வெள்ளி, 4 ஜனவரி, 2008

சங்க இலக்கியங்களில் தமிழர்களின் மரபுசார் உழவுத்தொழில்







நோக்கம்:

தமிழக மக்கள் பெரிதும் வேளாண் தொழிலையே நம்பியுள்ளனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் வேளாண் உற்பத்திப் பெரும் பங்காற்றி வருகிறது. இதனால்தான், அறிவியல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வேளாண் தொழிலை வளர்ப்பதில் அறிவியலார் முனைப்புக் காட்டி வருகின்றனர். அறிவியல் தொழில் நுட்பத்துடன் கூடிய வேளாண்மையை அறிவியல் வேளாண்மை என்றும் கூறுகின்றனர். அறிவியலும் வேளாண்மையும் இணைந்து நடைபோடுவதால் நல்லதொரு வளர்ச்சிப் பாதையில் இத்துறை முன்னேறி வருகிறது. வேளாண் துறையில் இன்று உள்ளது போல் அறிவியல் தொழில்நுட்பங்களின் பங்களிப்பு மிகப் பழங்காலத்தில் இல்லை. ஆயினும், அக்கால வேளாண்குடி மக்களிடம் உழவு சார்ந்த அறிவியல் சிந்தனைகளின் சுவடுகள் இருந்தமையை விளக்குவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சான்றாதாரங்கள்:

இக்கட்டுரை, சங்க இலக்கியங்களில் காணலாகும் மரபுசார் உழவுத்தொழில் பற்றிய சிந்தனைகளை வெளிப்படுத்துகிறது. அவற்றை இக்கால வேளாண் அறிவியல் சிந்தனைகளோடு ஒப்பிட்டுப் பார்க்க முனைகிறது. இக்கட்டுரைக்குச் சங்க இலக்கியங்கள் முதன்மை ஆதாரங்களாகவும், தொல்காப்பியம், திருக்குறள் உள்ளிட்ட நூல்கள் துணைமை ஆதாரங்களாகவும் கொள்ளப்படுகின்றன.

உழவின் சிறப்புகள்:

உலகில் நடைபெறும் தொழில்களில் தலைமைத் தன்மை வாய்ந்தது உழவுத் தொழில் எனலாம். இதனால்தான், "சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்" (1031) என்று வள்ளுவர் கூறினார் போலும். இந்த உண்மையை வெளிப்படுத்தும் வகையில்,

"எங்க ஏரோட்டம் நின்னு போனா
உங்கக் காரோட்டம் என்னவாகும்"

என்று கேள்வி எழுப்புகிறார் கவிஞர் கண்ணதாசன்.

உழவுத் தொழிலின் மேன்மையை உணர்ந்தே அரசாங்கமும் வேளாண்மை உற்பத்தியைப் பெருக்கும் வகையில் ஐந்தாண்டுத் திட்டங்கள் உள்ளிட்ட நல்ல பல திட்டங்களின் வழி வேளாண் துறைக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

உழவரின் சிறப்பு:

உழவுத் தொழிலைச் (வேளாண் தொழிலை) செய்வோர் உழவர். இவர்கள் இவ்வுலகத்தைத் தாங்கும் அச்சாணியாகத் திகழ்வதை,

"உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து" (1032)

என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

இவ்வுலகில் வாழும் எவரும் உழவருக்கு அடுத்த நிலையில் வைத்தே எண்ணத்தக்கவர்கள் என்பதை,

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றுஎல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்" (1033)

என்றும் அவர் தெளிவுருத்துதிறார்
இதனால்தான்,
"கடவுள் என்னும் முதலாளி
கண்டெடுத்தத் தொழிலாளி
விவசாயி"
என்று கவிஞர் மருதகாசி பாடுகிறார் போலும்.

மரபுசார் உழவுத் தொழிலின் கூறுகள்:


தமிழகத்தில் தொன்றுதொட்டு நடைபெற்றுவரும் மரபுவழிப்பட்ட உழவுத் தொழிலின் நடைமுறைகளைப் பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்.
1. உழுதல் 2. சமன்செய்தல் 3. விதைத்தல் 4. நடுதல் 5. நீர்ப்பாசனம் 6. எருவிடுதல் 7.களையெடுத்தல் 8. பயிர்ப்பாதுகாப்பு 9.அறுவடை 10. தூய்மை செய்தல்

இக்கூறுகள் சங்க இலக்கியங்களில் பயின்று வந்துள்ளமையை விளக்கும் முன் உழவுத் தொழிலுக்கு அடிப்படைத் தேவையான நிலம் பற்றிய தொல்காப்பியரின் சிந்தனையைத் தெரிந்து கொள்வோம்.

மருதம்:

பழந்தமிழகம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகையாகப் பகுக்கப்பட்டது. இப்பாகுபாடு, தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே இருந்தமையை,
"முற்படக் கிளந்த எழுதிணை என்ப" (தொல்.பொருள்.அகத்.1) என்று அவர் கூறுவதன் மூலம் அறியலாம்.

மருத நிலம் என்பது வயலும் வயல் சார்ந்த பகுதியும் ஆகும். இப்பகுதி வேளாண்மை செய்வதற்கு ஏற்றப் பகுதி என்ற உணர்திறனைப் பழந்தமிழர்கள் பெற்றிருந்தனர். உழவுத் தொழிலில் ஈடுபட்ட ஆடவர்கள் உழவர்கள்; பெண்டிர்கள் உழத்தியர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

தொல்காப்பியத்துக்கு முன்பு தொடங்கி இக்கால இலக்கண நூல்கள் வரையிலும் மருத நிலம் பற்றிய முதல், உரி, கருப்பொருள்களில் காணலாகும் உழவு சார்ந்த சிந்தனைகள் உழவுத் தொழிலின் பழைமையை எடுத்துக் காட்டுவனவாகும்.

1. உழுதல்:

உழவுத் தொழிலின் இன்றியமையாதத் தொடக்கக் கூறு உழுதல் ஆகும். உழுதல் என்றால் நிலத்தின் மேற்பரப்பில் காணப்படும் கடினத் தன்மை கொண்ட மண்ணை மென்மைத் தன்மை உடையதாக ஆக்குகின்ற வகையில் மேலும் கீழுமாகப் புரட்டுவது. இச்செயல் முறைப்பட செய்யப்படவில்லை என்றால் விளைச்சல் பெருகாது.

நன்செய், புன்செய் நிலங்களில் நன்கு ஆழமாக உழவு செய்து, மண்ணை மேலும் கீழுமாகப் புரட்டி உலரவிடவேண்டும். அப்பொழுதுதான் மண்ணுக்கு நல்ல காற்றோட்டம் கிடைக்கும்; விளைச்சல் பெருகும். இஃது அறிவியல் உண்மை. இதனால்தான் இன்று வேளாண்துறையினர் கோடைப் புழுதி செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை உழவர்களிடையே வற்புறுத்தி வருகின்றனர். கோடைப் புழுதி செய்வதன் மூலம் மண்ணின் தன்மை காத்தல், நீர்ச் சிக்கனம் உள்ளிட்ட நன்மைகள் கிட்டும் என்பது வேளாண் துறையினரின் முடிபு. இந்த உண்மையைப் பழந்தமிழர்கள் உணர்ந்திருந்ததை,

"தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்து எருவும்
வேண்டாது சாலப் படும்" (1037)
என்ற வள்ளுவரின் வாக்கு சுட்டுகிறது.

அஃதாவது, ஒரு பலம் புழுதி கால் பலம் புழுதி ஆகும்படி உழுது காயவிட்டால் அந்நிலத்தில் பயிர் நன்கு செழித்து வளருமாம். இவ்வாறு உழவு செய்வோரைப் பலமுறை உழவு செய்வோர் என்ற பொருள்பட "செஞ்சால் உழவர்" (196) என்று பெரும்பாணாற்றுப்படைச் சுட்டுகிறது. இச்செய்தியை,

"........... உறுபெயல்
தண்துளிக்கு ஏற்ற பல உழு செஞ்செய்
மண்போல் நெகிழ்ந்து" (26:23-25)

என்று அகநானூறு குறிப்பிடுகிறது.

கலப்பை:

நிலத்தை உழுவதற்குக் கலப்பை என்ற உழவு கருவியைப் பழந்தமிழர் பயன்படுத்தினர்; இன்றும் பயன்படுத்தி வருகின்றனர். "இது உழவர் நிலத்தைப் பண்படுத்த உபயோகிக்கும் கருவி. இது நிலத்திலுள்ள உறுதியாகிய மண்ணினைக் கீழ் மேலாகக் கலப்பது" என்று அபிதான சிந்தாமணி (ப.365) விளக்குகிறது.

இச்சொல், இசைக்கலங்கள் இட்ட பை என்ற பொருளில் புறநானூற்றிலும் (206: 10), உழுதலுக்கு உரிய கருவி என்ற பொருளில் பெரும்பாணாற்றுப்படையிலும் (188) பயின்று வந்துள்ளது. இக்கலப்பையின் அடிப்பகுதி - நிலத்தைக் கிளரும் பகுதி கொழு எனப்படும். இச்சொல்,

"......................... நாஞ்சில்
உடுப்பு முகமுழுக்கொழு மூழ்க ஊன்றி" (பெரும்பாண். 199-200)
"கொழுவல்சி" (மதுரைக்காஞ்சி 141)
"நாஞ்சில் ஆடிய கொழுவழி மருங்கின்" (பதிற்றுப்பத்து 58: 17)

என்று பயின்று வந்துள்ளமையைக் காணமுடிகிறது.

இக்கலப்பையினால் மிகக் கடினமாக உள்ள நிலப்பகுதியை உழுவதில் இடையூறு ஏற்பட்டது. எனவே, கொழுவுடன் கூடிய ஏர்க்கலப்பையைப் பழந்தமிழர் பயன்படுத்தியுள்ளமையைக் காணமுடிகிறது. (கொழு - கலப்பையின் அடிப்பகுதி கூர்மையான இரும்புத்தகடு அல்லது இரும்புத் தண்டினால் ஆனது)

இரு வகை உழவு:

உழவர்கள், நன்செய் நிலங்களில் சேற்று உழவும் புன்செய் நிலங்களில் புழுதி உழவும் செய்தனர். "கொல்லை உழுகொழு" (117) என்று கொல்லை நிலத்தை உழுத கொழுவைப் பொருநராற்றுப்படை குறிப்பிடுகிறது.

"ஊன்கிழித்தன்ன செஞ்சுவல் நெடுஞ்சால்
வித்திய மருங்கின் விதைபல நாறி" (194:4-5)

என்பது செம்மண் நிலத்தின் இருபுறமும் புழுதி கீழ் மேலாகப் புரண்டு விழுந்துப் புலருமாறு, கொல்லையில் உழவர்கள் ஏர்கொண்டு உழுதது ஊனைக் கிழித்தாற் போன்று இருந்ததாக அகநானூறு புழுதி உழவு குறித்து இயம்புகிறது.

"அரிகால் போழ்ந்த தெரிபகட்டு உழவர்" (41: 6) என்று அறுவடை செய்த வயல்களில் அரிதாள் பிளவுபடும்படி சேற்று உழவு செய்ததை அகநானூறு குறிப்பிடுகிறது.

எனவே, சேற்று உழவு செய்வதற்கு மரத்தினால் ஆன கொழு கலப்பைகளையும் புழுதி உழவு செய்வதற்குக் கூரிய இரும்புத்தகடு அல்லது இரும்புத் தண்டினால் ஆன கொழுவுடன் கூடிய கலப்பைகளையும் தமிழர்கள் தொன்றுதொட்டுப் பயன்படுத்தி வருவதைச் சங்க இலக்கியங்கள் வழி உணரமுடிகிறது.
இன்றைய உலகில் டிராக்டர் உள்ளிட்ட உழவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த எந்திரங்களிலும் சேற்று உழவிற்கும் புழுதி உழவிற்கும் வெவ்வேறு கலப்பைகள் பயன்படுத்தப் படுகின்றன. இவைப் பழந்தமிழர் பயன்படுத்திய இருவேறு கலப்பைகளோடு ஒப்பு நோக்கத்தக்கன.

2 .சமன்செய்தல:


நிலத்தை நன்கு உழவு செய்த பிறகு அதைச் சமன் செய்வர். அதாவது நிலத்தின் மேற்பரப்பை மேடு பள்ளங்கள் இல்லாதவாறு இயன்றவரை சரி செய்வர். மேடான பகுதிகளை மண் வெட்டியால் வெட்டித் தாழ்வான பள்ளங்களில் இட்டு உயர்த்துவர். இதனால் நிலத்தில் உள்ள ஒழுங்கற்ற மேடு பள்ளங்கள் சரி செய்யப்படுவதுண்டு. இதனால் நிலம் சமனடையும். இவ்வாறு செய்வதால் நிலத்தின் நீர்ப்பாசனம் ஒரே சீராக இருக்கும். சேற்று நிலத்தில் இவ்வாறு செய்து பரம்பு வைத்த பிறகு விதை விதைப்பதோ அல்லது நடவு செய்வதோ நடைபெறும்.
நன்றாக உழவு செய்த பிறகு சேற்றினை உழவர்கள் கால்களால் நன்கு மிதித்து சமப்படுத்தினர் என்பதை,

"............... செறுவின்
உழாஅ நுண்தொளி நிரவிய வினைஞர்" (210-211)

என்று பெரும்பாணாற்றுப்படைக் குறிப்பிடுகிறது.

3. விதைத்தல்:

நிலத்தை நன்கு உழவு செய்து பண்படுத்திய பிறகு விதை விதைப்பர். இச்செய்தி சங்க இலக்கியங்களில் பல இடங்களில் பயின்று வந்துள்ளன. நெல் விதைத்தல், வரகு விதைத்தல், சாமை விதைத்தல் முதலியவை முல்லை மற்றும் மருத நில மக்களின் தொழில்கள் என்பது இங்கு நினைவில் கொள்ளத்தக்கதாகும்.
"பல்விதை உழவின் சில்ஏராளர்" (76:11) என்று பதிற்றுப்பத்தும், உழவர்கள் காலையில் விதைப்பதற்காகச் சிறிய கூடைகளில் விதைகளை எடுத்துச் சென்ற செய்தியை,

".............உழவர்
விதைக்குறு வட்டி போதொடு பொதுளப்" (155: 1-2)

என்று குறுந்தொகையும் குறிப்பிடுகிறது.

விதைப்பதற்கு உரிய வித்துகளைப் பழந்தமிழர்கள் நன்கு உலர (காய) வைத்ததற்கான சான்றும் கிடைக்கிறது. "வெண்ணெல் வித்தின் அறைமிசை உணங்கும்" (211:6) என்று அகநானூறு குறிப்பிடுகிறது. அதாவது , உழவர்களின் விதை நெல்லைப் போன்று கடம்ப மலர்கள் பாறையின் மீது நன்கு காய்ந்து கிடக்கிறதாம்.

இருவகை விதைத்தல்:

இக்காலத்தார் புழுதி விதை, சேற்று விதை என்று இருவகை விதைப்பு முறைகளைச் செய்கின்றனர்.

புழுதி விதை:

நிலத்தை நன்கு உழுது, புலர விட்டு அதன் பிறகு நீர்ப் பாய்ச்சி விதைகளைத் தௌதப்பர். இது பெரும்பாலும் கோடைக் காலங்களில் அல்லது நீர்த் தட்டுப்பாடு உள்ள காலங்களில் நடைபெறும்.

சேற்று விதை:

நிலத்தில் நீர்ப்பாய்ச்சி, நன்கு உழுது சேறாக்கி, தண்ணீர் நிரப்பிய பிறகு விதைகளைத் தௌதப்பர். இது பெரும்பாலும் நீர்த்தட்டுப்பாடற்றக் காலங்களிலும் மழைக் காலங்களிலும் நடைபெறும். இவ்விருவகை செயல்பாடுகளையும் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.

"................. கான்உழு குறவர்
சில வித்து அகல இட்டென, பல விளைந்து" (209: 2-3)

என்று குறவர் கொல்லையாகிய காட்டினை உழுது பரவலாக விதைத்த விதைகள் பலவாக விளைந்தமையை நற்றிணை காட்டுகிறது.

செம்மண் நிலத்தின் இருபுறமும் புழுதி கீழ் மேலாகப் புரண்டு விழுந்து புலருமாறு, கொல்லை உழவர்கள் ஏர்கொண்டு உழுதனர். ஊனைக் கிழித்தாற் போன்ற சிவந்த மேட்டு நிலத்தைப் பிளந்து சென்ற நெடிய உழவுச் சாலிடத்து விதைத்த விதைகள் முளைத்து வளர்ந்தன. இச்செய்தியை,

"ஊன்கிழித் தன்ன செஞ்சுவல் நெடுஞ்சால்
வித்திய மருங்கின் விதைபல நாறி" (194: 4-5)

என்று அகநானூறு விவரிக்கிறது.
]
நற்றிணையும் அகநானூறும் புழுதியில் விதை விதைத்த செயலைக் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம். சேற்றில் விதை விதைத்த செய்தியைப் பின்வரும் புறநானூற்று வரிகளில் காணமுடிகிறது.

"கயத்து இட்ட வித்து வறத்தின் சாவாது
கழைக் கரும்பின் ஒலிக்குந்து" (137: 5-6)

அதாவது, நீர் நிறைந்த பள்ளத்தில் விதைத்த, வித்து, நீரின்மையால் சாவாது; கரும்பு போலத் தழைக்குமாம்.

இங்ஙனம் புழுதியிலும் சேற்றிலும் விதைத்த விதைகள் கடும் மழை, கூளம் போன்றவற்றால் பாதிக்கப்படுவதை இன்றும் கண்கூடாகக் காண முடிகிறது. விதைகளைத் தெளித்த ஓரிரு நாட்களில் கடும் மழை பெய்து பரவலாக உள்ள விதைகளைக் குவித்து விடுவது உண்டு. இதை உழவர்கள் விதை குவிந்து போயிற்று (குவிச்சுப் போட்டது) என்று கூறுகின்றனர்.

இது போன்ற ஒரு நிகழ்ச்சி பரிபாடலில் காணப்படுகிறது. உழவர்கள் விதைத்த விதைகளை உடைய நாற்றங்கால், வௌ஢ளத்தால் அடித்து வரப்பட்ட வண்டல் மண்மூடி மேடாகிப் போயிற்று என்ற செய்தியை, "வித்து இடுபுலம் மேடு ஆயிற்றென" (7:35) என்று பரிபாடல் சுட்டுகிறது.

எனவே, விதை விதைத்தலுக்கு உரிய நிலத்தைத் (நாற்றங்காலை) தயார் செய்தல், புழுதியில் விதை தௌதத்தல், சேற்றில் விதை தௌதத்தல், விதைகள் சேதப்படுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தொன்றுதொட்டு நடைபெற்று வருகின்றன. இச்செயல்களைச் செய்ய இன்று விதை தௌத எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றிலும் மேற்சுட்டிய செயல்முறைகளே பின்பற்றப்படுகின்றன.

4. நடுதல்:

சேற்று நிலத்தில் நாற்றுக்களைப் பரவலாக ஊன்றும் செயலை நடுதல் என்பர். நடவு செய்வோரை நடுநர் என்று நற்றிணைக் குறிப்பிடுகிறது. மேலும் நாற்றினைச் சேற்றில் அழுத்தி நடுவதை,

"நீர் உறு செறுவின் நாறு முடி அழுத்த
நடுநரொடு சேறி ஆயின்" ( 60: 7-8)

என்றும் அவ்விலக்கியம் விளக்குகிறது.

நடவு செய்தல் குறித்த செய்தி பெரும்பாணாற்றுப்படையிலும் "முடிநாறு அழுத்திய நெடுநீர்ச் செறுவில்" (212) என்று சுட்டப்படுகிறது. நடுநர்கள் செய்த செயலை இன்று நடவு எந்திரங்கள் செய்யத் தொடங்கியுள்ளன.

5. நீர்ப்பாய்ச்சுதல்:

வேளாண்மையின் வெற்றி, நீர்ப்பாசனத்தைப் பொறுத்து அமைகிறது. நீரின்றி அமையா உலகு என்பதை நீரின்றி அமையா உழவு என்று கூறின் மிகையன்று. நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் நீர் நிர்வாகம் பற்றிய புரிதல் உழவர்களுக்கு ஊட்டப்படுகிறது. பயிர் விளைவதற்கு நீர் இன்றியமையாதது என்பதை, அன்னையின் கடுஞ்சொல்லை நீராகக் கொண்டு காம நோய் என்ற பயிர் வளர்ந்தது என்பதை "அன்னை சொல் நீராக நீளும் இந்நோய்" (1147) என்று உவமை நயம்பட வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

பாசனத்துக்குத் தேவையான ஆற்று நீர் வாய்க்கால் வழியாக ஓடி வயல்களில் பாய்ச்சப்படுகின்ற அறிவுத் திறம் தமிழர்களுக்குப் பழைமையானது என்பதை,"நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடி" என்ற ஔவையாரின் வாக்குப் புலப்படுத்துகிறது.

இங்ஙனம் வாய்க்கால் வழியாக ஓடுகின்ற நீரைத் தேவைப்படும் இடங்களில் வாய்க்கால்களின் குறுக்கே சிறு தடுப்புகளை (அணைகளை) ஏற்படுத்தி நீர்ப் பாய்ச்சுகின்றப் போக்கை அகநானூறு மிக அழகாகச் சித்திரிக்கிறது.
உழவர்கள் நெற்பயிரை உடைய தம் வயல்களில் காஞ்சி மரத்தின் சிறு துண்டுகளை நட்டு, இனிய சுவைமிக்க கரும்பின் சிறந்த பல கழிகளைக் குறுக்கே நெருக்கமாக வைத்து அடைத்து அணையாகக் கோலி, அப்பள்ளங்களில் நீரைத் தேக்கிப் பாய்ச்சுவர். இக்காட்சி,

"......கலிமகிழ் உழவர்
காஞ்சிஅம் குறுந்தறி குத்தி, தீம்சுவை
மென்கழைக் கரும்பின் நன்பல மிடைந்து
பெருஞ்செய் நெல்லின் பாசவல் பொத்தி
வருத்திக்கொண்ட வல்வாய்க் கொடுஞ்சிறை
மீதுஅழி கடுநீர் நோக்கி..........." (346: 5-10)

என்று அகநானூற்றில் அழகுறக் காட்டப்பட்டுள்ளது.

வாய்க்கால்களின் நடுவே சிறு தடுப்பு அணைகளை உண்டாக்கி நீர்ப் பாய்ச்சுகின்ற பழந்தமிழர்களின் அறிவுத் திறத்தோடு வாய்க்கால்களில் தடுப்பு மதகுகளை ஏற்படுத்தித் தரும் அரசாங்கத்தின் செயற்பாட்டை ஒப்பிடத் தோன்றுகிறது. எனவே, நீர் நிர்வாகம் பற்றிய புரிதல் பழந்தமிழர்களிடையே இருந்ததாகக் கொள்ளலாம்.

6. எருவிடுதல்:

உழவுத் தொழிலின் அடிப்படைச் செயல்களுள் ஒன்று எருவிடுதல் ஆகும்.
"ஏரினும் நன்றால் எருவிடுதல்" (1038) என்று வள்ளுவர் எரு இடுதலின் இன்றியமையாமையைப் புலப்படுத்துகிறார். விளைச்சலைப் பெருக்கும் வகையிலும் மண் வளத்தைக் காக்கும் வகையிலும் இச்செயல் பழங்காலந்தொட்டே நடைபெற்று வருகிறது. பழந்தமிழர்கள் இயற்கை உரங்களையேப் பயன்படுத்தினர். இன்றைய உழவர்கள் பெரிதும் செயற்கை உரங்களையேப் பயன்படுத்துகின்றனர். செயற்கை உரங்கள் மண்ணின் தன்மையைச் சீர்குலைப்பதோடு சுற்றுச் சூழலையும் மாசுபடுத்துகிறது. எனவேதான் இயற்கை உரங்களின் முக்கியத்துவத்தைப் பலரும் தற்பொழுது வற்புறுத்தி வருகின்றனர்.

தொழு உரமும் தழை உரமும்:


பண்டைத் தமிழர்கள் கால்நடைகளின் கழிவுப் பொருள்களாலான தொழு உரத்தையும் இலை, தழைகளாகிய பசுந்தாள் உரத்தையும் பயன்படுத்தினர். இவற்றை உரமாகப் பயன்படுத்தும் வழக்கம் இன்றும் காணப்படுகிறது.
ஆடு, மாடு, கோழி முதலானவற்றின் கழிவுப் பொருள்கள் மற்றும் குப்பைக் கூளங்கள் ஆகியவற்றைக் குப்பைக் குழிகளில் இட்டு மக்கச் செய்து அவற்றை வயல்களுக்கு உரமாகப் பயன்படுத்துவர். இந்நடைமுறையை இன்றும் சில உழவர்களிடையே காண முடிகிறது. இதில் கால்நடைகளின் கழிவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. சில வேளைகளில் ஆடு, மாடுகளை இரவு நேரத்தில் வயல்களில் மந்தையாகத் தங்கச் செய்வர். இவ்வாறு செய்வதைக் கிடை கட்டுதல் என்பர்.

கிடைகட்டுகின்ற இச்செயலைப் பதிற்றுப்பத்து, "தொறுத்த வயல் ஆரல் பிறழ்நவும்" (13:1) என்று குறிப்பிடுகிறது. தொறுத்த வயல் என்பதற்கு ஆட்டுக்கிடை கட்டப்பட்ட வயல் என்பர் உரையாசிரியர்.

குப்பைக் கூளங்கள் உரமாகப் பயன்படுத்தப் பட்டமையைச் சங்க இலக்கியங்களில் பல இடங்களில் காண முடிகிறது.

தாது எரு மறுகின்ஒ (நற்றிணை 343: 3, புறநானூறு 33: 11, 215:2, 311: 3)
தாது எரு மறுகின் மூதூர் (அகநானூறு 165: 4)
தாது எரு மறுத்த கலி அழிமன்றத்துஒ (பதிற்றுப்பத்து 13: 17)
தாது எருத் ததைந்தஒ (மலைபடுகடாம் 531)
இடுமுள் வேலி எருப்படு வரைப்பின்ஒ (பெரும்பாணாற்றுப்படை 154)

போன்ற இடங்களில் பூக்கள் எருவாகிக் கிடந்தன என்று குறிப்பிடப்பட்டுள்ளன.

அஃதாவது, தெருக்களில் பூக்கள் எல்லாம் உதிர்ந்து எருவாகின என்று கவிஞர் கற்பனை செய்தாலும் அதில் உண்மை இல்லாமல் இல்லை. உதிர்ந்த இலைகளும் தழைகளும் மலர்களும் குப்பை எருவாதல் என்பது இன்று நாம் கண்கூடாகக் காணும் உண்மை ஆகும்.

உழுந்தின் வேர் முடிச்சுகள் நைட்ரஜன் சத்தைச் சேமித்து வைப்பதாக அறிவியலார் கூறுவர். இதைச் சங்க காலத்தில் பயிரிட்டுள்ளனர். உழுந்து பயிரிடப்பட்ட செய்தி சங்க இலக்கியங்களில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளன.
சான்றாக,

".............உழுந்தின்
அகல இலை அகல வீசி" (நற்றிணை 89: 5-6)
"பூழ்க்கால் அன்ன செங்கால் உழுந்தினி" (குறுந்தொகை 68: 1)
"உழுந்துடை கழுந்தின்" (குறுந்தொகை 384: 1)
"நெய்யொடு மயக்கிய உழுந்து நூற்றன்ன" (ஐங்குறுநூறு 211: 1)
"உழுந்து தலைப்பெய்த தொழுங்களி மிதவை" (அகநானூறு 86: 1)
முதலியவற்றைக் குறிப்பிடலாம். உழுந்து மட்டுமின்றி பயிறும் விளைவித்தமையைப்
"பைம்பயறு உதிர்த்த கோதின்" (297: 3)

என்று புறநானூறு குறிப்பிடுகிறது.

எனவே வேளாண் தொழிலுக்குத் தேவையான இயற்கை உரங்களைப் பழந்தமிழர் பயன்படுத்தி உள்ளமை தௌதவாகிறது. மேலும், இயற்கை உரங்களின் பயன்பாடே சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிக்காதது என்பதால் அதை அறிவியலார் இன்று வற்புறுத்துவதும் பழந்தமிழரின் சிந்தனை வளத்தை வௌதக்காட்டுகிறது.

7. களையெடுத்தல்:

வேளாண் தொழிலில் பயிர் செய்யும் விளைபொருள்களுக்குத் தீங்குச் செய்யும் தாவரங்களும் அப்பயிர்களினூடே வளர்வதுண்டு. அவை விளை பயிர்களுக்குக் கிடைக்கும் நீர், உரம் போன்றவற்றை எடுத்துக்கொண்டு வளர்கின்றன. இவற்றைக் களைகள் என்பர். இதை ஔவையார்,

"நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடி
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்"

என்று குறிப்பிடுகிறார்.

இக்களைகளை நீக்குவது மிகவும் அவசியமானதாகும். இல்லையெனில் விளைச்சல் குறையும். பழந்தமிழர்கள் களைகளை நீக்கியமைக்குச் சான்றுகள் கிடைக்கின்றன.

"களைகால் கழீஇய பெரும்புன வரகின்" (194:9) என்ற அகநானூற்று வரி, தினைப்புனத்தில் வளர்ந்த களைகளைக் களைக் கொட்டினால் பறித்து தினைப் புனத்தைத் தூய்மை செய்த செய்தியைக் குறிப்பிடுகிறது.
அதுபோல நன்செய் நிலத்தில் கோரை, நெய்தல் பூ போன்றவை களைகளாக வளரும். அவற்றை உழவர்கள் நீக்குவர்.

சாயும் நெய்தலும் ஓம்புமதி (60: 9) என்ற நற்றிணைப் பாடலில் களைகளாகிய கோரைகளையும் நெய்தல் பூக்களையும் நீக்காதே. அவை இற்செறிப்பில் உள்ள தலைவி வளையலாகவும் ஆடையாகவும் உடுத்தப் பயன்படும் என்று தோழி கூறுகிறாள்.

எனவே, விளை பொருள்களுடன் உண்டாகும் களைகளைப் பழந்தமிழர்கள் நீக்கியமைப் புலனாகிறது. இச்செயலில் தற்பொழுது களை வாரும் எந்திரங்கள் பயன்படுகின்றன.

8. பயிர்ப்பாதுகாப்பு:

களைகளிலிருந்து பயிர்களைப் பாதுகாத்தது போல பூச்சிகள், விலங்குகள், பறவைகள் போன்றவைகளிடமிருந்தும் பயிர்களைக் காப்பது பயிர்ப் பாதுகாப்பு எனப்படும். பழந்தமிழர்கள் இப்பயிர்ப் பாதுகாப்பிலும் இயற்கையோடு இயைந்த முறைகளையே பின்பற்றி உள்ளனர். தினைப் புனம் காத்தல் போன்ற செயல்களைப் பயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளாகக் கொள்ளலாம். "காவல் கண்ணினம் தினையே" (92: 7) என்றும், "சிறுதினைப் படுகிளி கடீஇயர் (32: 5) என்றும் அகநானூறு குறிப்பிடுகிறது. தினைப் புனம் காத்த செய்திகளைச் சங்க இலக்கியங்களில் பல இடங்களில் காண முடிகிறது.

9. அறுவடை:

நெல் அறுவடை செய்த செயல் பெரும்பாணாற்றுப்படையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
"பைதுஅற விளைந்த பெருஞ்செந் நெல்லின்
தூம்புடைத் திரள்தாள் துமித்த வினைஞர்" (230-231)
என்ற வரிகளில் துமித்த வினைஞர் என்பது அறுவடை செய்யும் உழவரைக் குறிக்கிறது.

பழங்கால உழவர்கள் நெல்லை அறுத்து வந்து போராகக் களத்தில் குவித்து வைத்தனர். அதன் பிறகு கடாக்களை விட்டு நெல்லைப் பிரித்து எடுத்தனர் என்ற செய்தி,

"............ போரின் முழுமுதல் தொளைச்சி
பகடுஊர்பு இழிந்த பின்றை ..................." (237-238)

என்று பெரும்பாணாற்றுப்படையில் சுட்டப்படுகிறது. இச்செய்தியை,

"நீர்சூழ் வியன்களம் பொலிய போர்பு அழித்து
கள்ஆர் களமர் பகடுதலை மாற்றி" (366: 2-3)

என்று அகநானூறு சுட்டுகிறது.

கடாவிடுதல் என்ற செயலானது விடியற் காலையில் நடைபெறுவது என்பதையும் அகநானூறு வைகுபுலர் விடியல் வைபெயர்த்து ஆட்டி (37:5) என்று குறிப்பிடுகிறது.

மருத நில மக்களின் தொழில்களான நெல்லரிதல், கடாவிடுதல் ஆகிய செயல்கள் அறுவடைத் தொழிலைக் குறிப்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.
உழவர்கள் அறுவடை செய்த நெற்கதிர்களைக் கட்டாகக் கட்டிக் களத்திற்குக் கொண்டு செல்வர். இவ்வாறு கட்டாகக் கட்டும்பொழுது அரிந்த தண்டுப் பகுதிகளைத் தலைப்பு மாற்றி வைத்துக் கட்டுவதை இன்றும் காணமுடிகிறது.
இங்ஙனம் தலைப்பு மாற்றிக் கட்டுகள் கட்டுவதை அகநானூறு,

"எரிபுரை பல்மலர் பிறழ வாங்கி
அரிஞர் யாத்த அலங்கு தலைப்பெருஞ்சூடு
கள்ஆர் வினைஞர் களம்தொறும் மறுகும்" (84: 11-13)

என்று அகநானூறு காட்டுகிறது.

அஃதாவது அரிந்த நெற்கதிர்களுடன் கூடிய நெருப்புப் போன்ற மலர்களை மாற்றிவைத்துக் கட்டியக் கட்டுகளை உழவர்கள் களத்தில் கொண்டு சேர்த்தனராம்.

10. தூய்மை செய்தல்:



நெல்லரிந்து, கடா விட்டு நெல்லை வைக்கோலினின்றும் உழவர்கள் பிரித்தெடுத்தனர். அங்ஙனம் பிரித்தெடுத்த நெல்லைக் காற்றில் தூற்றித் தூசு துரும்புகளை அகற்றித் தூய்மை செய்தனர். அவ்வாறு தூற்றும் பொழுது எழும்பிய தூசு துரும்புகள் இருண்ட மேகம் போல தோன்றியது என்பது அகநானூற்றுக் காட்சி.

"பொங்கழி முகந்த தாஇல் நுண்துகள்
மங்குல்வானின் மாதிரம் மறைப்ப" (37: 3-4)

விரைந்து வீசும் காற்றில் உழவர்கள், நெல்லைத் தூற்றினர். அதிலிருந்து பிரிந்து சென்ற தூசு துரும்புகள் உப்பளப் பாத்திகளில் வீழ்ந்ததை,

"கடுங்காற்று எறிய, போகிய துரும்பு உடன்
காயல் சிறுதடிக் கண்கெடப் பாய்தலின்" (366: 4-5)
என்றும் அகநானூறு காட்டுகிறது.
எனவே, உழவர்கள் நெல்லை அரிந்து, கடாவிட்டுத் தூற்றித் தூய்மை செய்தனர் என்பது புலனாகிறது.

முடிவுரை:

இதுகாறும் கண்ட செய்திகளைத் தொகுத்து நோக்குமிடத்து தமிழர்களின் மரபுசார் உழவுத் தொழிலை நன்கு விளங்கிக்கொள்ள முடிகிறது. பழந்தமிழரின் உழவியல் சிந்தனைகள் இன்றைய அறிவியல் சிந்தனைக்குப் படிக்கற்களாக இருந்துள்ளமை விளங்குகிறது. மேலும், பழந்தமிழர்கள் இயற்கையோடு இயைந்த உழவுத் தொழிலையே செய்து வந்தனர் என்பது புலனாகிறது.


முனைவர் க.துரையரசன்
உதவி இயக்குநர்
தமிழ் இணையப் பல்கலைக்கழகம்
சென்னை - 113.



 




கருத்துகள் இல்லை: