ஞாயிறு, 17 மார்ச், 2013

தமிழ்த் தாத்தா உ.வே.சா.

தமிழ்த் தாத்தா உ.வே.சா.



U. Ve. Swaminatha Iyer—Photo: M.Srinath 


வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் 
தெய்வத்துள் வைக்கப் படும்

என்பது வள்ளுவம். அவ்வகையில் தமது 87 வயது வரையிலும் வாழ்வாங்கு வாழ்ந்தவர் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் அவர்கள். வயதால் மட்டுமின்றி தமிழ்ப் பணியிலும் வாழ்வாங்கு வாழ்ந்தவர். இவர் 19.2.1855 ஆம் ஆண்டு திரு. வேங்கட சுப்பையர் அவர்களுக்கும் திருமதி சரசுவதி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார்.  பெற்றோர் இவருக்கு வேங்கட ரத்தினம் என்று பெயரிட்டனர். இப்பெயரை மாற்றி இவருக்கு சாமிநாதன் என்று பெயரிட்டவர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள்.

கல்வி

   இவர் உத்தமதானபுரம் திண்ணைப் பள்ளியிலும், அரியலூர் சடகோப ஐயங்காரிடமும், முத்து வேலாயுதம் பண்டாரத்தாரிடமும், குன்னம் சிதம்பரம் பிள்ளை அவர்களிடமும், கார்குடி கஸ்தூரி ஐயங்காரிடமும், செங்ஙனம் விருத்தாசல ரெட்டியாரிடமும், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடமும் பயின்று தமது கல்வி அறிவைப் பட்டை தீட்டிக் கொண்டார். 

ஆசிரியப் பணி   

   தமது 25வது வயதில் அதாவது 1880 ஆம் ஆண்டு பிப்ரவரி 16ந் தேதி முதல் 1903 ஆம் ஆண்டு வரை 23 ஆண்டுகள் இவர் கும்பகோணம் அரசு கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து 1903 முதல் 1919 ஆம் ஆண்டு வரை 16 ஆண்டுகள் சென்னை மாகாணக் கல்லூரியிலும், 1924 இல் சிதம்பரம் மீனாட்சித் தமிழ்க் கல்லூரியிலும் இவர் ஆசிரியராகப் பணியாற்றினார். ஏறக்குறைய 40 ஆண்டுக் காலம் இவர் கற்பித்தல் பணியில் ஈடுபட்டிருந்தார். 

பதிப்பித்தல் பணி

    ஒரு நூலைத் தேடிக் கண்டுபிடிப்பதும், படிப்பதும்,  அதனைப் பதிப்பிப்பதும் மிக எளிய செயலன்று. அனைத்து வசதிகளும் நிரம்பிய இக்காலத்திலேயே இது சவால் நிறைந்ததாக இருக்கும்பொழுது அக்காலத்தில் இப்பணி எத்துனைத் துன்பம் நிறைந்ததாக இருந்திருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டுவதில்லை. உ.வே.சா. அவர்கள் குறிஞ்சிப் பாட்டைப் பதிப்பிக்க முயலும் பொழுது அதில் கூறப்பட்டுள்ள 99 பூக்களில் மூன்று பூக்களின் பெயர்கள் தெளிவு பெறாமலே இருந்தனவாம். அதனைத் தெளிவுபடுத்திப் பதிப்பித்தாராம். அதனைப் போலவே சிலப்பதிகாரமா அல்லது சிறப்பதிகாரமா என்ற ஐயப்பாடு எழுந்து சிலப்பதிகாரம் தான் என்று அவர் முடிவு எடுப்பதற்கு மிகுந்த காலம் தேவைப்பட்டது என்பர். 

பதிப்புச் சிக்கல்

      ஏடு எடுக்கும்போது ஓரஞ் சொரிகிறது. கட்டு அவிழ்க்கும் போது இதழ் முறிகிறது. ஏட்டைப் புரட்டும் போது துண்டு துண்டாய்ப் பறக்கிறது. இனி எழுத்துக்களோ என்றால் வாலும் தலையும் இன்றி, நாலு புறமும் பாணக் கலப்பை மறுத்து மறுத்து உழுது கிடக்கின்றது என்று சி.வை.தாமோதரம்பிள்ளை பதிப்புப் பணியில் நேரிடும் சிக்கல்களை எடுத்துக் காட்டுகிறார். (கலித்தொகை பதிப்புரை)

     ஏட்டுச் சுவடியிலுள்ள ஒரு நூலை ஆராய்ந்து, வெளியிடுவதில் உண்டாகும் துன்பம் மிக அதிகம். அச்சுப் பிரதியில் உள்ளவாறு ஏட்டுச் சுவடி அமைந்திராது. சுவடியில் எழுதுவோரால் நேரும் பிழைகள் குறியீடுகள் கொம்பு கால் புள்ளி முதலியவை இரா. நெடிலுக்கும் குறிலுக்கும் வேறுபாடு தெரியாது. அடிகளின் வரையறைகளும் இரா. இது மூலம், இஃது உரை, இது மேற்கோள் என்று அறியவும் இயலாது. எல்லாம் ஒன்றாகவே எழுதப்பட்டிருக்கும். ஏடுகள் அவிழ்ந்தும் முறை பிறழ்ந்தும் முன் பின்னாக மாறியும் முழுதும் எழுதப் படாமலும் இருக்கும் என்று உ.வே.சா. பதிப்புப் பணியின் சிக்கல்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார். இத்துணை இடையூறுகளுக்கு இடையிலும் உ.வே.சா. அவர்கள் பதிப்பித்த நூல்கள் ஏராளம். அவை:

1.வேணு வனலிங்க விலாசச் சிறப்பு (1878) - தமது 23வது வயதில் பதிப்பித்தார்.

காப்பிய வரிசையில்,

2. சீவகசிந்தாமணி (1887)
3. சிலப்பதிகாரம் (1892)
4. மணிமேகலை (1898)
5. பெருங்கதை (1924) 
6. உதயகுமார காவியம் (1935)

சங்க இலக்கிய வரிசையில்,

7. பத்துப்பாட்டு (1889)
8. புறநானூறு ( 1894)
9. ஐங்குறுநூறு (1903)
10. பதிற்றுப்பத்து (1904)
11. பரிபாடல் ( 1918)
12. குறுந்தொகை ( 1937)

இலக்கண வரிசையில்,

13. புறப்பொருள் வெண்பாமால் (1895)
14. நன்னூல் மயிலைநாதர் உரை (1925)
15. நன்னூல் சங்கர நமசிவாயர் உரை (1928)
16. தமிழ் நெறி விளக்கம் (1937)

பிரபந்தங்கள் வரிசையில்,

17. மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிரபந்தத் திரட்டு
18. சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தத் திரட்டு
19. குமரகுரபரர் பிரபந்தத் திரட்டு
20. தக்கயாகப் பரணி
21. பாசவதைப் பரணி
22. மூவருலா
23. கப்பற் கோவை
24. தென்றல் விடு தூது

ஆகியவற்றைப் பதிப்பித்துள்ளார். மேலும் 1883 முதல் 1940 வரை 14 
புராணங்களைப் பதிப்பித்துள்ளார். இவர் ஏறக்குறைய 84 நூல்களைப் பதிப்பித்துள்ளார். (மேலும் ஆய்விற்குரியது) இதனைக் கீழ்க்கண்டவாறு பகுக்கலாம்.

சங்க இலக்கியங்கள்       -     18 
காப்பியங்கள்                     -      05
புராணங்கள்                        -     14
உலா                                      -      09
கோவை                               -      06
தூது                                        -      06
வெண்பா நூல்கள்            -     13
அந்தாதி                                -      03
பரணி                                    -      02
மும்மணிக்கோவை      -       02
இரட்டை மணிமாலை -       02
இதர பிரபந்தங்கள்         -       04

சிறப்புகள்

    இங்ஙனம் தமிழ்ப் பணியைத் தனது உயிர் மூச்சாகக் கொண்டு செயல்பட்ட உ.வே.சா அவர்கள் பெற்ற பட்டங்களும்  சிறப்புகளும் ஏராளம். அவை:

1. பெசண்ட நகரில் 1942 இல் உ.வே.சா. நூல் நிலையம்
2. 2006 இல் அஞ்சல் தலையை இந்திய அரசு வெளியிட்டது
3. ஜி.யு.போப், சூலியஸ் வின்கோன் ஆகியோரின் பாராட்டு 
4. 1905இல் அரசாங்கம் 1000 ரூபாய் பரிசு
5. 1906 இல் மகாமகோபாத்தியாய விருது (பெரும் பேராசிரியர்)
6. பாண்டித்துரை தேவரின் 4வது தமிழ்ச் சங்கத்தின் வாழ்நாள் புலவர்
7. 1917 திராவிட வித்தியா பூஷணம் பட்டம்
8. 1925இல் தாஷிணாத்ய கலாநிதி
9. 1925 இல் மதுரைத் தமிழ்ச் சங்கம் 5000 ரூபாய் பரிசு 

     உ.வே.சா. அவர்களின் தமிழ்ப்பணி தமிழின் பெருமையை உலகறியச் செயவித்தது. அவர்தம் பணியால் தமிழ் செம்மொழித் தகுதியைப் பெற்று விளங்குகிறது எனில் மிகையன்று. இன்றைய இளைஞர்களும் மாணவர் சமுதாயமும் அறிஞர் பெருமக்களும் அவரது பணியைப் பாராட்டுகின்ற வகையில் தமிழைக் காத்து நிறபதோடு அகிலமெங்கும் தழைத்தோங்க சபதம் மேற்கொள்ள வேண்டும்.

(குறிப்பு: திருப்பாற்கடனாத கவிராயர் இறப்பிற்குப் பின் அவர் வீட்டிலிருந்து 500 ஓலைச் சுவடிகளை உ.வே.சா. எடுத்து வந்ததாகவும் அதில்தான் பத்துப்பாட்டு முழுவதும் உரையுடனும், எட்டுத்தொகை, பதிணென்கீழ்க்கணக்கு, சீவகசிந்தாமணி, கொங்குவேள் மாக்கதை ஆகிய நூல்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது)





கருத்துகள் இல்லை: