பற்றி அல்லது ஒருவரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமாயின் நூலகங்களுக்கு அலையாய் அலைய வேண்டும்; நடந்து நடந்து கால்கள் தேய்ந்து போகும்; தேடித் தேடி கைகள் ஓய்ந்து போகும். அப்பொழுதெல்லாம் ‘இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே’ என்ற திரையிசைப்பாடல் நம் காதுகளில் விட்டு விட்டு ஒலிக்கும். இந்த அலைச்சலுக்கும் தேடலுக்கும் விடையாற்று விழா நடத்திய பெருமை இணையத்தையே சாரும்.

இணையத்தின் பயன்கள்

இணையம், உலகையேக் குவலயக் கிராமமாக மாற்றும். ‘தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்’ என்ற பாரதியின் கனவை நனவாக்கும். தமிழினம் ஒரே குடும்பமாய் வாழ வழி வகுக்கும். ஆதாரங்களைக் கண் முன்னே கொண்டு வந்து தரும். கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள உதவும்.

தகவல்களைப் பெறலாம் - அளிக்கலாம் - தொகுக்கலாம். பொருள்களை விற்கலாம் - வாங்கலாம். கல்வி பயிலலாம் - பயிற்றுவிக்கலாம். புதியனப் புகும் - அறிவுப் பெருகும் - சிந்தனை செழிக்கும். ஆதலால், தொலைக்காட்சிப் பார்த்து நேரத்தை வீணாக்குவதை விடுத்து இணையத்தைப் பார்த்து அறிவைப் பெருக்குங்கள்.

இணைய வரலாறு

இன்றைய உலகம் இணைய வழிகாட்டுதலின்படி பீடுநடை போடுகிறது எனில் அது மிகையன்று. இத்தகைய அரிய கண்டுபிடிப்புக்கு வித்திட்டவர்கள் பிரிட்டானிய நாட்டு அறிஞர்களான சார்லஸ் காவ் மற்றும் ஜார்ஜ்ஸ் ஹாக்மேன் என்பார் ஆவர். இவர்கள் 1966 இல் ஃபைபர் (Fiber) நூலிழையின் உதவியால் தகவல்களை ஒளிப் பிம்பங்களாக மாற்றி நெடுந்தொலைவு அனுப்ப முடியும் என்று கண்டுபிடித்தனர்.

இணையம் - சொற்பொருள்

உலகம் முழுவதும் உள்ள அனைத்துக் கணினிகளையும் ஒரே மின்னனு வலையில் சங்கிலி இணைப்பு செய்யப்பெற்று ஒன்றாக்கப்பட்டதுதான் இணையம். இதனை ஆங்கிலத்தில் World Wide Web என்பர். இதன் சுருக்கம்தான் www. இதனை w3, the web என்றும் அழைப்பர். ஆயினும் www என்பதுதான் பெருவழக்காகும்.

முதல் இணைய தளம்

உலகின் முதல் இணைய தளம் அர்பாநெட் (ARHANET ௲ Advanced Research Project Administration) ஆகும். கலிஃபோர்னியா மற்றும் ஃவுடா மாகாணங்களில் இருந்த கணினிகளை இணைத்து அமெரிக்க நாட்டின் பாதுகாப்புத் துறையில் எதிரிகளுக்குத் தெரியாமல் இராணுவ வீரர்கள் செய்திகளைப் பகிர்ந்து கொள்ள குறியீடுகளைப் பயன்படுத்தினர். இதனைத் தொடர்ந்து 1972இல் ஐம்பது பல்கலைக்கழகங்கள் இணைக்கப்பட்டன. 1983இல் பல்வேறு நாடுகளின் 562 கணிப்பொறிக் கட்டமைப்புகள் இதில் இடம் பெற்றன.

தொலைபேசிக் கம்பி வழித் தகவலறியும் சேவை

1980 இல் பிரான்ஸ் நாட்டில் மினிடெல்(MINITEL) என்பவர் தொலைபேசிக் கம்பி வழியிலான தகவலறியும் சேவையைத் துவக்கினார். 1992 நவம்பர் மாதம் டெல்ஃபி (Delphi) என்ற நிறுவனம் பெரிய அளவிலான தகவல் சேவையைத் தொடங்கியது.
1993 செப்டம்ர் 15இல் மிகப்பெரும் அளவிலான தேசியத் தகவல் பரவலுக்கானத் திட்டம் ஒன்றை அமெரிக்க அரசு வரைவு செய்தது.

1993இல் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின்¢ National Centre for Super Computing
என்ற மையத்தைச் சார்ந்த மாணவர்கள் பல வசதிகள் கொண்ட இணைய தேடலுக்கான மென்பொருள் திரையைக் கண்டறிந்தனர். இது மொசைக் (Mosaic) என்றழைக்கப்பட்டது. இதனை மார்க் ஆண்டர்சன் மொசைக் என்பவர் கண்டறிந்தார்.

வலைப்பின்னல்

1994இல் www என்ற வலைப்பின்னலாக அமைந்த அமைப்பு உலகின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் கருவியாக உருமாற்றம் பெற்றது. இதன் மூலம் தகவல்களை
மட்டுமல்லாது படங்களையும் பார்க்க முடிந்தது. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள செர்ன் (Cern) என்னும் அணுத்துகள் இயற்பியல் நிறுவனம் உலகு தழுவிய விரிவு வலைமுறையைக் (www) கொண்டு வந்தது.

1995இல் கொரிய நாட்டில் பிறந்து பின் அமெரிக்க நாட்டில் குடியுரிமைப் பெற்ற
நாம் ஜூன் பெய்க் (Nam June Paik) என்பவர் Cyber Town என்ற ஒன்றை நிறுவி அதன் மூலம் பல்லாயிரக் கணக்கான மக்களை இணைத்தார்.

தமிழில் முதல் இணைய தளம்

தமிழை இணைய தளத்தில் கொண்டு சேர்க்கின்ற முயற்சியில் முதலிடத்தில் இருப்பவர்கள் சிங்கப்பூர் மற்றும் இலங்கைத் தமிழர்கள் ஆவர். தமிழ் இணைய தளத்தின் தந்தை என்று போற்றப்படுபவர் சிங்கப்பூர் பேராசிரியர் நா.கோவிந்தசாமி ஆவார். இவர் சீனாவிற்குச் சென்ற பொழுது அவரது நண்பரிடம் தமிழின் பெருமைகளை எடுத்துக் கூறியுள்ளார். இதனைக்கேட்டு வியந்து அவரது நண்பர் எங்களின் சீன மொழியைப் போல பெருமை வாய்ந்த மொழி உங்களின் தமிழ் மொழி. ஆகவே எங்கள் மொழியைப் போலவே உங்கள் மொழியையும் இணையத்தில் ஏற்றலாம் என்று கூறினாராம். அதன் விளைவாக தமிழை இணையத்தில் ஏற்றும் முயற்சியில் ஈடுபட்ட கோவிந்தசாமி அவர்கள் உருவாக்கிய தளம்தான் கணியன் இணையம் (www.kanian.com). இத்தளம் பேச்சு நடையில் அமைந்த செய்திகளைத் தொகுத்தளித்தது.

தமிழ் நூல்களை வழங்கும் தளங்கள்

தற்பொழுது தமிழ் நூல்களை இணையத்தில் இடும் பணி அரசாங்கத்தாலும், தனியார் நிறுவனங்களாலும், தனி மனிதர்களாலும் ஆங்காங்கே நடைபெற்று வருவதைக் காண முடிகிறது.

தமிழ் இணையப் பல்கலைக்கழகம்

தமிழ் நூல்களை இணையத்தில் வழங்கும் அரசு நிறுவனங்களில் முதன்மையான இடம் சென்னையில் உள்ள தரமணியில் அமைந்துள்ள தமிழ் இணையப் பல்கலைக்கழகத்திற்கு உரியது ஆகும். இதன் இணைய முகவரி; www.tamilvu.org
என்பதாகும். இப்பல்கலைக்கழகம் உலகு தழுவி வாழும் தமிழர்களும் தமிழ் ஆர்வலர்களும் அரிச்சுவடி முதல் ஆராய்ச்சி வரை தமிழ்ப் படித்துப் பட்டம் பெறுவதற்கான வாய்ப்பு வசதிகளை இணையவழி ஏற்படுத்தித் தருகிறது.

இத்தளத்தில் தொல்காப்பியம், சங்க இலக்கியம் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள் (ஏறக்குறைய 1,50,000 பக்கங்களுக்கு மேல்) உரையுடன் இடம் பெற்றுள்ளன. இவற்றுள் தொல்காப்பியம், திருக்குறள் போன்ற நூல்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட உரைகளும் காணக்கிடைக்கின்றன. இதனுள் தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களேயன்றி அகராதிகள், கலைச்சொல் களஞ்சியங்கள், சைவ, வைணவக் கோயில்கள் பற்றிய ஒலி-ஒளிக் கட்சிகள், தமிழ்ப்பண்பாட்டுக் கூறுகளை உணர்த்தும் வகையிலான பரதநாட்டியம், நாதஸ்வரம், பொம்மலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், காவடியாட்டம் உள்ளிட்ட தொகுப்புகள் இடம் பெற்றுள்ளன.

மதுரைத் திட்டம்

உலகளாவிய தமிழர்கள் இணையம்வழி ஒன்றுகூடி, தமிழ் இலக்கியங்களின் மின்பதிப்புகளை உருவாக்கி அவற்றை இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் தமிழார்வலர்களும் இலவசமாகப் பெற வசதி செய்யும் ஒரு தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டமே மதுரைத் திட்டம் ஆகும். இதனைச் சுவிட்சர்லாந்து நாட்டில் வாழும் தமிழர் டாக்டர் கே.கல்யாணசுந்தரம் அவர்கள் தொடங்கினார்¢. தனி மனிதரால் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் 300க்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள் இடம் பெற்றுள்ளன. இதன் இணைய முகவரி; www.tamil.net/projectmadurai

இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம்

நடுவண் அரசின் நிறுவனமான இது மைசூரில் உள்ள மானசகங்கோத்ரியில் இயங்கி வருகிறது. தென்னிந்திய மொழிகளின் வளர்ச்சியில்¢ இந்நிறுவனத்தின் பங்கு அளப்பரியதாகும். நடுவண் அரசால் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது முதல் இதுநாள் வரை இந்நிறுவனம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு அரும்பணி ஆற்றி வருகிறது. தமிழ் இலக்கண, இலக்கியங்களின் பழம் பதிப்புகளைப் பிழையில்லாமல் செம்பதிப்பாக வெளியிடும் பணியை இந்நிறுவனம் முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் தமிழ் மொழியின் பழமையும் பெருமையும் பொருண்மையும் பாதுகாக்கப்படும் என்று நம்பலாம். இப்பணியின் முதற்கட்டமாக சங்க இலக்கியங்களைச் செம்பதிப்பாக வெளியிடுவதற்குத் தமிழகமெங்கும் சங்க இலக்கியப் பயிலரங்குகளை இந்நிறுவனம் நடத்தி வருகிறது. மேலும் தொல்காப்பியம் உள்ளிட்ட இலக்கண நூல்களையும்கூட இசைவடிவில் வெளியிட இந்நிறுவனம் முயன்று வருகிறது. இதன் இணைய முகவரி; www.ciil.org

தமிழ் மொழியின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட அனைவரும் அம்மொழியின் அருமைகளையும் பெருமைகளையும் சிதைவுபடாமல் இளைய தலைமுறைக்குக் கொண்டு செல்ல முயன்றிட வேண்டும். இம்முயற்சியில் இரண்டு நிலைகள் உண்டு. இருக்கின்ற தமிழ் இலக்கண, இலக்கியங்களை மாணவர்களுக்கும் இளைய தலைமுறையினருக்கும் எடுத்துக்கூறுவது ஒன்று; இருக்கின்ற தமிழ் இலக்கண, இலக்கியங்களைச் சிதைவுபடாமலும் சீர்குலைக்காமலும் பாதுகாப்பது மற்றொன்று. இந்த இரண்டு முயற்சிகளுக்கும் இணையில்லா ஆற்றல் வாய்ந்த இணைய வசதியை வழங்கும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்திக் கொள்ளுதல் அறிவுடைமை மட்டுமன்று; இன்றியமையாததும் கூட.