வெள்ளி, 4 ஏப்ரல், 2008
தமிழ் இணைய இதழ்கள்
முனைவர் க.துரையரசன்
தமிழ் இணைப்பேராசிரியர்
முன்னுரை;
செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படங்கள் முதலானவற்றைத் தகவல் தொடர்பு ஊடகங்கள் என்று கூறுவர். அவ்வரிசையில் இணையத்தையும் இணைத்துக் கொள்ள வேண்டும். பிற தகவல் தொடர்பு ஊடகங்களைக் காட்டிலும் முழு வீச்சில் இணையம் வளர்ச்சியுற்று வருகிறது என்றே கூற வேண்டும். எதிர்காலத்தில் பிற ஊடகங்களைப் புறந்தள்ளிவிட்டு இது முன்னணி இடத்தைப் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.
இத்துணை சிறப்பு வாய்ந்த இணையத்தின் வழி இதழ்கள் வெளி வருகின்றன. இதனை இணைய இதழ்கள் அல்லது மின்னிதழ்கள் (e-journals /e-zines) என்று குறிப்பிடுவர். அச்சு வடிவில் வெளி வருகின்ற இதழ்களைப் போலவே காலம் (நாளிதழ், வார இதழ்) மற்றும் பொருண்மை அடிப்படையில் (அரசியல் இதழ், பக்தி இதழ்) மின்னிதழ்களையும் வகைப்படுத்தலாம். அனைத்து வகை மின்னிதழ்களைப் பற்றியும் இங்குக் குறிப்பிடின் இக்கட்டுரை மிக நீளும் என்பதால் தமிழ் இலக்கியம் சார்ந்த படைப்புகளைத் தாங்கி, அச்சில் வெளிவராமல் இணையத்தில் மட்டுமே வெளிவருகின்ற குறிப்பிடத்தக்க மின்னிதழ்கள் பற்றி மட்டும் இக்கட்டுரை விளக்க முற்படுகிறது.
திண்ணை;
வீட்டில் திண்ணை வைத்துக் கட்டுவது தமிழர் மரபு. நாகரிக உலகில் இம்மரபு மெல்ல அற்றுப் போய்விட்டது என்றே கூற வேண்டும். இன்றைய காலக்கட்டத்தில் கிராமத்தில் கட்டப்படுகின்ற வீடுகளில்கூட திண்ணைகளைக் காணோம்.
இத்திண்ணைகளில் அமர்ந்து உள்ளூர் செய்தி முதல் உலகச் செய்தி வரை பேசப்படும். இது வெறும் திண்ணைப் பேச்சாக (வெட்டிப் பேச்சு) இல்லாமல் அறிவார்ந்த செய்திகளை ஆராய்கின்ற பேச்சாக இருக்கும். திண்ணையில் அமர்ந்து பலரும் பல விதமான செய்திகளைப் பேசுவதைப் போல திண்ணை மின்னிதழிலும் யார் வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். இதன்பொருட்டுத்தான் இவ்விதழுக்குப் இப்பெயர் ஏற்பட்டதாக அறியமுடிகிறது.
இம் மின்னிதழில் கலை, அரசியல், அறிவியல், சமூகம், கதை, கட்டுரை, கவிதை, இலக்கியம் சார்ந்த செய்திகள் எனப் பல்வகைச் செய்திகள் இடம் பெறுகின்றன.
இவ்விதழ் இலாப நோக்கமின்றி செய்திகளைக் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் மட்டுமே செயற்படுகிறது. இதனைப் பார்வையிடுவதற்கோ, படைப்புகளை வெளியிடுவதற்கோ கட்டணம் கிடையாது. அதுபோல படைப்பாளிகளுக்கும் இவ்விதழ் எவ்விதமான கட்டணங்களும் வழங்குவதில்லை. அதாவது வாங்குவதும் இல்லை; கொடுப்பதும் இல்லை.
இம்மின்னிதழ் ஒருங்குறியீட்டு (Unicode) முறையில் இயங்குதல், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று புதுப்பிக்கப்படுதல், தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக வெளிவருதல், பழைய இதழ்களைப் பார்வையிடும் வசதி வழங்கல், பிற இணைய தளங்கள் மற்றும் மின்னிதழ்களுக்குச் செல்ல இணைப்பு வழங்கல் உள்ளிட்டவை இதன் சிறப்புகளாக அமைந்துள்ளன. இதன் இணைய முகவரி; www.thinnai.com
தட்ஸ் தமிழ்;
திண்ணையைப் போல முழுக்க முழுக்க இலக்கிய இதழாக இல்லாமல் நாளிதழைப் போல இம்மின்னிதழ் வெளி வருகிறது. இதில் பல்துறைச் சார்ந்த விரிவான செய்திகள் வெளிவந்தாலும்கூட இலக்கியச் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்து வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.
இது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளில் வெளிவருகிறது என்பதும், இதில் செய்திகள் உடனுக்குடன் வெளியிடப்படுகின்றன (Update) என்பதும் வியத்தகு செய்தியாகும். இதில் தமிழகச் செய்திகள் மட்டுமின்றி இந்தியா, இலங்கை உள்ளிட்ட உலகச் செய்திகளும் கவிதை, கட்டுரை, சிறுகதை முதலான இலக்கியச் செய்திகளும் இடம் பெற்றுள்ளன. மேலும், திரைத்துறை உள்ளிட்ட ஒளிக்காட்சிகளையும் இதில் காணலாம். இதன் இணைய முகவரி; www.thatstamil.oneindia.in
வார்ப்பு;
இது, கவிதைக்கென்று வெளிவருகின்ற இணைய இதழ்; வாரம் தோறும் வெளிவருகின்றது. இது 1998 ஆம் ஆண்டு ‘நிக்குமோ நிக்காதோ’ என்ற பெயரில் இணைய இதழாக வெளிவந்தது. கவிஞர் இசாக் அவர்களின் ஆலோசன்ப்படி கவிஞர் மாலியன் அவர்களால் வார்ப்பு என்ற பெயர் மாற்றம் பெற்றது. இவ்விதழின் பதிப்பாசிரியர் பா.மகாதேவன். இதுநாள் (21-03-2008) வரை இதன்கண் 285 கவிஞர்களின் 1195 கவிதைகள் இடம் பெற்றுள்ளன. கவிஞர்கள், கவிதைகள், விமர்சனங்கள், நேர்காணல்கள், கட்டுரைகள் என்னும் தலைப்புகளில் செய்திகளைப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் அறிவுமதி, கனிமொழி போன்ற புகழ் பெற்ற கவிஞர்களின் கவிதைகள் வெளிவந்துள்ளமை கொண்டு இதன் சிறப்பை வெளிப்படுத்தும்.
இதன்கண் அமைந்துள்ள நூலகம் என்ற இணைப்பின் வழி சென்று புதிதாக வெளிவந்துள்ள தமிழ் நூல்களைப் பற்றிய விமர்சனத்துடன் கூடிய தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம் என்பது மிகச் சிறப்பான ஒன்றாகக் கருதலாம். இவ்விதழ் ஒருங்குறியீட்டு முறையில் வெளிவருவதால் எழுத்துரு (Fonts) சிக்கல் ஏதுமில்லை.
நாட்டுப்புறப் பாடல்களை நாட்டின் சொத்து என்று கருதுகின்ற இவ்விதழின் பதிப்பாசிரியர் பா.மகாதேவன் அதனைப் பாதுகாத்து வைக்க வேண்டிய கட்டாயமும் அவருக்கு இருப்பதாகக் குறிப்பிடுகிறார். எனவே எதிர்காலத்தில் நாட்டுப்புறப் பாடல்களையும், மொழிபெயர்ப்புக் கவிதைகளையும் வகை தொகைப்படுத்தி எளிதில் பெறுகின்ற வகையில் வெளியிடுகின்ற திட்டமும் இவருக்கு இருப்பதை அறிய முடிகிறது. இதன் இணைய முகவரி; www.vaarappu.com
பதிவுகள்;
2000 ஆம் ஆண்டிலிருந்து கனடாவிலிருந்து வெளிவருகின்ற இந்த இதழின் ஆசிரியர் வ.ந.கிரிதரன். இது ஒருங்குறியீட்டு முறையில் மாதந்தோறும் வெளிவருகின்ற மின்னிதழ் ஆகும். அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம் என்ற முழக்கத்துடன் வெளிவருகின்ற இதன்கண் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, நூல் விமர்சனம், அறிவியல், நூல் அங்காடி ஆகிய இலக்கியம் சார்ந்த செய்திகளைக் காண இயலும். தமிழ்க் கலைக்களஞ்சியம் போன்று இணையத்தில் தகவல் களஞ்சியமாக திகழ்கின்ற விக்கிபீடியா, மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க தமிழ் இணைய தளம் மற்றும் இணைய இதழ்களுக்கான இணைப்புகளும் இதன்கண் வழங்கப்பட்டுள்ளன.
இலவசமாக கிடைக்கின்ற இவ்விதழில் ஆக்கங்களை வெளியிடவும், பார்வையிடவும் கட்டணம் ஏதுமில்லை. ஆயினும் இதன் வளர்ச்சிக்காக ஆண்டுக் கட்டணமாக 24 டாலர்களை விருப்பமுடையவர்கள் வழங்குமாறு கோருகின்றனர். இதன் இணைய முகவரி; www.pathivukal.com
மரத்தடி;
மரத்தடியில் உட்கார்ந்து இளைப்பாறலாம். வெட்டிக் கதை பேசலாம். உருப்படியான கதைகளைப் பேசி அறிவைப் பெருக்கலாம். மரத்தடி என்ற இம்மின்னிதழ் இளைப்பாறவும், உருப்படியான தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவும் வகை செய்கிறது. மரத்தடிக் குழுமத்தில் உறுப்பினராக உள்ளவர் மட்டுமே இதில் தங்கள் படைப்புகளை இட முடியும். ஆயினும் வரும்பும் எவரும் இதில் உறுப்பினராகலாம். கட்டணம் எதுவும் கிடையாது. கதை, கவிதை, கட்டுரை முதலியவற்றை இவ்விதழ் வெளியிடுகிறது. படைப்புகளை ஒருங்குறியீட்டு முறையில் வெளியிடுவது இதன் சிறப்பாகும். ஆயினும் இது குறித்த காலத்தில் வெளிவருவதில்லை. இதன் இணைய முகவரி; www.maraththadi.com
தமிழம் நெட்;
மாதந்தோறும் வெளிவரும் இம்மின்னிதழைப் பொள்ளாச்சி நசன் நடத்தி வருகிறார். இவ்விதழ் பல அரிய செய்திகளைத் தாங்கி வெளிவருகிறது. தமிழறிஞர்களின் வாழ்க்கைக் குறிப்புகள். தமிழறிஞர்களின் படங்கள் (இதுவரை 276 படங்கள்), அரிய புகைப்படங்கள், நூல் மதிப்புரை, இலக்கிய நிகழ்வுகள் உள்ளிட்ட செய்திகள் இதன்கண் இடம் பெற்றுள்ளன. ஆங்கிலம் வழியாக தமிழ் கற்பிக்கின்ற அரும்பணியையும் இவ்விதழ் செய்து வருகிறது. கட்டணம் ஏதுமின்றி நடைபெற்றுவரும் இப்பணி அனைவராலும் பாரட்டப்படுகின்ற பயனுள்ள பணியாக அமைந்துள்ளது. இதன் இணைய முகவரி; www.tamizham.net
தமிழ்க்கூடல்;
இம்மின்னிதழ் தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்குப் பயன்படும் வகையில் அமைந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன. கட்டுரைகளை இலக்கியம், சமூகம், அரசியல், பொருளாதாரம் என்றும் கவிதைகளை மரபுக் கவிதை, புதுக் கவிதை, ஹைக்கூ கவிதை என்றும் வகைப்படுத்தி வெளியிடுவதன் மூலம் இது பிற இதழ்களினின்றும் வேறுபட்டு விளங்குகிறது.
ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ்ச் சான்றோர்கள் பற்றிய சுருக்கமான தகவல்களைக் கொண்ட பட்டியல் ஒன்றையும் இது வெளியிட்டுள்ளது. இதன் இணைய முகவரி; www.koodal.com
நிலாச்சாரல்;
இம்மின்னிதழ் ஒவ்வொரு திங்கட்கிழமையன்றும் வெளிவருகிறது. இது ஒருங்குறியீட்டு எழுத்துரு முறையைப் பயன்படுத்துகிறது. தொடர்கள், கதைகள், கவிதைகள், சுவடுகள், பூஞ்சிட்டு முதலிய வகையில் இலக்கியச் செய்திகளை இவ்விதழ் வழங்குகிறது. பூஞ்சிட்டு என்ற பகுதியில் சிறுவர்களுக்கான கதைகள் வெளிவருகின்றன. பல்சுவை என்ற பகுதியில் கைமணம், கைமருந்து, சுவடுகள் ஆகிய தலைப்புகளில் செய்திகள் வெளிவருகின்றன. இதன் இணைய முகவரி; www.nilacharal.com
தமிழோவியம்;
இம்மின்னிதழின் ஆசிரியர் மீனாக்ஷி. ஒருங்குறியீட்டு எழுத்துருவைப் பயன்படுத்தி வாரந்தோறும் இவ்விதழ் வெளிவருகிறது. கவிதை, கட்டுரை. சிறுகதை, திரை விமர்சனம், நூல் விமர்சனம் உள்ளிட்ட செய்திகளைத் தாங்கி இவ்விதழ் வெளிவருகிறது. தமிழ் ஈபுக் (Tamil e-books) என்ற இணைப்பும் இதன்கண் உள்ளது. இதன் மூலம் தமிழில் வெளிவருகின்ற மின் நூல்களையும் காண முடிகிறது. இதன் இணைய முகவரி; www.tamiloviam.com
முடிவுரை;
இலக்கியச் செய்திகளை வெளியிடுகின்ற இணைய இதழ்களில் மேற்காட்டியவை குறிப்பிடத் தக்கவையாகும். இவை போன்ற இன்னும் பல நூற்றுக்கணக்கான இதழ்கள் இணையத்தில் காணக்கிடைக்கின்றன. இவ்விதழ்களை எல்லாம் ஆய்வாளர்களும், ஆர்வலர்களும், ஆசிரியர்களும் கண்டு பயனுற வேண்டும். ‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்’ என்பது பாரதியின் அமுத வரிகள். ஆனால் இன்று எட்டுத் திக்கும் செல்ல வேண்டியதில்லை; இணையத்திற்குச் சென்றாலே எல்லாத் திக்குகளும் நம்மை நோக்கி இணையக் கரம் நீட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக