செவ்வாய், 8 ஏப்ரல், 2008
நா.வானமாமலையின் வாழ்வும் பணியும்
தமிழக நாட்டுப்புற இலக்கியத் துறையில் தமக்கென ஓரிடத்தை நிலை நிறுத்திக் கொண்டவர் நா.வானமாமலை ஆவார். இவர்தம் வாழ்க்கை, இலக்கியப் பணி, அரசியல் பணி போன்றவற்றை எடுத்துரைப்பதாக இக்கட்டுரை உள்ளது.
பிறப்பும் இளமையும்
பேராசிரியர் நா.வானமாமலை 7-12-1917 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நான்குனேரியில் நாராயணன் தாதர், திருவேங்கடத்தம்மாள் தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். இவருக்கு வேங்கடம் என்ற சகோதரியும், ஆழ்வான் என்ற சகோதரனும் உண்டு. இவரது முன்னோர்கள் நான்குனேரி கிராம முன்சீபாக வேலை பார்த்தனர். அதனால் வசதியான வாழ்க்கை அவருடைய இளமைக் காலத்தில் வாய்த்திருந்தது.
கல்வி;
நா.வானமாமலை ஆரம்பக் கல்வியை ஏர்வாடியிலும் நான்குனேரியில் உள்ள ஜில்லாபோர்டு உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். நெல்லையில் இன்டர்மீடியட் முடித்தார். பின்பு இவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.ஏ. இரசாயனப் படிப்பும், சென்னை சைதாப்பேட்டை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் எல்.டி.பட்டப் படிப்பையும் முடித்தார்.
திருமண வாழ்க்கை;
நா.வானமாமலை தமது சொந்த அத்தை மகளான சீதையம்மாள் என்பவரை முதலில் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த அம்மையார் நீண்ட காலம் உயிர் வாழவில்லை. பிறகு இவர் சென்னையைச் சேர்ந்த பத்மாவதி என்பவரை 1948 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு கிருஷ்ணமூர்த்தி, நாராயணமூர்த்தி, ராமமூர்த்தி என்ற மூன்று மகன்களும் கலாவதி, அருணா அம்மணி என்ற மகள்களும் உள்ளனர்.
தமிழ்ப் பற்றும் எழுத்தார்வமும்;
பள்ளிப் பருவத்தில் இருந்தே அரசியலில் இவர் ஆர்வம் காட்டினார். பிரஞ்சுப் புரட்சி, அமெரிக்க விடுதலை இயக்கம், ருஷ்யப் புரட்சி போன்றவை விடுதலையில் ஆர்வம் கொண்டவர்களுக்குக் கலங்கரை விளக்கமாக இருப்பினும் இவருக்கு இவை மனிதாபிமானத்தின் முதிர்ச்சியாகவே தோன்றின.
டால்ஸ்டாய், டிக்கன்ஸ், விட்மன், ஹியூகோ முதலிய ஆசிரியர்களின் எழுத்துக்களால் நா.வானமாமலை ஈர்க்கப்பட்டார். இவர்களின் எழுத்துக்களைத் தமிழகத்தில் பரப்ப வேண்டும்; மனிதனை உயர்த்தும் இத்தகைய எழுத்தோவியங்கள் தமிழில் தோன்ற வேண்டும் என்ற எண்ணத்தின் பிரதிபலிப்புத்தான் இவரின் மொழிபெயர்ப்பு நூல்கள் மற்றும் கட்டுரைகள் ஆகும். மேலும், கல்லூரியில் தமிழைப் பயிற்று மொழியாக்குவது சாத்தியம்தான் என்பதை உணர்த்தும் வகையில் ‘தமிழில் முடியும்’ என்ற கட்டுரைத் தொகுப்பையும் இவர் வெளியிட்டுள்ளார்.
ஆசிரியப் பணி;
1942 இல் மதுராந்தகத்தில் இவர் தற்காலிக ஆசிரியராகவும், ஜில்லாபோர்டு உயர்நிலைப் பள்ளியில் நிரந்தர ஆசிரியராகவும் பணியாற்றினார். கர்நாடகப் பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராகவும், திராவிட மொழியியல் கழகத்தின் தமிழ்ப் பகுதி ஆய்வுப் பொறுப்பாளராகவும் நா.வானமாமலை பணிபுரிந்துள்ளார்.
