மாமன்னன் இராசராச சோழனின் 1028வது சதயவிழா
இராசராச சோழனின் 1028வது சதயவிழா, தஞ்சையில் அம்மன்னன் எழுப்பிய தஞ்சைப் பெரிய கோயிலில் கடந்த 10, 11-11-2013 ஆகிய இரண்டு நாட்கள் கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் என்று பல்வேறு நிகழ்ச்சிகளுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
முதல் நாள் நிகழ்ச்சியில் திருமுறை அரங்கம், வையகம் உயர வான்புகழ் இராசராசனின் பங்களிப்பு என்னும் தலைப்பில் கருத்தரங்கம், மாமன்னனாகத் திகழ இராசராசன் மேற்கொண்டவை என்னும் தலைப்பில் கவியரங்கம் மற்றும் பலரின் இன்னிசை அரங்கங்கள் இடம் பெற்றிருந்தன.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் திருமுறை திருவீதி உலா, தேவார இசை அரங்கு, மோகினி ஆட்டம் ஆகியவை இடம் பெற்றன.
மேலும் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் உலகம் உவப்ப மாமன்னன் இராசராசசோழன் ஆற்றிய அரும்பணிகள் அரசியல் பணிகளா? அருங்கலைப் பணிகளா? என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. பட்டிமன்றத்தின் நடுவராகக் கரந்தைக் கலைக் கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர் முனைவர் மு.இளமுருகன் செயல்பட்டார். அரசியல் பணிகளே என்னும் அணியில் நான் (முனைவர் க.துரையரசன், தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி(தன்.), கும்பகோணம்) அணித்தலைவராகவும் புலவர் கோ.கலைவாணி, தஞ்சை பிரிஸ்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜெ.மகேசன் ஆகியோர் வாதங்களை எடுத்து வைத்தோம்.
அருங்கலைப்பணிகளே என்னும் தலைப்பில் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மு.பழனியப்பன் அணித்தலைவராகவும் புலவர் சே.கவிதா, திரு.வி.க.அரசு கலைக் கல்லூரி தமிழ் உதவிப் பேராசிரியர் முனைவர் மு.அருணகிரி ஆகியோர் வாதிட்டனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் முனைவர் மு.இளமுருகன், உலகம் உவப்ப மாமன்னன் இராசராசசோழன் ஆற்றிய அரும்பணிகள் அருங்கலைப் பணிகளே என்று தீர்ப்பு வழங்கினார்.
பட்டிமன்றத்தைக் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கானவர்கள் ஆர்வமுடன் செவிமடுத்துக் கேட்டதோடு பட்டிமன்றம் முடிகின்றவரை கலைந்து செல்லாமல் இருந்தது மாமன்னன் இராசராசசோழனின் பெருமையை இன்றும் மக்கள் போற்றும் வண்ணம் அமைந்திருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக