ஞாயிறு, 27 அக்டோபர், 2019
பட்டமளிப்பு உரைகள் - 3 மாமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை
அடிக்கற்களை மறக்காதீர்கள்
புதுக்கோட்டை மாமன்னர் தன்னாட்சிக்
கல்லூரியில் இன்று நடைபெறுகிற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டுள்ள கல்லூரி முதல்வர்
அவர்களே! அனைத்துத் துறைத்தலைவர்களே!, இருபால் பேராசிரியப் பெருமக்களே! கௌரவ விரிவுரையாளர்களே!
பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் பேராசிரியர் நாகேஸ்வரன் அவர்களே! பட்டம்
பெற இருக்கின்ற மாணவ மாணவிகளே! தங்களின் அன்புப் பிள்ளைகள் பட்டம் பெறுவதைக் காண ஆவலுடன்
வருகை தந்திருக்கும் பெற்றோர்களே! உங்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தினைத் தெரிவித்துக்
கொள்கின்றேன்.
இவ்விழாவிலே பட்டம் பெற இருக்கின்ற மாணவ மாணவிகளுக்கு முதற்கண்
எனது வாழ்த்துக்களை
தெரிவித்துக் கொள்கின்றேன். மூன்று ஆண்டுகளோ இரண்டு ஆண்டுகளோ படித்து இன்று பட்டம்
பெறுகின்றீர்கள். இது முடிவா? ஆரம்பமா? நீங்கள் முடிவு என்று நினைத்தால் வாழ்க்கையில்
மேன்மை அடைய முடியாது. இது ஒரு தொடக்கம். வாழ்க்கையின் ஒரு படிநிலை. ஒவ்வொரு படிநிலைகளைக் கடந்து முன்னேற வேண்டும். நீங்கள் இனிமேல்தான்
உண்மையிலேயே வாழ்க்கையைப் படிக்கப் போகின்றீர்கள். ஆதலால் இனிமேல்தான் உங்கள் கற்றல் உண்மையிலேயே தொடங்க இருக்கின்றது.
இக்கல்லூரியில் நீங்கள் அடி எடுத்து வைத்த நாளன்று உங்களுக்கு
இருந்த திறனை, அறிவை இப்போதுள்ள திறனோடும் அறிவோடும் ஒப்பிட்டுப் பாருங்கள். அதன் வளர்ச்சியை
மேன்மையை எண்ணிப்பாருங்கள்.
இந்த மேன்மைக்கும் வளர்ச்சிக்கும் இக்கல்லூரியும் இங்கு பணியாற்றும்
உங்கள் ஆசிரியர்களும் காரணம் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்,
எனவே இக்கல்லூரிக்கு
நன்றி கூறுங்கள். எதார்த்த உலகை
உங்களுக்கு அறிமுகம் செய்த பேராசிரியர்கள்,
துறைத்தலைவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும்
நன்றி கூறுங்கள்.
விண்ணைத்
தொடும் ஆலயக் கோபுரங்கள், விரிந்து கிளை பரப்பும் ஆலமரங்கள் மட்டுமே மனிதர்களின் மனநேசிப்புக்கு
உரியனவாக உள்ளன. அடிக்கற்கள் இல்லாமல் கோபுரங்கள் இல்லை. ஆணிவேர் இல்லாமல் மரங்கள்
இல்லை, இவ்வுண்மை தெரிந்தும் மனிதர்கள் அவற்றைக் கொண்டாடுவதில்லை. மாணவச் செல்வங்களே அடிக்கற்களை என்றுமே மறக்காதீர்கள்.
அடிக்கற்களான உங்கள் பெற்றோரை நன்றியோடு நினைத்துப் பாருங்கள், அவர்கள் உங்களுக்காகப்
பட்ட இன்னல்களை எண்ணிப்பாருங்கள். அவர்களின் தியாகத்தைப் போற்றுங்கள். உங்களைத் தோளில்
சுமந்த அவர்களை இனி உங்கள் தோளிலும் மனதிலும் சுமந்து செல்லுங்கள். பெற்றோர்கள் உங்களை
என்றுமே பாரமாக நினைத்ததில்லை. நீங்களும் அவர்களை ஒருபோதும் பாரமாக எண்ணாதீர்கள்.
தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இன்று
உலகம் உங்கள் பையில் உள்ளது; இல்லை இல்லை..
உங்கள் கையில் உள்ளது. உலகமே சுருங்கிப் போய்விட்டது. உலகம் குவலயக் கிராமமாகி (Global Village) விட்டது. அறிவியலால்
மகத்தான உயர்வையும் விரைவையும் பெற்ற நாம் மனித உறவுகளை முற்றிலுமாகத் தொலைத்துக் கொண்டிருகின்றோம்.
மனிதத்தை மறந்து கொண்டிருக்கிறோம் என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைய
மாணவர்களுக்கு கூகுள் மட்டுமே ஆசிரியர், பெற்றோர் ஏன் நண்பரும் கூட. கூகுள் உங்களின்
அனைத்துக் கேள்விகளுக்குமான பதிலைத் தரும், கூகுள் உங்களுக்கான வேலைவாய்ப்பைப் பெற்றுத்தரும்.
ஆனால் கூகுளால் உங்கள் இதயங்களில் என்ன உள்ளது என்பதை உணர முடியாது என்பதை நீங்கள்
உணரவேண்டிய தருணம் இது.
உங்களின்
உள்ளுணர்வு சொல்வதைக் கேட்டு உங்கள் வாழ்க்கையின் முக்கியமான முடிவுகளை எடுங்கள். அதன்படி
வாழப்பழகுங்கள். உங்கள் வாழ்க்கை சரியான திசையில் செல்லும் என்பதில் சந்தேகமில்லை.
வாழ்க்கையின்
ஒரு புறம் நீங்கள் நிற்கிறீர்கள். மறுபுறம் வெற்றி நிற்கிறது. இரண்டிற்கும் இடையே
இடைவெளி. இடைவெளியை நிரப்பி வெற்றியை அடைய உறுதுணை புரிவது எது?
தலைவிதியா?
கடின
உழைப்பா?
பெரும்பாலானோர்
வெற்றி என்பது தலைவிதியையும், கடின
உழைப்பையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என்று தான் எண்ணிக்
கொண்டிருக்கிறார்கள். ஆனால் வாழ்க்கை அனுபவத்தை வைத்துப் பார்த்தால் வெற்றி பெறபல
தன்மைகள் ஒன்றிணைய வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
உங்கள்
வெற்றிக்காக ஆயிரம்
மைல் தூரப் பயணம் கூட ஒற்றை, முதல்
அடியுடன் தான் தொடங்கும் என்பதைப் போல முதல் அடியை எடுத்து வையுங்கள்.
நிஜத்தில்
உணர்ந்திடாத ஓர் அனுபவத்தை மனக்கண்ணால் காண்பதே கற்பனை. மிகப்பெரிய அளவில்
சிந்திக்கவும், தான்
அடைய வேண்டிய இலக்கை முன் கூட்டியே மனத்திரையில் காணவும் ‘கற்பனையின்
சக்தி’ தான்
பில்கேட்ஸ்க்கு
உதவியது. பள்ளிக்குப் போவதே கசப்பான விஷயமாக இருந்த பில்கேட்ஸுக்கு
ஒரு கணினியைக்
கண்டது வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது. தன்னுடைய 13
வயதில் நண்பர்களுடன் இணைந்து ‘புரோக்ராமர்ஸ்
குரூப்’ என்ற குழுவைத்
தொடங்கினார். அதன்பிறகு ‘ஒவ்வொரு
மேஜையிலும் கணினி. ஒவ்வொரு கணினியிலும் மைக்ரோசாஃப்ட்’
என்ற
லட்சியத்தைக்
கற்பனை செய்து கொண்டார். அந்தப் பார்வையுடனே மைக்ரோசாஃப்ட்டைத் தொடங்கினார். இன்று
அவரது லட்சியம் நிறைவேறி இருக்கிறது. இச்சாதனைக்குப் பின்னால் அபரிமிதமான கற்பனை
சக்தியும், விடாமுயற்சியும்
நிறைந்திருந்தது. இது
பில்கேட்ஸின்
வாழ்க்கையில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாகும்.
உங்களது
விருப்பம் எதில் என்பதை சீக்கிரமே கண்டுகொள்ளுங்கள். பிறகு தேவையான திறமைகளை
மேம்படுத்திக் கொள்ளுங்கள். மனக்கண்ணில் எதிர்காலத்தைக் காண கற்பனை சக்தியைப்
பயன்படுத்துங்கள். இலக்குகளை அடையும்வரை கடுமையாக உழையுங்கள். உணர்வின்
வெளிப்பாடு சொல். உங்களது எண்ணங்களை வெளிப்படுத்துவதன் காரணமாக சொற்கள் சக்தி
வாய்ந்தவையாகின்றன. உள்ளுணர்வை வெளிப்படுத்துவதில் சொற்களே முக்கிய
பங்காற்றுகின்றன.
பராக்
ஒபாமா பல்வேறு இனங்களைக்
கொண்ட அமெரிக்க மக்களை ஒருங்கிணைக்கவும், மகத்தான
வெற்றி பெறவும் ‘சொற்களின்
சக்தி’ முதன்மை
வகித்தது எப்படி? 2009
ஜனவரி 20ல்
அமெரிக்காவின் 44வது
அதிபராகப் பதவியேற்றுக்கொண்ட ஒபாமா தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின்போது ‘நமக்குத்
தேவை மாற்றம்’ என்ற
கோஷத்தை எழுப்பினார்.
அந்த சக்தி
வாய்ந்த மந்திரச் சொல் தான் அமெரிக்க ஆப்பிரிக்கத் தலைவர் ஒருவரை முதன்முறையாக
வெள்ளை மாளிகையில் குடியமர்த்தியது. ஒபாமாவிடம் இருந்து அன்பு,
பலம்,
உறுதி
என்று நேர்மறையான சொற்களே வந்தது. வெறுப்பு,
பலவீனம்,
சந்தேகம்
என்று எதிர்மறை சிந்தனை பேச்சில் தலைகாட்டவே இல்லை.
மக்களுடன்
நெருக்கத்தை ஏற்படுத்த நேர்மறை சொற்களே உதவும். மனோபாவத்தை மட்டுமின்றி
தலைவிதியையும் சொற்கள் நிர்ணயிப்பதால் சொற்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை. நீங்கள்
பயன்படுத்தும் நேர்மறைச் சொற்கள் பிறருக்கு எழுச்சியூட்டுவதற்கும்,
உங்களது
வாழ்க்கையில் மாற்றத்தை உண்டாக்கவும் உதவும் என்பதே
ஒபாமாவிடம்
இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாகும்.
மனப்போராட்டத்திற்கும்,
சந்தேகக்
கண்ணோட்டத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு இலக்கை நோக்கி ஆர்வத்துடன்
பயணிக்க வழிவகுத்து, வாழ்க்கையின்
அற்புதமான மாற்றங்களுக்கு முக்கியக் காரணமாக இருப்பதுடன் கனவுகள் நிறைவேறுவதற்கு
உறுதுணையாக இருக்கும் சக்தி ‘தன்னம்பிக்கை’.
உலகின்
மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வர ஏ.ஆர். ரஹ்மானுக்கு ‘தன்னம்பிக்கையின்
சக்தி’ உறுதுணை
புரிந்தது எப்படி? ஜனவரி
6, 1966ல்
சென்னையில் ஒரு இசைக்குடும்பத்தில் திலீப் குமாராகப் பிறந்தார். 4
வயதிலேயே பியானோ வாசிக்கத் தொடங்கினார். 9
வயதில் தந்தையை இழந்தார். 11
வயதில் குடும்பத்துக்குத் துணை நிற்கவேண்டும் என்ற நிர்பந்தத்துடன் கீ-போர்ட்
வாசிப்பவராக இளையராஜாவிடம் இணைந்தார்.
சிறுவயதில் அதிக
வெட்கத்தின் காரணமாக, தனிமையில்
அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டே பாடி பார்த்த அவர் இன்று மக்களின் முன்
ஒளிவீசும் விளக்குகளுக்கு மத்தியில் பாடுகின்றார். 2008ல்
இரண்டு ஆஸ்கர் விருதுகளை ‘ஸ்லம்டாக்
மில்லியனர்’ படத்திற்கு
பெற்ற ரஹ்மான்
உலகப் புகழ் ‘மொஸார்ட்
ஆப் மெட்ராஸ்’ன்
பிரதிநிதியாக உள்ளார்
உங்களுக்கும்
உங்களது இலக்குகளுக்கும் இடையில் இடையூறாக இருப்பது உங்களது அச்சமே. அதை
ஊக்கத்துடன் எதிர்கொண்டு வெல்ல கற்றுக்கொள்ள வேண்டும்.என்பதே
ரஹ்மானின்
வாழ்வில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாகும்.
:
உங்கள் மீது
நம்பிக்கை வைத்துத் திறமைகளை வெளிப்படுத்த முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் இன்று
எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பது ஒரு விஷயமே அல்ல. தன்னம்பிக்கை உடனிருக்கும்போது
எந்த
உயரத்தையும் உங்களால்
எட்ட முடியும்.
முன்னேற்றத்திற்கு
உகந்த, தெளிவான,
கால
எல்லை வரையறுக்கப்பட்ட குறிக்கோளை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். சரியான
இடைவெளிகளில் குறிக்கோளை ஆய்வு செய்துகொள்ள வேண்டும். குறிக்கோளை நோக்கிய
பயணத்தில் உங்களை உற்சாகப்படுத்திக் கொள்வதுடன் உங்கள் நண்பர்களையும்
உற்சாகப்படுத்திக்
கொண்டு சவால்களை எதிர்கொள்ள வேண்டும்.
நீண்ட
நெடிய பயணமான வெற்றியை எட்டுவதற்குப் பல தடைகளைக் கடக்க நேரிடும். அதற்கு
தோல்விகளில் இருந்து பாடங்களை கற்றுக்கொண்டு,
நம்பிக்கையை
இழக்காமல் உற்சாகமாக பயணத்தைத் தொடர வேண்டும்.
உங்கள்
எண்ணங்களுக்குத் தொடர் முயற்சிகளின் மூலமாக நிஜத்தில் வடிவம் கொடுப்பதே செயல்.
செயல் என்பது உங்கள் குறிக்கோளை அடைவதற்குரிய பணியைச் செய்வதைக் குறிக்கும்.
இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனத்திற்கு சொந்தக்காரராகத் திகழ்ந்த திருபாய்
அம்பானிக்கு ‘செயலின்
சக்தி’ அவரை
குடிசையில் இருந்து கோபுரத்திற்கு உயர்த்தியது.
கிராமத்து
பள்ளி ஆசிரியரின் மகனாகப் பிறந்த அம்பானிக்கு,
25 ஆண்டுகளுக்குள் உலகின் கோடீஸ்வர தொழில்
அதிபர்களுள் ஒருவராக வலம்வர வேண்டும் என்று எண்ணினார். பெரிதாக யோசி,
மாறுபட்டு
யோசி, வேகமாக
யோசி, முன்னோக்கி
யோசி, சிறந்தவற்றிற்கு
குறி வை என்ற கொள்கையை
நடைமுறைப்படுத்திச் சாதித்தார். திருபாய் அம்பானியின் வாழ்க்கையில் இருந்து
கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.