பொது வாழ்க்கை நடவடிக்கைகள் இவரது ஆசிரியப் பணிக்கு இடையூறாக இருந்ததால் அப்பணியில் இருந்து விலகினார். வாழ்க்கை நெருக்கடியைச் சமாளிக்க இன்டர்மீடியட் வகுப்புகளில் தோல்வியுற்ற மாணவர்களுக்காக பாளையங்கோட்டையில் அவர் தங்கியிருந்த வீட்டிலேயே ‘ஸ்டூடன்ஸ் டுடோரியல் இன்ஸ்டிடியூட’ என்ற பெயரில் தனிப் பயிற்சி வகுப்புகள் நடத்தினார். பின்பு இந்நிறுவனம் வானமாமலை டுடோரியல் கல்லூரி என்று தனிப் பயிற்சிக் கல்லூரியாக வளர்ச்சியடைந்தது. திருச்சி, நாகர்கோவில், தூத்துக்குடி, தக்கலை ஆகிய இடங்களில் இதன் கிளைகள் செயல்பட்டன. பெண்களுக்குத் தனியாகக் கிளைகள் தொடங்கி நடத்தினார்.
நா.வானமாமலை மிகச் சாதாரண உழைப்பாளிகள் முதல் படிப்பாளிகள் வரை பலருக்கும் மார்க்சிய வகுப்புகள் எடுத்தார். மாணவர்களுக்குக் கட்டுரை எழுதும் பயிற்சி முதலியவற்றை அளித்து சிறந்த ஆசிரியராகத் தன் வாழ்நாள் முழுவதும் செயல்பட்டார்.
இலக்கியப் பணிகள்;
நா.வானமாமலையின் இலக்கியப் பணிகளை நான்கு வகையாகப் பிரிக்கலாம். அவை;
1. மொழிபெயர்ப்புப் பணி
2. தமிழ்நாட்டு வரலாறு, பண்பாடு முதலியன பற்றிய
ஆராய்ச்சிப் பணி
3. நாட்டுப்புறப்பாடல் தொகுப்பும் ஆராய்ச்சியும்
4. இலக்கிய விமர்சனப் பணி
மொழிபெயர்ப்புப் பணி;
1939 இல் டால்ஸ்டாயின் நாடகம் ஒன்றை ‘இருளின் வலிமை’ என்ற தலைப்பிலும், இதன் பிறகு அவரது மூன்று குறு நாவல்களைக் குரூயிட்ஸர் சொனோடா, குடும்ப இன்பம், உயிருள்ள பிணம் என்ற பெயரிலும் இவர் வெளியிட்டார்.
நா.வானமாமலை ஆங்கில, ருஷ்ய, அமெரிக்க இலக்கியங்களில் ஈடுபாடு அதிகம் காட்டினார். இவர் எழுதும் கட்டுரைகளுக்கு அந்நாட்டு இலக்கியப் படைப்புகளில் இருந்து மேற்கோள் காட்டுவார். மேலும் மாபஸான், செகாவ், கால்ஸ்வர்த்தி ஆகியோரின் கதைகளையும் மொழிபெயர்த்துள்ளார்.
ஹால்டேனின் கட்டுரையைப் படித்தவுடன் விஞ்ஞான உண்மைகளைத் தமிழில் எழுத வேண்டும் என்ற எண்ணம் நா.வானமாமலைக்குத் தோன்றியது. இதன் விளைவாக ஐன்ஸ்டீன் தத்துவம், லைசெய்கோ தத்துவம், இரசாயன தத்துவங்கள் ஆகிய பல பொருள்கள் பற்றி சராசரித் தமிழரது விஞ்ஞான அறிவை மனத்தில் கொண்டு எளிய முறையில் இவர் நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
1. உடலும் உள்ளமும் - பாவ்லாவின் கட்டுரைத் தொகுப்பு
2. மருத்துவ இயல் விஞ்ஞான வரலாறு - பிரிட்லெண்டு
3. விண்யுகம் - ஸ்டீபன் ஹெய்ம்
4. உயிரின் தோற்றம் - ஏ.ஐ.ஓபார்
போன்றோர்களின் படைப்புகளை இவர் மொழிபெயர்த்துள்ளார்.
தமிழ்நாட்டு வரலாறு, பண்பாடு முதலியன பற்றிய ஆராய்ச்சிப் பணி;
நா.வானமாமலை தமிழ் இலக்கியத்தையும் ஆங்கில இலக்கியத்தையும் ஆர்வத்தோடு கற்றார். இலக்கியங்களை ஆராய வேண்டும் என்றால் சமுதாய வரலாறும், பண்பாடும் தெரிந்திருக்க வேண்டும் என்று கருதினார். சமுதாய மாறுதல்களை அறிய தமிழ்நாட்டு வரலாற்று நூல்களையும் இவர் பயின்றார்.
இலக்கியம், ஆரிய திராவிடர் மூடுதிரை, சோழர் காலத்திய அறப்போர்கள், வலங்கை இடங்கைப் போராட்டம் போன்ற கட்டுரைகளும், தமிழ்நாட்டுச் சமுதாய வரலாறு, தமிழ் நாட்டில் சாதி அமைப்பின் வரலாறு, ஒப்பில்லாத சமுதாயம் ஆகிய நூல்களையும் இவர் எழுதி வெளியிட்டுள்ளார்.
இவர் சின்னத்தம்பி வில்லுப்பாட்டுக் கட்டுரையில் வில்லுப்பாட்டு என்பதன் விளக்கம், அதன் வரலாறு, மற்றும் பண்பாட்டுக் கூறுகளைக் கூறியுள்ளார். மேலும் முதன்முதலில் ‘நாட்டுப் பண்பாட்டியல்’ என்ற தொடரைக் கையாண்டவர் என்ற பெருமைக்கு உரியவர் நா.வானமாமலை ஆவார்.
நாட்டுப்புறப்பாடல் தொகுப்பும் ஆராய்ச்சியும்;
1955 ஆம் ஆண்டு மார்க்சிய அறிஞர் பி.சி.ஜோஷி என்பார் நாட்டார் வழக்காற்றியல் பற்றியும் அதில் ஈடுபடுமாறும் நா.வானமாமலைக்கு வழிகாட்டுதல்களை வழங்கினார். இதன்பிறகுதான் கிராமியப் பாடல்கள் மற்றும் கதைகள் மீது அதிக ஆர்வம் இவருக்கு ஏற்பட்டது. சரஸ்வதி என்ற இதழில் முத்துப்பட்டன் கதையையும், தாமரை இதழில் சின்னத்தம்பி என்ற வில்லுப்பாட்டையும் இவர் வெளியிட்டார்.
1961 ஆம் ஆண்டு தோன்றிய தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் முதல் மாநாட்டில் அமைக்கப்பட்ட நாட்டார் இலக்கியத்தின் குழுப்பொறுப்பை நா.வானமாமலை ஏற்றார். இதில் உற்சாகம் அடைந்தே இவர் நாட்டார் பாடல்களைச் சேகரிக்க ஆரம்பித்தார்.
1. தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்
2. தமிழர் நாட்டுப் பாடல்கள்
என்ற இவரது இரு நூல்களும் திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இரண்டு மாவட்டங்களில் வழங்கும் நாட்டார் பாடல்களை மையமாகக் கொண்டு உருவானவையாகும். நாட்டுக்கதைப் பாடல்களில் சமூக உள்ளடக்கம், கொள்ளைக் காரர்களும் நாட்டுப் பாடல்களும், கன்னட நாட்டுப் பாடல்களின் வீரர் படிமம் போன்ற கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார்.
கதைப் பாடல் பதிப்புகள்;
நா.வானமாமலை தெய்வீகம், புராணம், இதிகாசம், காவியம், சமூக வரலாற்றுக் கதைப் பாடல்கள் ஆகியவற்றைச் சிறப்பான முறையில் பதிப்பித்துள்ளார்.
1. கட்டபொம்மு கதை - 1960
2. வீணாதிவீணன் கதை - 1967
3. வீரபாண்டிய கட்டபொம்மு கதைப் பாடல் - 1971
4. முத்துப்பட்டன் கதை - 1971
5. காத்தவராயன் கதைப் பாடல் - 1971
6. கட்டபொம்மு கூத்து - 1972
7. கான்சாகிபு சண்டை - 1972
8. ஐவர் ராசாக்கள் கதை - 1974
என்பவற்றை மதுரை பல்கலைக்கழகத்தின் உதவியோடும் வீணாதிவீணன் கதை, கட்டபொம்மு கதைப்பாடல் ஆகியவற்றை நியூ செஞ்சுரி பதிப்பகத்தின் மூலமும் வெளியிட்டுள்ளார். இக்கதைப் பாடல்கள் அனைத்தும் 17,18 ஆம் நூற்றாண்டின் சமூக, வரலாற்று ஆவணமாகக் கருதப்படுகிறது. இவர் இப்பதிப்புகளில் முன்னுரையுடன் ஆராய்ச்சிக் கருத்துகளையும் முன் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நா.வானமாமலை நாட்டுப்புறவியலைத் தனித்துறையாக வளர வகை செய்தவர். இவரின் ஆய்வுக் கட்டுரைகள் நூல் வடிவில் வெளிவந்துள்ளன .
இலக்கிய விமர்சனம்;
நா.வானமாமலை சிலப்பதிகாரம் பற்றிய ‘இளங்கோ’ என்ற கட்டுரையில் சிலப்பதிகாரம் கூறும் மூன்று கருத்துகளையும் ஏற்றுக்கொள்கிறார். இருப்பினும், அவை இளங்கோவடிகளின் கருத்துகள் என்று கூறுவோர்¢ சான்றுகள் எதுவும் இல்லாமலேயே கூறுகின்றனர் என்றும் பதிகம் பாடிய யாரோ ஒரு புலவர் கூற்றுப்படியே அவை அமைந்துள்ளன என்றும் விளக்குகிறார்.
‘திருவள்ளுவரது அறிவுத் தோற்றம்’, தாமரை இதழில் வெளியான ‘தொல்குடி மக்களின் உலகக் கண்ணோட்டம்’ போன்ற கட்டுரைகள் இவரது இலக்கிய விமர்சனங்களாகவே காணப்படுகின்றன.
சிறுவர் நூல்கள்;
1962 ஆம் ஆண்டு அழ.வள்ளியப்பா மூலமாக நா.வானமாமலை சிறுவர் நூல்கள் எழுதும் பணியை மேற்கொண்டார். இதில் முதலில் வெளிவந்தது ‘ரப்பரின் கதை’ என்ற சிறு நூல் ஆகும். 1962 ஆம் ஆண்டு இந்நூல் ஜவஹர்லால் நேரு பரிசைப் பெற்றது. மேலும், இரும்பின் கதை, காகிதத்தின் கதை, பெட்ரோலியத்தின் கதை போன்ற நூல்களை வெளியிட்டார்.
அரசியல் ஈடுபாடு;
1936 ஆம் ஆண்டு விடுதலைப் போராட்டம் தீவிரமாக நடைபெற்ற காலத்தில் தேசிய இயக்கம் தவிர பொதுவுடைமை இயக்கமும், சுயமரியாதை இயக்கமும் இயங்கின. இவற்றின் இடதுசாரிக் கருத்துகளால் நா.வானமாமலை ஈர்க்கப்பட்டார். பொதுவுடைமை இயக்கம் தடை செய்யப்பட்டிருந்ததால் அது காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி என்ற பெயரில் இயங்கியது. இதனோடு தன்னை இவர் இணைத்துக் கொண்டார்.
இவர் 1948 ஆம் ஆண்டு நெல்லைச் சதி வழக்கில் கைது செய்யப்பட்டுப் பின்னர் விடுதலையானார். கட்சியை ஒழுங்குபடுத்துவதில் மிகுந்த ஆர்வம் கொண்டு அதில் வெற்றியும் கண்டார். நா.வானமாமலை 1959 ஆம் ஆண்டு பாளையங்கோட்டை நகராட்சி உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். கொக்கிர குலத்திற்கு குடி பெயர்ந்த பின் வார்டு உறுப்பினராகப் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். நகர்மன்றக் கூட்டங்களில் மக்களுக்கு எதிரானத் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டால் அவற்றை வன்மையாக எதிர்த்துப் போராடினார். 1965 ஆம் ஆண்டு வரை இவர் உறுப்பினராக இருந்து சொந்த காரணங்களுக்கு இப்பணி இடையூறாக இருந்ததால் இப்பதவியில் போட்டியிடுவதை நிறுத்திக் கொண்டார்.
மார்க்சிய ஈடுபாடு;
நா.வானமாமலை ஆரம்பக் காலத்திலிருந்தே மார்க்சிய தத்துவத்தில் ஈடுபாடு கொண்டவர். காலப்போக்கில் இலக்கியம் பற்றிய அவரது அணுகுமுறையில் மாரக்சியம் இரண்டறக் கலந்திருந்தது. ‘பண்டைய வேத தத்துவங்களும் வேத மறுப்புப் பௌத்தமும்’ என்ற நூலில் இந்திய தத்துவ மரபையும் பண்பாட்டின் வளர்ச்சியையும் விளக்கி உள்ளார்.
1. மார்க்சிய சமூகவியல் கொள்கை
2. மார்க்சிய தத்துவம் இயக்கவியல் பொருள் முதல் வாதம்
3. மார்க்சிய அழகியல்
இந்திய நாத்திகமும், மார்க்சிய தத்துவமும் போன்ற நூல்களை இவர் எழுதி வெளியிட்டார். இவரது ‘மார்க்சிய அழகியல்’ தமிழ் இலக்கிய சூழ்நிலைக்கு ஏற்ப மாரக்சிய அழகியலின் சில அம்சங்களை விளக்கும் நூலாக விளங்குகிறது.
