சனி, 26 ஜனவரி, 2013

திருக்குறளில் அணி இலக்கணக் கூறுகள்

                                               

 கருத்தரங்கில் உரையாற்றுகையில்

முன்னுரை

       கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள், அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள் ஆகிய புகழ் மொழிகளுக்கு உரியது பொய்யில் புலவனின் பனுவல். பொருட் செறிவு மட்டுமின்றி சுவை மிக்கதாகவும் அறிவுறுத்தும் ஆற்றலில் உயர்ந்தும் குறட்பாக்கள் நிற்கின்றன. இக்குறட்பாக்களில் அணி இலக்கணக் கூறுகளுக்கும் பஞ்சமில்லை. இக்காலத்தார் விரித்துக் கூறுகின்ற அனைத்து வகை அணிகளையும் குறட்பாக்களில் காணமுடிகின்றது.

அணி விளக்கம்  

அணி என்பதைப் பொதுவாக அழகுக்கு அழகுக் கூட்டுவது என்று குறிப்பிடலாம். இதனை,
படையினது உறுப்பும் ஒப்பனையும் அழகும்
                      பெருமையும் கலனும் அன்பும் அணி எனல்         (3050)
   
என்று பிங்கல நிகண்டும்,

அணி பெருமை ஒழுங்கு அழகு ஆபரணம்  முனை எல்லை
   அலங்காரம் மாலை அச்சின் அணி படை வகுப்பின்     (286)

என்று நாநார்த்த தீபிகையும் குறிப்பிடுகின்றன. பவனந்தி முனவர்,

மாடக்குச் சித்திரமும் மாநகர்க்குக் கோபுரமும்   
                              ஆடமைத் தோள் நல்லார்க்கு அணியும் போல்    (நன்னூல் 45)

என்று சுட்டுகிறார்.

தொல்காப்பியத்தில் அணி

        ஒல்காப் புகழ் தொல்காப்பியர் உவமை அணியை மட்டுமே குறிப்பிட்டுள்ளார். அவர் உள்ளுறை உவமம், ஏனை உவமம் என்று இரண்டனைக் குறிப்பிட்டுள்ளார். பின்னர் தோன்றிய அணி இலக்கண நூல்கள் அணிகளை  28 (திவாகரம்), 35 (தண்டியலங்காரம்), 64 (மாறனலவ்காரம்), 100 (சந்திரலோகம்), 102 (அணியிலக்கணம்), 120 (குவலயானந்தம்) என்று பலவாறாகக் கூறுகின்றன.

திருக்குறளில் அணிகள்


        திருக்குறளில் இடம் பெற்றுள்ள அணிகளை உவமையணி, சொல்லணி, பொருளணி, சுவையணி என்று விளக்கிக் காட்டுகிறார் முனைவர் இ.சுந்தரமூர்த்தி  (திருக்குறள் அணிநலம், சென்னைப் பல்கலைக்கழகம், 1971). பிற்காலத்து அணி இலக்கண ஆசிரியர்கள் கூறும் வகையெல்லாம் திருக்குறளில் இடம் பெற்றுள்ள அணிகளை விளக்கிக் காண இயலுமாயினும் மேற்கண்ட பாகுபாட்டின் அடிப்படையில் திருக்குறள் அணிகளைக் காணலாம்.

உவமையணி

        அணிகளில் தலையாயது உவமையணி ஆகும். தொல்காப்பியர் இவ்வணியை மட்டுமே குறிப்பிட்டுள்ளார். இவர் சுட்டிய உவமையணியைப் பிற்காலத்தார் வெவ்வேறு அணிகளாக விரித்துக் கூறினர்.

  சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
     கோடாமை சான்றோர்க்கு அணி                                                     (118)

 சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பின்
     பட்டுப் பாடூன்றும் களிறு                                                          (597)

இக்குறட்பாக்களைப் போன்றே 109, 274, 279, 308, 532, 576, 624, 650, 828, 929, 969, 1010, 1073, 1076, 1082, 1122, 1124, 1260 முதலான குறட்பாக்களிலும் உவமையணி பயின்று வந்துள்ளது.

சொல்லணி

        பொருளணி அளவிற்கு இவ்வணிகளை அறிஞர்கள் சிறப்புடையதாக ஏற்றுக் கொள்ள மாட்டார். ஆயினும் இவ்வணி செய்யுளுக்கு அழகூட்டுவன என்பதில் ஐயமில்லை. இதனை ஒரு வகை சொல் விளையாட்டு என்று கூறலாம்.
                இவ்வணியை, சொற்பின் வருநிலை அணி, சொற்பொருட்பின் வருநிலை அணி, நிரல் நிறை அணி, முரண் அணி, தீவக அணி, அந்தாதி அணி, விற்பூட்டணி என்று வகைப்படுத்தலாம்.

சொற்பின் வருநிலை அணி

 இறந்தார் இறந்தார் அனையர்  சினத்தைத்
         துறந்தார் துறந்தார் அனையர்                                 (310)

இக்குறட்பாவில் சினத்தை இறந்தார் (அளவு கடந்தார்) இறந்தவராகக் (செத்தவராக) கருதப்படுவார். அதைப்போல சினத்தைக் கைவிட்டார் (துறந்தார்) துறவியாகக் (துறந்தார்) கருதப்படுவார். இதனைப் போலவே,

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்                         (965)
என்ற குறட்பாவையும் இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். மேலும் 225, 739, 973, 985 ஆகிய குறட்பாக்களிலும் இவ்வணியைக் காண முடிகிறது.


சொற்பொருள்பின் வருநிலை அணி

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க  
    சொல்லில் பயன்இலாச் சொல்                                       (200)

      நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
   வாய்நாடி வாய்ப்பச் செயல்                                        (948)

இக்குறட்பாக்களில் ஒரே சொல் திரும்பத் திரும்ப ஒரே பொருளில் வந்துள்ளது. 12, 202, 297, 320, 350, 359, 365, 411, 428, 466, 504, 553, 602, 603, 623, 641, 645, 666, 672, 841, 849, 881, 948, 962, 973, 1041, 1194, 1279, 1286 முதலிய குறட்பாக்களிலும் இவ்வணி பயின்று வந்துள்ளது.நிரல் நிறை அணி

                நிரல் நிறை அணி என்பது வரிசையாகச் சொல்லப்பட்ட பொருள்களுக்குத் தொடர்புடையவற்றைத் தொடர்ந்து அவ்வரிசை முறையிலேயே கூறுவது ஆகும். சொற்களை நேர் நேராக இணைத்துப் பொருள் கொண்டால் நேர் நிரல் அணி; சொற்களை வரிசை மாற்றிப் பொருள் கொண்டால் எதிர் நிரல் நிறை அணி.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
               பண்பும் பயனும் அது                                              (45)

இதில் அன்பும் அறனும் என்ற சொற்களை வரிசையாக நிறுத்தி, பண்பும் பயனும் என்ற சொற்களை முறைபடக் கூறியுள்ளமையால் இது நிரல் நிறை அணி ஆகும். இவ்வணி 182, 254, 856, 876, 926 ஆகிய குறட்பாக்களிலும் பயின்று வந்துள்ளது.

எதிர் நிரல் நிறை அணி

விலங்கொடு மக்கள் அணையர் இலங்குநூல்
    கற்றாரோடு ஏனை யவர்                                              (410)

சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
    நோயும் பசலையும் தந்து                                            (1183)

முதல் குறளில் விலங்கு, மக்கள் என்ற சொற்களுக்கு ஏற்புடைய கல்லாதவர், கற்றோர் என்று சொற்களை வரிசைப்பட நிறுத்தாது வரிசை மாற்றிக் கூறியுள்ளமையால் இது எதிர் நிரல் நிறை அணி ஆகும். இதனைப்போலவே அடுத்தக் குறட்பாவிலும் சாயல், நாண் என்ற சொற்களுக்கு ஏற்ப பசலை, நோய் என்ற சொற்களை வரிசைப்படக் கூறாமல் முறைமாற்றி அமைத்துள்ளமையால் எதிர் நிரல் நிறை அணி ஆகும்.  

முரண் அணி

ஒன்றற்கு ஒன்று மாறுபடக் கூறுவது முரண் அணி ஆகும். அதாவது நன்மை, தீமை என்பன போல் முரணான சொற்களை ஒரு செய்யுளில் அமைப்பது முரண் அணி ஆகும்.

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
    கூடலில் காணப் படும்                                              (1327)

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
    அணியுமாம் தன்னை வியந்து                                     (978)

மேற்கண்ட குறட்பாக்களில் தோற்றவர் வென்றார், பெருமை - சிறுமை ஆகிய முரண்பட்ட சொற்களை அருகருகில் அமைத்து முரண்படக் கூறியுள்ளமையால் இது முரண் அணி ஆகும்.


தீவக அணி

        செய்யுளில் ஓரிடத்தில் பயின்று வந்துள்ள சொல் செய்யுளின் வெவ்வேறு இடங்களிலும் சென்று பொருந்திப் பொருள் தருவது தீவக அணி ஆகும். செய்யுளின் முதலில் உள்ள சொல் அங்ஙனம் வேறிடத்திற்குச் சென்று பொருள் தந்தால் அது முதல் நிலைத் தீவகம்; செய்யுளின் இடையில் உள்ள சொல் அங்ஙனம் வேறிடத்திற்குச் சென்று பொருள் தந்தால் அது இடைநிலைத் தீவகம்; செய்யுளின் கடையில் உள்ள சொல் அங்ஙனம் வேறிடத்திற்குச் சென்று பொருள் தந்தால் அது கடைநிலைத் தீவகம் ஆகும். இதனை நன்னூலார் தாப்பிசைப் பொருள்கோள் என்பர்.

  ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
     இழிந்த பிறப்பாய் விடும்                           (133)   - முதல் நிலைத் தீவகம்

 உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன் உண்ண
     அண்ணாத்தல் செய்யாது அளறு                  (255)  - இடைநிலைத் தீவகம்

 உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
     கள்ளுக்கில் காமத்திற் குண்டு                  (1281)   - கடைநிலைத் தீவகம்

தீவக அணி 371, 617, 773, 1094, 1196, 1281 ஆகிய குறட்பாக்களிலும் பயின்று வந்துள்ளது.

அந்தாதி

        நீரின்றி அமையாது உலகெனின்  யார்யார்க்கும்
        வானின்று அமையாது ஒழுக்கு                                                      (20)

        ஒழுக்கத்து நீத்தார் பெருமை  விழுப்பத்து
            வேண்டும் பனுவல் துணிவு                                                        (21)

     ஒரு குறளின் இறுதிச் சொல் அடுத்தக் குறளின் முதற் சொல்லாக வந்துள்ளமையால் இது அந்தாதி அணி ஆகும். திருக்குறளில் அந்தாதி அணி மிக அருகிய நிலையிலேயே காணப்படுகிறது.

விற்பூட்டணி

        முதற்சொல்லோடு இறுதிச் சொல் வந்து பொருந்திப் பொருள் தருவது விற்பூட்டணி ஆகும். அதாவது வில்லின் இரு முனைகளையும் நாண் கொண்டு பூட்டினாற் போல முதற் சொல்லுடன் இறுதிச் சொல் வந்து நின்று பொருள் தருவது எனலாம். இதனை நன்னூலார் பூட்டு வில் பொருள்கோள் என்பர்.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
        சான்றோன் எனக்கேட்ட தாய்                                                  (9)

இக்குறட்பாவில் தாய் என்னும் ஈற்றுச் சொல் ஈன்ற என்னும் முதற் சொல்லோடு சேர்ந்து பொருள் தருகிறது.

சுவையணி

        தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ள நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை ஆகிய எண்வகை சுவைகளும் திருக்குறளில் காணப்படுகின்றன. இச்சுவைகளை வள்ளுவர் தம் குறட்பாக்களில் சிறப்பாக அமைத்துள்ளார் என்று கூறலாம்.

நகை

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
        ஐந்தும் அகத்தே நகும்                                                                ( 271)

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
        தான்நோக்கி மெல்ல நகும்                                                         (1094)

இக்குறட்பாக்களில் நகும் என்ற சொல் வெளிப்படையாகவே வந்துள்ளது. இவ்வணி 167, 774, 839, 946, 1040, 1071, 1073, 1095, 1098 ஆகிய குறட்பாக்களிலும் பயின்று வந்துள்ளது.

அழுகை

    வழுத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள்
        யாருள்ளித் தும்மினீர் என்று                                                      (1317)

தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
        எம்மை மறைத்திரோ என்று                                                    (1318)

இக்குறட்பாக்களில் அழுதாள் என்ற சொல் வெளிப்படையாகவே வந்துள்ளது. இவ்வணி 1029, 1045, 1049 ஆகிய குறட்பாக்களிலும் பயின்று வந்துள்ளது.


இளிவரல்

இளிவரல் என்றால் வருத்தம் என்று பொருள்.

அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
        பிறன்போல நோக்கப் படும்                             (1047)

    பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
        ஏதில் பிணந்தழீஇ யற்று                                 (913)

இக்குறட்பாக்களில் வறுமையும் பொருட் பெண்டிர் முயக்கமும் வருத்தம் தரத்தக்கன என்று இளிவரல் சுவைபடக் கூறப்பட்டுள்ளன. இவ்வணி 257, 923, 925, 1029, 1044, 1045, 1049, 1261, 1266, 1269 ஆகிய குறட்பாக்களிலும் பயின்று வந்துள்ளது.

மருட்கை

        மருட்கை என்றால் வியப்பு என்று பொருள்.

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
        மாதர்கொல் மாலும்என் நெஞ்சு                       (1081)

தொடின்சுடின் அல்லது காமநோய்         போல
        விடின்சுடல் ஆற்றுமோ தீ                              (1159)

இவ்வணி 336, 337, 889, 1088, 1104, 1116 ஆகிய குறட்பாக்களிலும் பயின்று வந்துள்ளது.

அச்சம்

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
        கொன்றது போலும் நிரப்பு                                                      (1048)

இக்குறட்பா நாள்தோறும் வறுமையால் துன்பமுற்ற ஒருவனின் உள்ள நிலையையும் அவனது அச்ச உணர்ச்சியையும் நன்கு காட்டுகிறது.

பெருமிதம்

என்ஐமுன் நில்லன்மின் தெவ்விர் பலர்என்னை
        முன்னின்று கல்நின் றவர்                                                      (971)

இக்குறட்பா, வீரன் ஒருவன் தன் அரசனின் வீரத்தைப் பெருமைபடக் கூறுவதாக அமைந்துள்ளது.

வெகுளி


வெகுளி என்றால் கோபம் என்று பொருள்.

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
        அவியினும் வாழினும் என்                                  (420)

இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து
        கெடுக உலகுஇயற்றி யான்                            ( 1062)

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
        வல்வரவு வாழ்வார்க்கு உரை                          ( 1151)

இவ்வணி 144, 329, 848, 1050, 1080 ஆகிய குறட்பாக்களிலும் காணப்படுகின்றது.உவகை

கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
        ஒண்தொடி கண்ணே உள                                                                  (1101)

மகிழ்ச்சி என்னும் சுவையைக் கூறும் இவ்வணி 394, 1101, 1107, 1113, 1121 ஆகிய குறட்பாக்களிலும் இடம் பெற்றுள்ளது.

முடிவுரை

        குறள் வெண்பா வடிவில் கருத்துகளை வரைவதே கடினமான வேலை. இதில் வள்ளுவர் கருத்துகளைச் செறிவுடன் அமைத்துள்ளார் என்பதை அறிஞர்கள் வியக்கப் பார்த்திருக்கிறோம். ஆனால் இக்குறட்பாக்களில் அணிநலச் சிறப்பும் மேலோங்கி நிற்கிறது என்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் செய்தியாகும். திருக்குறளில் அணி நலம் என்ற பார்வையில் ஆய்வுகள் பெருமளவில் நடத்தப்பெற வேண்டும்.