இலக்குகளை
அடையவும், கனவு
நனவாகவும் செயல்களே வழிவகுக்கும். ஒருவரது சிந்தனையும்,
செயலும்
பெரிதாக இருக்க வேண்டும். அதுவே கனவுகள் நிறைவேற உறுதுணை புரியும். இலக்குகளை
அடைவதற்கு ஒரு சிறு செயலின் மூலம் தொடங்கினாலே போதும். அந்தச் சிறு செயலே
எண்ணங்கள் நிறைவேற பாதை
அமைத்துத் தரும்.
கான
முயலெய்த அம்பினில் யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது
என்பது இலக்கின் உயர்வைக் காட்டும். உங்கள் நோக்கம் உயர்வாக இருந்தால் உயர்வு
அதற்கேற்றவாறு அமையும். பட்டப்படிப்பு படித்தவர்கள் 10ஆம்
வகுப்பு மாணவர்களுக்குரிய தொகுதி 4
தேர்வு எழுதாது தொகுதி 1
தேர்வுக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் சமூகத்தின்
படிநிலைகள் சரியானதாக அமையும்.
ஒவ்வொருவர்
மனப்பாங்கும் அதற்கேற்ப கட்டமைக்கப்பட வேண்டும் மனப்பாங்கே வெற்றியின்
அஸ்திவாரமாகிறது. மனப்பாங்கானது
ஒவ்வொருவருக்கும் அவரவர் சூழல், கல்வி
மற்றும் அனுபவங்கள்
அடிப்படையில் அமைகின்றன. மனிதன் தன்னுடைய
மனப்பான்மையை மாற்றிக் கொள்வதன் வாயிலாக வாழ்க்கையை மாற்றிக் கொள்ள முடியும். இதனையே வள்ளுவர் வெள்ளத்தனையது மலர்
நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு என்று
கூறுவார்.
இந்த
நோக்குடன் புதுக்கோட்டை அரசினர் கலைக்கல்லூரி உங்களை அனுப்புகிறது என்று நம்புகின்றேன்.
நீங்கள் வெற்றி பெறுவீர்கள் ஏனெனில், இந்த கல்லூரி, உங்களுக்கானத் தகுதியை வளர்த்தெடுத்துள்ளது.
உங்கள் பேராசிரியர்கள் இதனை சாதித்துள்ளார்கள். எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத
தமிழென்று சங்கே முழங்கு என்று பாரதிதாசன் கூறியது உங்கள் வாழ்வும் வளமும் சிறக்கட்டும்
என்று வாழ்த்தி விடைபெறுகின்றேன். நன்றி வணக்கம்.
பட்டமளிப்பு உரை - 2 அரசு மகளிர் கல்லூரி, கும்பகோணம்.

படிப்பு நமது உரிமை; சமூகப்பணி நமது கடமை
முதல்வர் அவர்களே, கல்லூரி ஆட்சிமன்ற குழு உறுப்பினர்களே. பல்கலைக்கழகப் பிரதிநிதிகளே, பேராசிரியப் பெருமக்களே பெற்றோர்களே மற்றும் பட்டம் பெற பெருவிழைவோடு காத்திருக்கும் மாணவியர்களே உங்களுக்கு எனது வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இவ்விழாவில் கலந்துகொள்வதற்கு என்னை அழைத்த
இக்கல்லூரியின் முதல்வர் மற்றும் ஆலோசனைக்குழு உறுப்பினர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை முதலில் தெரிவித்துக்
கொள்கின்றேன். அருகாமையில் உள்ள ஆடவர் கல்லூரி
பேராசிரியராக நான் பணியாற்றிய போது இக்கல்லூரிக்கு பல்வேறு பணிகளுக்காக இங்கு வந்துள்ளேன்
எனினும் இந்நிகழ்வு புதியதொரு அனுபவத்தைத் தருகிறது.
நாட்டின் வளர்ச்சிக்கு வருங்காலத் தலைமுறைகளாகிய
உங்களின் பணி மிகவும் அவசியமானதாகும். சமுதாயச்
சீர்திருத்தம் வேறு சமூகக் கடமை வேறு. சீர்திருத்தம்
எதிர்ப்புகளைத் தேடித் தரும்.
சேவை உங்களுக்கு மனநிறைவைத்
தரும்.
கல்வியாளர்கள் சிறந்த நாடு நம்நாடு இருப்பினும், அறியாமை நிலவும் நாடு; மருத்துவர்களில் சிறந்தவர் இந்நாட்டிலே உண்டு; இருப்பினும் பிணிகளும் உண்டு. பல்வகையான வளங்களும் உண்டு; இருப்பினும் பங்கீட்டு முறைகளில் குறைகளும்
உண்டு. இப்படி எதில் எடுத்தாலும் இருப்பினும்
என்ற சொல் இருக்கும் நிலை நாட்டில் உள்ளது; இந்நிலை மாற வேண்டும்.
இந்தக் குடந்தை மண், உலகிற்கு ஆன்மீக மண் என்ற பெருமை
உள்ளது. எனினும், இம்மண்ணில் பிறந்த தியாகிகள் பலர்; கல்வியாளர்கள் பலர்; இத்தகைய மண்ணில் பெண்கள் ஏற்றம் காண 50 ஆண்டுகளாக முனைப்புடன் இயங்கிவரும் பெருமைமிகு அரசினர் கல்லூரியில் நீங்கள்
பட்டம் பெற இருக்கீன்றீர் என்ற பெருமை உங்களுக்கு இருக்க வேண்டும்.
ஆய்ந்தறிதல் வேண்டும் அதற்கேற்ப அஞ்சாமை வேண்டும். இன்றேல் சிந்தனையைச் சிறையிலிட்டுக் கொடுமையினை அரசாட்சி செய்வதற்கு
உடந்தையாகி விடுவோம் என்று அறிஞர் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் கூறியதை ஈண்டு நினைவு கூர்கின்றேன். நமது அறிவு, கொடுமைகளைக் கண்டு அஞ்சாது துணிந்து போராடும் மனத்திடத்தை நமக்கு அளிக்க வேண்டும்.
பட்டம் பெறும் இந்த நாள் நமது உள்ளம் மகிழ்ச்சியில்
பொங்கிடும் நன்னாள் என்பதில் ஐயமன்று. ஆயினும்
மகிழ்ச்சிக்கு மட்டுமே உரியதன்று.
நாட்டின் புகழை ஏற்றம்
செய்வதற்கு உரிய பணியைத் துவங்கிடுவதற்குரிய நன்னாளாக இதனை நீங்கள் உணர வேண்டும்.
ஒவ்வொரு மனிதன் மனதிற்குள்ளும் நல்லொழுக்கத்தின்
குரல் ஒலித்துக் கொண்டுதான் இருக்கும். அதை
உற்றுக்கேட்டால் யாருக்கும் தவறு செய்யத் தோன்றாது. இன்றைய இளையோருக்கு ஒரு வேண்டுகோள். அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தபோது
வெளிப்பட்ட்து முதலில் ஆலகால விஷம்தான். அதன் பின்பு வந்ததுதான் உயிர்காக்கும் அமுதம். படிக்குக் வயதிலேயே அவசரப்பட்டு ஆலகால விஷத்தை
அருந்துவதைவிட புலனடக்கம் காத்துப் பின் அமுதம் பருகுங்கள்.
இது போட்டியும் பொறாமையும் நிறைந்த உலகம். தகுதியுள்ளது உயிர் வாழும் என்னும் உயிரியல்
விதிக்கேற்ப தமது இருப்பைத் தக்க வைக்க ஒவ்வொருவரும் போராட வேண்டியுள்ளது, முயற்சியும் உழைப்பும் மனிதனை நேர்மையாய்
உயர்த்தும் படிநிலைகள்.
அப்படிநிலை இல்லை எனின் மனிதனுக்கு வளர்ச்சி இல்லை; வாழ்க்கை என்பது இல்லவே இல்லை.
வாழ்க்கை கடினம்தான். ஆனால், வெற்றிக்கான வழி அங்கேதான்
இருக்கிறது!" என்பது
ஆன்றோர் மொழி. விதியினை நொந்து கொள்ளாது கீழே வீழ்ந்த
எவனொருவன் வீழ்வது எழுவதற்கே என்று எழுகின்றானோ அவனே
முயற்சியின்
மூல மந்திரம் அறிந்தவன்.
ஐன்ஸ்டீனுக்கு
அடுத்து மாபெரும் விஞ்ஞானி எனக் கருதப்பட்ட ஸ்டீபன் ஹாக்கின்ஸ் மரணம்
அடைந்ததாக அறிவிக்கபட்டிருக்கின்றது
மிகப் பெரும் அறிவாளி அவர். விண்வெளி ஆராய்ச்சி
அவரின் பிடித்தமான விஷயம். இளம் வயதிலே டாக்டர் பட்டம் வாங்கிய ஹாக்கின்ஸ் 21
வயதில் மிகக்
கடுமையான நரம்பு நோயினால் பாதிக்கpபட்டார். அதாவது கை கால் அசையாது, பேசமுடியாது. கிட்டத்தட்ட பக்கவாத நிலை.. என்ன செய்துவிட முடியும்? ஆனால் அவரின் அறிவினைப் பாழாக்க விரும்பாத விஞ்ஞான சமூகம் அவருக்கு பிரத்யேக எந்திரத்தைத் தயார் செய்தது, ஆம் விழி அசைவில் இயங்கும் கணிணி மூலம்
உலகோடு பேசத்
தொடங்கினார்
கவனியுங்கள், பேனா இல்லை பேப்பர் இல்லை, புத்தக குறிப்புகளுமில்லை ஆனால் அவர்
தன் ஆராய்ச்சி முடிவினை கண்களால் சொன்னபொழுது உலகம் அதிர்ந்தது இவரின் இயற்பியல்
கணிதத்தை எளிய முறையில் மாணவர்களுக்கு கற்பிக்கும் சூத்திரமான "காலம் ஒரு
வரலாற்று சுருக்கம்" எனும் திட்டத்தை உலகம் ஏற்றுகொண்டது, அதற்காக அவருக்கு 6 மில்லியன் டாலர் பரிசும் கிடைத்தது. அவர் எழுதிய இரு புத்தகங்கள் A
Brief History of Time, The Universe in a Nutshell விஞ்ஞான உலகின் புதிய ஏற்பாடாகக் கொண்டாடப்படுகின்றன. கண்களைத் தவிர ஏதும் அசைக்க முடியா மனிதனா இவ்வளவு
விஷயங்களைக்
கொடுத்தான் என நம்பவே முடியாத அதிசயம் அவர்.
விஞஞானிகள் ஒவ்வொரு முடிச்சையும் விட்டுச் செல்வார்கள், அதனை இன்னொரு விஞ்ஞானி வந்து
அவிழ்ப்பார், இந்தச் சங்கிலி தொடரால்தான் இவ்வுலகம்
இவ்வளவு மாற்றங்களைப்
பெற்றது. அப்படி கலிலியோ, கோபர் நிக்கஸ், நியூட்டன், ஐன்ஸ்டீன் வரிசையில் வந்தவர்
ஹாக்கின்ஸ். விண்வெளி இயற்பியல்,
குவாண்டம், காஸ்மோலாஜி என பல துறைகளை எங்கோ இழுத்து
நிறுத்திவிட்டு மறைந்திருக்கின்றார். இனி
வரும் உங்களில்
ஒருவராகப் பட்டம் பெறும் இளம்விஞ்ஞானிகள்
அதிலிருந்து இன்னும் உயர்த்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.
உயர்கல்வியைக் கட்டிக் காத்திட
செலவிடப்படும் தொகை அனைத்தும் இச்சமூகத்தின் வருவாயிலிருந்து
செலவிடப்பட்டவையாகும். இந்தப்
பெண்கள் கல்லூரியிலிருந்து பட்டம் பெறும்
பட்டதாரிகளே! நீங்கள் எவ்வாறு இச்சமூகத்திற்குத் திருப்பிச் செலுத்தப் போகிறீர்கள்? என்று நான் உங்களைக் கேட்க விழைகின்றேன்? நீங்கள் இந்தச் சமூகத்திற்குத்
திருப்பித் தராத வகையில் வரும் தலைமுறையினர் வெறும் கருவூலத்தையே காணவேண்டி வரும்.
நீங்கள் பெறும் உயர் கல்வி, சமூகத்திற்கு செய்யவேண்டிய பொறுப்பை
உங்களுக்கு அதிகரிக்கச் செய்கிறது. ஆகவே, உங்கள் லட்சியம் சீரிய குறிக்கோளாக அமைய வேண்டும். உங்கள் மீது உங்கள்
பெற்றோர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்; உங்கள்
மீது உங்கள் பேராசிரியர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்;
அது போன்று உங்கள் மீது மிகுதியான
நம்பிக்கை வைத்திருப்போர்களில் நானும் ஒருவன் புதியதோர் உலகம் செய்வோம் என்னும்
புரட்சிக் கவியின் வாக்கினை மெய்ப்பிக்க
உங்களைவிடச் சிறந்த திறன் பெற்றவர் யார் இருக்க முடியும்? உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி.
ஆகவே, விருப்பமான துறைகளில் ஈடுபடவிருக்கும்
பட்டம் பெற்ற மாணவியர் தாங்களால் இயன்ற சமூகசேவையைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நீங்கள் பயணம் செய்யும் உலகம்,
உங்கள் எண்ணத்தை மங்கச் செய்யலாம்; உறுதிபாட்டைக் குலைக்கலாம்; தன்னலம் தேடுவோர் அரியணை
ஏறுவதையும் உண்மையாய் உழைப்பவர்களுக்குப் பொல்லாங்கு பேசப்படுதலையும் நீங்கள் காணலாம்.
ஆனால், சேவை மனப்பான்மையுடன் தொடர்ந்து எதிர்த்துப் போராடும் மனவூக்கத்தோடு செயலாற்றுபவர்களுக்கு
வெற்றி வசமாகித் தான் உள்ளது என்பது காலம் உணர்த்தும் உண்மை.
தமிழர்களாகிய நாம் ஈராயிரம் ஆண்டுகளாக
உயர்த்திப் பிடித்த உண்மையுங்கூட என்பதை புறநானூற்றுக் கவிதை வாயிலாக அறிகின்றோம்.
இந்த உலகம் எதனால் வாழ்கிறது, அதாவது உண்டாலம்ம இவ்வுலகம் என்ற வினாவுடன்
தொடங்கித் தனக்கென வாழா பிறர்க்கென முயலும் வாழுநரால் என்ற விடையுடன்
முடியும் கவிதையின் வலிமை இன்றும் இக்கவிதை போற்றப்படுதலுக்கு காரணமாக அமைகின்றது.
தற்போது நீங்கள் வாழும் இந்தியாவின் நிலையில் இருந்து சற்றே
உயர்த்தி உங்கள் காலத்தில் சற்றே
உயர்த்திப் பிடித்தால் நான் இந்த உரையாற்றியதன் எதிர்வினையாய்க் கருதி மிகுந்த உவகையடைவேன்
என்று கூறி இவ்விழா
உரையினை நிறைவு செய்கின்ற வேளையில் பட்டம் பெறுகின்ற உங்கள் அனைவரையும் மீண்டும்
வாழ்த்தி விடைபெறுகின்றேன் நன்றி வணக்கம்.