வெள்ளி, 8 மே, 2020

படித்ததில் பிடித்தது - 6

கொரோனா வைரஸ் பாதிப்பால் மூன்றாவது முறையாக ஊரடங்கு 04-05-2020 முதல் 17-05-2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையில் கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் என்ற நூலை மறு வாசிப்பு செய்து வருகிறேன். இதற்கு முன்பு  2000 ஆண்டு வாக்கில் அதைப் படித்துள்ளேன். அதில் சில செய்திகளைத் தொடர்ந்து இதில் பதிவிட உள்ளேன்.

வலம் வருதல் (பக்கம் 74) 

  • ஊர் வலம் வருதல், மணவறையை வலப்புறமாக சுற்றி வருதல், மணப்பெண் முதன் முதல் வீட்டுக்குள் வலது காலை வைத்து நுழைதல் போன்றவை. 

பூமியே வலப்பக்கமாகத்தான் சுற்றுகிறது. எனவே வலம் வருதல், வலது காலை எடுத்து வைத்து வருதல் என்பவை அறிவியல் பூர்வமான  ஒன்று.
மேலும் மனிதர்களின் இடப்பக்க கை, கால்களின் வலிமையைவிட வலப்பக்க கை, கால்களே வலிமை உடையவை.
வலம் என்றால் நாம் வலிமை அடைவோம் என்பது பொருள்.
வலியோம், வல்லோம், வல்லம், வலம் - இவை ஓரே பொருள் உடையன.

வருகிறேன் - போகிறேன்  (பக்கம் 74) 

  • திருமணம் முதலிய மங்கல நிகழ்வுகளுக்குச் சென்றால் போய் வருகிறேன் என்பது - இது போன்ற அடுத்தடுத்த நல்ல நிகழ்வுகள் நடக்க வேண்டும், நான் அதில் கலந்து கொள்வேன் என்பதன் அடையாளம்.
  • துக்க நிகழ்வுகளுக்குச் சென்றால் நான் போகிறேன் என்பது - இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்கக் கூடாது என்பதன் அடையாளம்.
புதைத்தலும் எரித்தலும்:  (பக்கம் 76) 
  • திருமணம் ஆகாமல் இறப்போரை (குழந்தைகள், வாலிபப் பருவத்தினர் ) புதைப்பர். வாழாத உடம்பு மண்ணில் புதைந்து சாந்தி அடையட்டும். 
  • வாழ்ந்து இறந்தவர்களை எரிக்கிறார்கள். வாழ்ந்த உடம்பு விண்ணிலே கலந்து ஐக்கியமாகட்டும்.
  • எரித்தவர்களின் சாம்பலை நதியில் கரைப்பது - ஆத்மா ஆறு போல் ஓடி கடல் போன்ற இறைவனோடு கலக்கட்டும்.
கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்: (பக்கம் 81) 
  • உன் கணவன் கல் மனது உடையவனாக இருந்தாலும் சம்பாதிக்க முடியாத சக்தியற்ற கோழையாக (புன்மையாக) வெறும் புல்லைப் போன்று இருந்தாலும் அவனைக் கணவனாகக் கருத வேண்டும்.

அம்மி மிதித்தலும் அருந்ததி பார்த்தலும்  (பக்கம் 79) 

  • எல்லாக் குடும்பங்களிலும் அம்மி முக்கியமானது. என் கால் உன் மீதுதான் இருக்கும். உன்னைத் தாண்டிப் (படிதாண்டி) போகாது. படிதாண்டா பத்தினி.
  • அருந்ததியைப் போன்று கற்பு மாறாத நட்சத்திரமாக மின்னுவேன்.
  • அக்னி சாட்சி - கற்பில் அக்னி போன்றவள்
காப்பு அணிதல்  (பக்கம் 80) 
  • பெண்ணிற்குக் காப்பு வேண்டும். தற்காப்பு - தாய் தந்தை காப்பு - தெய்வத்தின் காப்பு. பெண்ணைக் காப்பேன் என்பதன் அடையாளமாகத்தான் கணவன் கையில் காப்பு கட்டப்படுகிறது.
மூன்று முடிச்சு (பக்கம் 80)
  • ஒரு முடிச்சு -  கணவனுக்குக் கட்டுப்பட்டவள்
  • இரண்டவாது முடிச்சு - பெற்றோருக்கு அடங்கியவள்
  • மூன்றாவது முடிச்சு - தெய்வத்திற்குப் பயந்தவள்
பாலும் பழமும் (பக்கம் 80)
  • பாலோடு சேர்ந்த பழம் போல மண வாழ்க்கை சுவை பெறட்டும்
  • பூமணம் போல மண வாழ்க்கை
காலைப் பார்த்து நட (பக்கம் 79) 
  • திருமணம் ஆனவன் - நிமிர்ந்து நடக்க வேண்டும். எதிரில் வரும் பெண் கழுத்தில் மங்கல நாண் அணிந்திருந்தால் அவள் அந்நியன் மனைவி என்று ஒதுங்கிட வேண்டும்.
  • திருமணம் ஆனவள் தலை குனிந்து நடக்க வேண்டும். எதிரில் வரும் ஆடவன் காலில் மெட்டி இருந்தால் மணமானவன் என்று அவள் ஒதுங்கிட வேண்டும். (பழங்காலத்தில் திருமணம் ஆன ஆண் காலில் மெட்டி அணிதல் வழக்கம்)
மூவகை நண்பர்கள் (பக்கம் 92-93)
  • பனைமரம்: மனிதர்களின் உதவியின்றி தானே வளர்ந்து மனிதர்களுக்குப் பயனளிக்கக் கூடியது. அதுபோல் பயன் கருதாமல் நட்பு கொள்பவர்கள்
  • தென்னை மரம்: அடிக்கடி தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டும். அப்பொழுதுதான் பயன் தரும். அதுபோல் சில நண்பர்களுக்கு அவ்வப்போது பயன் தரக்கூடியவை இருந்தால்தான் நட்பு தொடரும்.
  • வாழை மரம்; நாள் தோறும் தண்ணீர்  ஊற்றி வளர்க்க வேண்டும். அப்பொழுதுதான் பயன் தரும். அதுபோல் சில நண்பர்களுக்கு நாள்தோறும் பயன் தரக்கூடியவை இருந்தால்தான் நட்பு தொடரும்.
பெற்றோர்  (பக்கம் 114) 
  • தந்தையிடமிருந்து வித்தைப் பெற்று தாய் குழந்தை பாக்கியம் பெறுகிறாள். தந்தைக்கு அந்த வித்தைக் கடவுள் தருகிறார்.  எனவே தந்தை கடவுளிடமிருந்தும் தாய் கணவனிடமிருந்தும் பெறுவதால் அவர்கள் பெற்றோர்.






செவ்வாய், 5 மே, 2020

படித்ததில் பிடித்தது - 5

மாபெரும் தமிழ்க் கனவு

மாபெரும் தமிழ்க் கனவு என்ற இந்நூல் கே. அசோகன் அவர்களை ஆசிரியராகவும் சமஸ் அவர்களைத் தொகுப்பாசிரியராகவும் கொண்டு 'தமிழ் திசை' வெளியீடாக வெளிவந்துள்ளது.

பேரறிஞர் அண்ணா அவர்களைப் பற்றிய தொகுப்பு நூலாக 800 பக்கங்களில் வெளிவந்துள்ளது. இதில் அண்ணாவைப் பற்றிய அரிய செய்திகள், அவரது முக்கியமான பேட்டிகள், பெரியார் முதலான அரசியல் பெருந்தலைவர்களின் அண்ணாவைப் பற்றிய  கருத்துகள், அண்ணா இறந்தபொழுது கலைஞர் கருணாநிதி எழுதிய இரங்கல் கவிதை, அண்ணாவின் பேச்சாற்றல், படைப்பாற்றல் முதலான ஆளுமைப் பண்புகள், இளைஞர்களைக் கவர்ந்திழுத்து வைத்திருக்கும் மனிதநேயம், எளிமை, இனிமை, இன்னும் பலவாறான செய்திகளைத் தக்க சான்றுகளோடு இந்நூல் பதிவு செய்துள்ளது. அண்ணாவின் அரிய புகைப்படங்கள் சிலவும்  இடம் பெற்றிருப்பது இந்நூலின் தனிச்சிறப்பாகும். திராவிட இயக்கப் பெருந்தலைவர்கள் மட்டுமின்றி தமிழராகப் பிறந்த அனைவரும் படிக்க வேண்டிய அரிய வரலாற்றுக் கருத்துக் களஞ்சியம் இந்நூல்.

அண்ணாவைப் பற்றி இந்நூலில் இடம் பெற்றுள்ள குறிப்பிடத்தக்க சில செய்திகள்:
  • குள்ளமான உருவம், மலர்ந்த முகம், முள் தாடி, விரைந்த நடை, கசங்கிய உடை, எளிமை - இதுவே அண்ணா.
  • நான்கு முழ வேட்டி. அதையும் நான்கு நாட்கள் உடுத்துவார் அண்ணா. முதல் நேராக, அடுத்த நாள் தலைகீழாக, மூன்றாவது நாள் வெளிப்பக்கத்தை உள்பக்கமாக, நான்காம் அதையும் தலைகீழாக மாற்றிக் கட்டுவார்.
  • இளம் வயதில் ஆன்மீக நாட்டம் கொண்டவர். திருத்தணியில் தான் இவருக்கு மொட்டை போட்டுப் பெயரிடப்பட்டது.
  • இறக்கும் போது குடும்பத்திற்குக் கடன் இருந்தது. பிந்தைய நாட்களில் கட்சித் தொண்டர்களின் நிதி உதவியுடன் கடன் அடைக்கப்பட்டது.
  • எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் இரண்டு முறை தோல்வியடைந்தார். மூன்றாவது முறைதான் தேர்ச்சிப் பெற்றார்.
  • பள்ளிப் பருவத்திலேயே மூக்குப்பொடி போடும் பழக்கம் கொண்டவர்.
  • தமிழக அரசியலையே புரட்டிப் போட்டது அண்ணாவின் பேச்சாற்றல்தான். ஆனால் பள்ளிப் பருவத்தில் இவர் ஒரு பேச்சுப் போட்டியிலும் பங்கேற்றதில்லை. பி.ஏ. ஹானர்ஸ் மூன்றாம் ஆண்டு படிக்கும் போது முதன்முதலாக ஆங்கிலத்தில் சொற்பொழிவாற்றினார். 
  • மாணவர்களிடம் பேசும்போது பெரிதும் ஆங்கிலத்திலேயே உரையாடுவார். அதைப்போலவே  நன்கு படித்த தனது கட்சிக்காரர்களிடமும் ஆங்கிலத்தில் பேசுவதை விரும்புவார். காரணம் அவர்களும் ஆங்கிலப் புலமை பெற வேண்டும் என்பதற்காக. 
  • மதுவிலக்கை நடைமுறைப்படுத்த காங்கிரசாருடன் இணைந்து பிரச்சாரம் செய்யவும் தயார் என்று அறிவித்தார்.
  • சாராயக் காசில்தான் நான் ஆட்சியில் தொடர வேண்டும் என்றால் துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு நடையைக் கட்டுவேன் என்று துணிச்சலாக அறிவித்தவர்.
  • அண்ணாவின் முதல் கட்டுரை மகளிர் கோட்டம். தமிழரசு இதழில் வெளியானது. அப்போது அவரது வயது 22.
  • முதல் சிறுகதை கொக்கரக்கோ. ஆனந்த விகடனில் வெளியானது. அப்போது அவரது வயது 25.
  • நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் பெரியார் என்ற இவர் 30 வயதில் நீதிக்கட்சி பொதுச்செயலாளர், 35 வயதில் தி.க. பொதுச்செயலாளர், 40 வயதில் தி.மு.க. பொதுச்செயலாளர்..
  • தி.க. விலிருந்து பிரிந்து தி.மு.க. வை 17.09.1949  இல் அண்ணா ஆரம்பித்தார்.
  • பெரியாருக்கும் அண்ணாவிற்கும் பல கருத்து முரண்பாடுகள் இருந்தன. பெரியார் மேடைகளில் அண்ணாவை விமர்சித்துப் பேசுவார். ஆனால், ஒரு போதும் அண்ணா பெரியாரை விமர்சித்துப் பேசியது கிடையாது. 
  • ஓர் இரவு நாடகம் ஒரே இரவில் எழுதப்பட்டது.
  • தம்பிக்கு எழுதிய பல கடிதங்கள் 'தம்பி, சேவல் கூவுகிறது, நான் உறங்கச் செல்கிறேன்' என்று முடியும். இரவு முழுவதும் எழுதுவதையும் படிப்பதையும் பழக்கமாக்கிக் கொண்டமையால் காலையில் வெகுநேரம் கழித்தே  துயிலெழுவார்.
  • மாற்றாரின் கருத்தையும் மதிப்பவர், 'மாற்றான் தோட்டத்து மல்லிக்கைக்கும் மணமுண்டு' என்று முழங்கியவர்.
  •  தம்மை இகழ்பவரைக் கூட இழிவாகப் பேசாதவர். 
  • இவர் பேசும் மேடைக்கு அருகில் இவரைப் பற்றி அருவருக்கத் தக்க வகையில் எழுதி இருந்த இடத்தில் அரிக்கேன் விளக்கு வைக்க சொன்னவர்.  எழுதியவர்களின் தரம் இரவிலும் தெரியட்டும் என்றார். 
  • இழிவாக எழுதுவோரின் கட்டை விரலை வெட்டுவோம் என்று பேசிய காமராஜரை 'குணாளா, குணக்கொழுந்தே' என்று புகழ்ந்ததோடு ;கோடு உயர்ந்த்து குன்றம் தாழ்ந்த்து என்று கட்டுரை எழுதினார்.
  • 1962 தேர்தலில் போட்டியிட்ட அண்ணாவைத் தோற்கடிக்க காமராஜர் அமைச்சர்கள் பட்டாளத்தையே காஞ்சியில் இறக்கினார். மாறாக காமராஜர் போட்டியிட்ட சாத்தூர் தொகுதியில் தீவிர பிரசாரம் இல்லாமல் பார்த்துக் கொண்டார்.
  • சுருங்கச் சொல்லி விளங்க வைப்பவர். தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசும்போது நள்ளிரவாயிற்று. மாதமோ சித்திரை, மணியோ பத்தரை, உங்களைத் தழுவிக் கொண்டிருப்பதோ நித்திரை, மறக்காமல் இடுவீர் எமக்கு முத்திரை என்று நான்கு வரியில் கூட்டத்தை முடித்தவர்.
  • படேல் காங்கிரஸ் கட்சிக்கு நிதி திரட்டுவதற்காகத் தமிழகம் வந்தபொழுது 'படேல் வருகிறார் பணப் பை பத்திரம்' என்றார்,
  • சினிமா பார்ப்பதில் ஆர்வம் மிக்கவர். பிறருக்குத் தெரியக் கூடாது என்பதற்காக முண்டாசு கட்டிக் கொண்டு திரையரங்குகளுக்கே சென்று சினிமா பார்ப்பார். 
  • ஓவியத்தின் மீது மிகுந்த நாட்டம் கொண்டவர். அதனால்தான் கட்சி மாநாடுகளில் எல்லாம் தவறாமல் ஓவியக் கண்காட்சி நடத்த சொன்னார்.
  • சீட்டாட்டத்தில் நாட்டம் கொண்டவரான அண்ணா முதலமைச்சரான பிறகு அப்பழக்கத்தைக் கைவிட்டார்.
  • திருவள்ளுவர் மீதும் திருக்குறள் மீதும் அளவு கடந்த பற்றுக் கொண்டவர்.
  • அண்ணாவால் புகழ் பெற்ற சிறு வாசகங்கள்: 
    • எதையும் தாங்கும் இதயம் வேண்டும்
    • கடமை கண்ணியம் கட்டுப்பாடு
    • ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்
    • கத்தியைத் தீட்டாதே, உன் புத்தியைத் தீட்டு
    • ஏடா தம்பீ, எடடா பேனா
    • எங்கிருந்தாலும் வாழ்க
    • மறப்போம் மன்னிப்போம் 
    • வாழ்க வசவாளர்கள்
    • மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு 
    • சட்டம் ஒரு இருட்டறை, அதில் வக்கீலின் வாதம் வெளிச்சம் 
    • மக்கள் தொண்டே மகேசன் தொண்டு 
    • இவ்வுலகில்  59 ஆண்டுகள் 5 மாதங்கள் 15 நாட்களே வாழ்ந்தார்  (15.09.1909- 03.02.1969)
  • 06.03.1967 இல் தமிழகத்தின் ஆறாவது முதல்வர்
  • தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார்
  • சத்யமே ஜெயம் என்பதை வாய்மையே வெல்லும் என்று மாற்றினார்.
(இந்த நூலை முழுமையாகப் படிக்கவில்லை என்றாலும் பருந்துப் பார்வையாகப் படித்துள்ளேன்.)