சிறப்புகள்;
நான்குனேரியில் ஆசிரியராகப் பணியாற்றியபொழுது நா.வானமாமலை இளைஞர் சங்கம், விவசாயிகள் சங்கம் ஆகியவற்றை அமைத்து அதன் போராட்டங்களில் கலந்து கொண்டார். தொ.மு.சி.ரகுநாதன், சோ.சண்முகம் பிள்ளை ஆகியவர்களோடு சேர்ந்து இவர் நெல்லை எழுத்தாளர் சங்கம் ஒன்றை உருவாக்கினார். இச்சங்கத்தின் தாக்கம் காரணமாகவும் நா.வானமாமலையின் வழிகாட்டுதலாலும் வந்தவர் விமர்சகர் தி.க.சிவசங்கரன் ஆவார்.
நெல்லை ஆராய்ச்சிக்குழு;
முதல் இரண்டு உலகத் தமிழ் மாநாட்டின் மூலம் தமிழ் ஆராய்ச்சிப் பின் தங்கிய நிலையில் உள்ளதை அறிந்து அதன் மேம்பாட்டிற்காக பத்திரிகைத் தொடங்குவது என முடிவு செய்தார் நா.வானமாமலை. இதன் விளைவாக தோன்றியதே நெல்லை ஆராய்ச்சிக்குழு. இக்குழு துவக்கத்தில் சிறியதாக இருந்தாலும் நாளடைவில் நல்ல வளர்ச்சி அடைந்தது. இதில் நடைபெற்ற முகாம் ஒன்றில் வரலாறு, தத்துவம், இலக்கியம் பற்றிய வகுப்புகளை இவர் நடத்தினார்.
ஆராய்ச்சி இதழ்;
ஆராய்ச்சி இதழ் தமிழ் ஆராய்ச்சியின் எல்லையை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு விளங்கியது. 1969 ஆம் ஆண்டு இதன் முதல் இதழ் வெளியானது. இந்த முதல் இதழில் ரகுநாதன், டி.வி.வீராசாமி, இராமசுந்தரம், அ.இராகவன், தேவி பிரசாந்த், சட்டோபாத்தியாயா போன்றவர்களின் கட்டுரைகளை இவர் வெளியிட்டார். இவ்விதழ் ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் கட்டுரைத் தொகுப்புகளை வெளியிட்டு வருகிறது.
தார்வார் பல்கலைக்கழகத்தில் 1975-76 ஆம் ஆண்டுகளில் இவர் திராவிட மொழியியல் ஆய்வினைச் சிறப்பாக முடித்தார். அந்த ஓராண்டு ஆய்வின் தொகுப்பு நா.வானமாமலையின் மறைவிற்குப் பிறகு 1981 இல் நூலாக வெளியானது . இந்நூலின் அடிப்படையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருக்கு டி.லிட். பட்டம் வழங்கியது.
நா.வானமாமலையின் இறுதிக் காலம்;
நா.வானமாமலையின் பொதுப்பணிகள் அனைத்தும் அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதித்தது. அவர் தொடங்கிய தனிப் பயிற்சிக் கல்லூரியும் ஆராய்ச்சி இதழும் சீராக நடைபெறவில்லை. 1980 ஆம் ஆண்டு தமது மகளைக் காண மத்தியப் பிரதேசத்தில் உள்ள கோர்பா என்ற இடத்திற்குச் சென்றார். அங்குச் செல்வதற்கு முன்னர் சென்னை கிறித்துவ இலக்கியச் சங்கத்தில் தமிழ் நாவல் பற்றிய ஒரு கட்டுரையை அளித்தார். இதுவே இவரது கடைசிக் கட்டுரை ஆகும். இவர் 2-2-1980 ஆம் ஆண்டு மறைந்தார்.
நா.வானமாமலையின் அறுபத்து மூன்றாண்டு கால வாழ்க்கையில் முப்பத்தைந்து ஆண்டுகள் தமிழ்ப் பணி ஆற்றியுள்ளார். இவரின் ஆய்வுகள் தொல்லியல், தொல்பொருள் வரலாறு, மானிடவியல், சமூகவியல், அறிவியல் என்ற முறைகளை உள்ளடக்கியது. ஆராய்ச்சி இதழ் மூலம் பல ஆராய்ச்சியாளர்களை உருவாக்கியவர். நாட்டுப்புறவியல், தமிழியல் ஆய்வுலகில் தம் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தி ஆய்வுலகில் வேரூன்றச் செய்தவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக