ஞாயிறு, 17 நவம்பர், 2013

சோழ மன்னர்கள் - 1

      சோழ மன்னர்கள் - 1

    சங்க காலத்துக்கு முற்பட்ட சோழ மன்னர்கள் பற்றிய குறிப்புகள் கலிங்கத்துப் பரணி, மூவருலா முதலிய நூல்களிலும் திருவாலங்காடு, கர்ந்தை, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் கிடைத்த செப்பேடுகளிலும் காணப்படுகிறது. 

       தங்கள் குல முதல்வர்களாகத் திருமால், பிரம்மா ஆகிய தெய்வங்களைக் குறித்துப் பின் பிரம்மாவின் வழித் தோன்றல்களாக மரீசி, காசியபன் போன்ற முனிவர்களையும், தொடர்ந்து சூரியனையும் குறித்துக் கொள்கின்றனர். மனுவை நீதி தவறாத சோழ மன்னனாகக் குறித்துக் கொள்கின்றனர். 

     இதனைத் தொடர்ந்து தந்தை மகனாகத் தொடரும் சோழ மரபில்  இட்சுவாகு, விகுக்சி, ககுத்தன், காக்சீவதன், சூரியமன், அநலப்பிரதாபன், வேனன், பீரீது, துந்துமாறன், யுவனாசுவன், மாந்தாதா, முசுகுந்தன், வல்லபன், பிரிதுலாக்கன், பார்ரத்திப சூடாமணி, தீரக்கபாகு, சந்திரசித்தன், சங்கிருதி, பஞ்சபன், சகரன், சத்யவிரதன், உசீநரன், சிபி, மருத்தன், துஷ்யந்தன், பரதன், ரிதூபரணன், திலீபன், பகீரதன், ரகு, தசரதன், இராமலட்சுமணன பரதசத்ருகன்னர் ஆகியோரைக் குறிப்பிடுகின்றனர். 

   இவர்களைத் தொடந்து, நாபாகன், வீரசேனன், சித்ரரதன், சித்ராசுவன் ஆகியோர் குறிக்கப்படுகின்றனர். இவர்களுக்குப் பிறகு வந்தவன் கவேரன் (காவிரியின் ஓட்டத்தைச் சோழநாட்டுக்குத் திருப்பியவன்), புலிகேசி (புலிக்கொடி தந்தவன்), புட்பகேது (வானவூர்தி கண்டவன்), சமுத்ரஜித்(பாக் நீரிணைப்பை உருவாக்கியவன்), தொடித்தோட் செம்பியன் (பறக்கும் அசுரக் கோட்டைகளை அழித்தவன்), வசு (வானவூர்தி தொடர்புடையவன்), பெருநற்கிள்ளி (பொறியியல், மருத்துவக் கலைகளில் தேர்ந்தவன்), இளஞ்சேட்சென்னி (தேர்களை விரைந்து செலுத்துவதில் வல்லவன்) இவனது மகன் கரிகாலன் ஆகியோர் சங்க காலத்துக்கு முற்பட்ட சோழ மன்னர்களாகக் குறிக்கப்படுகின்றனர்.. 

    இதில் கரிகால சோழனுக்குப் பிறகுதான் சோழர்களின் வரலாறு கிடைக்கிறது. இது பற்றி பின்னர் கூறப்படும்.(ஆதாரம்: சோழர் வரலாறு- பேரா.சி.கோவிந்தராசனார், முனைவர் சி.கோ.தெய்வநாயகம், பக்.12,13)

கருத்துகள் இல்லை: