வியாழன், 26 ஆகஸ்ட், 2010

காவிரி-காவேரி


தமிழ் நாட்டின் புண்ணிய நதியாகக் காவிரி ஆறு தொன்றுதொட்டு கருதப்பட்டு வருகிறது. இந்த ஆறு காவேரி என்றும் காவிரி என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. இப்பெயர்களுள் எது சரியானது என்பது குறித்து மயிலை சீனி.வேங்கடசாமி ஆய்வு செய்துள்ளார்.


முற்கால நூல்களில்; காவிரி என்ற பெயர்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. திருவாஞ்சிய புராணம், மணிமேகலை, அண்ணாமலையார் சதகம், குலோத்துங்கசோழன் உலா முதலிய நூல்களும் ஔவையார், தொண்டரடிப் பொடியாழ்வார் ஆகியோரும் காவிரி என்ற சொல்லைக் கையாள்கின்றனர் என்று கா.ம.வேங்கடராமையா எடுத்துக்காட்டுகிறார். ஆனால் சிலப்பதிகாரத்தில் மட்டும் காவேரி, காவிரி என்ற இரண்டு சொற்களும் இடம் பெற்றுள்ளன. இந்த ஆறு சிலப்பதிகாரத்தின் இயற்றமிழ்ப் பகுதியில் காவிரி என்றும், இசைத்தமிழ்ப் பகுதியில் கானல் வரியில் மட்டும் காவேரி என்றும் கூறப்பட்டுள்ளது.

கலைக்களஞ்சியத்தில் காவிரி, காவேரி என்ற இரண்டு சொற்களுக்கும் விளக்கம் தரப்பட்டுள்ளது. காகத்தால் கவிழ்க்கப்பட்டு விரிந்து பெருகிய ஆறு என்பதால் காகவிரி என்று வழங்கிய பெயரே பின்னர் காவிரி என்று மருவியது என்றும், இந்திரனது நந்தவனம் (கா) செழிக்க விரிந்தமையால் காவிரி என்று பெயர் பெற்றது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், கவேரன் மகளாக வாழ்ந்தமையால் காவேரி என்று அழைக்கப்பட்டாள். இவள் அகத்தியருக்கு மணம் முடிக்கப்பட்டாள்.

அகத்தியர் இவளது தெய்வத்தன்மையை உணர்ந்து கமண்டலத்தில் நீராக மாற்றினார். பிரமன் தவத்திற்கு இறங்கி திருமால் நெல்லி மரமாக தோன்றினார். அகத்தியரின் கமண்டலம் சூறைக் காற்றால் கவிழ்ந்து கமண்டல நீரான காவேரி ஓடியது. அது காவேரி ஆறாக மாறியது என்று கலைக்களஞ்சியம் கூறுகிறது. ஆனால் காவிரி, காவேரி என்ற இரண்டு பெயர்களில் எது சரி என்பது பற்றிய விளக்கம் கலைக்களஞ்சியத்தில் இல்லை.

இவ்வாறு இரண்டு வகையாக இந்த ஆறு இளங்கோ அடிகளால் சுட்டப்பட்டாலும் காவிரி என்பதுதான் சரியான சொல் வழக்கு. காவேரி என்பது பேச்சு வழக்கு என்று மயிலை சீனி.வேங்கடசாமி குறிப்பிடுகிறார். பேச்சு வழக்கு சொல்லான காவேரி என்ற சொல்லை இளங்கோ அடிகள் பயன்படுத்த வேண்டியதன் இன்றியமையாமையை அவர், "வரிப்பாட்டுகளின் கடைசி சொற்கள் மூவைச் சீராக முடிகின்றன. அதனால் காவிரி என்னும் ஈரசை சொல்லைக் காவேரி என்று மூவசைச் சீராக அமைத்துள்ளார். அவ்விடத்தில் காவிரி என்னுஞ் சொல்லை யமைத்தால் ஈரசைச் சீராக்கித் தலை தட்டுப்பட்டுச் செய்யுளோசை குறையுமாகையால் இவ்வாறு மாற்றியமைத்தார்" என்று காரணம் காட்டி விளக்குகிறார்.

எனவே காவேரி என்ற சொல் பேச்சு வழக்கு என்பதும், காவிரி என்ற சொல் இலக்கிய வழக்கு என்பதும் மயிலை சீனி. வேங்கடசாமியின் ஆய்வு மூலம் புலப்படுகின்றது.