ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

பெருங்கடுங்கோ

பாலை பாடிய பெருங்கடுங்கோ

           பாலை பாடுவதில் வல்லவர் என்பதன் அடையாளமாக இவர் பாலை பாடிய பெருங்கடுங்கோ என்று அழைக்கப்பட்டார். மேலும் இவரது பாடல்கள் ஒன்று தவிர மற்ற அனைத்துப் பாடல்களுமே பாலைத்திணையில் அமைந்துள்ளன என்பதாலும் இவர் அங்ஙனம் அழைக்கப்பட்டார்.  இவர் பாடிய பாடல்கள் எட்டுத்தொகையில் இடம் பெற்றுள்ளன. மொத்தம் 68 பாடல்கள் பாடியுள்ளார். 

        அகநானூற்றில் 12 பாடல்கள் (5, 99, 111, 155, 185, 223, 261, 267, 291, 313, 337, 379) நற்றிணையில் 10 பாடல்கள் (9, 48, 118, 202, 224, 256, 318, 337, 384, 391) குறுந்தொகையில் 10 பாடல்கள் (16, 37, 124, 135, 137, 209, 231,262,283,398), பாலைக்கலியில் 35 பாடல்கள் (1-35), புறநானூற்றில் 1 பாடல் (282) என இவரது பாடல்கள் 67 காணப்படுகின்றன. இவற்றுள் குறுந்தொகையில் இடம் பெற்றுள்ள 231-வது பாடல் தவிர மற்ற அனைத்துப் பாடல்களும் பாலை பற்றியவை.   

   இவர் இசைவாணர்களுக்குப் பெரிதும் உதவியுள்ளார். கொடையிலும் வீரத்திலும் சிறந்தவர். இவர் அறநூல், மரநூல், விலங்குநூல், இயற்றமிழ் நூல், இசைத்தமிழ் நூல், ஓவிய நூல்  ஆகியவற்றில் வல்லவர். இவரது பாடல்களில் உயர்ந்த உவமை, வாழ்க்கை வனப்பு, அறமுறை, ஆண்மைச் செல்வம் ஆகியன அமைந்திருக்கும். ஏறத்தாழ 216 உவமைகள் இவர் பாடல்களில் அமைந்துள்ளதாக இந்திரா இமானுவேல் பாலை பாடிய பெருங்கடுங்கோ என்ற தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.