புதன், 2 ஜனவரி, 2008

இணையமும் இனிய தமிழும்

இணையமும் இனிய தமிழும்


முன்னுரை

உலகையே குவலயக் கிராமமாக மாற்றிவிட்ட ஆற்றல் வாய்ந்த தொழில்நுட்பம்தான் இணையம். இணையத்தில் இல்லாதது எதுவுமே இல்லை என்ற அளவிற்கு அனைத்துத் தகவல்களையும் தன்னகத்தே கொண்டதாக இணையம் திகழ்கிறது. கேட்டவர்களுக்குக் கேட்ட வரங்களை - தகவல்களை அள்ளி வழங்கும் அமுதசுரபியாக இது விளங்குகிறது. தகவல் களஞ்சியமாகத் திகழ்கிற இணையத்தில் கிடைக்கும் தமிழ் இலக்கியங்கள், அதனை வழங்கும் நிறுவனங்கள் பற்றிய செய்திகளை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.

எல்லாம் இணையம்தான்

இணையம் என்ற ஆற்றல் வாய்ந்த ஆயுதத்தைக் கல்வியாளர்கள் பரவலாகப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் தமிழ் ஆசிரியர்களும - பேராசிரியர்களும், மாணவர்களும் - ஆய்வாளர்களும் எந்த அளவிற்கு இதனைப் பயன்படுத்துகின்றனர் என்பது கேள்விக்குறியே. இவர்கள் இணையத்தைப் பயன்படுத்துவதன் இன்றியமையாமையை விளங்கிக் கொள்வதோடு அதில் போதிய பயிற்சியும் பெற வேண்டும்.

ஏனெனில், இன்று எல்லா தகவல்களையும் இணையத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டிய கட்டாய நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறோம். பாட நூல்கள், பாடத்திட்டங்கள், வினா வங்கிகள், தேர்வு முடிவுகள், வேலை வாய்ப்புச் செய்திகள் என அனைத்தும் இணையத்தில் வழங்கப்படுகின்றன.

எனவே, இணையத்தில் அனைத்துத் தகவல்களும் கிடைப்பதனால் அதனைப் பயன்படுத்த முனைவதும் முழுவதும் பயன்படுத்திக் கொள்ளும் திறம் பெறுவதும் நலம் பயக்கும். இதனைப் பிற துறை சார்ந்தவர்கள் நன்கு பயன்கொள்வது போல தமிழ்த்துறை சார்ந்தவர்களும் பயன்கொள்ள வேண்டும்.

மூன்று ‘எ’

முன்பெல்லாம் ஒரு நூலைத் தேடிப் பல்வேறு இடங்களுக்கும், நூலகங்களுக்கும் செல்ல வேண்டும். அங்கு அவை கிடைக்கலாம் அல்லது கிடைக்காமல் போகலாம். ஆனால் இணையத்தில் தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள் வெகுவாக கிடைக்கின்றன; இலவசமாகக் கிடைக்கின்றன; நூல்வடிவில் கிடைப்பனவற்றை விட பன்மடங்கு வசதிகளோடு கிடைக்கின்றன. எவையெவை - எங்கெங்கு - எவ்வெவ்வாறு கிடைக்கின்றன என்பதைத் தெரிந்து கொண்டால்,
தங்களின் பொன்னான காலத்தை வீணடிக்காமல் கடமையைக் கண்ணாகக் கருதி செயல்பட்டு வெற்றியடைய முடியும்.


தமிழ் இணையப் பல்கலைக்கழகம்

தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களை இணையத்தில் வழங்கும் நிறுவனங்களில் முன்னணியில் நிற்பது தமிழ் இணையப் பல்கலைக்கழகம் ஆகும். இந்நிறுவனம் தமிழக அரசினால் 17-02-2001 இல் சென்னையில் உள்ள

தரமணியில் துவங்கப்பட்டது. உலகு தழுவி வாழும் தமிழர்களும் தமிழ் படிக்கும் ஆர்வலர்களும் அரிச்சுவடி முதல் ஆராய்ச்சி வரை பயில்வதற்கு உரிய வகையில் இப் பல்கலைக்கழகச் செயற்திட்டங்கள் வகுக்கப்பட்டன. இங்கு தற்பொழுது இளங்கலைப் பட்டம் (B.A.) வரையிலான படிப்பு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இதன் செயல்திட்டங்களுள் ஒன்றுதான் இப்பல்கலைக்கழகத்தின் மின் நூலகம்.

த.இ.ப. மின் நூலகம்

இப்பல்கலைகழக மின் நூலகத்தில் தொல்காப்பியம் முதற்கொண்டு இக்கால இலக்கியம் வரையிலான 200க்கும் மேற்பட்ட நூல்கள் இடம் பெற்றுள்ளன. ஏறக்குறைய 75,000 பக்கங்களுக்கு மேல் இம்மின்நூலகத்தில் இடம் பெற்றுள்ளன.இலக்கண நூல்கள்

இன்றைய நிலையில் தமிழகத்தில் பெரிதும் பயன்பாட்டில் உள்ளதும் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பாடமாக அமையப் பெற்றதுமான இலக்கண நூல்கள் முழுவதும் த.இ.ப.வின் மின் நூலகத்தில் உள்ளன. தொல்காப்பியம்,
நன்னூல், புறப்பொருள் வெண்பாமாலை, நம்பியகப்பொருள், தண்டியலங்காரம், வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், தமிழ் நூல், முத்துவீரியம், சுவாமிநாதம், அறுவகை இலக்கணம் ஆகிய இலக்கண நூல்கள் உரையுடன் அமைந்துள்ளன.

இலக்கிய நூல்கள்

சங்க இலக்கியம், பதினெண் கீழ்க்கணக்கு, ஐம்பெரும் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்களுள் நாககுமார காவியம், உதயணகுமார காவியம், யசோதர காவியம், நீலகேசி, பெருங்கதை, கம்பராமாயணம், வில்லிபாரதம், திருவிளையாடற் புராணம் ஆகிய நூல்கள் இதன்கண் இடம் பெற்றுள்ளன.

சமய இலக்கியங்கள்

பன்னிரு திருமுறைகள், நாலாயிர திவ்ய பிரபந்தம், தேம்பாவணி, இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய மனோகரம், இயேசு காவியம், சீறாப்புராணம், நெஞ்சில் நிறைந்த நபிமணி, நாயகம் எங்கள் தாயகம், நாயகம் ஒரு காவியம், யூசுப் ஜூலைகா ஆகிய பல்சமய இலக்கிய நூல்களும் இந்நூலகத்தில் இடம் பெற்றுள்ளன.

சிற்றிலக்கியக்கங்கள்

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், கேக்கிழார் பிள்ளைத்தமிழ், திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ், அபிராமி அந்தாதி, திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி, கச்சிக்கலம்பகம், தண்டலையார் சதகம், அறப்பளீசுர சதகம், குமரேச சதகம், கொங்கு மண்டல சதகங்கள், பாண்டிமண்டல சதகம், திருக்குற்றாலக் குறவஞ்சி, தியாகேசர் குறவஞ்சி, தணிகைப் புராணம், அட்டபிரபந்தம், புலவராற்றுப்படை, அழகர் கிள்ளைவிடு தூது, தமிழ்விடு தூது, இரணியவதைப் பரணி, கலிங்கத்துப் பரணி, நளவெண்பா, நந்தனார் சரித்திர கீர்த்தனைகள் ஆகிய சிற்றிலக்கிய நூல்கள் இந்நூலகத்தில் உள்ளன.

பிற நூல்கள்

மேற்காட்டிய நூல்களேயன்றி சிவப்பிரகாச சுவாமிகள், தாயுமானவ சுவாமிகள், குமரகுருபர சுவாமிகள், பாரதியார், பாரதிதாசன், முடியரசன், அழ.வள்ளியப்பா, தமிழ் ஒளி, தேவநேயப் பாவாணர் ஆகியோரின் படைப்புகள் பலவும் இந்நூலகத்தில் காணக்கிடைக்கின்றன.

மயிலை சீனி.வேங்கடசாமியின் சமணமும் தமிழும், பௌத்தமும் தமிழும், மு.வ.வின் தமிழ் இலக்கிய வரலாறு, தெ.பொ.மீ.யின் தமிழ் மொழி வரலாறு, ந.சி.க.வின் தமிழகம், தமிழ் இந்தியா, கா.அப்பாதுரையின் குடியாட்சி, சுந்தரம்பிள்ளையின் மனோன்மணீயம், நா.வானமாமலையின் தமிழர் நாட்டுப்பாடல்கள், காத்தவராயன் கதைப்பாடல், முத்துப்பட்டன் கதை, கி.வா.ஜகந்நாதனின் மலையருவி உள்ளிட்ட பல் வகைமை நூல்கள் இதன்கண் இடம் பெற்றுள்ளன.

அகராதிகளும் கலைச்சொற்களும்

த.இ.ப.வின் மின் நூலகத்தில் இலக்கண, இலக்கிய நூல்களேயன்றி சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி, சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ் அகராதி, பால்ஸ் அகராதி, மு.சண்முகம்பிள்ளையின் தமிழ்-தமிழ் அகரமுதலி ஆகிய நான்கு அகராதிகளும், முப்பதுக்கும் அதிகமான துறைகளைச் சார்ந்த 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட கலைச்சொற்களும் உள்ளன.சிறப்பம்சங்கள்

ஃ குறிப்பிட்ட நூல்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட உரைகள்
கிடைக்கின்றன.

ஃ திருக்குறளுக்கு தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியின்
உரை உள்ளிட்ட எழுவரின் உரைகள் கிடைக்கின்றன.

ஃ சங்க இலக்கியங்களுக்கு எண், சொல், பக்கம், பாடினோர்,
வள்ளல்கள், மன்னர்கள், திணை, கூற்று, பாடல் முதல்
குறிப்பு, மரங்கள், செடிகள், கொடிகள், மலர்கள், தானியங்கள், பழங்கள், விலங்குகள், பறவைகள், மீன்கள் என்ற அடிப்படையில் வேண்டிய செய்திகளை உடனடியாகத் தேடிப் பெறுகின்ற வசதி.

ஃ தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளை உலகத்தார்க்கு
எடுத்துக்காட்டும் வகையில் அமைந்த 143 சைவ, வைணவக் கோயில்களின் ஒலி, ஒளிக் காட்சிப் பதிவுகள், பரதநாட்டியம், பொம்மலாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம், நாதசுரம், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பல்வேறு பண்பாட்டுக் காட்சியகம்.
ஃ தேவாரப்பாடல்களை இசையுடன் கேட்கும் வசதி.

ஃ அனைவரும் படித்து விளங்கிக் கொள்ள ஏதுவாக எளிய
முறையில் பதம் பிரிக்கப்பட்ட கடின நூல்கள்.

இத்துணை சிறப்பு வாய்ந்ததும் அரியதுமான நல்லதொரு மின் நூலகத்தைத் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் உருவாக்குவதில் அப்பல்கலைக்கழகத்தின் முதல் இயக்குநரும் இந்நாள் பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தருமான முனைவர் பொன்னவைக்கோ அவர்களுக்குப் பெரும்பங்கு உண்டு.

மதுரைத் திட்டம்

இஃது உலகளாவிய தமிழர்கள் இணையம்வழி ஒன்றுகூடி தமிழ் இலக்கியங்களின் மின்பதிப்புகளை உருவாக்கி அவற்றை இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் தமிழார்வலர்களும் இலவசமாகப் பெற வசதி செய்யும் ஒரு தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம் ஆகும். இதனை சுவிட்சர்லாந்து நாட்டில் வாழும் தமிழர் டாக்டர் கே.கல்யாணசுந்தரம் அவர்கள் தொடங்கினார்கள். இத்திட்டம் எதிர்வரும் சனவரி 2008 இல் தனது பத்தாம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாட இருக்கிறது.

________________________________________


இத்திட்டத்தில் ஏறக்குறைய 300 தமிழ் நூல்கள் இணையப் பார்வையாளர்களுக்குக் கிட்ட வகை செய்யப்பட்டுள்ளது. இந்நூல்களை அகர வரிசை, நூல் வரிசை, கால வரிசை அடிப்படையில் டிஸ்கி (TISCII) குறியீட்டு முறையிலும், ஒருங்குறியீட்டு (UNICODE) முறையிலும் இத்திட்டம் வழங்குகிறது.

இத்திட்டத்தின் சிறப்பம்சம் யாதெனில் யார் வேண்டுமானாலும் தமிழ் இலக்கியங்களை மின்பதிப்பு செய்து இவர்களின் அனுமதியோடு இம்மின்தொகுப்பில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் இத்தொகுப்பில் உள்ள நூல்கள் ஒருங்குறியீட்டு (UNICODE) முறையிலும் கிடைப்பதனால் எழுத்துரு (Fonts) பிரச்சினை இல்லாமல் நூல்களைப் படிக்க முடியும். ஆனால் இத்தொகுப்பில் வேண்டிய தகவல்களைத் தேடிப் பெறும் வசதி ஒருசில நூல்களுக்கு மட்டுமே டிஸ்கி (TISCII) குறியீட்டில் உள்ளது. தமிழ் இணையப் பல்கலைக்கழக நூலகத்தில் வேண்டிய தகவல்களைத் தேடிப் பெறுவது போல இத்திட்டத்தில் தகவல்களைப் பெற இயலாது. ஆனால் தமிழ் இணையப் பல்கலைக்கழக மின் நூலகத்தில் நூல்கள் ஒருங்குறியீட்டு முறையில் இல்லாமையால் அதனைக் கண்ணுறுவதில் எழுத்துரு பிரச்சினை ஏற்படுகிறது.

இந்திய மொழிகளுக்கான நடுவண் நிறுவனம் (Central Institute of Indian Languages - CIIL)

மைய அரசு நிறுவனமான இது மைசூரில் உள்ள மானசகங்கோத்ரியில் அமைந்துள்ளது. இந்நிறுவனம் தமிழ் நூல்களை அதன் பழைமை குன்றாமல் அதாவது மூலப் பிரதியில் உள்ளவாறே இணையவழியில் அளிப்பதற்கான முயற்சியில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. விரைவில் தமிழ் நூல்களை இதன் இணைய தளத்தில் காணலாம்.

தற்பொழுது தொல்காப்பிய நூற்பாக்கள் சிலவற்றையும், சங்க இல்கியப் பாடல்கள் சிலவற்றையும் இசைவடிவில் இணையத்தில் வழங்கியுள்ளது. பாடல்கள் மட்டுமின்றி நூற்பாக்களைக்கூட இசை வடிவில் வழங்க முற்பட்டுள்ள இந்நிறுவனத்தின் முயற்சிப் பாராட்டுக்குரியதாகும்.

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்

ரோஜா முத்தையா செட்டியாரின் நினைவால் சிக்காகோ பல்கலைக்கழகம் இந்நூலகத்தை 1989 முதல் நடத்தி வருகிறது. ஏறக்குறைய 1 இலட்சம் அரிய நூல்களும், இதழ்களும் இந்நூலகத்தில் உள்ளன. நூலாசிரியர், நூலின் தலைப்பு, நூல் வெளிவந்த ஆண்டு என்ற அடிப்படையில் இந்நூலகத்தில் உள்ள நூல்களின் பட்டியல் ஆராய்ச்சியாளர்கள் தேடிப்பெறும் வகையில் இணையத்தில் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. இருந்த இடத்தில் இருந்துகொண்டே ஆய்வுக்குத் தேவையான நூல்கள் உள்ளனவா என்பதை அறிந்து கொண்டு வேண்டிய நூல்கள் இருந்தால் இந்நூலகத்திற்குச் சென்று பயன் கொள்ளலாம்.

பிற நிறுவனங்கள்

மேலே கூறப்பட்ட நிறுவனங்கள் மட்டுமன்றி, 1. Institute of Indology and Tamil Studies, Univ of Koeln, Germany 2. Tamil Heritage Foundation 3. Million Ebooks Project ஆகிய நிறுவனங்களும் தமிழ் நூல்களை இணையத்தில் நேரடியாக வழங்காமல் மதுரைத் திட்டத்தில் இருந்து எடுத்து வழங்குகின்றன. எனவே இவை பற்றி தனித்தனியே குறிப்பிடப்படவில்லை.முடிவுரை
பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினானே

என்பதற்கேற்ப வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தமிழ் பயில்வோரும் - பயிற்றுவிப்போரும் தங்களின் பணியை எளிமையும் ஏற்றமும் உடையதாக மாற்றிக் கொள்ள இணையம் பெருந்துணையாய் நிற்கும். எனவே, போட்டிகள் நிறைந்த இருபத்தோராம் நூற்றாண்டினைத் தமிழ் படிக்கும் மாணவர்கள் திறனுடன் எதிர்கொள்ள இணையப் பயன்பாட்டில் அவர்களை மேலோங்கச் செய்வோம்.


பயன்கொள்ள வேண்டியவை;

1. தமிழ் இணையப்பல்கலைக்கழகம் - www.tamilvu.org
2. மதுரைத் திட்டம் - www.tamil.net/projectmadurai
3. இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் - www.ciil.org
4. ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் -
www.lib.uchicago.edu/e/su/southasia/rmrl.html

1 கருத்து:

Duraiarasan துரையரசன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.