ஞாயிறு, 27 அக்டோபர், 2019

பட்டமளிப்பு விழா உரை - 1 இதயா கல்லூரி, கும்பகோணம்


தேசத்தைப் பெருமைப்படுத்துங்கள்பெருமை பெறுங்கள்

பட்டமளிப்பு விழா நடைபெறும் இந்த நல்ல வேளையில் உங்களுக்கும், உங்களின் பெற்றோர்களுக்கும்  உறவினர்களுக்கும் வழிகாட்டிகளுக்கும் பேராசிரியர்களுக்கும், கல்வி நிறுவனத்திற்கும், மற்றும் இந்நிறுவன நிர்வாகிகளுக்கும் எனது கனிவான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாள்; பட்டம் பெறுகின்ற இந்நேரம்   மிகச் சிறந்த நேரம். இம்மகிழ்ச்சியைக்  கொண்டாடும் உங்களுக்கு நாளை ஒரு சிறந்த உலகத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பு காத்திருக்கிறது. ஒவ்வொரு மாணவியின் வாழ்க்கையிலும் சுய மரியாதைக்கு ஊக்கமளிக்கும் ஒரு தருணமாக - நாட்டிற்காக நம்மை நாமே  நல்ல பல பணிகள் செய்திட ஒப்படைக்கும் நாளாக ந்நாள்  திகழ்கிறது.
மாணவிகளே! பட்டம் பெற இருக்கின்ற நீங்கள். கல்லூரி ஈன்றெடுத்த நன்முத்துக்கள். உங்களுக்கு ஒரு கேள்வியை முன் வைக்கின்றேன்.
பட்டம் பெறுவது முடிவா? தொடக்கமா?
பட்டம் எதற்கு?
காட்டிப் பெருமை கொள்ளவா?
பணிகள் பெறுவதற்கான நுழைவுச்சீட்டா?
உங்களுக்குப் பொருள் ஈட்டிக்கொள்ளவா?
பிறந்த நாட்டின் பெருமை காக்கவா?
எதற்கு இந்தப் பட்டம்?
·         வானம், பூமியிலுள்ள நீரை சுமந்து சென்று மழையாகப் பொழிகிறது. தனக்காக அன்று - அனைத்து உயிரினங்களும் உயிர்த்திருப்பதற்காக - அனைத்து உயிரினங்களும் நிலைத்திருப்பதற்காக - அனைத்து உயிரினங்களும் மகிழ்ச்சி அடைவதற்காக.
·         தனது தோகையினை விரித்துக் கலாப மயில் ஆடுவது தனக்காக அன்று பிறர் கண்டு களிப்பதற்காக.
·         தன்னை அகழ்வாருக்கும் கூட பூமி தன்னிடத்தில் உள்ள வளங்களைக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றது
·         இருளில் உள்ளோர் துன்பம் களைய மெழுகுவர்த்தி தன்னைத்தானே உருக்கிக் கொள்கிறது
பட்டம் பெறக் காத்திருக்கும் மாணவச் செல்வங்களே! நீங்கள்…..
            நாட்டின் மேகங்கள்
            பூமித்தாய்
            கலாப மயில்கள்
            மெழுகுவர்த்திகள்
            நாட்டைச் செழித்திட வைக்க வந்திருக்கும் தேவதைகள்.
இதற்கான அனுமதிச் சீட்டே நீங்கள் பெற்றுள்ள பட்டங்கள். இதற்கானப் பயிற்சிகளைத் தருவதே கல்லூரிகள்.
கும்பகோணம் இதயா மகளிர் கல்லூரி, பாண்டிச்சேரி இமாகுலெட் துப்புயி அடிகளாரால் நிறுவப்பட்டது. இக்கல்லூரி, 2000ஆம் ஆண்டில் துவங்கிய இக்கல்லூரி பெண் சமூக முன்னேற்றத்தினை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இது தன் பயணத்தில் சிறப்பான நற்பெயரைப் பெற்று பீடுநடைப்போட்டு வருகிறது. உயர் கல்வியின் அனைத்து அம்சங்களிலும் இது தனி முத்திரை பதித்து வருகிறது.
இக்கல்லூரி, கும்பகோணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சார்ந்த  இளம் பெண்களுக்கு மதிப்பை (Values) அடிப்படையாகக் கொண்ட முழுமையான கல்வியை வழங்கி வருகிறது. மேலும் கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவியருக்கு முன்னுரிமை கொடுக்கும் நோக்கத்திலும், குறிப்பாக முதல் தலைமுறையில் கல்வி கற்கும் மாணவியர்களுக்கும் சிறந்த கல்வியைக் கொடுத்து வருகிறது. இக்கல்லூரியில் பயின்று வெளியேறும் மாணவிகளான நீங்கள் உறுதியான முடிவெடுப்பவர்களாகவும், ஒழுக்கசீலர்களாகவும், சிறந்த திறமை உடையவர்களாகவும் விளங்குவீர்கள் என்று நான் எண்ணுகிறேன். உங்கள் கல்லூரி, இக்குணங்களை உங்களிடம் உருவாக்கியிருப்பதாக நான் உறுதிபட நம்புகிறேன்.
அன்புள்ள மாணவிகளே, உங்கள் பொறுப்புகளை - கடமைகளை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.  உங்களின் கடமைகளைத் தனிமனிதக் கடமைகள், பொதுக்கடமைகள் என்று வகுத்துக் கொண்டு உங்கள் வாழ்க்கையில் செயல்படுங்கள்.
அவ்வாறு செயல்படும்போது,  உங்கள் திறனை உங்களால் உணர முடியும்.  உங்கள் திறனை உணர்ந்தால் நீங்கள் வாழ்க்கையில் எதையும் செய்ய முடியும். எதையும் திறமைப்பட செய்யும்பொழுது அதில் வெற்றி காண முடியும். அவ்வெற்றியின் மூலம் நீங்கள் பெருமை அடைய முடியும். ஒவ்வொரு தனிமனிதர்களின் பெருமைகளே ஒட்டுமொத்த இந்தியாவின் பெருமைகள். அத்தனிமனிதப் பெருமைகள் – சுயநலமில்லாதப் பெருமைகள் இந்தியாவைப் பெருமைப்படுத்தும். னவே, உங்களின் செயல்பாடுகளின் வழி உங்களைப் பெருமைப்படுத்திக் கொள்ளுங்கள் - உங்கள் பெற்றோரைப் பெருமைப்படுத்துங்கள் – உங்களை உயர்த்திய ஆசிரியர்களைப் பெருமைப்படுத்துங்கள். இந்த நாட்டைப் பெருமைப்படுத்துங்கள்.
இத்தேசம் ஒரு மகத்தான தேசம். நமது சாதனைகளையும் ஆற்றல்களையும் நாம்தானே அங்கீரிக்க வேண்டும். அற்புதமான சாதனைகளுக்குச் சொந்தக்காரர்கள் நாம். வெற்றிகளையும் சாதனைகளையும் விரும்பாதவர்கள் இவ்வுலகில் இல்லை.
வெற்றியை விரும்பாதவர்கள் இல்லை.
வெற்றியைப் பற்றி சிந்திக்காதவர்கள் இல்லை.
வெற்றியின் அடிப்படை பற்றிப் பேசாதவர்கள் இல்லை.
வெற்றியின் இரகசியத்தை ஆராயாதவர்கள் இல்லை.
வெற்றிக்கு வழிகளைத் தேடாதவர்கள் இல்லை.
வெற்றியின் பாதையை விவாதிக்காதவர்கள் இல்லை.
ஆயினும், வெற்றியை விரும்புபவர்களிடமிருந்து வெற்றி தொடுவானம் போல விலகிச் செல்வதையும் கண்கூடாகக் காண்கிறோம். எனவே வெற்றியை அடைய இலக்கு, உழைப்பு மற்றும் நம்பிக்கை என்ற மூன்றும் உதவுகின்றன.
இங்கு நான், இலக்கு என்று குறிப்பது உயர்ந்த இலக்கு; உழைப்பு என்பது கடின உழைப்பு; நம்பிக்கை என்பது தன்னம்பிக்கை.
வெள்ளத்து அனையதுமலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு

கான முயல் எய்த அம்பினில் யானை
பிழைத்த வேல் ஏந்தல் இனிது
என்ற வள்ளுவரின் சிந்தனைகள், மாந்தர்களின் உயர்ந்த உள்ளத்தை - உயர்வான இலக்கை அமைத்துக் கொள்ள வலியுறுத்துகின்றன.
            24 வயதாகும் அவனி சதுர்வேதி என்ற பெண் சமீபத்தில் ஒரு சாதனை நிகழ்த்தி உள்ளார். பிப்ரவரி 19 அன்று `மிக்- 21 பைசன்` (Mig-21 Bison) என்ற போர் விமானத்தைத் தனியா ஓட்டி முதல் இந்தியப்பெண் போர் விமானி என்ற சிறப்பைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளார். இது இவரின் உயர்ந்த இலக்கைச் சுட்டிக் காட்டுகிறது.
உயர்ந்த இலக்கை நிர்ணயித்துக் கொண்டு விட்டால் மட்டும் வெற்றி கிட்டிவிடுமா? அது ஒரு படிக்கல் அவ்வளவே. அதற்கு அடுத்த படிக்கல் அந்த இலக்கை அடைவதற்குத் தேவையான உழைப்பு கடின உழைப்பு. உழைப்பிற்குத் தகுந்த ஊதியம் உலக நியதி. உழைப்பு அர்த்தமுள்ள உழைப்பாக இருக்க வேண்டியது இன்றி அமையாதது. அர்த்தமற்ற உழைப்பு விழலுக்கு இறைத்த நீராகப் பொருளற்றுப் போகக்கூடும்!
தாமஸ் ஆல்வா எடிசன் சொல்கிறார், "ஒரு தோல்வி ஏற்பட்டால் மேலே முயற்சி செய்யாமல் இருப்பதுதான் நமது பலவீனமே. இன்னுமொருமுறை முயற்சி செய்து பார்ப்போமே எனும் எண்ணம்தான் வெற்றிக்கு நிச்சயமானவை" என்று கூறுகிறார்.
புத்தகங்களைத் தொடர்ந்து படித்து வந்தால் அறிஞர்களின் பொன்மொழிகளை நம்மால் அறிய முடியும். நாம் எல்லாம் படித்து முடித்துவிட்டோம் என்று எண்ணுவது சுலபம். ஆனால் கற்றது கைம்மண்ணளவுதான் என்பது புத்தகச் சுரங்கங்களைத் தோண்டத் தோண்டப் புரியும். எனது வாழ்க்கையின் பல்வேறு நிலையில் உறுதுணையாக இருந்து, வழிகாட்டியாகத் திகழ்ந்தது திருக்குறள் என்று மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறியுள்ளார்.
அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா வரண்.
            இந்தக் குறள்தான் தனது வாழ்விற்கு வளம் கொடுத்தது என்று அவரே ஒரு மேடையில் பேசும் போது கூறியுள்ளார். இதன் பொருள் அறிவு என்பது அழிவு வராமல் காக்கும் கருவியாகும். மேலும் எத்தகைய சூழ்நிலையிலும் பகைவராலும் கூட அழிக்க முடியாத அரண் போல காத்து நிற்கும் என்பதாகும். பூமிக்கு மேலே,  பூமிக்கு கீழே,  பூமியில் என எந்த விதத்தில் எந்த அழிவு ஏற்பட்டாலும் அறிவை அழிக்க இயலாது என்பது மட்டுமே நிதர்சனமான உண்மையாகும்.
ஹாரிபாட்டரை உருவாக்கிய ஜே.கே.ரௌலிங்கைப் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. மணமுறிவானதால் நிலைகுலைந்திருந்த பெண்மணி. கீசலைப்போலவே இவருக்கும் குழந்தைகளுக்கான புத்தகம் எழுதவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அவருக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது. போதுமான பண வசதியில்லாததால் கிடைக்கும் நன்கொடைகள் மூலமே வாழ்க்கை நடத்தி வந்தார். ஆனாலும் தான் எழுதவேண்டும் என்ற முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்தார். கொஞ்சம் கொஞ்சமாக தனது ஹாரிபாட்டர் கதையைப் பல வருடங்கள் தொடர்ந்து எழுதினார். அவருக்குத் தான் எழுதும் கதை மற்றவர்களுக்குப் பிடிக்குமா என்று சந்தேகம். பல பதிப்பாளர்கள் அவரது புத்தகத்தைப் பிரசுரிக்க மறுத்துவிட்டார்கள் ஒருவரைத் தவிர. அந்த எழுத்தாளரின் விடாமுயற்சிக்குக் கிடைத்த பரிசு இது.
ஹாரிபாட்டர் புத்தகங்கள் இன்று எவ்வளவு பிரபலமானவை என்று நாம் அனைவரும் அறிவோம். 2004ம் ஆண்டுக்குள் நூற்றுக்கணக்கான கோடி டாலர்கள் அவருக்குக் கிடைத்தது. லட்சக்கணக்கானோர் அவரது புத்தகங்களை வரிசையில் காத்து நின்று வாங்கினார்கள். அவரது விடாத முயற்சி அவருக்கு அலாவுதீனின் அற்புத விளக்காக இருந்தது. அவரது விடாமுயற்சிக்கு முன்னால் ஹாரிபாட்டரின் மந்திர வித்தைகள் கூட ஒன்றுமே இல்லை எனலாம்!
 தொட்டிலை ஆட்டும் கை
  தொல்லுலகை ஆளுங்கை
என்பதை உலகுக்குக் காட்டும் வழியில் பெண்கள் இன்று செயல்பட்டு வருகிறார்கள். பெண்கள் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என்பதை நன்கறிந்து வளர்ச்சிப் பணியில் ஈடுபட்டுத் தாங்களும் வாழ்ந்து பிறரும் வாழ வழி செய்கிறார்கள். முன்னேற்றப் பாதையில் முனைந்து சென்று நாடு உயர, மேன்மையுற தங்களை அர்ப்பணிக்கின்றனர்.
அத்தகைய பெண்களாக நாளைய உலகத்தைப் படைப்பவர்களாக நீங்கள் விளங்க வேண்டும். மண்ணுக்குள் விதைக்கப்பட்ட விதைகளாக நீங்கள். இந்த மண்ணைப் பிளந்து விருட்சங்களாக வெளிவரும் முயற்சியைக் விட்டுவிட்டால் விருட்சமாக வருவதற்கு வாய்ப்பில்லை. வாழ்க்கையின் உன்னதம் சலுகைகளில் சிறைபட்ட கூண்டுக்கிளியாய் இருப்பதில் இல்லை; பூமியைப் பிளந்து வெளியே வரும் விதையின் வீரியத்தில் உள்ளது. இருந்த இடத்தில் இருப்பேன், தானாக வந்து விழுவதைத் தின்பேன் என்று மலைப்பாம்பு வேண்டுமானால் இருக்கலாம் அப்படி மனிதர்கள் இருப்பது இழிவு.
உங்கள் மீது உங்கள் பெற்றோர்கள் நம்பிக்கைக் கொண்டுள்ளனர்; உங்கள் மீது உங்கள் பேராசிரியர்கள் நம்பிக்கைக் கொண்டுள்ளனர்; அது போன்று உங்கள் மீது மிகுதியான நம்பிக்கை வைத்திருப்போர்களில் நானும் ஒருவன். புதியதோர் உலகம் செய்வோம் என்னும் புரட்சிக் கவியின் வாக்கினை மெய்ப்பிக்கும் வேளை வந்துவிட்டது. உங்களைவிடச் சிறந்த திறன் பெற்றவர் யார் இருக்க முடியும்? உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி. ஆகவே, 
                                    உன் தலையை புகழால் அலங்கரி
                                    மகுடங்களால் அலங்கரிக்காதே!
                                    ஏனென்றால்….
                                    மகுடங்கள் தலைமாறக் கூடியவை.
என்ற கவிஞர் அப்துல்ரகுமான் கவிதையுடன் இவ்விழாப் பேருரையை நிறைவு செய்கின்றேன். நன்றி வணக்கம்.

வளர் அன்புடன்,
முனைவர் க. துரையரசன்,
எம்.., எம்.எட்., எம்ஃபில்., பி.எச்.டி.,
தேர்வு நெறியாளர்,
பாரதிதாசன் பல்கலைக்கழகம்
திருச்சிராப்பள்ளி

கருத்துகள் இல்லை: