சனி, 15 ஜூலை, 2017

சமூகப் பார்வையில் தமிழ்த் தனிப்பாடல்கள்

கும்பகோணத்தில் பொன்னி இலக்கியச் சுற்றம் இயங்கி வருகிறது. இதனை முன்னின்று நடத்தி வருபவர்கள் கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியின் ஆங்கிலத்துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் சி.ஜே.பிலோமின்ராஜ், தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் சி.மணி ஆகியோர் ஆவார்கள். அவர்களுக்கு உறுதுணையாக இருந்து ஆக்கப்பூர்வமாகச் செயற்பட்டு வருபவர் அன்னைக் கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர் செ.கணேசமூர்த்தி.

இதன் 19வது கூட்டம் இன்று (15.07.2017) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நான் கலந்து கொண்டு 'சமூகப் பார்வையில் தமிழ்த் தனிப்பாடல்கள்' என்ற தலைப்பில் உரையாற்றினேன்.

ஞாயிறு, 5 மார்ச், 2017

யாருக்குப் பெண்ணைக் கொடுக்கலாம்?

யாருக்குப் பெண்ணைக் கொடுக்கலாம், யாருக்குக் கொடுக்கக் கூடாது என்ற தனிப்பாடல் திரட்டில் உள்ள பாடல்கள் கீழே தரப்படுகின்றன. இப்பாடலைப் பாடியவர் யார் எனத் தெரிந்திலது. (துரை தண்டபாணி அவர்கள் பதிப்பித்த தனிப்பாடல் திரட்டு மூலமும் உரையும், உமா பதிப்பகம், சென்னை, இரண்டாம் பதிப்பு மார்ச்சு 2003)

பெண்ணை மணப்பதற்குத் தகுதி உடையவர்

புரைதபு குணனும் சீலமும் வனப்பும்
பூரண ஆயுளும் துப்பும்
கரையில்விற் பனமும் பாலனம் புரியும்
கருத்தரும் குறைவிலாது ஆக
விரவுசெல் வமுமாம் எண்வகை யுடைய
ஆடவர் விருப்புறு வண்ணம்
பரவிநின்று அவர்க்கு மகள்கொடை உதவல்
பருணிதர் கடமைய தாமால்

அருஞ்சொற்பொருள்
 புரைதபு - குற்றமற்ற நற்பண்பு
சீலம் - ஒழுக்கம்
வனப்பு - அழகு
துப்பு - ஆற்றல்
கரையில் - அளவில்லாத
விற்பனம் - கல்வி
பாலனம் புரியும் கருத்தர் - தன்னைச் சுற்றியுள்ளவரைக் காப்பவர்
குறைவிலாது - குற்றமில்லாமல்
விரவு - சேர்த்த
பருணிதர் - அறிவுடையோர்


யாருக்குப் பெண் கொடுக்கக் கூடாது?

முத்தியில் விருப்பம் உடையவன் மிடியன்
மூர்க்கன் சேண் தேயத்தில் உள்ளோன்
புத்தியில் வயிரம் பொருந்திய சூரன்
புதல்விதன் வயதின்மும் மடங்கு
தத்திய வயது ளோன்இனார் தமக்குத்
தரணியில் ஒருவரும் உள்ளம்
நந்திதன் மகளைத் தரத்தகாது என்றாக்
கணிதநூல் நவின்றிடு மன்னோ!

அருஞ்சொற்பொருள்
மிடியன் - வறியவன்
மூர்க்கன் - அரக்கக் குணமுடையவன்
சேண்தேயம் - அயல்நாடு 
வயிரம் - பழி வாங்கும் குணம்
தத்திய - அதிகமான
நந்தி - விரும்பி
கணிதநூல் - சோதிடநூல்
 

வெள்ளி, 3 மார்ச், 2017

03.03.2017இல் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறையில் நடைபெற்ற அறக்கட்டளைச் சொற்பொழிவில் பங்கேற்று நான் உரை நிகழ்த்தினேன். காட்சி விளக்கமாக எனது உரை அமைந்தது. அதன் புகைப்படங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

மாண்பமை துணைவேந்தர் அவர்கள் உரை நிகழ்த்தும்பொழுது
நிகழ்ச்சியில் பங்கேற்றோர்

நிகழ்ச்சியில் பங்கேற்ற பேராசிரியர்கள் முனைவர் ஈஸ்வரன்(தேசியக்கல்லூரி, திருச்சி),  முனைவர் அன்பழகன் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்), பேராசிரியர் தெய்வீகன் அவர்களுடன் மாண்பமை துணைவேந்தர் அவர்கள்
நிகழ்ச்சியில் பங்கேற்றோர்


நான் உரை நிகழ்த்தும்பொழுது

விரல் நுனியில் உலகம்

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் நடைபெற்ற அறக்கட்டளைச் சொற்பொழிவில் நான் 'விரல் நுனியில் உலகம்' என்னும் தலைப்பில் உரை வழங்கினேன். அதன் அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன்.

வியாழன், 2 மார்ச், 2017

தாயர் ஐவர்.....!!! தந்தையரும் ஐவர்...!!!

ஒருவருக்கு ஒரு தாய், ஒரு தந்தை இருப்பதுதான் இயற்கை நியதி. ஆனால் ஐந்து தாயாரும் ஐந்து தந்தையரும் இருக்க முடியுமா? இருக்கிறார்கள் என்கிறார் ஒரு புலவர். அவர் யார் எனத் தெரிந்திலது. (துரை தண்டபாணி அவர்கள் பதிப்பித்த தனிப்பாடல் திரட்டு மூலமும் உரையும், உமா பதிப்பகம், சென்னை, இரண்டாம் பதிப்பு மார்ச்சு 2003)
தாயர் ஐவர்

தன்னை அளித்தாள் தமையன்மனை குருவின்
பன்னி அரசன் பயில்தேவி - தன்மனைவியைப்
பெற்றாள் இவரையே பேசில் எவருக்கும்
நற்றாயர் என்றே நவில்.

தன்னைப் பெற்ற தாய், தமையன் மனைவி, ஆசிரியரின் மனைவி, அரசி, தன் மாமியார் ஆகிய ஐவருமே ஒருவருக்குத் தாயர்தான் என்று ஔவையார் கூறியுள்ளார்.

தந்தையர் ஐவர்

பிறப்பித்தோன் வித்தைதனைப் பேணிக் கொடுத்தோன்
சிறப்பின் உபதேசம் செய்தோன் - அறப்பெரிய 
பஞ்சத்தில் அன்னம் பகர்ந்தோன் பயந்தீர்த்தோன்
எஞ்சாப் பிதாக்களென எண்.

பெற்ற தந்தை, வித்தைகளைக் கற்றுக் கொடுத்தவர், உபதேசம் செய்த ஆசான், பஞ்சத்தில் உணவளித்தவர், அச்சம் போக்கியவன் ஆகிய ஐவரும் ஒருவனுக்குத் தந்தையாவர்.

ஒரு தாயார் பல பிள்ளை பெறுவதுண்டு, ஒரு பிள்ளைக்குப் பல தாயர் இருப்பதுண்டோ? என்னும் திரைப்படப் பாடல் எங்கிருந்தோ என் காதில் விழுகிறது. உங்கள் காதில் ஒலிக்கிறதா?

புதன், 1 மார்ச், 2017

அன்பிலாள் இட்ட அமுது

காணக்கண் கூசுதே கையெடுக்க நாணுதே
மாண்ஒக்க வாய்திறக்க மாட்டாதே - வீணுக்கென்
என்பெல்லாம் பற்றி எரிகின்றது ஐயையோ
அன்பிலாள் இட்ட அமுது - ஔவையார் தனிப்பாடல்

அன்பில்லாத மனைவி மட்டுமல்ல அன்பில்லாதவர்கள் - நம்மை மதிக்காதவர்கள் - வந்த விருந்தினரை மனமார உபசரிக்காதவர்கள் என யாராக இருந்தாலும் உள்ளன்போடு பரிமாறாத உணவை யாரும் உண்ணக் கூடாது. 

அத்தகைய உள்ளன்பு இல்லாத ஒருவர் பரிமாறிய உணவைக் கண்டு அஞ்சி ஔவையார் கூறுவது போன்று மேற்கண்ட பாடல் அமைந்துள்ளது.

இப்பாடலின் பொருள் இதுதான்:
அன்பில்லாதவர் படைத்த உணவைப் பார்ப்பதற்குக் கண் கூசுகின்றது; அவ்வுணவை எடுத்த உண்ண கை கூசுகிறது; ஒருவாறு கையால் எடுத்து வாயில் வைக்க முயன்றால் வாய்திறக்க மறுக்கிறது; அவ்வுணவைப் பார்க்கப் பார்க்க என் உடம்பெல்லாம் தீயாய் பற்றி எரிகிறது.

அவ்வுணவை சாப்பிடாமல் பார்த்து அஞ்சி ஐயையோ ஆளை விடு  என்று  ஓடுவது போன்று இப்பாடல் முடிக்கப்பட்டுள்ளது.

மதியாதார் தலைவாசல் மிதியாதே என்றவர்; எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே என்று வீராப்பு கொண்டவர் ஔவையார். அவ்வீராப்புணர்வுடன்தான் இப்படலைப் புனைந்துள்ளாரோ?

திங்கள், 27 பிப்ரவரி, 2017

விருந்து


               செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

              நல்விருந்து வானத் தவர்க்கு
                                                                                                (அதிகாரம்:விருந்தோம்பல் குறள் எண்:86

          வந்த விருந்தினரை அவர்கள் மனம் குளிர்கின்ற வகையில் வரவேற்றும் வேண்டியன செய்தும் அருசுவை விருந்தளித்தும் அவர்கள் விரும்பும் வரை தம் இல்லில் பாதுகாத்து அவர்கள் விரும்பும்பொழுது விருந்தினரை அனுப்பி வைப்பர். இத்தகைய விருந்துதோம்பல் என்பது தமிழ்ப் பண்பாட்டில் தலையாயது ஆகும். 

             சிலப்பதிகாரத் தலைவி கண்ணகியும் கூட கோவலனைப் பிரிந்திருந்த காலத்து இல்லறக் கடமைகளுள் முக்கியமானதான விருந்தோம்பல் செய்ய முடியவில்லையே என்று வருந்தியதை, 
                அறவோர்க்களித்தலும் அந்தணரோம்பலும் 
                துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின் 
                விருந்தெதிர்க் கோடலும் இழந்த என்னை

என்று கூறுவதிலிருந்து அறியமுடிகிறது. 

     பெரியபுராணத்தில் சிறுத்தொண்டர் புராணத்திலும் கணவன் இல்லாத வீட்டில் யான் உணவு புசிப்பதில்லை; அவர் வரும் வரை யான் கோயில் அருகில் காத்திருப்பேன் என்று பைரவர் வேடத்தில் வந்த சிவபெருமான் சென்றதாக வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.

   இவற்றையெல்லாம் பார்க்கும்பொழுது தமிழர்களின் தலையாயப் பண்பாக விருந்து உபசரித்தல் என்பது இருந்ததை உணரமுடிகிறது.

        ஆனால் இன்று அத்தைகய சிறப்பு மிக்க விருந்து பரிதாப நிலையில் உள்ளதை அவசரகதி நிறைந்த உலகில் கண்கூடாகவும் வேதனையாகவும் பார்க்க முடிகிறது. கூட்டுக் குடும்பத்தில் சிதைவு ஏற்பட்டு தனிக்குடித்தனங்கள் பெருகிவிட்ட இக்காலத்தில் விருந்தினரைக் கண்டாலே வேண்டா வெறுப்பாக நோக்குகின்ற அவலத்தைக் காண முடிகிறது.

     இத்தகைய அவலத்தை ஔவையாரும் தம் பாடல் ஒன்றில்  பதிவு செய்துள்ளார். இப்பதிவு பிற்காலத்து ஔவையாரோ அல்லது அவரது பெயரில் பதிவு செய்யப்பட்டதாகவோ இருக்கலாம்  என்று   எண்ண வேண்டியுள்ளது. சங்க கால ஔவையாரின் பதிவாக இது இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில் சங்க காலத்து விருந்தோம்பலில் குறைவிருந்ததாக அறிய முடியவில்லை.
                    இருந்து முகந்திருத்தி ஈரொடு பேன்வாங்கி
                    விருந்து வந்ததென்று விளம்ப - வருந்தி
                    ஆடினாள் பாடினாள் ஆடிப் பழமுறத்தால்
                    சாடினாள் ஓடோடத் தான் 
என்பது ஔவையாரின் பாடல்.

            நம் வீட்டுக்கு விருந்தினர் வந்திருக்கிறார் என்று கூறினால் என்ன நடக்கும் என்பதை நன்கு அறிந்திருந்த கணவன் இச்செய்தியை மனைவிக்குத் தெரிவிப்பதற்கு முன்பு அவளை நயந்து கொள்ள நினைக்கிறான்; அவளை மகிழ்விக்க முயற்சிக்கிறான். அவளின் முகத்தைத் தடவிக் கொடுத்தும் அவள் தலையைக் கோதியும் தலையிலுள்ள ஈரையும் பேணையும் எடுத்துக் கொண்டே நம் வீட்டிற்கு விருந்தினர் வந்திருக்கிறார் என்ற செய்தியைக் கணவன் அவளிடம் கூறினான். அவன் கூறியதுதான் தாமதம், அடுத்த நொடியே மனைவி ஆட்டம் போடுகிறாள்; பாட்டுப் பாடுகிறாள்;(கோபத்தில் அவளது செயல்பாடுகளைக் குறிப்பாக உணர்த்துதல்) கையில் கிடைத்த பழமுறத்தால் கணவனை ஓடோடித் தாக்குகிறாள். இதுதான் மேற்கண்ட பாடலின் பொருள். விருந்து வருந்துவதாக அமைந்ததை உணர்த்தும் பாடல். இன்று விருந்தினர் மட்டுமேயன்றி கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களும்கூட விருந்தினராகக்கருதுகின்ற நிலையையும் அந்த விருந்தினர்களுக்கு மேற்கண்ட 'உபசரிப்பையும்' காண்கின்ற பொழுது மனம் வேதனையடைகிறது.

சனி, 25 பிப்ரவரி, 2017

மூவகை மனிதர்

உலக உயிர்களை உயர்திணை, அஃறிணை எனப் பிரித்துள்ளார் தொல்காப்பியர். திருவள்ளுவர் "செயற்கரிய செய்வர் பெரியர், சிறியர் செயற்கரிய செய்கலாதார்" என்று இருவகைப்படுத்தி உள்ளார். சேக்கிழாரும் செயற்கரிய செய்தவர்களைப் பெரியர் என்று குறிப்பிட்டுள்ளார்.

உலகில் வாழு மனிதர்களை ஔவையார், இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர் என்று கூறியதை அனைவரும் அறிவோம். ஆனால் அவரே மூவகை மனிதரைக் குறிப்பிட்டுள்ளார். இதனைப் பலரும் அறிந்திருப்பரா எனத் தெரியவில்லை.

சொல்லாமலே பெரியர் சொல்லிச் செய்வர் சிறியர்
சொல்லியும் ஞெய்யார் கயவரே - நல்ல
குலமாலை வேற்கண்ணாய் கூறுவமை நாடில்
பலா மாவைப் ஆபதிரியைப் பார்

என்பது ஔவையாரின் பாடல்.

மேற்கண்ட பாடலில் உலகில் வாழும் மனிதர்களை மூவகைப்படுத்தி உள்ளார்.

1. சொல்லாமல் செய்யக்  கூடியவர்கள் பெரியர். இவர்கள் பூவாமல் காய்க்கும் பலா போன்றவர்.

2. சொல்லிச் செய்வர் சிறியர். இவர்கள் பூத்துக் காய்க்கும் மா போன்றவர்.

3. சொல்லியும் செய்யார் கயவர். இவர்கள் பூத்தும் காய்க்காத பாதிரி போன்றவர்கள்.

என்னே ஔவையாரின் உலகியல் அனுபவ அறிவு. உவமை எளிமையும் இனிமையும் உடையது. ஔவையாரின் அற்புதப் பாடல்.

ஞாயிறு, 29 ஜனவரி, 2017

அமுதசுரபியைப் பார்த்தீர்களா? கற்பகத்தருவைக் கண்டீரா?

அமுதசுரபியைப் பார்த்தீர்களா? கற்பகத்தருவைக் கண்டீரா?

அமுதசுரபி
கற்பகத்தரு

படித்திருக்கிறேன்
பாடம் கேட்டிருக்கிறேன்.

முன்னது எடுக்க எடுக்கக் குறையாது
பின்னது கேட்டதையெல்லாம் கொடுக்கக் கூடியது.
படித்திருக்கிறேன்: பாடம் கேட்டிருக்கிறேன்.

அதையே என் மாணவர்களுக்குத் தொடர்ந்து சொல்லிக் கொடுத்தும் வந்திருக்கிறேன்.

ஆனால் எனக்குள் ஒரு நெருடல்…

இப்படியும் இருக்குமா?
எப்படி இருக்க முடியும்?

இந்த நெருடலுக்கு எனக்கு விடை கிடைத்தது.

இணையம்தான்
அமுதசுரபி , கற்பகத்தரு.

ஆம். எடுக்க எடுக்கக் குறையாதது
 அள்ள அள்ளக் குறையாதது
கேட்டதையெல்லாம் வழங்கக்கூடியது.

இப்பொழுது என் மாணவர்களுக்கு எந்த நெருடலுமில்லாமல் பாடம் நடத்துகிறேன்.

நான்
அமுத சுரபியைப் பார்த்திருக்கிறேன்.
கற்பகத்தருவைக் கண்டிருக்கிறேன்.
இணையவடிவில்.

புறநானூற்றுப் பாடல் ஒன்று.
காவற்பெண்டிரால் எழுதப்பட்டது.

சிற்றில் நற்றூண் பற்றி
என்மகன் யாண்டுளன் என வினவுதி
என் மகன் யாண்டுளனாயினும் அறியேன்
ஓரும் புலி சேர்ந்து போகிய கல்லளை போல
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே

புறநானூற்று வீரத்தாய் தன் மகனை ஈன்ற வயிறுதான் இது.
அவன் இங்கில்லை என்றால் ….
அவன் இருக்குமிடம்  போர்க்களம்.

அகமும் புறமும் தமிழர்களின் இரு கண்கள்.
இருந்தாலும் இப்பாடலுக்கு மேலே சொன்ன விளக்கத்தை
செயற்கையாகவே நான் என் மாணவர்களுக்குக் கூறி வந்தேன்.

இது உண்மைதான்…
இப்படி நடந்திருக்க வாய்ப்புகள் நிறைய உண்டு
என்று எனக்கு உணர்த்தியது
ஜல்லிக்கட்டுப் போராட்டம்.

ஆமாம்…
ஒவ்வொரு வீட்டிலும்
தமிழ்த்தாயரைப் புறநானூற்றுத் தாயரைக் காணமுடிந்தது.

பிள்ளைகளை…
ஆண் பிள்ளை, பெண்பிள்ளை
என்ற பேதமின்றி
போர்க்களத்திற்கு
ஆம்… ஜல்லிக்கட்டுப் போர்க்களத்திற்கு
அனுப்பி வைத்த
நிகழ்காலப் புறநானூற்றுத் தாயரைப் பார்த்த பிறகு

காவற்பெண்டிரின் பாடலுக்கு
என் மாணவர்களுக்கு
நெருடலின்றி… தயக்கமின்றி பாடம் சொல்லுவேன்.

வாழ்க …
எம் புலவர்கள்

இல்லாததைக் கூறிடவில்லை.
நம் புரிதல்தான் கோளாறு.

இலக்கியங்களுக்கு
இணக்கமான
நிகழ்காலச் சம்பவங்கள் சான்றுகளானால்
வகுப்பறைகள் உயிர்ப்படையும்.சனி, 17 செப்டம்பர், 2016

தமிழில் அற இலக்கியங்கள்

தமிழில் அற இலக்கியங்கள்
முனைவர் க.துரையரசன்
இணைப்பேராசிரயர்
தமிழ்த்துறை
அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி)
கும்பகோணம் – 612 002
தமிழ்நாடு
மின்னஞ்சல்: darasan2005@yahoo.com

தமிழ்மொழி இலக்கிய வளம் செறிந்தது. இன்புறுத்துவதும், அறிவுறுத்துவதும் இலக்கியங்களின் தலையாயப்பணி. அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நாற்பொருள்களும் இலக்கியங்களின் விழுமியங்கள். எனினும் சில இலக்கியங்கள் அறக்கருத்துகளை எடுத்துரைத்து மனித சமுதாயத்தை நன்னெறியில் செலுத்த முயன்றன. தமிழில் சங்கம் மருவிய காலத்தில்  அற இலக்கியங்கள் பெரிதும் தோன்றின. அந்நூல்களின் தொகுப்பைப் பதிணென் கீழ்க்கணக்கு என்பர்.
பதிணைன் கீழ்க்கணக்கு நூல்களைச் சுட்டும் வெண்பா:
நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்
பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலைச் சொல் காஞ்சியுடன் ஏலாதி என்பவே
கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு
பதிணென் கீழ்க்கணக்கு நூல்களின் பெயர்கள்:
1.    திருக்குறள்
2.    நாலடியார்
3.    நான்மணிக்கடிகை
4.    இன்னா நாற்பது
5.    இனியவை நாற்பது
6.    திரிகடுகம்
7.    ஆசாரக்கோவை
8.    பழமொழி
9.    சிறுபஞ்சமூலம்
10. ஏலாதி
11. முதுமொழிக்காஞ்சி
12. கார் நாற்பது
13. ஐந்திணை எழுபது
14. ஐந்திணை ஐம்பது
15. திணைமொழி ஐம்பது
16. திணைமாலை நூற்றைம்பது
17. கைந்நிலை
18. களவழி நாற்பது
இவற்றுள்….       1 முதல் 11 வரை உள்ளவை அற நூல்கள்.
12 முதல் 17 வரை உள்ளவை அக நூல்கள்.
18 வது நூல் புற நூல்.
இத்தொகுப்பில் உள்ள நூலில் இடம் பெறத்தக்கது கைந்நிலையா? இன்னிலையா? என்பதில் மாறுபட்ட கருத்து உண்டு.
1. திருக்குறள்:  
தமிழில் உள்ள அற இலக்கியங்களில் தலைசிறந்தது.
எழுதியவர் - திருவள்ளுவர்.
பெற்றோர் - ஆதி பகவன்
காலம்  - கி.மு. முதல் நூற்றாண்டு என்பர்.
வேறுபெயர்கள்: உலகப்பொதுமறை
·         முப்பால்
·         உத்திரவேதம்
·         தெய்வநூல்
·          வாயுறை வாழ்த்து
·         பொய்யாமொழி
அமைப்பு: (மு.வ. அவர்களின் கருத்துப்படி)
Ø  வெண்பாவால் ஆனது.
Ø  1330 குறட்பாக்கள்
Ø  முதல் அடியில் நான்கு சீர்கள் அடுத்த அடியில் மூன்று சீர்கள் என மொத்தம் ஏழு சீர்கள்.
Ø  அறத்துப்பால்  – 38 அதிகாரங்கள் - 4 இயல்கள் - பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்.
Ø   பொருட்பால்                    – 70 அதிகாரங்கள் – 7 இயல்கள் – அரசியல்,  அமைச்சியல், அரணியல், கூழியல், படையியல், நட்பியல், குடியியல்.
Ø   இன்பத்துப்பால்     - 25 அதிகாரங்கள் – 2 இயல்கள் – களவியல், கற்பியல்.
சிறப்புகள்:
v  கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்                                           (திருவள்ளுவமாலை)
v  அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்                                            (ஔவையார்)
v  வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு                              (பாரதியார்)
v  உலக இலக்கியங்களில் திருக்குறளைப் போல உயர்ந்த ஞானப் பொன் உரைக்கும் நூல் வேறு இல்லை                             (ஆல்பர்ட் சுவைட்சர்)
v  வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்குணர்ந்தோர்கள் உள்ளுவரோ மனுவாதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி                          (பெ.சுந்தரம்பிள்ளை)
v  வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே  (பாரதிதாசன்)
v  முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ஜி.யு.போப்.
*   இந்நூல், தமிழின் முதலெழுத்தான அ – இல்  தொடங்கி இறுதி எழுத்தான  ன் – இல் முடிகிறது.


கர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு               (குறள் எண் 1)

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்                 (குறள் எண் 1330)
2. நாலடியார்:
      திருக்குறளுக்கு அடுத்த நிலையில் பாராட்டத்தக்கது.
நாலடி நானூறு, வேளாண் வேதம் என்றும் அழைப்பர்.
      எழுதியவர்கள் : சமண முனிவர்கள்.
      தொகுத்தவர்: பதுமனார்
      காலம்: கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிந்தையது.
அமைப்பு:
·         வெண்பாவால் ஆனது.
·         400 பாடல்களைக் கொண்டது.
·         அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால்.
சிறப்புகள்:
v  ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி
நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி
v  பழகுதமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்
v  நாலடி இரண்டடி கற்றவனிடத்து வாயடி கையடி செய்யாதே என்பது பழமொழி. நாலடி = நாலடியார்; இரண்டடி= திருக்குறள்
குறிப்பிடத்தக்கக் கருத்துகள்:
*      கல்வி கரையில கற்பவர் நாள்சில
*      ஒருவர் பொறை இருவர் நட்பு
*      கொடார் எனினும் உடையாரைப் பற்றி விடாஅர் உலகத்தவர்
3. நான்மணிக்கடிகை:
ஒவ்வொரு பாடலிலும் மணி போன்ற நான்கு கருத்துகள் உள்ளன.
எழுதியவர் – விளம்பிநாகனார்
காலம் – கி.பி. நான்காம் நூற்றாண்டு
அமைப்பு:
·         வெண்பாவால் ஆனது.
·         104+2 (கடவுள் வாழ்த்து) பாடல்களைக் கொண்டது.
சிறப்புகள்:
v  அறக்கருத்துகளைச் சங்கிலித் தொடர் போன்று கூறுகிறது.
v  திருக்குறளின் அறக்கருத்துகளைப் போன்று சிறந்த உலகியல் அறங்கள் இடம்பெற்றுள்ளன.
v  பாடல்கள் எளிய நடையில் அனைவருக்கும் புரியும் வகையில் உள்ளன.
குறிப்பிடத்தக்கக் கருத்துகள்:
*      நிலத்துக்கு அணி என்ப நெல்லும் கரும்பும்
*      குளத்துக்கு அணி என்ப தாமரை
*      பெண்மை நலத்துக்கு அணி என்ப நாணம்
*      அவைக்குப் பாழ் மூத்தோரின்மை
*      வெல்வது வேண்டின் வெகுளி விடல்
*      ஈன்றாளின் என்னக் கடவுளும் இல்
4. இன்னா நாற்பது:
ஒவ்வொரு பாடலிலும் மக்களுக்குத் துன்பம் தரும் இன்னாதவை நான்கு இடம் பெற்றுள்ளன.
எழுதியவர் –கபிலர் (சங்கப் புலவரா? பிற்காலத்தவரா? என்ற ஐயம் உண்டு)
காலம் – கி.பி. நான்காம் நூற்றாண்டு
அமைப்பு:
·         வெண்பாவால் ஆனது.
·         40+1 (கடவுள் வாழ்த்து) பாடல்களைக் கொண்டது.
சிறப்புகள்:
v  திருக்குறள் கருத்துகள் நிரம்ப இடம் பெற்றுள்ளன.
v  எளிய சொல்லாட்சி
குறிப்பிடத்தக்கக் கருத்துகள்:
*      கொடுங்கோல் மறமன்னர் கீழ்வாழ்தல் இன்னா
*      நெடுநீர் புணையின்றி நீந்துதல் இன்னா
*      கடுமொழியாளர் தொடர்பு இன்னா
*      தடுமாறி வாழ்தல் உயிர்க்கு இன்னா
5. இனியவை நாற்பது:
இன்னா நாற்பது கூறும் கருத்துகளுக்கு எதிரான இனிய கருத்துகளைக்    கூறுகிறது.
மக்கள் நன்னெறியில் வாழ அவர்கள் கடைபிடிக்க வேண்டிவற்றைக் கூறுகிறது.
சில பாடல்களில் மட்டும் நான்கு இனியவை கூறப்பட்டுள்ளது.
பெரும்பாலான பாடல்களில் மூன்று இனியவை கூறப்பட்டுள்ளது.
எழுதியவர்: பூதஞ்சேந்தனார்.
அமைப்பு:
·         வெண்பாவால் ஆனது.
·         40+1 (கடவுள் வாழ்த்து) பாடல்களைக் கொண்டது.
சிறப்புகள்:
v  127 இனியவை கூறப்பட்டுள்ளன.
v  திருக்குறள் கருத்துகள் மிகுதியாக  இடம் பெற்றுள்ளன.
குறிப்பிடத்தக்கக் கருத்துகள்:
*      குழவி தளர்நடை காண்டல் இனிது.
*      மழலை கேட்டல் அமிழ்தினும் இனிது.
*      ஊனைத் தின்று ஊனைப் பெருக்காமை இனிது.
*      கற்றறிந்தான் கூறும் கருமப் பொருள் இனிது.
*      ஒளிபட வாழ்தல் இனிது
*      கயவரைக் கைகழிந்து வாழ்தல் இனிது.
6. திரிகடுகம்
          சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்று பொருள்களால் ஆன மருந்துப்பொருள் திரிகடுகம். இது உடல் நோயைப் போக்கும்.
அது போல இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் உள்ள மூன்று கருத்துகள் மனநோயைப் போக்கும். ஆதலால் திரிகடுகம் என்பது காரணப் பெயராக அமைந்துள்ளது. 
இந்நூலை எழுதியவர்: நல்லாதனார்
காலம்: கி.பி. 5 ஆம் நூற்றாண்டு என்பர்.
அமைப்பு:
·         வெண்பாவால் ஆனது.
·         400+1 (கடவுள் வாழ்த்து) பாடல்களைக் கொண்டது.
சிறப்புகள்:
v  ஒவ்வொரு பாடலிலும் வாழ்விற்கு உறுதி பயக்கும் மும்மூன்று கருத்துகள் உள்ளன.
v  இல்வாழ்க்கை நெறிகள் மிகுதியாக காணப்படுகின்றன.
v  பெண்ணின் பெருமை மிகுதியாக கூறப்பட்டுள்ளன.
v  உலக மக்கள் சிறப்புற்று வாழ வழிவகை கூறுகின்றது.
v  மனிதர்கள் வாழ்க்கையில் தவிர்க்கப்பட வேண்டியவற்றைக் கூறுகின்றது.
v  வீடுபேறு அடைவதற்கான வழிகளைக் கூறுகின்றது.
குறிப்பிடத்தக்கக் கருத்துகள்:
*      பெண்ணிற்கு அணிகலன் நாணுடைமை
*      மக்கள் பெறலின் மனைக் கிழத்தி
*      தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்
*      வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்
*      கோளாளன் என்பான் மறவாதான்
7. ஆசாரக் கோவை:
ஆசாராம் = ஒழுக்கம், தூய்மை, நன்மை, முறைமை, நன்னடத்தை, வழிபாடு, கட்டளை, வழக்கம்.
எழுதியவர்: பெருவாயில் முள்ளியார்
காலம்: கி.பி. 5ஆம் நூற்றாண்டு
அமைப்பு:
·         வெண்பாவால் ஆனது.
·         குறள் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா ஆகியவற்றைக் கொண்டது.
·         100 பாடல்களைக் கொண்டது.
சிறப்புகள்:
v  உலகியல் ஒழுக்கங்கள் (ஆசாரங்கள்) கூறப்பட்டுள்ளன.
v  மக்கள் மேற்கொள்ளத்தக்கன; விலக்கத்தக்கன கூறப்பட்டுள்ளன.
v  உணவு உட்கொள்ளும் முறை
v  ஆடை அணியும் முறை
v  நீராடும் முறை
v  தூங்கும் முறை
முதலியன கூறப்பட்டுள்ளன. இவற்றுள் பெரிதும் இக்கால நடைமுறைக்கு ஒவ்வாதவனவாக உள்ளன.
குறிப்பிடத்தக்கக் கருத்துகள்:
*      வைகறைத் (அதிகாலையில் அல்லது விடியற் காலையில்) துயிலெழ வேண்டும்
*      தாய், தந்தையை வணங்க வேண்டும்.
*      நல்லறத்தின் வழி பொருளீட்ட வேண்டும்.
8. பழமொழி:
            பழமையான மொழி. அனுபவசாலிகள் கூறும் மொழி.
படிப்பறிவினைக் காட்டிலும் பட்டறிவு மேலானது.
பழமொழி என்பது பட்டறிவின் வெளிப்பாடு.
பழமொழி நானூறு என்றும் பெயர்.
எழுதியவர்: முன்றுறையரையனார்.
அமைப்பு:
·         வெண்பாவால் ஆனது.
·         400 பாடல்கள்  (+தற்சிறப்புப் பாயிரம்)
·         முதல் இரண்டு அடிகளில் ஆசிரியர் தாம் கருதிய பொருளைக் கூறியுள்ளார்.
·         மூன்றாம் அடி  பெரிதும் ஆண்மக்களை விளித்துக் (ஆடூஉ முன்னிலை) கூறும்; சிறுபான்மை மகடூஉ முன்னிலையாய் இருக்கும்.
·         நான்காம் அடியில் பழமொழி இடம் பெற்றிருக்கும்.
·         இலக்கியப் பழமொழிகளே இடம் பெற்றுள்ளன.
சிறப்புகள்:
v  திருக்குறள், நாலடியார் கருத்துகள் இடம் பெற்றுள்ளன.
v  சங்ககாலப் புலவர்கள், புரவலர்கள் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.
v  சேர, சோழ, பாண்டியர்கள் எனும் மூவேந்தர்கள் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன.
v  புராண, இதிகாசக் கதைகள் காணப்படுகின்றன.
v  அக்காலத் தமிழர் பண்பாடுகளை உணர்த்துகிறது.
குறிப்பிடத்தக்கக் கருத்துகள் (பழமொழிகள்):
*      தன் கையே தனக்கு உதவி.
*      திங்களை நாய் குரைத்தற்று.
*      பாம்பறியும் பாம்பின் கால்.
*      ஆயிரம் காக்கைக்கு ஓர் கல்.
*      முள்ளினால் முள் களையுமாறு.
*      இறைத்தோறும் ஊறும் கிணறு.
9. சிறுபஞ்சமூலம்:
            கண்டங்கத்திரி,சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்தின் வேர்களால் ஆன மருந்துப் பொருள் சிறுபஞ்சமூலம்.
            இம்மருந்துப் பொருள் உடல் நோயைத் தீர்க்கும். அதுபோல் இந்நூலில் உள்ள  ஒவ்வொரு பாடலிலும்  உள்ள  ஐந்து கருத்துகள் மன நோயைப் போக்கும். எனவே இந்நூலுக்கு சிறுபஞ்சமூலம் என்பது காரணப்பெயராயிற்று. 
ஆசிரியர்: காரியாசான், இவர் கணிமேதாவியாருடன் (ஏலாதி பாடியவர்) உடன் பயின்றவர் என்பர்.
காலம்: கி.பி. 5ஆம் நூற்றாண்டு என்பர்.
அமைப்பு:
·         வெண்பாவால் ஆனது
·         102 பாடல்கள் + கடவுள் வாழ்த்து
சிறப்புகள்:
v  சமணர்களுக்கான அறங்கள் கூறப்பட்டுள்ளன.
v  கூறப்பட்டுள்ள அறங்கள் பெரும்பான்மையும் எல்லாருக்கும் உரிய பொது அறங்களாக உள்ளன.
v  கொல்லாமை, புலால் உண்ணாமை பற்றிய அறங்கள் கூறப்பட்டுள்ளன.

குறிப்பிடத்தக்கக் கருத்துகள்:
*      கற்புடைப் பெண்டிர் பற்றியவை 
*      ஆசிரியர்-மாணவர் பற்றியவை    
*      நோயின்றி வாழ்பவர் பற்றியவை
*      மேதை-பேதை பற்றியவை     
*      தோலாலானக் கன்றைக் காட்டிப் பசுவிடம் பால் கறக்கும் வழக்கம் அக்காலத்தில் இருந்ததை இந்நூல் சுட்டுகிறது.
*      மயிர் வனப்பல்ல; மார்பு வனப்பல்ல; காது வனப்பல்ல; பல் வனப்பல்ல; சொல்லே (ஒருவன் பேசும் பேச்சே) வனப்பு. வனப்பு = அழகு.
10. ஏலாதி:
            ஏலம் + ஆதி = ஏலாதி. ஏலக்காயுடன் கீழ்க்கண்ட பொருள்களைச் சேர்த்து செய்யப்பட்டக் கூட்டு மருந்துதான் ஏலாதி.
1 பங்கு ஏலக்காய் + 2 பங்கு இலவங்கம் பட்டை + மூன்று பங்கு நாககேசுரம் + 4 பங்கு மிளகு +  5 பங்கு திப்பிலி + 6 பங்கு சுக்கு என்ற விகிதத்தில் ஏலாதி தயாரிக்கப்படது.
இம்மருந்துப் பொருள் உடல் நோயை நீக்கும். உடலுக்கு வலிமை சேர்க்கும். அதுபோல் இப்பாடலில் உள்ள கருத்துகள் அறியாமை நீக்கும்; மெய்யுணர்வை அளிக்கும்.
ஆசிரியர்: கணிமேதாவியார். இவர் திணைமாலை நூற்றைம்பது என்ற நூலையும் எழுதியுள்ளார். சமண சமயத்தவர்.
அமைப்பு:
·         வெண்பாவால் ஆனது.
·         80 + 2 (கடவுள் வாழ்த்து, சிறப்புப் பாயிரம்) பாடல்கள் உள்ளன.
சிறப்புகள்:
v  அரசகுலப் பிறப்பு சிறப்புடையது
v  இல்லற வாழ்வு பெறற்கரியது.
v  சமணரான இவரின் இக்கருத்து சிந்திப்பதற்குரியது.
v  கொல்லாமை, புலால் உண்ணாமை பற்றிய அறங்கள்
-       குறிப்பிடத்தக்கக் கருத்துகள்:
*      மன்னர்களுக்கு உரிய ஒழுக்கங்கள்
*      விண்ணுலக வாழ்வு பெறத்தக்கவர்கள்
*      அருளுடைமை பற்றிய கருத்துகள்
*      இனியவை கூறல் பற்றிய கருத்துகள்
*      பணிவுடைமை பற்றிய கருத்துகள்
*      நிறையுடைமை நீர்மை உடைமை
*      பொறையுடையவர், பொய்மை இல்லாதவர், புலால் உண்ணாதார், கொடைத்தன்மை உடையோர் -  பல உயிர்களுக்குத் தாய் போன்றவர்.
11. முதுமொழிக் காஞ்சி:
            சான்றோர்களின் அனுபவத் தொகுப்பாக உள்ளது.
            பழமொழியோடு தொடர்புடைய நூல்.
            மனித வாழ்வின் நிலையாமையைக் கூறுகின்றது.
            ஆசிரியர்: மதுரை கூடலூர் கிழார்.
அமைப்பு:
·         வெண்செந்துறை என்னும் பாவகை.
·         100 பாடல்கள் உள்ளன.
·         ஒவ்வொரு பாடலும் இரண்டு அடிகள் கொண்டது.
·         முதல் அடி ‘ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம்’ என்று தொடங்குகிறது.
·         பாடல்கள்  பத்து பிரிவுகளாக உள்ளன.
·         சிறந்தபத்து, அறிவுப்பத்து, பழியாப்பத்து, துவ்வாப்பத்து, அல்லப்பத்து, இல்லைப்பத்து, பொய்ப்பத்து, எளியப்பத்து, நல்கூர்ந்தபத்து, தண்டாப்பத்து.
·         ஒவ்வொரு பிரிவுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் உள்ளன.
சிறப்புகள்:
v  நிலையாமையைக் கூறுவது முக்கிய நோக்கமாயினும் அறம், பொருள், இன்பம் ஆகியவற்றையும் வலியுறுத்துகின்றது.
v  நூலின் அமைப்பு  பாராட்டத்தக்கது.
v  அனுபவ மொழிகளின் தொகுப்பு.
குறிப்பிடத்தக்கக் கருத்துகள்:
*      கற்றலின் கேட்டல் நன்று
*      ஈரம் இல்லாதது கிளை நட்பன்று
*      துன்பம் வெய்யோர்க்கு இன்பம் எளிது
*      மிக மூத்தோன் காமம் நல்கூர்ந்தன்று
*      நரையில் பெரியதோர் நல்குரவில்லை
*      இளமையில் சிறந்தன்று மெய்ப்பிணி இன்மை