புதன், 2 ஜனவரி, 2008

List of 64 arts /அறுபத்துநாலு கலைகள்

List of 64 arts /அறுபத்துநாலு கலைகள்
"ஆய கலைகள் அறுபத்துநான்கினையும்" என்று பலரும் சொல்லக் கேள்விபட்டிருக்கின்றோம்.
ஆனால் அந்த அறுபத்துநாலுகலைகள் தான் யாவை என்று தெரிவதில்லை. தமிழ் இணைய மின்அஞ்சல் தளத்தில் இது பற்றி கேள்வி, பதில் தொடர் ஒன்று நடைபெற்றது. மலேசியா தமிழ் நண்பர் மா. அங்கையாவின் தொகுப்பை தமிழ் இணைய நண்பர்களுக்காக இந்த தமிழ் மின் நூலகத்தில் கொடுத்துள்ளேன்.
Source courtesy: From Maa.Angaiah of Malaysia
http://www.geocities.com/ResearchTriangle/5828/64kalai.htm
________________________________________
'நாலு வேதம், ஆறு சாத்திரம், பதினெண் புராணம், அறுபத்துநாலு கலைஞானம்' என்பது ஆரிய இலக்கியப் பாகுபாடாதலால், 'அறுபத்துநாலு கலை' என்பது தமிழ் மரபன்று. 'அறுபத்துநாலு கலை' என்னும் பொருட்டொகப் பெயர் தமிழாதலாலும், அறுபத்துநாலாக வகுக்கப்பட்ட கலைகள் அனையவும் தமிழர்க்கும் உரியனவாதலாலும், தமிழ்க்கலைகள் ஆரியக் கலைகட்குக் காலத்தால் முந்தியனவாதலாலும், அறுபத்துநாலு கலைப்பட்டி இங்குத் தரப்பட்டுள்ளது.

முதற்பட்டி ஆரிய நூன்மரபை முற்றுந் தழுவியது. வடசொற்களெல்லாம் மொழிபெயர்க்கப்பட்டு, தென்சொற்கள் முன்னும் வடசொற்கள் பிறைக்கோட்டுட்பின்னும் குறிக்கப்பட்டுள்ளன. இருமொழிக்கும் பொதுச் சொற்கள் அல்லது ஏற்கெனவே தமிழாயிருக்குஞ் சொற்கள், பிறைக்கோட்டுச் சொல்லின்றித் தமித்து விடப்பட்டுள்ளன.

இரண்டாம் பட்டி பிற்காலத்ததாதலால், சிறிது வெறுபட்டும் பெறும்பாலும் தமிழ்ச் சொற்களைக் கொண்டும் உள்ளது.

அறுபத்துநாலுகலை என்னும் தொகுப்பு, வடமொழிக் காமசூத்திரம் (Kaama Suutra) என்னும் இன்பநூலின் ஆசிரியரான வாத்சாயன (Vaatsaayana) ருடையதாதலால், அந் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பாளரான பர். சந்தோச குமார முக்கர்சி (Dr. Santhosh Kumar Mukherji) பாகுபடுத்திக் கூறிய அறுபானாற்கலை ஆங்கிலப் பட்டியலை இங்குத் தருகின்றேன்.

அந்த அறுபத்துநாலுகலைகளின் பட்டியலை
மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் தொகுத்த
செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி
(A Comprehensive Etymological Dictionary of the Tamil Language )
Vol. 1 , Part - 1 பக்கம் 545-548 வரையிலும் கண்டுள்ளபடி
இங்கே பட்டியலிட்டுள்ளேன். தெரிந்துகொள்ளுங்கள்.



அறுபத்துநாலுகலை (பெ.) `காமசூத்திரம்' என்னும் பழைய சமற்கிருத நூலிற் சொல்லப்பட்டுள்ள அறுபத்துநான்கு கலைகளும் அறிவியல்களும்.

அறுபத்து நாலு கலைகளாவன:

1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்);
2. எழுத்தாற்றல் (லிகிதம்);
3. கணிதம்;
4. மறைநூல் (வேதம்);
5. தொன்மம் (புராணம்);
6. இலக்கணம் (வியாகரணம்);
7. நயனூல் (நீதி சாத்திரம்);
8. கணியம் (சோதிட சாத்திரம்);
9. அறநூல் (தரும சாத்திரம்);
10. ஓகநூல் (யோக சாத்திரம்);
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);
16. மறவனப்பு (இதிகாசம்);
17. வனப்பு;
18. அணிநூல் (அலங்காரம்);
19. மதுரமொழிவு (மதுரபாடணம்);
20. நாடகம்;
21. நடம்;
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);
23. யாழ் (வீணை);
24. குழல்;
25. மதங்கம் (மிருதங்கம்);
26. தாளம்;
27. விற்பயிற்சி (அத்திரவித்தை);
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);
30. யானையேற்றம் (கச பரீட்சை);
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை);
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்);
35. மல்லம் (மல்ல யுத்தம்);
36. கவர்ச்சி (ஆகருடணம்);
37. ஓட்டுகை (உச்சாடணம்);
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);
39. காமநூல் (மதன சாத்திரம்);
40. மயக்குநூல் (மோகனம்);
41. வசியம் (வசீகரணம்);
42. இதளியம் (ரசவாதம்);
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);
47. கலுழம் (காருடம்);
48. இழப்பறிகை (நட்டம்);
49. மறைத்ததையறிதல் (முஷ்டி);
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);
51. வான்செலவு (ஆகாய கமனம்);
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);
54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்);
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);
64 சூனியம் (அவத்தைப் பிரயோகம்).

வேறொரு பட்டியல்

1. பாட்டு (கீதம்);
2. இன்னியம் (வாத்தியம்);
3. நடம் (நிருத்தம்);
4. ஓவியம்;
5. இலைப்பொட்டுக் (பத்திர திலகம்) கத்தரிக்கை;
6. பல்வகை யரிசி பூக்களாற் கோலம் வைத்தல்;
7. பூவமளியமைக்கை;
8. ஆடையுடை பற்களுக்கு வண்ணமமைக்கை;
9. பள்ளியறையிலும் குடிப்பறையிலும் மணி பதிக்கை;
10. படுக்கையமைக்கை;
11. நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை (ஜலதரங்கம்);
12. நீர்வாரி யடிக்கை;
13. உள்வரி (வேடங்கொள்கை);
14. மாலைதொடுக்கை;
15. மாலை முதலியன் அணிகை;
16. ஆடையணிகளாற் சுவடிக்கை;
17. சங்கு முதலியவற்றாற் காதணியமக்கை;
18. விரை கூட்டுகை;
19. அணிகலன் புனைகை;
20. மாயச்செய்கை (இந்திரசாலம்);
21. குசுமாரரின் காமநூல் நெறி (கௌசுமாரம்);
22.கைவிரைவு (ஹஸ்தலாவகம்);
23. மடைநூலறிவு (பாகசாத்திர வுணர்ச்சி);
24. தையல்வேலை;
25. நூல்கொண்டு காட்டும் வேடிக்கை;
26. வீணை யுடுக்கைப் பயிற்சி (வீணை டமருகப் பயிற்சி);
27. விடுகதை (பிரேளிகை);
28. ஈற்றெழுத்துப் பாப் பாடுகை;
29. நெருட்டுச் சொற்றொடரமக்கை;
30. சுவைத்தோன்றப் பண்ணுடன் வசிக்கை;
31. நாடகம் உரைநடை (வசனம்) யிவற்றினுணர்ச்சி;
32. குறித்தபடி பாடுகை (ஸமஸ்யாபூரணம்);
33. பிரம்பு முத்தலியவற்றாற் கட்டில் பின்னுதல்;
34. கதிரில் நூல் சுற்றுகை;
35. மரவேலை;
36. மனைநூல் (வாஸ்து வித்தை);
37. காசு, மணி நோட்டம் (நாணய ரத்னங்களின் பரிசோதனை);
38. நாடிப்பயிற்சி (தாதுவாதம்);
39. மணிக்கு நிறமமைக்கையும் மணியின் பிறப்பிட மறிகையும்;
40. தோட்டவேலை;
41. தகர்ப்போர் சேவற்போர் முதலிய விலங்கு பறவைப்போர்;
42. கிளி நாகணங்கட்குப் பேச்சுப் பயிற்றுவகை;
43. உடம்பு பிடிக்கையும் எண்ணைய் தேய்க்கையும்;
44. குழூவுக்குறி (சங்கேதாக்ஷரங்களமத்துப் பேசுகை);
45. மருமமொழி (ரகசிய பாஷை);
46. நாட்டுமொழி யறிவு (தெசபாஷை யுணர்ச்சி);
47. பூத்தேர் (புஷ்பரதம்) அமக்கை;
48. முற்குறி (நிமித்தம்) அமைக்கை;
49. பொறியமைக்கை;
50. ஒருகாலிற் கொள்கை (ஏகசந்தக்கிராகித்வம்);
51. இருகாலிற் கொள்கை (துவிசந்தக்கிராகித்வம்);
52. பிதிர்ப்பா (கவி) விடுக்கை;
53. வனப்பு (காவியம்) இயற்றுகை;
54. உரிச்சொல்லறிவு (நிகண்டுணர்ச்சி);
55. யாப்பறிவு;
56. அணியறிவு (அலங்காரவுணர்ச்சி);
57. மாயக்கலை (சாலவித்தை);
58. ஆடையணியுந் திறமை (உடுத்தலிற் சாமர்த்தியம்);
59. சூதாட்டம்;
60. சொக்கட்டான்;
61. பாவை (பொம்மை), பந்து முதலியன வைத்தாடுகை;
62. யானயேற்றம், குதிரையேற்றம் பயிற்சி;
63. படக்கலப் பயிற்சி;
64. உடற் (தேகப்) பயிற்சி (சது.).

இணையமும் இனிய தமிழும்

இணையமும் இனிய தமிழும்


முன்னுரை

உலகையே குவலயக் கிராமமாக மாற்றிவிட்ட ஆற்றல் வாய்ந்த தொழில்நுட்பம்தான் இணையம். இணையத்தில் இல்லாதது எதுவுமே இல்லை என்ற அளவிற்கு அனைத்துத் தகவல்களையும் தன்னகத்தே கொண்டதாக இணையம் திகழ்கிறது. கேட்டவர்களுக்குக் கேட்ட வரங்களை - தகவல்களை அள்ளி வழங்கும் அமுதசுரபியாக இது விளங்குகிறது. தகவல் களஞ்சியமாகத் திகழ்கிற இணையத்தில் கிடைக்கும் தமிழ் இலக்கியங்கள், அதனை வழங்கும் நிறுவனங்கள் பற்றிய செய்திகளை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.

எல்லாம் இணையம்தான்

இணையம் என்ற ஆற்றல் வாய்ந்த ஆயுதத்தைக் கல்வியாளர்கள் பரவலாகப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் தமிழ் ஆசிரியர்களும - பேராசிரியர்களும், மாணவர்களும் - ஆய்வாளர்களும் எந்த அளவிற்கு இதனைப் பயன்படுத்துகின்றனர் என்பது கேள்விக்குறியே. இவர்கள் இணையத்தைப் பயன்படுத்துவதன் இன்றியமையாமையை விளங்கிக் கொள்வதோடு அதில் போதிய பயிற்சியும் பெற வேண்டும்.

ஏனெனில், இன்று எல்லா தகவல்களையும் இணையத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டிய கட்டாய நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறோம். பாட நூல்கள், பாடத்திட்டங்கள், வினா வங்கிகள், தேர்வு முடிவுகள், வேலை வாய்ப்புச் செய்திகள் என அனைத்தும் இணையத்தில் வழங்கப்படுகின்றன.

எனவே, இணையத்தில் அனைத்துத் தகவல்களும் கிடைப்பதனால் அதனைப் பயன்படுத்த முனைவதும் முழுவதும் பயன்படுத்திக் கொள்ளும் திறம் பெறுவதும் நலம் பயக்கும். இதனைப் பிற துறை சார்ந்தவர்கள் நன்கு பயன்கொள்வது போல தமிழ்த்துறை சார்ந்தவர்களும் பயன்கொள்ள வேண்டும்.

மூன்று ‘எ’

முன்பெல்லாம் ஒரு நூலைத் தேடிப் பல்வேறு இடங்களுக்கும், நூலகங்களுக்கும் செல்ல வேண்டும். அங்கு அவை கிடைக்கலாம் அல்லது கிடைக்காமல் போகலாம். ஆனால் இணையத்தில் தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள் வெகுவாக கிடைக்கின்றன; இலவசமாகக் கிடைக்கின்றன; நூல்வடிவில் கிடைப்பனவற்றை விட பன்மடங்கு வசதிகளோடு கிடைக்கின்றன. எவையெவை - எங்கெங்கு - எவ்வெவ்வாறு கிடைக்கின்றன என்பதைத் தெரிந்து கொண்டால்,
தங்களின் பொன்னான காலத்தை வீணடிக்காமல் கடமையைக் கண்ணாகக் கருதி செயல்பட்டு வெற்றியடைய முடியும்.






தமிழ் இணையப் பல்கலைக்கழகம்

தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களை இணையத்தில் வழங்கும் நிறுவனங்களில் முன்னணியில் நிற்பது தமிழ் இணையப் பல்கலைக்கழகம் ஆகும். இந்நிறுவனம் தமிழக அரசினால் 17-02-2001 இல் சென்னையில் உள்ள

தரமணியில் துவங்கப்பட்டது. உலகு தழுவி வாழும் தமிழர்களும் தமிழ் படிக்கும் ஆர்வலர்களும் அரிச்சுவடி முதல் ஆராய்ச்சி வரை பயில்வதற்கு உரிய வகையில் இப் பல்கலைக்கழகச் செயற்திட்டங்கள் வகுக்கப்பட்டன. இங்கு தற்பொழுது இளங்கலைப் பட்டம் (B.A.) வரையிலான படிப்பு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இதன் செயல்திட்டங்களுள் ஒன்றுதான் இப்பல்கலைக்கழகத்தின் மின் நூலகம்.

த.இ.ப. மின் நூலகம்

இப்பல்கலைகழக மின் நூலகத்தில் தொல்காப்பியம் முதற்கொண்டு இக்கால இலக்கியம் வரையிலான 200க்கும் மேற்பட்ட நூல்கள் இடம் பெற்றுள்ளன. ஏறக்குறைய 75,000 பக்கங்களுக்கு மேல் இம்மின்நூலகத்தில் இடம் பெற்றுள்ளன.



இலக்கண நூல்கள்

இன்றைய நிலையில் தமிழகத்தில் பெரிதும் பயன்பாட்டில் உள்ளதும் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பாடமாக அமையப் பெற்றதுமான இலக்கண நூல்கள் முழுவதும் த.இ.ப.வின் மின் நூலகத்தில் உள்ளன. தொல்காப்பியம்,
நன்னூல், புறப்பொருள் வெண்பாமாலை, நம்பியகப்பொருள், தண்டியலங்காரம், வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், தமிழ் நூல், முத்துவீரியம், சுவாமிநாதம், அறுவகை இலக்கணம் ஆகிய இலக்கண நூல்கள் உரையுடன் அமைந்துள்ளன.

இலக்கிய நூல்கள்

சங்க இலக்கியம், பதினெண் கீழ்க்கணக்கு, ஐம்பெரும் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்களுள் நாககுமார காவியம், உதயணகுமார காவியம், யசோதர காவியம், நீலகேசி, பெருங்கதை, கம்பராமாயணம், வில்லிபாரதம், திருவிளையாடற் புராணம் ஆகிய நூல்கள் இதன்கண் இடம் பெற்றுள்ளன.

சமய இலக்கியங்கள்

பன்னிரு திருமுறைகள், நாலாயிர திவ்ய பிரபந்தம், தேம்பாவணி, இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய மனோகரம், இயேசு காவியம், சீறாப்புராணம், நெஞ்சில் நிறைந்த நபிமணி, நாயகம் எங்கள் தாயகம், நாயகம் ஒரு காவியம், யூசுப் ஜூலைகா ஆகிய பல்சமய இலக்கிய நூல்களும் இந்நூலகத்தில் இடம் பெற்றுள்ளன.

சிற்றிலக்கியக்கங்கள்

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், கேக்கிழார் பிள்ளைத்தமிழ், திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ், அபிராமி அந்தாதி, திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி, கச்சிக்கலம்பகம், தண்டலையார் சதகம், அறப்பளீசுர சதகம், குமரேச சதகம், கொங்கு மண்டல சதகங்கள், பாண்டிமண்டல சதகம், திருக்குற்றாலக் குறவஞ்சி, தியாகேசர் குறவஞ்சி, தணிகைப் புராணம், அட்டபிரபந்தம், புலவராற்றுப்படை, அழகர் கிள்ளைவிடு தூது, தமிழ்விடு தூது, இரணியவதைப் பரணி, கலிங்கத்துப் பரணி, நளவெண்பா, நந்தனார் சரித்திர கீர்த்தனைகள் ஆகிய சிற்றிலக்கிய நூல்கள் இந்நூலகத்தில் உள்ளன.

பிற நூல்கள்

மேற்காட்டிய நூல்களேயன்றி சிவப்பிரகாச சுவாமிகள், தாயுமானவ சுவாமிகள், குமரகுருபர சுவாமிகள், பாரதியார், பாரதிதாசன், முடியரசன், அழ.வள்ளியப்பா, தமிழ் ஒளி, தேவநேயப் பாவாணர் ஆகியோரின் படைப்புகள் பலவும் இந்நூலகத்தில் காணக்கிடைக்கின்றன.

மயிலை சீனி.வேங்கடசாமியின் சமணமும் தமிழும், பௌத்தமும் தமிழும், மு.வ.வின் தமிழ் இலக்கிய வரலாறு, தெ.பொ.மீ.யின் தமிழ் மொழி வரலாறு, ந.சி.க.வின் தமிழகம், தமிழ் இந்தியா, கா.அப்பாதுரையின் குடியாட்சி, சுந்தரம்பிள்ளையின் மனோன்மணீயம், நா.வானமாமலையின் தமிழர் நாட்டுப்பாடல்கள், காத்தவராயன் கதைப்பாடல், முத்துப்பட்டன் கதை, கி.வா.ஜகந்நாதனின் மலையருவி உள்ளிட்ட பல் வகைமை நூல்கள் இதன்கண் இடம் பெற்றுள்ளன.

அகராதிகளும் கலைச்சொற்களும்

த.இ.ப.வின் மின் நூலகத்தில் இலக்கண, இலக்கிய நூல்களேயன்றி சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி, சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ் அகராதி, பால்ஸ் அகராதி, மு.சண்முகம்பிள்ளையின் தமிழ்-தமிழ் அகரமுதலி ஆகிய நான்கு அகராதிகளும், முப்பதுக்கும் அதிகமான துறைகளைச் சார்ந்த 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட கலைச்சொற்களும் உள்ளன.



சிறப்பம்சங்கள்

ஃ குறிப்பிட்ட நூல்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட உரைகள்
கிடைக்கின்றன.

ஃ திருக்குறளுக்கு தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியின்
உரை உள்ளிட்ட எழுவரின் உரைகள் கிடைக்கின்றன.

ஃ சங்க இலக்கியங்களுக்கு எண், சொல், பக்கம், பாடினோர்,
வள்ளல்கள், மன்னர்கள், திணை, கூற்று, பாடல் முதல்
குறிப்பு, மரங்கள், செடிகள், கொடிகள், மலர்கள், தானியங்கள், பழங்கள், விலங்குகள், பறவைகள், மீன்கள் என்ற அடிப்படையில் வேண்டிய செய்திகளை உடனடியாகத் தேடிப் பெறுகின்ற வசதி.

ஃ தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளை உலகத்தார்க்கு
எடுத்துக்காட்டும் வகையில் அமைந்த 143 சைவ, வைணவக் கோயில்களின் ஒலி, ஒளிக் காட்சிப் பதிவுகள், பரதநாட்டியம், பொம்மலாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம், நாதசுரம், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பல்வேறு பண்பாட்டுக் காட்சியகம்.
ஃ தேவாரப்பாடல்களை இசையுடன் கேட்கும் வசதி.

ஃ அனைவரும் படித்து விளங்கிக் கொள்ள ஏதுவாக எளிய
முறையில் பதம் பிரிக்கப்பட்ட கடின நூல்கள்.

இத்துணை சிறப்பு வாய்ந்ததும் அரியதுமான நல்லதொரு மின் நூலகத்தைத் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் உருவாக்குவதில் அப்பல்கலைக்கழகத்தின் முதல் இயக்குநரும் இந்நாள் பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தருமான முனைவர் பொன்னவைக்கோ அவர்களுக்குப் பெரும்பங்கு உண்டு.

மதுரைத் திட்டம்

இஃது உலகளாவிய தமிழர்கள் இணையம்வழி ஒன்றுகூடி தமிழ் இலக்கியங்களின் மின்பதிப்புகளை உருவாக்கி அவற்றை இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் தமிழார்வலர்களும் இலவசமாகப் பெற வசதி செய்யும் ஒரு தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம் ஆகும். இதனை சுவிட்சர்லாந்து நாட்டில் வாழும் தமிழர் டாக்டர் கே.கல்யாணசுந்தரம் அவர்கள் தொடங்கினார்கள். இத்திட்டம் எதிர்வரும் சனவரி 2008 இல் தனது பத்தாம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாட இருக்கிறது.

________________________________________


இத்திட்டத்தில் ஏறக்குறைய 300 தமிழ் நூல்கள் இணையப் பார்வையாளர்களுக்குக் கிட்ட வகை செய்யப்பட்டுள்ளது. இந்நூல்களை அகர வரிசை, நூல் வரிசை, கால வரிசை அடிப்படையில் டிஸ்கி (TISCII) குறியீட்டு முறையிலும், ஒருங்குறியீட்டு (UNICODE) முறையிலும் இத்திட்டம் வழங்குகிறது.

இத்திட்டத்தின் சிறப்பம்சம் யாதெனில் யார் வேண்டுமானாலும் தமிழ் இலக்கியங்களை மின்பதிப்பு செய்து இவர்களின் அனுமதியோடு இம்மின்தொகுப்பில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் இத்தொகுப்பில் உள்ள நூல்கள் ஒருங்குறியீட்டு (UNICODE) முறையிலும் கிடைப்பதனால் எழுத்துரு (Fonts) பிரச்சினை இல்லாமல் நூல்களைப் படிக்க முடியும். ஆனால் இத்தொகுப்பில் வேண்டிய தகவல்களைத் தேடிப் பெறும் வசதி ஒருசில நூல்களுக்கு மட்டுமே டிஸ்கி (TISCII) குறியீட்டில் உள்ளது. தமிழ் இணையப் பல்கலைக்கழக நூலகத்தில் வேண்டிய தகவல்களைத் தேடிப் பெறுவது போல இத்திட்டத்தில் தகவல்களைப் பெற இயலாது. ஆனால் தமிழ் இணையப் பல்கலைக்கழக மின் நூலகத்தில் நூல்கள் ஒருங்குறியீட்டு முறையில் இல்லாமையால் அதனைக் கண்ணுறுவதில் எழுத்துரு பிரச்சினை ஏற்படுகிறது.

இந்திய மொழிகளுக்கான நடுவண் நிறுவனம் (Central Institute of Indian Languages - CIIL)

மைய அரசு நிறுவனமான இது மைசூரில் உள்ள மானசகங்கோத்ரியில் அமைந்துள்ளது. இந்நிறுவனம் தமிழ் நூல்களை அதன் பழைமை குன்றாமல் அதாவது மூலப் பிரதியில் உள்ளவாறே இணையவழியில் அளிப்பதற்கான முயற்சியில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. விரைவில் தமிழ் நூல்களை இதன் இணைய தளத்தில் காணலாம்.

தற்பொழுது தொல்காப்பிய நூற்பாக்கள் சிலவற்றையும், சங்க இல்கியப் பாடல்கள் சிலவற்றையும் இசைவடிவில் இணையத்தில் வழங்கியுள்ளது. பாடல்கள் மட்டுமின்றி நூற்பாக்களைக்கூட இசை வடிவில் வழங்க முற்பட்டுள்ள இந்நிறுவனத்தின் முயற்சிப் பாராட்டுக்குரியதாகும்.

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்

ரோஜா முத்தையா செட்டியாரின் நினைவால் சிக்காகோ பல்கலைக்கழகம் இந்நூலகத்தை 1989 முதல் நடத்தி வருகிறது. ஏறக்குறைய 1 இலட்சம் அரிய நூல்களும், இதழ்களும் இந்நூலகத்தில் உள்ளன. நூலாசிரியர், நூலின் தலைப்பு, நூல் வெளிவந்த ஆண்டு என்ற அடிப்படையில் இந்நூலகத்தில் உள்ள நூல்களின் பட்டியல் ஆராய்ச்சியாளர்கள் தேடிப்பெறும் வகையில் இணையத்தில் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. இருந்த இடத்தில் இருந்துகொண்டே ஆய்வுக்குத் தேவையான நூல்கள் உள்ளனவா என்பதை அறிந்து கொண்டு வேண்டிய நூல்கள் இருந்தால் இந்நூலகத்திற்குச் சென்று பயன் கொள்ளலாம்.

பிற நிறுவனங்கள்

மேலே கூறப்பட்ட நிறுவனங்கள் மட்டுமன்றி, 1. Institute of Indology and Tamil Studies, Univ of Koeln, Germany 2. Tamil Heritage Foundation 3. Million Ebooks Project ஆகிய நிறுவனங்களும் தமிழ் நூல்களை இணையத்தில் நேரடியாக வழங்காமல் மதுரைத் திட்டத்தில் இருந்து எடுத்து வழங்குகின்றன. எனவே இவை பற்றி தனித்தனியே குறிப்பிடப்படவில்லை.



முடிவுரை
பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினானே

என்பதற்கேற்ப வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தமிழ் பயில்வோரும் - பயிற்றுவிப்போரும் தங்களின் பணியை எளிமையும் ஏற்றமும் உடையதாக மாற்றிக் கொள்ள இணையம் பெருந்துணையாய் நிற்கும். எனவே, போட்டிகள் நிறைந்த இருபத்தோராம் நூற்றாண்டினைத் தமிழ் படிக்கும் மாணவர்கள் திறனுடன் எதிர்கொள்ள இணையப் பயன்பாட்டில் அவர்களை மேலோங்கச் செய்வோம்.


பயன்கொள்ள வேண்டியவை;

1. தமிழ் இணையப்பல்கலைக்கழகம் - www.tamilvu.org
2. மதுரைத் திட்டம் - www.tamil.net/projectmadurai
3. இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் - www.ciil.org
4. ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் -
www.lib.uchicago.edu/e/su/southasia/rmrl.html

சாகித்திய அகாதமி விருது பெற்றவர்களும் படைப்பும்

சாகித்திய அகாதமி விருது பெற்றவர்களும் படைப்பும்
வ.எண் படைப்பாளர்கள் படைப்புகள் ஆண்டு
1. ரா.பி.சேதுப்பிள்ளை தமிழ் இன்பம் 1955
2 கல்கி அலைஓசை 1956
3 கி.இராஜகோபாலாச்சாரியார் சக்கரவர்த்தித் திருமகன் 1958
4 மு.வரதராசன் அகல் விளக்கு 1961
5 மீ.ப.சோமு அக்கரைச் சீமையிலே 1962
6 அகிலன் வேங்கையின் மைந்தன் 1963
7 பி. ஆச்சாரியா ராமானுஜர் 1965
8 ம.பொ.சிவஞானம் வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு 1966
9 கி.வா.ஜெகநாதன் வீரர் உலகம் 1967
10 அ.சீனிவாசராகவன் வெள்ளைப்பறவை 1968
11 பாரதிதாசன் பிசிராந்தையார் 1969
12 கு.அழகிரிசாமி அன்பளிப்பு 1970
13 நா.பார்த்தசாரதி சமுதாய வீதி 1971
14 ஜெயகாந்தன் சில நேரங்களில் சில மனிதர்கள் 1972
15 ராஜம் கிருஷ்னன் வேருக்கு நீர் 1973
16 க.த.திருநாவுக்கரசு திருக்குறள் நீதி இலக்கியம் 1974
17 இரா.தண்டாயுதம் தற்காலத் தமிழ் இலக்கியம் 1975
18 இந்திரா பார்த்தசாரதி குருதிப்புனல் 1977
19 வல்லிக்கண்ணன் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 1978
20 தி.ஜானகிராமன் சக்தி வைத்தியம் 1979
21 கண்ணதாசன் சேரமான் காதலி 1980
22 மா.இராமலிங்கம் புதிய உரைநடை 1981
23 பி.எஸ்.இராமையா மணிக்கொடி காலம் 1982
24 தொ.மு.சி.இரகுநாதன் பாரதி; காலமும் கருத்தும் 1983
25 லட்சுமி ஒரு காவேரியைப் போல 1984
26 அ.ச.ஞானசம்பந்தன் கம்பன் புதிய பார்வை 1985
27 க.நா.சுப்பிரமணியம் இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் 1986
28 ஆதவன் முதலில் இரவு வரும் 1987
29 வா.செ.குழந்தைசாமி வாழும் வள்ளுவம் 1988
30 லா.ச.ராமாமிர்தம் சிந்தாந்தி 1989
31 சு.சமுத்திரம் வேரில் பழுத்த பலா 1990
32 கி.ராஜநாராயணன் கோபல்லபுரத்து மக்கள் 1991
33 கோ.வி.மணிசேகரன் குற்றாலக் குறிஞ்சி 1992
34 எம்.வி.வெங்கட்ராம் காதுகள் 1993
35 பொன்னீலன் புதிய தரிசனங்கள் 1994
36 பிரபஞ்சன் வானம் வசப்படும் 1995
37 அசோகமித்திரன் அப்பாவின் சினேகிதர் 1996
38 தோப்பில் முகமது மீரான் சாய்வு நாற்காலி 1997
39 சா.கந்தசாமி விசாரணைக் கமிஷன் 1998
40 அப்துல் ரகுமான் ஆலாபனை 1999
41 தி.க.சிவசங்கரன் விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள் 2000
42 சு.செல்லப்பா சுதந்திர தாகம் 2001
43 சிற்பி ஒரு கிராமத்து நதி 2002
44 வைரமுத்து கள்ளிக்காட்டு இதிகாசம் 2003
45 ஈரோடு தமிழன்பன் வணக்கம் வள்ளுவ 2004
46 திலகவதி கல்மரம் 2005
47 மு.மேத்தா ஆகாயத்திற்கு அடுத்த வீடு 2006




நாட்டுமையாக்கப்பட்ட நூல்களின் விபரங்கள்

வ.எண் நூலாசிரியரின் பெயர் ஆண்டு ரூபாய்
1 சுப்பிரமணிய பாரதியார் ------- -------
2 ம.பொ.சிவஞானம் 1984 1 இலட்சம்
3 பாரதிதாசன் 1990 10 இலட்சம்
4 பேரறிஞர் அண்ணா 1995 75 இலட்சம்
5 பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 1995 10 இலட்சம்
6 தேவநேயப் பாவாணர் 1996 20 இலட்சம்
7 மறைமலையடிகள் 1997 30 இலட்சம்
8 திரு.வி.க. 1998 20 இலட்சம்
9 கல்கி 1998 20 இலட்சம்
10 கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை 1998 5 இலட்சம்
11 ப.ஜீவானந்தம் 1998 5 இலட்சம்
12 வெ.இராமலிங்கம்பிள்ளை 1998 5 இலட்சம்
13 வ.உ.சிதம்பரனார் 1998 5 இலட்சம்
14 ஏ.எஸ்.கே.ஐயங்கார் 1998 -----
15 வ.இராமசாமி ஐயங்கார் 1998 -----
16 நாவலர் சோமசுந்தர பாரதியார் 1998 5 இலட்சம்
17 கவிஞர் கா.மு.ஷெரீப் 1998 5 இலட்சம்
18 பரலி சு.நெல்லையப்பர் 1998 5 இலட்சம்
19 வ.வே.சு.ஐயர் 1998 5 இலட்சம்
20 காரைக்குடி சா.கணேசன் 1998 5 இலட்சம்
21 ச.து.சு.யோகி 1998 5 இலட்சம்
22 வெ.சாமிநாதசர்மா 2000 5 இலட்சம்
23 கவிஞர் முடியரசன் 2000 10 இலட்சம்
24 மயிலை சீனி.வேங்கடசாமி 2000 10 இலட்சம்
25 சாமி.சிதம்பரனார் 2000 10 இலட்சம்
26 கா.அப்பாதுரையார் 2001 10 இலட்சம்
27 புதுமைபித்தன் 2002 5 இலட்சம்
28 கு.ப.சேது அம்மாள் 2002 5 இலட்சம்
29 ந.மு.வேங்கடசாமி நாட்டார் 2004 5 இலட்சம்
30 க.நா.சுப்பிரமணியம் 2004 5 இலட்சம்
31 ந.பிச்சமூர்த்தி 2004 5 இலட்சம்
32 தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் 2005 5 இலட்சம்
33 த.நா.குமாரசாமி 2005 5 இலட்சம்
34 மாயூரம் வேதநாயகம் பிள்ளை 2005 5 இலட்சம்
35 சக்தி வை.கோவிந்தன் 2005 5 இலட்சம்
36 ம.பொ.சிவஞானம் 2006 10 இலட்சம்
37 புலவர் குழந்தை 2006 10 இலட்சம்