திங்கள், 9 பிப்ரவரி, 2009

ஒளவையாரின் சிந்தனைகள்

5. ஒளவையாரின் சிந்தனைகள்

இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மக்களிடையே தொடர்ந்து போற்றப்பெறும் புலவர் பெருமாட்டியருள் ஒளவையாரின் அருமைத் திருப்பெயரை அறியாதோர் யாரும் தமிழ்நாட்டில் இல்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவரை அறிவர்.

ஒளவையார் என்றதும் சுட்டப்¢ பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்ற ஒளவைக்கும் முருகப் பெருமானுக்கும் நடந்த உரையாடலே அனைவருக்கும் நினைவுக்கு வரும். கிடைத்தற்கரிய நெல்லிக்கனியை அதியமான் இவரிடம் அன்புடன் கொடுக்க அதனை ஒளவை உண்டு நீண்ட காலம் உயிர் வாழ்ந்தார் என்ற வரலாற்றுச் செய்தி தமிழில் இலக்கிய வரலாறு அறிந்தோருக்கு நன்கு நினைவுக்கு வரும்.

தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயரவர்கள் என்றால், தமிழ்ப் பாட்டி இந்த ஒளவையார்தான். இப்பெயரில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் வாழ்ந்தார்கள் என்று அறியப்¢பட்டுள்ளது.

ஒளவையார் என்ற பெயர் தமிழில் தாய்க்கும், தெலுங்கில் பாட்டிக்கும், கன்னடத்தில் மூதாட்டியாகிய கிழவிக்கும் வழங்கப்¢படுவதாக கன்னட மொழி அகராதிக்காரரான கிட்டல் என்பவர் குறிப்பிடுகிறார். அம்மை என்ற சொல்லின் திரிபு அவ்வை என்றும் அச்சொல்லுடன் ஆர் என்ற மரியாதைப் பன்மை விகுதி சேர்ந்து அவ்வையார் (ஒளவையார்) என்ற சொல் தோன்றியது என்றும் அறிஞர்கள் குறிப்பிடுவர்.

இன்றைய சான்றோர் சிந்தனைப் பகுதியில் 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப்¢படுகிற ஒளவையாரின் சிந்தனைத் துளிகளைக் காண்போம்;

அறிவால் - குணத்தால்- செய்கைகளால் - மேம்பட்டவர்களை மக்களில் மேலோர் என்ற பொருண்மையில் மேன்மக்கள் என்று அழைப்¢பர். இவர்கள் தங்களின் நல்ல பண்புகளிலிருந்து சிறிதும் பிறழ மாட்டார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மையாகும். இவர்கள் தங்களுக்குக் கேடு வந்துற்றபொழுதும் கூட தங்களின் மேலான குணாதிசயங்களிலிருந்து மாறுபட மாட்டார்கள் என்று ஒளவையார் தௌ¤வுபடக் கூறியுள்ளார். அதற்கு அவர் கூறுகின்ற உவமைகள் மிக அழகானவை - எளிமையானவை - பாமரருக்கும் புரியும் விதத்தில் அமைந்தவை.

பால் சுவை மிகுந்தது. அதனைக் காய்ச்சினால் அதன் சுவை மேலும் அதிகரிக்கும்; சுண்டக் காய்ச்சிக் குடித்தால் அதன் சுவையே தனிதான். சங்கு நல்ல வெள்ளை நிறத்தில் இருக்கும். அதனைச் சுட சுட அதன் நிறம் மேலும் மேலும் மெருகேறும் - வெள்ளை நிறம் பளிச்சிடும்.

இவை பாமரரும் அறிந்த உண்மையாகும். அனைவருக்கும் தெரிந்த இந்த உண்மைப் பொருள்களைக் கூறி - இவை போல மேன்மக்கள் தங்களின் செல்வம் உள்ளிட்ட தகுதி நிலைகளிலிருந்து தளர்ந்து போய்விட்டாலும் - அதாவது கெட்டுப் போய்விட்டாலும் தங்களின் மேலான குண நலன்களிலிருந்து மாறுபட மாட்டார்கள் என்பதை ஒளவையார் தமக்கே உரிய பாணியில் பாடல் புனைந்துள்ளார். இக்கருத்தை வெளிப்¢படுத்தும் பாடல் இதுதான்;

அட்டாலும் பால்சுவையின் குன்றாது அளவளவாய்நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.

மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் அடுத்தவருக்கு உதவி செய்து வாழ்தல் வேண்டும். ஐந்தறிவு படைத்த விலங்கினங்களிடத்திலே கூட இந்த நல்ல பண்பு இருக்கும் பொழுது ஆறறிவு படைத்த மக்களிடத்து மட்டும் இது குறைவாகவே காணப்¢படுவது வருத்தத்திற்குரியது ஆகும்.
ஒருவருக்குச் செய்கின்ற உதவி அவரிடமிருந்து பிறிதொரு பயனை எதிர்பார்த்ததாக இருத்தல் கூடாது. உதவி உதவி வரைத்தன்று என்பது வள்ளுவம். அங்ஙனம் ஒருவர் செய்த உதவியை மறந்து விடவும் கூடாது. ஏனெனில் நன்றி மறப்¢பது நன்றன்று.

உதவி என்பது யார் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் தேவைப்படுகின்ற பொழுது செய்யலாம். நல்லவர்கள் அதனை நினைத்துக் கொண்டே இருப்பார்கள். காலம் காலமாக உதவி செய்தவர்களுக்கு அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டே இருப்பார்கள். நல்லவர்கள் அல்லாதவர்கள் பிறர் செய்த உதவியை விரைவில் மறந்து விடுவர்.

செய்த உதவி ஒன்றுதான். ஆனால் செய்யப்¢பட்டவர்களின் தன்மைக்கேற்ப நினைக்கப்¢படுகிறது அல்லது மறக்கப்¢படுகிறது. இந்த இரண்டும் உலகத்தில் நடக்கின்ற நிகழ்வுகள்தாம். இதனை உள்வாங்கிக்
கொண்ட ஒளவையார் அதனைத் தம் பாடலில் மிகத் தௌ¤வுபட எடுத்துரைக்கிறார். அப்¢பாடல் வரிகள் இதுதான்;

நல்லார் ஒருவருக்குச் செய்த உபகாரம்கல்போல் எழுத்துப்போல் காணுமே - அல்லாதஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்நீர்மேல் எழுத்துக்கு நேர்
கல்மேல் எழுதுகிற வழக்கம் நம் தமிழகத்தைப் பொறுத்தவரை பன்னெடுங்காலத்திற்கு முன்பிலிருந்தே நிலைபெற்றிருக்கிற ஒன்றாகும். அதனால்தான் நம் முன்னோர்கள் பல செய்திகளை அழியாமல் பாதுகாக்கும் பொருட்டு கல்வெட்டுக்களாக வடித்துள்ளனர் - செப்புப் பட்டயங்களாகத் தந்துள்ளனர்.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளான போதிலும் இன்றும் பல கல்வெட்டுச் செய்திகள் அழியாமல் பல உண்மைகளை நமக்குப் பறைசாற்றி நிற்கின்றன. மேலும் மேலும் பல கல்வெட்டுக்கள் புதிதாக கண்டுபிடிக்கப்¢பட்டு வருகின்றன. இன்னும் பல கண்டுபிடிக்கப் படாமலேயே புதைநிலையில் அமிழ்ந்துள்ளன. எனவே கல்வெட்டுச் செய்திகள் சாகா வரம் பெற்றவையாகும்.

இக்கருத்தை ஒளவையார் மிக அழகாகக் கையாண்டுள்ளார். நல்ல மனிதர்களுக்குச் செய்த உதவி கல்மேல் எழுதிய எழுத்துப் போல என்றும் நிலைத்து நிற்கும். பிறர் செய்த உதவியை நல்லவர்கள் என்றுமே மறப்¢பது இல்லை. இதனால்தான் ‘நல்லார் ஒருவருக்குச் செய்த உபகாரம்கல்போல் எழுத்துப்போல் காணுமே’ என்று ஒளவையார் குறிப்பிடுகிறார்.

ஆனால் தீயவர்களுக்குச் செய்த உதவி இதற்கு நேர் மாறானது. அவர்கள் பிறர் செய்த உதவியை உடனேயே மறந்து போய்விடுவர். எனவே இவர்களுக்குச் செய்த உதவி என்பது நீர் மேல் எழுதிய எழுத்துப் போன்றதாகும். நீர் மேல் எழுத முடியாது என்பதும் அப்¢படியே எழுதினாலும் நிலைத்து நிற்காது என்பதும் உலகம் அறிந்த உண்மை.

கல்லெழுத்து, நீர் மேல் எழுத்து என்ற இரண்டு உலக உண்மைகளைப் பயன்படுத்தி - மக்களுக்கு எடுத்துக்கூறி நல்லவர்களுக்கும் அல்லவர்களுக்கும் செய்கின்ற உதவி எப்¢படி இருக்கும் என்பதை ஒளவையார் மிக நேர்த்தியாக விளக்கி உள்ளார். இங்ஙனம் ஒளவையாரின் பாடல்கள் எளிமையாகவும் அதே நேரத்தில் படிப்¢பவர்களுக்கு இனிமையாகவும் அவர்கள் உள்ளத்தில் கருத்துக்கள் பசு மரத்தாணி போல பதிகின்ற விதத்திலும் அமைந்துள்ளமையை ஒவ்வொருவரும் காணலாம். அவர்கள் உதிர்த்த முத்துப் போன்ற கருத்துக்களில் சில;

சோழ நாட்டின் பெருமையையும் வளத்தையும் ஒருசேர எடுத்துரைக்கும் - சோழ வள நாடு சோறுடைத்து.
நாடு வாழ்ந்தால் நாமும் வாழலாம் என்ற உண்மையை வெளிப்¢படுத்தும் - நாடெங்கும் வாழ கேடொன்றும் இல்லை.

நம்மை மதிக்காதவர் வீட்டிற்குச் செல்லுதல் மரியாதைக் குறைவாகப் போய்விடும் என்பதை வலியுறுத்தும் - மதியாதார் முற்றம் மதித்தொருகாற் சென்று மிதியாமை கோடியுறும்.

அகங்காரம் கூடாது - அடக்கமே வேண்டும் என்பதைச் சுட்டும் வகையில் - கற்றது கைமண் அளவு; கல்லாதது உலகளவு.

இவை போன்ற ஒளவையாரின் அமுத மொழிகள் மானுட நெறி சிறக்கவும் - சான்றோர் நிறைந்த நாடாக நம் நாடு செழிக்கவும் - வையத்தை வாழ்வாங்கு வாழ்விப்¢பதற்கும் பேருதவியாய் இருக்கும் என்று நம்பலாம்.

கபிலரின் சிந்தனைகள்

4. கபிலரின் சிந்தனைகள்

தமிழ் இலக்கிய வரலாற்றில் இருவேறு கபிலர் குறிப்பிடப்¢பட்டுள்ளனர். ஒருவர் ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சங்க்காலத்துக் கபிலர்; மற்றொருவர் இன்னாநாற்பது என்ற நூலை எழுதியவர். இவர்கள் இருவரும் ஒருவரே என்று கூறுவாறும் உள்ளனர்.

கபிலர் நட்புக்கு இலக்கணமானவர். பாரி-கபிலர் நட்பு போற்றுதலுக்கு உரியது. பாரி இறந்த பிறகு அவரது மகள்களான அங்கவை, சங்கவை ஆகியோருக்குத் திருமணம் செய்து வைப்¢பதற்கு அரும்பாடுபட்டவர். குறுநில மன்னர்களான விச்சிக்கோ, இருங்கோவேள் ஆகியோரிடம் இம்மகளிரைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்டினர்.

இவரது தமிழ்ப் புலமையும் பாராட்டுதலுக்கு உரியது. ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்துவதற்காக குறிஞ்சிப்பாட்டை இயற்றினார். மலையின் இயற்கை வருணனையை நயம்படச் சித்தரித்துக் காட்டியமையால் இவர் குறிஞ்சிக்கோர் கபிலர் என்று பாராட்டப் படுகிறார். இவர் இந்நூலின் 34 அடிகளில் 99 மலர்கள் வரிசைபட யாத்துள்ளத் திறம் பாராட்டத்தக்கதாகும்.
இவர் எழுதியுள்ள இன்னா நாற்பது என்ற நூல் இன்னாத அதாவது துன்பம் தரும் பொருள்களை எல்லாம் எடுத்துரைக்கிறது. ஒவ்வொரு பாடலிலும் நான்கு இன்னாத பொருள்கள் கூறப்¢பட்டுள்ளன. வாழ்க்கையில் இன்னது இன்னது துன்பம் பயக்கும் எனக் கூறும் 40 பாடல்கள் உள்ளமையால் இன்னாநாற்பது என்று பெயர் பெற்றது. இந்நூலில் மனித வாழ்விற்குத் துன்பம் தரத்தக்க 160 பொருள்கள் நயம்படச் சுட்டப்¢பட்டுள்ளன. ஒரு பாடலில் கூறப்¢பட்டுள்ள நான்கு இன்னாத பொருள்களைக் கேளுங்கள்;

பெரியவர்களோடு சேர்ந்து பழகுதல் வேண்டும். அவர்களின் அறிவுரைகளைக் கேட்டு - அவர்களின் சொற்படி நடத்தல் வேண்டும். எந்த செயலையும் பெரியவர்களை ஆலோசிக்காமல் செய்யக் கூடாது. அவ்வாறு ஆலோசிக்காமல் செய்த செயல்கள் பெரிதும் வெற்றி பெறுவதில்லை. இதை வலியுறுத்தும் வகையில், சிறு பிள்ளை விட்ட வேளாண்மை வீடு வந்து சேராது என்ற பழமொழியே வழக்கில் உலவி வருகிறது. பெரியவர்களின் துணை கொண்டு வாழ வேண்டும் எனபதை வலியுறத்த எண்ணிய வள்ளுவரும் பெரியாரைத் துணைக்கோடல் என்றும் பெரியாரைப் பிழையாமை என்றும் இரண்டு அதிகாரங்களைப் படைத்துள்ளார்.

பெரியவர்கள் என்பவர்கள் நம்மை விட வயதால் மூத்தவராக இருக்கலாம்; கல்வியால் உயர்ந்தவராக இருக்கலாம்; பண்பால் உயர்ந்தவராக இருக்கலாம்; ஒழுக்கத்தால் உயர்ந்தவராக இருக்கலாம்.

சுருக்கமாகச் சொல்வதென்றால் நம்மைவிட ஏதோ ஒரு வகையில் - ஏதேனும் ஒரு காரணத்தால் உயர்ந்தவர்களாக இருக்கலாம். பெரியவர்களைத் துணை கொள்ளல் வேண்டும் என்பதை,
பெரியாரோடு யாத்த தொடர்விடுதல் இன்னாஅரியவை செய்தும் எனவுரைத்தல் இன்னாபரியார்க்குத் தாம்உற்ற கூற்றின்னா இன்னாபெரியார்க்குத் தீய செயல்
என்ற பாடல் தௌ¤வுறுத்துகிறது. அதாவது, கல்வி கேள்விகளில் சிறந்த சான்றோர்களோடு கொண்ட நட்பினைக் கைவிடுதல் துன்பம் தரும்; செய்வதற்கு அறிய காரியங்களைச் செய்து முடிப்பேன் என்று வெற்று ஆரவாரம் செய்தல் பெரிய துன்பத்தை விளைவிக்கும்; நம்மிடத்தில் அன்பு கொள்ளாதவர்களிடம் நாம் அடைந்த துன்பங்களை எடுத்துரைத்தல் தன்பத்தைத் தருமேயன்றி இன்பத்தைத் தராது; பெருமையுடன் மதிக்கத்தக்கச் சான்றோர்களுக்குத் தீங்கு செய்வதால் பெருந் துன்பங்களே நேரிடும்.
அற மனத்தார், மற மனத்தார் என்ற இரண்டு அருமையான பொருள் பொதிந்த சொற்களைக் கபிலர் பயன்படுத்தி உள்ளார். அற மனத்தார் என்பவர்கள் அறச் செயல்களைச் செய்பவர்கள். மற மனத்தார் என்பவர்கள் மறச் செயல்களை-வீரச்செயல்களைச் செய்பவர்கள்.

அறமனத்தார் கூறும் கடுமொழியும் இன்னாமறமனத்தார் ஞாட்பின் மடிந்தொழுகல் இன்னாஇடும்பை உடையார் கொடை இன்னாகொடும்பாடு உடையார்வாய்ச் சொல்.

அறத்தை விரும்பும் நெஞ்சத்தை உடைய சான்றோர்களான அறமனத்தார் சொல்லுகின்ற கடுஞ் சொற்கள் துன்பத்தைத் தரவல்லன. அதுபோல வீரத்தன்மை மிக்க நெஞ்சத்தினரான மறமனத்தார் போர்க்களத்தில் சோம்பி இருத்தல் அவர்களுக்கும் அவர்கள் சார்ந்த நாட்டிற்கும் மிகுந்த துன்பத்தைத் தரும். வறுமை உடையவர்கள்

வள்ளல்கள் போல் நடந்து கொள்வது துன்பத்தைத் தரும். நடுவுநிலை தவறி - நியாயம் தவறி பேசுபவர்களின் சொற்களும் மிகுந்த துன்பத்தைத் தரவல்லன.
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு என்று வள்ளுவர் பொருட்தேவையைத் திறம்படக் கூறியுள்ளார்.

கிராமத்தில் வாழ்வோர் குறைவான பண வசதி இருந்தாலும்கூட சிறப்பாக வாழ முடிகிறது; ஆனால் நகரத்தில் வாழ்வோர் வாழ்க்கை அப்¢படி இல்லை. மிகுந்த பணம் தேவைப்படுகிறது. இதனைக் கபிலர் நன்கு உணர்ந்தவராகத் தெரிகிறார். அவர் கூற்றைப் பார்க்கும்பொழுது ஒரு வேளை அவர் நகரத்தில் வாழ்ந்தவராக இருப்பாரோ என்று ஐயம் கொள்ள வேண்டியிருக்கிறது; அல்லது நகரத்தில் வாழ்ந்தவர்களை நன்கு அறிந்தவராக இருத்தல் வேண்டும். அப்பாடல் இதுதான்;

பொருளிலான் வேளாண்மை காமுறுதல் இன்னாநெடுமாட நீள்நகர்க் கைத்தின்மை இன்னாவருமனை பார்த்திருந்து ஊணின்னா இன்னாகெடும்இடம் கைவிடுவார் நட்பு.
செல்வம் இல்லாதவன் பிறர்க்கு உதவி புரிய வேண்டும் என நினைத்துச் செயல்படுதல் அவனுக்கும் அவனைச் சார்ந்து வாழும் குடும்பத்தாருக்கும் மிகுந்த துன்பத்தைத் தரும். நெடிய மாடங்களை உடைய பெரிய நகரத்திலே பொருளின்றி - அதாவது தேவையான பொருளின்றி வாழ்தல் மிகுந்த துன்பத்தைத தரும். தம்மை அழையாதவர் வீட்டுக்குச் சென்று அவர் விரும்பும் வரை காத்திருந்து அவர் இடுகின்ற உணைவை உண்டு வருதல் பெருந்துன்பம் ஆகும். இது அழையாதார் வீட்டு விருந்தாளி போல இழிந்த நிலையை ஏற்படுத்தும். வறுமை உற்றக் காலத்தில் நம்மை விட்டு நீங்குவாரின் நட்பு மிகுந்த துன்பத்தைத் தரும். நண்பர்களாக இருக்கக் கூடியவர்கள் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கெடுத்துக் கொள்ளத்தக்கவர்களாக இருக்க வேண்டும். அங்ஙனம் இல்லாமல் நாம் வளமுடன் இருக்கும் காலத்தில் நம்முடன் நலம் துய்த்துவிட்டு வறுமை உற்றக் காலத்தில் நம்மை விட்டு நீங்குதல் என்பது சிறந்த நட்பாகாது. இதைத்தான் வள்ளுவரும்,

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு என்று கூறியுள்ளார். எனவே, கபிலர் கூறியுள்ள இன்னாதவற்றை நீக்கி இனிமையுடன் வாழ அனைவரும் முயல வேண்டும்.

குமரகுருபரரின் சிந்தனைகள்

3. குமரகுருபரரின் சிந்தனைகள்

சிற்றிலக்கிய வேந்தர் என்ற பாராட்டுக்கு உரியவர் குமரகுருபரர். இவர் 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.


திமிரமது அகற்றுந் தெய்வக் கவிஞன்குமரகுருபரன் குரைகழல் வெல்க
என்ற தனிப்பாடலுக்கு ஏற்பத் தமிழ்க் கவிஞராகவும், தெய்வக் கவிஞராகவும் மலர்ந்து மணம் வீசியவர் குமரகுருபரர். மக்களின் அறியாமை இருளை அகற்றி அறிவு புகட்டிய தமிழ்க் கவிஞர்களுள் குமரகுருபரருக்கு என்று தனித்த இடம் தமிழிலக்கிய வரலாற்றில் உண்டு. இவர், பிற்காலத்தில் தோன்றிய மரபுக் கவிஞர்கள் முதல் பாரதிதாசன் வரை உள்ள வரிசையில் ஒருசேர வைத்து போற்றத்தக்கவர்.


திருவைகுண்டத்தில் பிறந்த இவர் ஐந்து வயது வரை வாய் பேசமுடியாத ஊமையாக இருந்தார். பின்னர் திருச்செந்தூர் முருகப் பெருமான் திருவருளால் பேசுகின்ற திறம் பெற்றார். கந்தர் கலி வெண்பா முதலாக 16 இலக்கியங்களைப் படைத்தருளினார். இவர் எழுதிய மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் நூலைக் கேட்டு மதுரை மீனாட்சியம்மையே நேரில் எழுந்தருளி வந்து அவருக்குத் தம் கழுத்தில் கிடந்த முத்து மாலையை அணிவித்து மகிழ்ந்தாள் என்று கூறுவர்.


இவர் எழுதிய நீதி நெறி விளக்கம் என்ற நூலின் துணை கொண்டு இவர்தம் சிந்தனைகளைத் தொடர்ந்து நோக்குவோம். நூலின் காப்புச் செய்யுளே மனித வாழ்க்கையைப் பற்றி மிக்க நேர்த்தியாக எடுத்துரைக்கிறது. அப்பாடல் இதுதான்;


நீரில் குமிழி இளமை நிறைசெல்வம்நீரில் சுருட்டும் நெடுந்திரைகள் - நீரில்எழுத்தாகும் யாக்கை நமரங்காள் என்னேவழுத்தாதது எம்பிரான் மன்று.

மனிதனின் இளமைப்¢பருவம், மனித உடல், அவனால் முயன்று சேர்க்கப்¢படும் செல்வம் ஆகியவற்றைப் பற்றிய குமரகுருபரரின் சிந்தனைகளை மனிதர்கள் ஒவ்வொருவரும் மனத்துள் இறுத்தினால் மனித வாழ்வில் பொய் இல்லை - புரட்டு இல்லை - மனிதனை மனிதன் ஏய்க்கும் அவலம் இல்லை.

நீர்க் குமிழிகள் ( Bubbles) தோன்றுவதும் தெரியாது - மறைவதும் தெரியாது - தோன்றிய மாத்திரத்திலேயே மறைந்துபோகும். இந்த நீர்க்குமிழி போன்றதுதான் மனிதனின் இளமைப் பருவம். இது தெரியாமல் மனிதர்கள் இந்த இளமைப்¢ பருவத்திலே என்னென்ன செயல்களிலே ஈடுபடுகின்றார்கள்?
தண்ணீரில் எழுத முடியுமா? முடியும் என்கிறார் குமரகுருபரர். ஆனால் அந்த எழுத்து நிலைத்து நிற்காது - எவருடைய கண்ணுக்கும் தெரியாது. நீரில் எழுத எழுத அழிந்து கொண்டே போகும். அது போன்றதுதான் மனித உடம்பு. நீர்க் குமிழி கூட கண்ணால் பார்க்க முடியும். சற்று நேரம் நிலைத்து நிற்கும். ஆனால், நீர் மேல் எழுதப்¢படும் எழுத்து அதனினும் வேகமாக அழிந்து போகக் கூடியது.

அரும்பாடுபட்டு மனிதர்கள் சேர்க்கும் செல்வத்தின் கதியோ அதோகதிதான். நீரில் தோன்றுகின்ற அலை போன்றதாம் மனிதர்கள் சேர்க்கும் செல்வம். நீரின் நடுவே தோன்றுகின்ற அலை கரையை அடைவதற்குள் காணாமல் சிதைந்து போய்விடும். அதுபோல மனிதன் பாடுபட்டுத் தேடிய செல்வம் அவனுக்குப் பயன்படுவதற்கு முன்பே காணாமல் போய்விடும் அல்லது அதனைப் பயன்படுத்துவதற்கு முன்பே இவன் இல்லாமல் போய்விடுவான். இருப்¢பது போல இல்லாமல் போகும் அலைபோலவே செல்வமும் இருப்¢பது போல இல்லாமல் போய்விடும்.

எனவே, மனிதன் மிகவும் நம்பிக்கொண்டிருக்கின்ற தன் உடல், இளமை, செல்வம் ஆகியவை விரைந்து அழிந்து போகக் கூடியவை. அதனை நம்பி வாழ்க்கையைத் தொலைத்து நிற்க வேண்டாம் என்பது குமரகுருபரரின் கருத்தாக உள்ளது.

அடுத்து கல்வி பற்றிய அடிகளாரின் கருத்தினை நோக்குவோம்;
கல்வி இம்மைப் பயனாகிய அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றைத் தர வல்லது. கல்வியைப் போன்று மக்களுக்குத் துயர் மிக்க நேரத்தில் துணையாகும் பொருள் வேறு எதுவும் இல்லை. இதனை,
அறம்பொருள் இன்பமும் வீடும் பயக்கும் புறங்கடை நல்லிசையும் நாட்டும் - உறுங்கவலொன்றுஉற்றுழியும் கைகொடுக்கும் கல்வியின் ஊங்கில்லைசிற்றுயிர்க்கு உற்ற துணை என்ற பாடல் மூலம் உணர்த்துகிறார் அடிகளார்.

ஒரு மனிதன் காமத்தை விரும்புகிற அளவிற்குக் கல்வியை விரும்புகிறானா என்றால் இல்லை என்றே கூற வேண்டும். காமத்தைக் காட்டிலும் கல்வியே உயர்ந்தது எனபதை வலியுறத்த முனைகிறார் குமரகுருபரர். கல்வியானது தொடக்கத்தில் துன்பமாய் இருக்கும்; பின்னர் இன்பம் தரும். ஆனால் காமம் தொடக்கத்தில் இன்பமாய்; பின்னர் துன்பம் தரும். எனவே கலவி¢யைப் பற்றி வாழ வேண்டுமே ஒழிய மனிதர்கள் காம நெறியைப் பற்றி வாழ்தல் கூடாது என்று வலியுறுத்துவதற்காக பின்வரும்¢ பாடலைப் புனைந்துள்ளார்.
தொடங்குங்கால் துன்பமாய் இன்பம் பயக்கும்மடங்கொன்று அறிவகற்றும் கல்வி - நெடுங்காமம்முற்பயக்குச் சின்னீர இன்பத்தின் முற்றிழாய்பிற்பயக்கும் பீழை பெரிது.

கல்வியின் பயன் யாது எனில் அறிவு பெறுவதுதான். தான் அறிந்தவற்றைப் பிறர் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் எடுத்துரைக்கும் சொல்லாற்றல் இல்லையாயின் கற்ற கல்வியினால் யாதொரு பயனும் இல்லை என்று வள்ளுவத்தின் கருத்தை அடிகளார் வழிமொழிந்து கூறுகிறார்.
அவையின்கண் எடுத்துரைக்க அஞ்சுவார் பெற்ற கல்வியானது கல்லார் முன் பேசும் ஆரவாரச் சொல்லைப் போலவும், பிறருக்குக் கொடுத்துத் தானும் உண்ணாதார் செல்வம் போலவும், வறுமையில் வாடுபவர் பெற்ற அழகு போலவும் பயனற்றது என்பதை,

அவையஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியும் கல்லார்அவையஞ்சா ஆகுலச் சொல்லும் - நவையஞ்சிஈத்துண்ணார் செல்வமும் நல்கூர்ந்தார் இன்னலமும்பூத்தலின் பூவாமை நன்று

என்ற பாடல்வழி வலியுறுத்துகிறார். இதனை,
கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்நல்லார் அவையஞ்சு வார்
என்று வள்ளுவரும் கூறியிருப்¢பதைக் காணலாம்.

கற்றவற்றை நினைவில் வைத்திருத்தலும் மிக முக்கியமானது என்று அடிகளார் கருதுகிறார். அவ்வாறு கற்றவற்றை நினைவில் வைத்துக் கொள்ளாமல் மேலும் மேலும் புதிது புதிதாக கற்க நினைப்¢பது பாடுபட்டுத் தேடிய செல்வத்தைத் தொலைத்து விட்டு, மீண்டும் கடினப்¢பட்டு உழைத்துச் செல்வத்தை ஈட்டுதற்கு ஒப்பாகும்.

எனவே, கல்வியே பிற அனைத்தையும் விட சிறந்தது என்பதையும் அதனைக் கற்றவாறு நினைவில் வைத்து அதற்கேற்ப ஒழுகுதல் வேண்டும் என்பதும் குமரகுருபரரின் கருத்தோவியமாக இருப்¢பதை அறிய முடிகிறது.