ஞாயிறு, 22 பிப்ரவரி, 2009

குடந்தைக் கல்லூரி

முனைவர் மு.இளங்கோவன் - Muelangovan மதியம் வெள்ளி, பிப்ரவரி 20, 2009 தமிழ்மணம் பரிந்துரை : 0/0

Pathivu Toolbar ©2009thamizmanam.com
குடந்தைக் கல்லூரியில் தமிழ் இணையம், மின் நூல்கள் பற்றிய என் உரை...

குடந்தை(கும்பகோணம்)க் காவிரிக்கரையை ஒட்டியப் பேருந்து நிறுத்தத்தில்(பாலக்கரை) நான் பேருந்திலிருந்து இறங்கும்பொழுது மணி பகல் ஒன்றிருக்கும்.பேராசிரியர் க.துரையரசன் அவர்கள் என்னை அழைத்துச்செல்ல மகிழ்வுந்து ஏற்பாடு செய்திருந்தார்.ஐந்து மணித் துளிகளில் கல்லூரி அண்ணா கலையரங்கை அடைந்தேன்.


தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பாசுகர் அவர்கள் கணிப்பொறி,இணையம் பற்றிய பல்வேறு செய்திகளை எடுத்துரைத்தார்.பசி நேரத்திலும் மாணவர்கள் அதனை ஆர்வமுடம் கேட்டுக்கொண்டிருந்தனர்.பேச்சின் நிறைவில் சில வினாக்களைப் பார்வையாளர்கள் எழுப்பினர்.அதில் ஒரு வினா தமிழ் 99 விசைப் பலகையைப் பயன்படுத்துவது எவ்வாறு?. நேரம் கருதி பிறகு விளக்கப்படும் என்ற அறிவிப்புடன் பகலுணவுக்கு 1.45 மணிக்குப் புறப்பட்டோம்.கருத்தரங்க ஏற்பாட்டாளர்கள் கல்லூரியிலேயே உணவு ஆயத்தம் செய்து வழங்கினர்.
உணவு இடைவேளைக்குப் பிறகு 2.30 மணிக்கு அனைவரும் அரங்கிற்கு வந்தனர்.நானும் துரை மணிகண்டன் உள்ளிட்ட நண்பர்கள் சிலரும் 2.15 மணிக்கே அரங்கிற்கு வந்து கணிப்பொறி,இணைய இணைப்புகளைச் சரிசெய்து தேவையான மென்பொருள்கள், இணையத்தளங்களை இறக்கி,ஆயத்தமாக வைத்துக்கொண்டோம்.


நான் பேசவேண்டிய தலைப்பு மின் நூல்கள் என்றாலும் 15 மணித்துளிகளுக்குத் தமிழில் தட்டச்சுச்செய்யும் முறைகளை விளக்கி தமிழ் 99 விசைப்பலகையின் சிறப்பு,அதனை எவ்வாறு இயக்குவது என்ற விவரங்களை அவைக்குச் சொன்னதும் அவையினர் எளிமையாக என் உரையை உள்வாங்கி மகிழ்ந்தனர்.இவ்வாறு தமிழில் தட்டச்சுச்செய்தால் மிக எளிதாக மின்னஞ்சல் அனுப்பவும் உடன் உரையாடவும் வலைப்பூ உருவாக்கவும் முடியும் என்று சொன்னேன்.


மாதிரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும் உடன் உரையாடவும் அவர்களுக்குப் பயிற்சியளித்தேன். அப்பொழுது முனைவர் கண்ணன்(கொரியா)யுவராசு(சென்னை) குணசீலன்(திருச்செங்கோடு), திருவாளர் அறிவழகன்(சென்னை) முகுந்து(பெங்களூர்) உள்ளிட்ட அன்பர்கள் இணைப்பில் இருந்தனர்.அனைவரும் இணைப்பில் வந்து உரையாடினர்.மாணவர்கள் இது கண்டு மகிழ்ந்தனர்.இப்பொழுது தமிழ்99 விசைப்பலகை அறிமுகம் ஆனது.99 விசைப்பலகையை தமிழா.காம் சென்று பதிவிறக்கம் செய்யும் முறையை எடுத்துரைத்தேன். என்.ச்.எம். நிறவனத்தின் விசைப்பலகையின் சிறப்புப் பற்றியும் எடுத்துரைத்தேன்.அப்பொழுது யுனிகோடு என்ற ஒருங்குகுறி பற்றியும் எடுதுரைத்தேன்.முகுந்து அவர்களின் பங்களிப்பு,கோபி அவர்களின் மென்பொருள்கள் பற்றியும் அறிமுகம் செய்தேன்.


அடுத்து எனக்கு வழங்கப்பட்ட மின்நூல்கள் என்ற தலைப்புக்குச் சென்றேன்.
தமிழில் நூல்கள் வாய்மொழியாகவும் கல்வெட்டு,செப்பேடு,பனை ஓலைகள், நுண்படச் சுருள்கள் வழியாகவும் வளர்ந்து இன்று மின்நூல்கள் நிலைக்கு வந்துள்ளதை நினைவூட்டினேன்.

திரு.கல்யாணசுந்தரம் அவர்களின் மதுரைத்திட்டம் பக்கத்திற்குச் சென்று பல நூல்களைத் தரவிறக்கிப் பார்த்தோம்.அடுத்து தமிழ் மரபு அறக்கட்டளையின் கண்ணன்,சுபா முயற்சி பற்றி விளக்கினேன்.அத்தளத்தையும் பார்வையிட்டு அதில் உள்ள ஓலைச்சுவடிகள், படங்கள் பாதுகாப்பு பற்றி அறிமுகம் செய்தேன்.அடுத்து விருபா தளத்தின் சிறப்புப் பற்றி காட்சி விளக்கத்துடன் உரை இருந்தது.இணையப் பல்கலைக்கழகத்தின் தளம்,காந்தளகம் தளம், சென்னை நூலகம் தளம் பற்றி அறிமுகம் செய்தேன்.


புதுச்சேரி பிரஞ்சு நிறுவன நூலகம்,சிங்கப்பூர் தேசிய நூலகம் பற்றியும் அப்பக்கங்களுக்குச் சென்று விளக்கினேன்.மின் இதழ்கள்,பொங்குதமிழ் எழுத்துருமாற்றி பற்றியும் சுரதா தளம் பற்றியும் காட்சி விளக்கத்துடன் விளக்கினேன்.


விக்கிபீடியா களஞ்சியம் பகுதிக்குச் சென்று தமிழ்க்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளளதை எடுத்துரைத்தேன்.என் கட்டுரைகள் சிலவற்றையும் அவைக்கு அறிமுகப்படுத்தி இதுபோன்ற தேவையான கட்டுரைகளை அனைவரும் வலைப்பூக்கள் உருவாக்கி வெளியிடும்படி வேண்டுகோள் வைத்தேன்.


வலைப்பூ உருவாக்கத்தின் சிறப்புப்பற்றி சிறிய அளவில் அறிமுகம் செய்துவிட்டு இவ்வலைப்பூ உருவாக்கித் தமிழ்மணத்தில் இணைத்தால் உலக அளவில் நம் படைப்புகளை அறிமுகம் செய்ய முடியும் எனக் காட்சி விளக்கத்துடன் எடுத்துரைத்தேன்.நண்பர் காசி ஆறுமுகம் அவர்களின் பணியையும் அமெரிக்காவில் உள்ள திருவாளர்கள் நா.கணேசன், சங்கராபண்டியனார்,சௌந்தர்,தமிழ் சசி உள்ளிட்ட தமிழ்மண நிருவாகிகளின் பணிகளையும் எடுத்துரைத்தேன்.சற்றொப்ப ஒன்றே முக்கால் மணிநேரம் என் உரை அமைந்தது.


பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட திருச்சி பிசப் ஈபர் கல்லூரி. தேசியக்கல்லூரி, வளனார் கல்லூரி புதுக்கோட்டை மகளிர் கல்லூரி,தஞ்சாவூர் கரந்தைக் கல்லூரி, திருப்பனந்தாள் கல்லூரி,குடந்தை மகளிர் கல்லூரி,ஆடவர் கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள்,மாணவர்கள்,ஆய்வாளர்கள் முந்நூறுக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்.


பேராசிரியர்கள் சி.மனோகரன்,முனைவர் சிற்றரசு,முனைவர் குணசேகரன்,முனைவர் துரையரசன்,முனைவர் சிவநேசன்,முனைவர் காளிமுத்து முனைவர் துரை.மணிகண்டன் உள்ளிட்டவர்களின் அன்பில் மகிழ்ந்தேன்.என் மாணவர்(கலவை ஆதிபராசக்திக் கல்லூரியில் பயின்றவர்) தேவராசன் என்பவர் குடந்தைக் கல்லூரியில் முதுநிலைக் கணிப்பொறிப் பயன்பாட்டியல் படிப்பவர் வந்திருந்து என்னை அன்புடன் கண்டு உரையாடினார்.அனைவரின் ஒத்துழைப்பாலும் என் உரை சிறப்பாக அமைந்தது.

அடுத்த பயிலரங்குகளில் சந்திப்போம் என்று அனைவரிடமும் விடைபெற்று, குடந்தையில் உடல்நலமின்றி உள்ள ஐயா கதிர். தமிழ்வாணன் அவர்களை இல்லம் சென்று கண்டு வணங்கி, இரவு 7.15 மணிக்குப் புறப்பட்டேன்.இரவு 11 மணிக்குப் புதுச்சேரி வந்து சேர்ந்தேன்.இடுகையிட்டது முனைவர் மு.இளங்கோவன் நேரம் லேபிள்கள்: குடந்தைக் கல்லூரி, மின் நூல்கள்

கருத்துகள் இல்லை: