சனி, 17 செப்டம்பர், 2016

திரட்டிகள்: இதற்கு மேலும்…..

காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 9,10,11-2016 ஆகிய நாள்களில் நடைபெற்ற 15வது உலகத்தமிழ் இணைய மாநாட்டில் படிக்கப்பெற்ற கட்டுரை

திரட்டிகள்: இதற்கு மேலும்…..
முனைவர் க.துரையரசன்
தமிழ் இணைப்பேராசிரியர்
அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி)
கும்பகோணம் – 612 002.
மின்னஞ்சல்: darasan2005@yahoo.
                                 darasan2006@gmail.com
ஆய்வுச்சுருக்கம்:
தமிழ் வலைப்பூக்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. இவற்றில் சிலவற்றைத் தொகுத்து ஓரிடத்தில் தரும் பணியைத் திரட்டிகள் சேவை நோக்கில் செய்து வருகின்றன. அவற்றை ஊக்குவிக்கும் வகையிலும் இதுவரை அவை செய்த பணிகள், இனி செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் பருந்து நோக்குப் பார்வையில் இக்கட்டுரை அமைக்கப்படுகிறது.
காலத்தின் கட்டாயம்:
 ‘ஒரு சமுதாயம் இன்றைய பணிகளை இன்றைய கருவி கொண்டு செய்ய வேண்டும். இன்றைய பணியை நேற்றைய கருவிகொண்டு செய்யும் இனத்தின் நாளைய வாழ்வு நலியும். இது தவிர்க்க முடியாததுஎன்பார் டாக்டர் வா.செ.குழந்தைசாமி. இதனடிப்படையில் இன்றைய தலைமுறையினர் இணையத்தைப் பயன்படுத்தி ருகின்றனர். இணையப் பயன்பாடு காலத்தின் கட்டாயம்.  தமிழறிஞர்கள், தமிழாய்வாளர்கள், தமிழ் எழுத்தாளர்கள், தமிழார்வலர்கள் எனப் பலரும் தங்களது கருத்துகளைக் கட்டுரைகளாகவும், செய்தித் துணுக்குகளாகவும் வலைப்பூக்களில்  பதிவிட்டு வருகின்றனர்.
திரட்டிகள்:
தமிழில் வலைப்பூக்களின் எண்ணிக்கை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகப் பெருகி வருகின்றன. இது மகிழ்ச்சியளிக்கக்கூடிய ஒரு வளர்ச்சி நிலையாகும். பல்கியும் பரவியும் கிடக்கும் இவற்றை இணைய வாசிப்பாளர்களுக்கு ஓரிடத்தில் தொகுத்துத் தரும் பணியைத் திரட்டிகள் செய்து வருகின்றன. இதனால் இணைய வாசிப்பாளர்களுக்கு வலைப்பூக்களைக் கண்டறிந்து வாசிப்பது எளிதாகிறது.
திரட்டியின் வகைகள்:
திரட்டிகளைப் பொறுத்தவரையில் இரண்டு விதமாக செயல்படுகின்றன.            ஒன்று, வலைப்பூக்களைத் தானாகவே தேடித் தருவன; மற்றொன்று, பதிவர் பதிவு செய்து கொண்ட பின்பு வலைப்பூக்களைத் தேடித் தருவன. இதில், தானாகத் திரட்டும் திரட்டிகள், வலைப்பூவினை இணைக்கத் தமது திரட்டி முகவரியை அளிக்கின்றன. இதன்மூலம் புதிய பதிவுகள் திரட்டியில் தெரியவருகின்றன. பதிவு செய்த பின்பு செய்திகளைக் காட்டும் திரட்டிகள், வலைப்பூவின் இடுகைகளைத் திரட்டியில் பதிவு செய்த பிறகுதான் திரட்டியில் காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பிடத்தக்க திரட்டிகளும் அவற்றின் முகவரிகளும்:
            தமிழ்.கணிமை.காம்             -           www.tamil.kanimai.com
            தமிழ் மணம்                          -           www.tamilmanam.net
            தமிழ்வெளி                            -           www.tamilveli.com
            தமிழ்ப்பதிவுகள்                    -           www.tamilblogs.com
தமிழ்பாரதி                            -           www.thamizhbharathi.com
தமிழ் BM                                 -          www.tamilbm.com
            திரட்டி                                                -           www.thiratti.com
            தேன்கூடு                               -           www.thenkoodu.com
நம்குரல்                                   -          www.namkural.com
மகளிர்கூடல்                                      -          www.magalirkoodal.com
            டெக்னோரட்டி                     -           www.technorati.com
வலைச்சரம்                             -          www.blogintamil.blogspot.in
வலைப்பூக்கள்                         -         www.valaipookal.in
            வேர்ட்பிரஸ்                          -           www.ta.wordpress.com
            மாற்று                                                -           www.maatru.net
            கில்லி                                     -           www.gilli.in
ஸ்னாப் ஜட்ஜ்                       -           www.snapjudge.blogspot.com

திரட்டியின் செயற்பாடுகள்:
இவற்றில் தமிழ் மணம், தமிழ்ப்பதிவுகள், தமிழ்வெளி, தேன்கூடு ஆகியனத் தாங்களாக இணைந்து கொள்ளும் பதிவர்களின் வலைப்பூக்களைத் திரட்டுகின்றன. வாசகர்களால் நல்ல பதிவுகளாக அடையாளம் காட்டப்படுகின்ற பதிவர்களின் வலைப்பூக்களைத் தேடித்திரட்டும் பணியை ‘மாற்று’  மேற்கொள்கிறது. தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வரும் வலைப்பதிவுகளைத் தேர்ந்து திரட்டுகின்ற பணியை ‘கில்லி’ மேற்கொள்கிறது.
வாரம் ஓர் ஆசிரியர் தன்னைக் கவர்ந்த வலைப்பதிவுப் பக்கங்களை அறிமுகம் செய்து தொகுப்பது ‘வலைச்சரம்’ என்னும் திரட்டி. தனியொருவராகத் தினந்தோறும் தான் படிப்பதில் தேவையற்றதை விலக்கி நல்லவற்றைத் தொகுக்கிறார் ஸ்னாப் ஜட்ஜ்.
மேற்கண்ட அனைத்துத் திரட்டிகள், திரட்டிகளின் சாரம் ஆகியவற்றை ஒரே தொகுப்பாகத் தந்து அனைத்துத் தமிழ் வலைப்பதிவுகளின் புதிய பதிவுத் தலைப்புகளைத் ‘தமிழ்.கணிமை.காம்’ திரட்டுகிறது.
செய்திகளைக் கண்டறிவதில் சிக்கல்:
தமிழ் மொழியில் அமைந்துள்ள வலைப்பூக்கள் ஒரு குறிப்பிட்ட செய்தியைத் தாங்கியவாறு தொடர்ந்து வெளிவருவதில்லை. வலைப்பூக்களின் உள்ளடக்கம் தனித்தப் பொருண்மையுடையதாக இல்லாமல் கலப்புப் பொருண்மை உடையதாகவே உள்ளன. ஆதலால் குறிப்பிடத்தக்க செய்தியைக் காண அதற்குரிய வலைப்பூவை இனங்காண முடியவில்லை. ஒவ்வொரு வலைப்பூக்களாகப் பார்த்துப் பார்த்துதான் வேண்டிய செய்திகளைக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. இதனால் வலைப்பூக்கள் பெருகியிருந்தாலும் அவற்றைப் பயன்படுத்துவதில் சிக்கல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இச்சிக்கல் களையப்படாவிட்டால் வலைப்பூக்களால் பெரிய நன்மைகள் கிட்டாது.
 ஒரு குறிப்பிட்ட செய்தியைக் (இலக்கணம், புதுக்கவிதை என்பது போல) கொண்டு வலைப்பூக்கள் அமைவதில்லை. மாறாகப் பல்சுவைப் பொருண்மையிலேயே பெரும்பாலான வலைப்பதிவர்கள் பதிவிடுகிறார்கள். எனவே வலைப்பதிவுகளைப் பொழுதுபோக்கு நிலையில் பயன்படுத்தும் தன்மைதான் மிகுந்திருக்கிறதே ஒழிய அறிவுப் பூர்வமானப் பயன்பாட்டு நிலைக்கு உகந்ததாக இல்லை.  
திரட்டிகள் – இதுவரை:
இந்நாள் வரை திரட்டிகள் மேற்கூறியவாறு தானாகவோ அல்லது வலைப்பதிவர்களின் தன்முனைப்பானப் பதிவிற்குப் பிறகோ வலைப்பூக்களைத் திரட்டுகின்ற பணியை மட்டுமே செய்கின்றன. இதனால் இணைய வாசிப்பாளர்களுக்கு வலைப்பூக்களைப் பார்ப்பதும் படிப்பதும் சற்று எளிதாகிறது என்பது உண்மைதான். ஆனால் வலைப்பூக்களை திரட்டுவதைத் தவிர குறிப்பிட்டத்தக்க ஆக்கப்பூர்வமான வேறு பணிகளை திரட்டிகள் செய்யவில்லை (மேற்காட்டிய சில திரட்டிகளைத் தவிர).
திரட்டிகள் – இன்னும்:
1. திரட்டிகள் தமிழ் வலைப்பூக்களைத் திரட்டுவதோடு அவற்றை வகைப்படுத்தவும்  வேண்டும். சான்றாக இலக்கியம், சங்க இலக்கியம், அற இலக்கியம், பக்தி இலக்கியம், காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், மரபுக் கவிதை, புதுக்கவிதை, இலக்கணம்,  கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஆன்மீகம், தொழில்நுட்பம் என்பன போன்று வகைப்படுத்திக் கொடுத்தால் பயன்பாட்டுக்கு எளிமையாக இருக்கும்.
2. ஒரு திரட்டியில் வேண்டிய செய்திகளைத் தேடிப் பெறுகிற வகையில் தேடுதல் வசதியையும் அவை ஏற்படுத்தித் தரவேண்டும். அதுபோல ஒரு செய்திக்குத் தொடர்புடைய செய்திகளையும் காட்டுமாறும் ஒரு பொருள் குறித்தப் பதிவுகள் ஒன்றாகத் தொகுக்கப்படுமாறும் திரட்டிகள் செயற்பட்டால் சிறப்பாக இருக்கும்.
3. வேண்டிய பகுதியையோ அல்லது முழுக் கட்டுரையையோ அச்சிடுவதற்கான வசதியையும் திரட்டிகள் வழங்க வேண்டும்.
4. சிறந்த வலைப்பதிவிற்கு (அ) வலைப்பதிவருக்கு ஊக்கமளிக்கும் வகையில் பரிசுகள் தரவேண்டும்.
5. ஒரு திரட்டியில் ஒரு செய்தி திரட்டப்பட்டுவிட்டால் அச்செய்தி வேறு எத்திரட்டியிலும் தொகுக்கப்படாதவாறு தடுக்கப்பெற வேண்டும்.
6. பல திரட்டிகள் தொடர்ந்து புதுப்பிக்கபடாமலோ அல்லது செயற்படாமலோ உள்ளன.  அவ்வாறில்லாமல் திரட்டிகள் தொடர்ந்து செயல்பட வேண்டும்.
முடிவுகள்:
1. வலைப்பூக்களைத் திரட்டுகின்ற பணியை மட்டும் திரட்டிகள் மேற்கொள்ளக் கூடாது.
2. திரட்டிகளை வகைப்படுத்த வேண்டும்.
3. அவற்றின் தரம், தகுதி ஆகியவற்றை மதிப்பிட்டு அறிவிக்க வேண்டும்.
4. தேடுதல் வசதி வேண்டும்.
5. தொடர்ந்து செயற்பட வேண்டும்.
பயன்பட்டவை:

1. முனைவர் க.துரையரசன்,  ‘தமிழ்மொழி வளர்ச்சியில் வலைப்பதிவர்களின் பங்களிப்பு’ என்னும்  
     பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் குறுந்திட்ட ஆய்வுக்கட்டுரை.
2.  முனைவர் மு.பழனியப்பன், கணினியும் இணையமும், மீனாட்சி நூலக வெளியீடு, புதுக்கோட்டை -  
     622 003.
3. முனைவர் மு. பழனியப்பன், எஸ். ரவிச்சந்திரன், இணைய உலகம், பாமா பதிப்பகம், சென்னை - 24,  
   முதல் பதிப்பு 2005.
4. முனைவர் துரை.மணிகண்டன், இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள், கௌதம் பதிப்பகம், சென்னை –
    600 050,  முதல் பதிப்பு 2010.
5. முனைவர் க. துரையரசன்,  இணையமும் இனிய தமிழும், இசை பதிப்பகம், கும்பகோணம் - 612 001,
    முதல் பதிப்பு 2009.
6. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள திரட்டிகள்கருத்துகள் இல்லை: