வெள்ளி, 8 மே, 2020

படித்ததில் பிடித்தது - 6

கொரோனா வைரஸ் பாதிப்பால் மூன்றாவது முறையாக ஊரடங்கு 04-05-2020 முதல் 17-05-2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையில் கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் என்ற நூலை மறு வாசிப்பு செய்து வருகிறேன். இதற்கு முன்பு  2000 ஆண்டு வாக்கில் அதைப் படித்துள்ளேன். அதில் சில செய்திகளைத் தொடர்ந்து இதில் பதிவிட உள்ளேன்.

வலம் வருதல் (பக்கம் 74) 

  • ஊர் வலம் வருதல், மணவறையை வலப்புறமாக சுற்றி வருதல், மணப்பெண் முதன் முதல் வீட்டுக்குள் வலது காலை வைத்து நுழைதல் போன்றவை. 

பூமியே வலப்பக்கமாகத்தான் சுற்றுகிறது. எனவே வலம் வருதல், வலது காலை எடுத்து வைத்து வருதல் என்பவை அறிவியல் பூர்வமான  ஒன்று.
மேலும் மனிதர்களின் இடப்பக்க கை, கால்களின் வலிமையைவிட வலப்பக்க கை, கால்களே வலிமை உடையவை.
வலம் என்றால் நாம் வலிமை அடைவோம் என்பது பொருள்.
வலியோம், வல்லோம், வல்லம், வலம் - இவை ஓரே பொருள் உடையன.

வருகிறேன் - போகிறேன்  (பக்கம் 74) 

  • திருமணம் முதலிய மங்கல நிகழ்வுகளுக்குச் சென்றால் போய் வருகிறேன் என்பது - இது போன்ற அடுத்தடுத்த நல்ல நிகழ்வுகள் நடக்க வேண்டும், நான் அதில் கலந்து கொள்வேன் என்பதன் அடையாளம்.
  • துக்க நிகழ்வுகளுக்குச் சென்றால் நான் போகிறேன் என்பது - இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்கக் கூடாது என்பதன் அடையாளம்.
புதைத்தலும் எரித்தலும்:  (பக்கம் 76) 
  • திருமணம் ஆகாமல் இறப்போரை (குழந்தைகள், வாலிபப் பருவத்தினர் ) புதைப்பர். வாழாத உடம்பு மண்ணில் புதைந்து சாந்தி அடையட்டும். 
  • வாழ்ந்து இறந்தவர்களை எரிக்கிறார்கள். வாழ்ந்த உடம்பு விண்ணிலே கலந்து ஐக்கியமாகட்டும்.
  • எரித்தவர்களின் சாம்பலை நதியில் கரைப்பது - ஆத்மா ஆறு போல் ஓடி கடல் போன்ற இறைவனோடு கலக்கட்டும்.
கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்: (பக்கம் 81) 
  • உன் கணவன் கல் மனது உடையவனாக இருந்தாலும் சம்பாதிக்க முடியாத சக்தியற்ற கோழையாக (புன்மையாக) வெறும் புல்லைப் போன்று இருந்தாலும் அவனைக் கணவனாகக் கருத வேண்டும்.

அம்மி மிதித்தலும் அருந்ததி பார்த்தலும்  (பக்கம் 79) 

  • எல்லாக் குடும்பங்களிலும் அம்மி முக்கியமானது. என் கால் உன் மீதுதான் இருக்கும். உன்னைத் தாண்டிப் (படிதாண்டி) போகாது. படிதாண்டா பத்தினி.
  • அருந்ததியைப் போன்று கற்பு மாறாத நட்சத்திரமாக மின்னுவேன்.
  • அக்னி சாட்சி - கற்பில் அக்னி போன்றவள்
காப்பு அணிதல்  (பக்கம் 80) 
  • பெண்ணிற்குக் காப்பு வேண்டும். தற்காப்பு - தாய் தந்தை காப்பு - தெய்வத்தின் காப்பு. பெண்ணைக் காப்பேன் என்பதன் அடையாளமாகத்தான் கணவன் கையில் காப்பு கட்டப்படுகிறது.
மூன்று முடிச்சு (பக்கம் 80)
  • ஒரு முடிச்சு -  கணவனுக்குக் கட்டுப்பட்டவள்
  • இரண்டவாது முடிச்சு - பெற்றோருக்கு அடங்கியவள்
  • மூன்றாவது முடிச்சு - தெய்வத்திற்குப் பயந்தவள்
பாலும் பழமும் (பக்கம் 80)
  • பாலோடு சேர்ந்த பழம் போல மண வாழ்க்கை சுவை பெறட்டும்
  • பூமணம் போல மண வாழ்க்கை
காலைப் பார்த்து நட (பக்கம் 79) 
  • திருமணம் ஆனவன் - நிமிர்ந்து நடக்க வேண்டும். எதிரில் வரும் பெண் கழுத்தில் மங்கல நாண் அணிந்திருந்தால் அவள் அந்நியன் மனைவி என்று ஒதுங்கிட வேண்டும்.
  • திருமணம் ஆனவள் தலை குனிந்து நடக்க வேண்டும். எதிரில் வரும் ஆடவன் காலில் மெட்டி இருந்தால் மணமானவன் என்று அவள் ஒதுங்கிட வேண்டும். (பழங்காலத்தில் திருமணம் ஆன ஆண் காலில் மெட்டி அணிதல் வழக்கம்)
மூவகை நண்பர்கள் (பக்கம் 92-93)
  • பனைமரம்: மனிதர்களின் உதவியின்றி தானே வளர்ந்து மனிதர்களுக்குப் பயனளிக்கக் கூடியது. அதுபோல் பயன் கருதாமல் நட்பு கொள்பவர்கள்
  • தென்னை மரம்: அடிக்கடி தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டும். அப்பொழுதுதான் பயன் தரும். அதுபோல் சில நண்பர்களுக்கு அவ்வப்போது பயன் தரக்கூடியவை இருந்தால்தான் நட்பு தொடரும்.
  • வாழை மரம்; நாள் தோறும் தண்ணீர்  ஊற்றி வளர்க்க வேண்டும். அப்பொழுதுதான் பயன் தரும். அதுபோல் சில நண்பர்களுக்கு நாள்தோறும் பயன் தரக்கூடியவை இருந்தால்தான் நட்பு தொடரும்.
பெற்றோர்  (பக்கம் 114) 
  • தந்தையிடமிருந்து வித்தைப் பெற்று தாய் குழந்தை பாக்கியம் பெறுகிறாள். தந்தைக்கு அந்த வித்தைக் கடவுள் தருகிறார்.  எனவே தந்தை கடவுளிடமிருந்தும் தாய் கணவனிடமிருந்தும் பெறுவதால் அவர்கள் பெற்றோர்.