List of 64 arts /அறுபத்துநாலு கலைகள்
"ஆய கலைகள் அறுபத்துநான்கினையும்" என்று பலரும் சொல்லக் கேள்விபட்டிருக்கின்றோம்.
ஆனால் அந்த அறுபத்துநாலுகலைகள் தான் யாவை என்று தெரிவதில்லை. தமிழ் இணைய மின்அஞ்சல் தளத்தில் இது பற்றி கேள்வி, பதில் தொடர் ஒன்று நடைபெற்றது. மலேசியா தமிழ் நண்பர் மா. அங்கையாவின் தொகுப்பை தமிழ் இணைய நண்பர்களுக்காக இந்த தமிழ் மின் நூலகத்தில் கொடுத்துள்ளேன்.
Source courtesy: From Maa.Angaiah of Malaysia
http://www.geocities.com/ResearchTriangle/5828/64kalai.htm
________________________________________
'நாலு வேதம், ஆறு சாத்திரம், பதினெண் புராணம், அறுபத்துநாலு கலைஞானம்' என்பது ஆரிய இலக்கியப் பாகுபாடாதலால், 'அறுபத்துநாலு கலை' என்பது தமிழ் மரபன்று. 'அறுபத்துநாலு கலை' என்னும் பொருட்டொகப் பெயர் தமிழாதலாலும், அறுபத்துநாலாக வகுக்கப்பட்ட கலைகள் அனையவும் தமிழர்க்கும் உரியனவாதலாலும், தமிழ்க்கலைகள் ஆரியக் கலைகட்குக் காலத்தால் முந்தியனவாதலாலும், அறுபத்துநாலு கலைப்பட்டி இங்குத் தரப்பட்டுள்ளது.
முதற்பட்டி ஆரிய நூன்மரபை முற்றுந் தழுவியது. வடசொற்களெல்லாம் மொழிபெயர்க்கப்பட்டு, தென்சொற்கள் முன்னும் வடசொற்கள் பிறைக்கோட்டுட்பின்னும் குறிக்கப்பட்டுள்ளன. இருமொழிக்கும் பொதுச் சொற்கள் அல்லது ஏற்கெனவே தமிழாயிருக்குஞ் சொற்கள், பிறைக்கோட்டுச் சொல்லின்றித் தமித்து விடப்பட்டுள்ளன.
இரண்டாம் பட்டி பிற்காலத்ததாதலால், சிறிது வெறுபட்டும் பெறும்பாலும் தமிழ்ச் சொற்களைக் கொண்டும் உள்ளது.
அறுபத்துநாலுகலை என்னும் தொகுப்பு, வடமொழிக் காமசூத்திரம் (Kaama Suutra) என்னும் இன்பநூலின் ஆசிரியரான வாத்சாயன (Vaatsaayana) ருடையதாதலால், அந் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பாளரான பர். சந்தோச குமார முக்கர்சி (Dr. Santhosh Kumar Mukherji) பாகுபடுத்திக் கூறிய அறுபானாற்கலை ஆங்கிலப் பட்டியலை இங்குத் தருகின்றேன்.
அந்த அறுபத்துநாலுகலைகளின் பட்டியலை
மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் தொகுத்த
செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி
(A Comprehensive Etymological Dictionary of the Tamil Language )
Vol. 1 , Part - 1 பக்கம் 545-548 வரையிலும் கண்டுள்ளபடி
இங்கே பட்டியலிட்டுள்ளேன். தெரிந்துகொள்ளுங்கள்.
அறுபத்துநாலுகலை (பெ.) `காமசூத்திரம்' என்னும் பழைய சமற்கிருத நூலிற் சொல்லப்பட்டுள்ள அறுபத்துநான்கு கலைகளும் அறிவியல்களும்.
அறுபத்து நாலு கலைகளாவன:
1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்);
2. எழுத்தாற்றல் (லிகிதம்);
3. கணிதம்;
4. மறைநூல் (வேதம்);
5. தொன்மம் (புராணம்);
6. இலக்கணம் (வியாகரணம்);
7. நயனூல் (நீதி சாத்திரம்);
8. கணியம் (சோதிட சாத்திரம்);
9. அறநூல் (தரும சாத்திரம்);
10. ஓகநூல் (யோக சாத்திரம்);
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);
16. மறவனப்பு (இதிகாசம்);
17. வனப்பு;
18. அணிநூல் (அலங்காரம்);
19. மதுரமொழிவு (மதுரபாடணம்);
20. நாடகம்;
21. நடம்;
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);
23. யாழ் (வீணை);
24. குழல்;
25. மதங்கம் (மிருதங்கம்);
26. தாளம்;
27. விற்பயிற்சி (அத்திரவித்தை);
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);
30. யானையேற்றம் (கச பரீட்சை);
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை);
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்);
35. மல்லம் (மல்ல யுத்தம்);
36. கவர்ச்சி (ஆகருடணம்);
37. ஓட்டுகை (உச்சாடணம்);
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);
39. காமநூல் (மதன சாத்திரம்);
40. மயக்குநூல் (மோகனம்);
41. வசியம் (வசீகரணம்);
42. இதளியம் (ரசவாதம்);
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);
47. கலுழம் (காருடம்);
48. இழப்பறிகை (நட்டம்);
49. மறைத்ததையறிதல் (முஷ்டி);
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);
51. வான்செலவு (ஆகாய கமனம்);
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);
54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்);
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);
64 சூனியம் (அவத்தைப் பிரயோகம்).
வேறொரு பட்டியல்
1. பாட்டு (கீதம்);
2. இன்னியம் (வாத்தியம்);
3. நடம் (நிருத்தம்);
4. ஓவியம்;
5. இலைப்பொட்டுக் (பத்திர திலகம்) கத்தரிக்கை;
6. பல்வகை யரிசி பூக்களாற் கோலம் வைத்தல்;
7. பூவமளியமைக்கை;
8. ஆடையுடை பற்களுக்கு வண்ணமமைக்கை;
9. பள்ளியறையிலும் குடிப்பறையிலும் மணி பதிக்கை;
10. படுக்கையமைக்கை;
11. நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை (ஜலதரங்கம்);
12. நீர்வாரி யடிக்கை;
13. உள்வரி (வேடங்கொள்கை);
14. மாலைதொடுக்கை;
15. மாலை முதலியன் அணிகை;
16. ஆடையணிகளாற் சுவடிக்கை;
17. சங்கு முதலியவற்றாற் காதணியமக்கை;
18. விரை கூட்டுகை;
19. அணிகலன் புனைகை;
20. மாயச்செய்கை (இந்திரசாலம்);
21. குசுமாரரின் காமநூல் நெறி (கௌசுமாரம்);
22.கைவிரைவு (ஹஸ்தலாவகம்);
23. மடைநூலறிவு (பாகசாத்திர வுணர்ச்சி);
24. தையல்வேலை;
25. நூல்கொண்டு காட்டும் வேடிக்கை;
26. வீணை யுடுக்கைப் பயிற்சி (வீணை டமருகப் பயிற்சி);
27. விடுகதை (பிரேளிகை);
28. ஈற்றெழுத்துப் பாப் பாடுகை;
29. நெருட்டுச் சொற்றொடரமக்கை;
30. சுவைத்தோன்றப் பண்ணுடன் வசிக்கை;
31. நாடகம் உரைநடை (வசனம்) யிவற்றினுணர்ச்சி;
32. குறித்தபடி பாடுகை (ஸமஸ்யாபூரணம்);
33. பிரம்பு முத்தலியவற்றாற் கட்டில் பின்னுதல்;
34. கதிரில் நூல் சுற்றுகை;
35. மரவேலை;
36. மனைநூல் (வாஸ்து வித்தை);
37. காசு, மணி நோட்டம் (நாணய ரத்னங்களின் பரிசோதனை);
38. நாடிப்பயிற்சி (தாதுவாதம்);
39. மணிக்கு நிறமமைக்கையும் மணியின் பிறப்பிட மறிகையும்;
40. தோட்டவேலை;
41. தகர்ப்போர் சேவற்போர் முதலிய விலங்கு பறவைப்போர்;
42. கிளி நாகணங்கட்குப் பேச்சுப் பயிற்றுவகை;
43. உடம்பு பிடிக்கையும் எண்ணைய் தேய்க்கையும்;
44. குழூவுக்குறி (சங்கேதாக்ஷரங்களமத்துப் பேசுகை);
45. மருமமொழி (ரகசிய பாஷை);
46. நாட்டுமொழி யறிவு (தெசபாஷை யுணர்ச்சி);
47. பூத்தேர் (புஷ்பரதம்) அமக்கை;
48. முற்குறி (நிமித்தம்) அமைக்கை;
49. பொறியமைக்கை;
50. ஒருகாலிற் கொள்கை (ஏகசந்தக்கிராகித்வம்);
51. இருகாலிற் கொள்கை (துவிசந்தக்கிராகித்வம்);
52. பிதிர்ப்பா (கவி) விடுக்கை;
53. வனப்பு (காவியம்) இயற்றுகை;
54. உரிச்சொல்லறிவு (நிகண்டுணர்ச்சி);
55. யாப்பறிவு;
56. அணியறிவு (அலங்காரவுணர்ச்சி);
57. மாயக்கலை (சாலவித்தை);
58. ஆடையணியுந் திறமை (உடுத்தலிற் சாமர்த்தியம்);
59. சூதாட்டம்;
60. சொக்கட்டான்;
61. பாவை (பொம்மை), பந்து முதலியன வைத்தாடுகை;
62. யானயேற்றம், குதிரையேற்றம் பயிற்சி;
63. படக்கலப் பயிற்சி;
64. உடற் (தேகப்) பயிற்சி (சது.).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக