ஞாயிறு, 4 டிசம்பர், 2022

கவிதைச் சிற்பி

 


கவிதைச் சிற்பி

 

‘சீரூடைச் சிற்பிகள்’ என்ற நூலாசிரியர் அன்பிற்கினிய சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் என் கல்விப் பயணத்தில் நான் சந்தித்த ஓர் அற்புத மனிதர். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது கும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரியில் வாக்குப் பெட்டிகளின் பாதுகாப்புப் பணியில் இவர் இருந்தபொழுது இக்கல்லூரியின் முதல்வராகிய என்னை ஆர்வமுடன் சந்தித்து உரையாடினார். உரையாடலின் ஊடே கல்லூரியின் மீது அவர் கொண்ட ஆழ்ந்த பற்றும் அன்றைய இவரது ஆசிரியர்கள் மீது இவர் காட்டிய பசுமை மாறா அன்பும் எனக்கு இவர் மீதான மதிப்பை மிகுதிப்படுத்தியது.

இவரது இயல்பான பேச்சு, அதிகாரத் தோரணையற்ற அணுகுமுறை, பெற்றோரை நினைந்து உருகும் பாங்கு, தன் பழைய வறிய வாழ்க்கையை மறைக்காமல் இயம்பியது, சமூகத்தின் மீதான அக்கறை, கடமையை மனித நேயத்தோடு செயற்படுத்துவது போன்ற அரிய குணங்களை இவரிடத்து காண முடிந்தது.

இத்தகைய எதிர்பாரா நட்பு பின்னர் ஆழ்நட்பாக மாறிப்போனது. கல்லூரி மாணவர்களை ஊக்கப்படுத்தவும் நெறிப்படுத்தவும் கல்லூரி மீதும் மாணவர்கள் மீதும் அன்பும் அக்கறையும் கொண்டவரான இவரைக் கல்லூரியில் விழா ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தேன். அன்றைய இவரது இயல்பான, உருக்கமான பேச்சு மாணவர்களையும் ஆசிரியர்களையும் வெகுவாகக் கவர்ந்ததை இங்கு நன்றியுடன்  நினைவு கூர்கிறேன். 1983 முதல் 1986 வரை இக்கல்லூரியில் புவியியல் துறையில் இளமறிவியல் பயின்ற இவர், தன் உயிரினும் மேலாக மதிக்கும் – தன் வாழ்க்கையில் கல்விச் செல்வத்தை வாரி வழங்கிய – தான் பயின்ற கல்லூரியில் காவல்துறை உயர் அதிகாரியாக வந்து பணியாற்றியதைப் பெருமையாக நினைத்து புலகாங்கிதம் கொண்டார். அது மட்டுமின்றி கல்லூரி விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு தான் பங்கு கொண்டதை வாழ்க்கையின் பெரும்பேறாக எண்ணி எண்ணி மகிழ்ந்தார். இம்மனப்போக்கு அவரது நன்றியறிதலின் – எளிய குணத்தின் வெளிப்பாடாகவே எண்ண வேண்டியுள்ளது.

‘காவலும் குடும்பமும் இரு கண்களாகப் பாதுகாத்தேன்’ என்ற தன்னிலை விளக்கத்தை இக்கவிதை நூலில் கவிஞர் பதிவு செய்துள்ளார். இரட்டை  மாட்டு வண்டியான  பணியையும் குடும்பத்தையும் தடம் புரளாமல் செலுத்தியுள்ளார் என்பதற்கான சாட்சிய வரிகளாக இவை உள்ளன.

தான் பயின்ற இக்கல்லூரியை ‘ஆளாக்கிய அரசு ஆடவர் கல்லூரி’, ‘அறிவுச் செல்வத்தை அள்ளித்தந்த ஆடவர் காலேஜ்’ என்று ஆலாபனை செய்கிறார். இக்கவிதையில்,  ‘இனிமையான வாழ்க்கைக்கு அறிவூட்டிய போதகர்கள்’ என்று தனது ஆசிரியர்களை நினைவு கூர்கின்ற இவர், ‘திரும்பவும் இவர்களிடம் கல்வி கற்க முடியுமா?’ ஏன்ற ஏக்கத்தையும் வெளிப்படுத்தி உள்ளார். இவ்வரிகள் இக்கால மாணவர்களை ஆற்றுப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தவை ஆகும்.

மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகியவற்றை ‘நாட்டைக் காக்கும் நான்கு சக்கரங்கள்’ என்று குறிப்பிடும் இவர் தன் வறிய பெற்றோர்களை அன்றும் இன்றும் என்றும் மதிக்கும் மதிநுட்பம் கொண்டவராக விளங்குவதை,

‘என் தாய் இருக்கும்போது காக்கி தந்தார்

இறந்த பிறகு கவிதை தந்தார்’

 

‘என் நேச தந்தையே

வாழ்வின் உன் வழியில்

வளர்வேன் உன் நினைவில்’

ஆகிய வரிகளில் கம்பீரமாய் காட்சிப்படுத்தி உள்ளார்.

எல்லாரும் ஓர் குலம், எல்லாரும் ஓரினம் – என்ற பாரதியின் சமூகப் பார்வையை

‘பிறக்கும் உயிரெல்லாம் உலகத்தில் ஒண்ணுதான்’ என்ற வரியின் மூலம்

சமத்துவ சமூகத்தைக் காணும் தன் வேட்கையை வெளிப்படுத்தி உள்ளார்.

தனக்கு உயிர் தந்த தாயை எண்ணிக் கவிதை படைத்த இவர் 

கவிதை உயிர் தந்த தாய் தமிழை

தேன்தமிழ், இன்தமிழ், முத்தமிழ், இன்பத்தமிழ், நற்றமிழ், இலக்கியத் தமிழ், இலக்கணத் தமிழ், கன்னித் தமிழ், இயற்கைத் தமிழ், செந்தமிழ், இசைத்தமிழ், சங்கத்தமிழ் என்றெல்லாம் மனங்குளிர விளித்து மகிழ்கிறார்.

இவர், சீருடை சிற்பிக்குள் முகிழ்த்த ஒரு கவிதைச் சிற்பி. இவர் தம் கவிதையில் கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு கரைபுரண்டோடுகிறது. கவிதையில் இனிமை, எளிமை, நேர்மை, உண்மை கொடிகட்டி பறக்கிறது. கவிதை நெடுக மனிதாபிமானம் இழையோடுகிறது. இதற்குக் கட்டியங்கூறும் வகையில் இவரது பணி அனுபவப் பகிர்வு கவிதைகள் அமைந்துள்ளன.

இவருக்குக் கவிதை நடை மிக இயல்பாய் வாய்த்திருக்கிறது. எந்த இடத்திலும் முயற்சித்தும் வலிந்தும் சொல்லாடல்களைக் கையாளவில்லை என்பதால் இவரை இயல்புக் கவிஞர் என்றே அழைக்கலாம். காவல்துறையின் கடும் பணியிலும் கடுமை காட்டாத இவருக்கு வாய்த்துள்ள இளகிய மனமும் நேரிய பார்வையும் பாராட்டுதற்குரியது. கவிஞர் மேலும் பல நூல்களைத் தமிழ் உலகிற்கு உவந்தளித்திட மனமுவந்து வாழ்த்துகிறேன்.

கும்பகோணம்,                                                                              வளர் அன்புடன்,

10-06-2022.                                                                          (முனைவர் க.துரையரசன்)

கருத்துகள் இல்லை: