ஞாயிறு, 17 நவம்பர், 2013

சோழ மன்னர்கள் - 1

      சோழ மன்னர்கள் - 1

    சங்க காலத்துக்கு முற்பட்ட சோழ மன்னர்கள் பற்றிய குறிப்புகள் கலிங்கத்துப் பரணி, மூவருலா முதலிய நூல்களிலும் திருவாலங்காடு, கர்ந்தை, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் கிடைத்த செப்பேடுகளிலும் காணப்படுகிறது. 

       தங்கள் குல முதல்வர்களாகத் திருமால், பிரம்மா ஆகிய தெய்வங்களைக் குறித்துப் பின் பிரம்மாவின் வழித் தோன்றல்களாக மரீசி, காசியபன் போன்ற முனிவர்களையும், தொடர்ந்து சூரியனையும் குறித்துக் கொள்கின்றனர். மனுவை நீதி தவறாத சோழ மன்னனாகக் குறித்துக் கொள்கின்றனர். 

     இதனைத் தொடர்ந்து தந்தை மகனாகத் தொடரும் சோழ மரபில்  இட்சுவாகு, விகுக்சி, ககுத்தன், காக்சீவதன், சூரியமன், அநலப்பிரதாபன், வேனன், பீரீது, துந்துமாறன், யுவனாசுவன், மாந்தாதா, முசுகுந்தன், வல்லபன், பிரிதுலாக்கன், பார்ரத்திப சூடாமணி, தீரக்கபாகு, சந்திரசித்தன், சங்கிருதி, பஞ்சபன், சகரன், சத்யவிரதன், உசீநரன், சிபி, மருத்தன், துஷ்யந்தன், பரதன், ரிதூபரணன், திலீபன், பகீரதன், ரகு, தசரதன், இராமலட்சுமணன பரதசத்ருகன்னர் ஆகியோரைக் குறிப்பிடுகின்றனர். 

   இவர்களைத் தொடந்து, நாபாகன், வீரசேனன், சித்ரரதன், சித்ராசுவன் ஆகியோர் குறிக்கப்படுகின்றனர். இவர்களுக்குப் பிறகு வந்தவன் கவேரன் (காவிரியின் ஓட்டத்தைச் சோழநாட்டுக்குத் திருப்பியவன்), புலிகேசி (புலிக்கொடி தந்தவன்), புட்பகேது (வானவூர்தி கண்டவன்), சமுத்ரஜித்(பாக் நீரிணைப்பை உருவாக்கியவன்), தொடித்தோட் செம்பியன் (பறக்கும் அசுரக் கோட்டைகளை அழித்தவன்), வசு (வானவூர்தி தொடர்புடையவன்), பெருநற்கிள்ளி (பொறியியல், மருத்துவக் கலைகளில் தேர்ந்தவன்), இளஞ்சேட்சென்னி (தேர்களை விரைந்து செலுத்துவதில் வல்லவன்) இவனது மகன் கரிகாலன் ஆகியோர் சங்க காலத்துக்கு முற்பட்ட சோழ மன்னர்களாகக் குறிக்கப்படுகின்றனர்.. 

    இதில் கரிகால சோழனுக்குப் பிறகுதான் சோழர்களின் வரலாறு கிடைக்கிறது. இது பற்றி பின்னர் கூறப்படும்.(ஆதாரம்: சோழர் வரலாறு- பேரா.சி.கோவிந்தராசனார், முனைவர் சி.கோ.தெய்வநாயகம், பக்.12,13)
திருச்சிராப்பள்ளி தூய வளனார் (தன்னாட்சி) கல்லூரியில் 17-07-2013 அன்று அருள்திரு சி.கே.சுவாமி சே.ச. அறக்கட்டளைச் சொற்பொழிவில் இணையம் வழி தமிழறிவு என்னும் தலைப்பில் நான் உரையாற்றினேன்.

மாமன்னன் இராசராச சோழனின் 1028வது சதயவிழா

மாமன்னன் இராசராச சோழனின் 1028வது சதயவிழா

      இராசராச சோழனின் 1028வது சதயவிழா, தஞ்சையில் அம்மன்னன் எழுப்பிய தஞ்சைப் பெரிய கோயிலில் கடந்த 10, 11-11-2013 ஆகிய இரண்டு  நாட்கள் கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் என்று பல்வேறு நிகழ்ச்சிகளுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

          முதல் நாள் நிகழ்ச்சியில் திருமுறை அரங்கம், வையகம் உயர வான்புகழ் இராசராசனின் பங்களிப்பு என்னும் தலைப்பில் கருத்தரங்கம், மாமன்னனாகத் திகழ இராசராசன் மேற்கொண்டவை என்னும் தலைப்பில் கவியரங்கம் மற்றும் பலரின் இன்னிசை அரங்கங்கள் இடம் பெற்றிருந்தன.

      இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் திருமுறை திருவீதி உலா, தேவார இசை அரங்கு, மோகினி ஆட்டம் ஆகியவை இடம் பெற்றன.

      மேலும் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் உலகம் உவப்ப மாமன்னன் இராசராசசோழன் ஆற்றிய அரும்பணிகள் அரசியல் பணிகளா? அருங்கலைப் பணிகளா? என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. பட்டிமன்றத்தின் நடுவராகக் கரந்தைக் கலைக் கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர் முனைவர் மு.இளமுருகன் செயல்பட்டார். அரசியல் பணிகளே என்னும் அணியில் நான் (முனைவர் க.துரையரசன், தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி(தன்.), கும்பகோணம்) அணித்தலைவராகவும் புலவர் கோ.கலைவாணி, தஞ்சை பிரிஸ்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜெ.மகேசன் ஆகியோர் வாதங்களை எடுத்து வைத்தோம். 

    அருங்கலைப்பணிகளே என்னும் தலைப்பில் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மு.பழனியப்பன் அணித்தலைவராகவும் புலவர் சே.கவிதா, திரு.வி.க.அரசு கலைக் கல்லூரி தமிழ் உதவிப் பேராசிரியர் முனைவர் மு.அருணகிரி ஆகியோர் வாதிட்டனர்.

     இருதரப்பு வாதங்களையும் கேட்ட பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் முனைவர் மு.இளமுருகன், உலகம் உவப்ப மாமன்னன் இராசராசசோழன் ஆற்றிய அரும்பணிகள் அருங்கலைப் பணிகளே என்று தீர்ப்பு வழங்கினார். 

        பட்டிமன்றத்தைக் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கானவர்கள் ஆர்வமுடன் செவிமடுத்துக் கேட்டதோடு பட்டிமன்றம் முடிகின்றவரை கலைந்து செல்லாமல் இருந்தது மாமன்னன் இராசராசசோழனின் பெருமையை இன்றும் மக்கள் போற்றும் வண்ணம் அமைந்திருந்தது.