ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

படித்ததில் பிடித்தது - 3

கொரோனா 19 ஊரடங்கு கால விடுமுறையில்
 நான் படித்த புத்தகங்கள் பற்றிய பதிவு

கொரோனா 19 ஊரடங்கு (COVID 19 Lockdown period) காரணமாக மார்ச் 17 முதல் மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மார்ச் 23 முதல் ஏப்ரல் 14 வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்டது. இதன்  தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஏப்ரல் 15 முதல் மே 3 வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்டது. 
இக்காலக்கட்டத்தில் நான் கீழ்க்கண்ட மூன்று நூல்களை இதுநாள் வரைப் படித்துள்ளேன். அவை:

1. தமிழருவி மணியன் எழுதிய 'ஊருக்கு நல்லது சொல்வேன்'
2. சுகி. சிவம் எழுதிய எது தர்மம்?
3. தமிழ்திசை வெளியீடாக அமைந்த 'மாபெரும் தமிழ்க்கனவு'

இவை குறித்த சுருக்கமான செய்திகள்:

1.  ஊருக்கு நல்லது சொல்வேன்: 

நெஞ்சில் பட்டதை நேர்படச் சொல்வேன் என்ற முழக்கத்தோடு இந்நூலைத் தொடங்குகிறார் தமிழருவி மணியன். இதில்,
1. துறவு   2.தாய்மை  3.குடும்பம்  4. புலனடக்கம்,  5. மதம்,   6. மனிதம்,  7. நட்பு,   
8. நன்றி,   9. முயற்சி,  10. வாழ்க்கை.  11. தானம்,   12. ஆசை,   13. நேர்மை,  
14. மன்னிப்பு,   15. அடிக்கற்கள்,    16. ஊக்கம்,   17. திறுவகோல்,   18. அந்தநாள்,      19. காதல்,   20. மரியாதை,   21. மரணம்,   22. அடக்கம்,   23. பெண்,  24. ஒருமை      
25. பேச்சு,   26. புத்தகம்,   27. முதுமை,  28. ஒருமனம்,   29. சும்மா,   30. கற்பு,  
31. சினிமா,   32. பத்திரிகை,  3 3. அரசியல்,   34. மயக்கம்,   35. புகழ்,  36. கல்வி,    
37. புரட்சி,  38. காந்தியம் 

ஆகிய 38 தலைப்புகளில் நல்ல கருத்துகளை வாழ்வியலுக்கு ஏற்ற கருத்துகளைப் பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.

உண்மையில் துறவு மேற்கொண்டவர்கள் தந்தை பெரியார், தோழர் ஜீவானந்தம், பெருந்தலைவர் காமராஜர். (துறவு)

கௌரவர்களின் தாய் காந்தாரி - கணவனுக்குக் கண் தெரியாது என்பதால் வாழ்நாள் முழுக்கக் கண்களைப் பட்டுத் துணியால் மூடிக்கொண்டு வாழ்க்கை நடத்தியவள்.

போர்மேகம் சூழ்ந்த நிலையில் துரியோதனனை அழைத்து நீ பிறந்த மேனியாக என் முன் வந்து நில், என் கற்புத் தவத்தால் என் பார்வை படும் உன் மேனியெல்லாம் வலிமை பெறும் என்கிறாள்.

துரியோதனன் தாயின் முன் நிர்வாணமாக வருவதற்கு வெட்கப்பட்டு  இடுப்பில் அரையாடை அணிந்து வந்தான். பட்டுத்துணி நீக்கி துரியோதனனைப் பார்த்தாள். தொடை தவிர மற்றப் பகுதிகள் வலிமை பெற்றது. பாரதப்போரில் துரியோதனனின் உயிர் தொடை வழியாகப் பிரிந்தது.

துறவியை அவரது தந்தை சந்திக்க நேர்ந்தால் தந்தை துறவியின் காலில் விழுந்து வணங்க வேண்டும். அதே துறவியைத் தாய் சந்தித்தால் துறவி தாயின் காலில் விழுந்து வணங்க வேண்டும்.

சிருங்ககிரியில் சீடர்களுடன் இருந்தவருக்கு அவரின் தாய் ஆர்யாவின் மரணப்படுக்கைக் கண்முன் நிழலாடியது. ஆதிசங்கரர் உடனே தாயின் இருப்பிடம் (காலடி) நோக்கி சென்றார். ஆதிசங்கரரின் தாயின் ஏற்கனவே விடுத்திருந்த வேண்டுகோளுக்கிணங்க சாகும் தருணத்தில் ஆதிசங்கரரின் மடியில் தலைசாய்த்து உயிர் துறந்தார்.

துறவியாகிய நீ இறுதிச்சடங்கு செய்யக்கூடாது என்று ஊராரும் உறவினரும் மிரட்டிய போது அதனையும் மீறி தாய்க்கு இறுதிச் சடங்கு  நிகழ்த்தினார் ஆதிசங்கரர். தாயை இழந்த வேதனையை ஐந்து பாடல்களில் கொட்டித் தீர்த்தார் ஆதிசங்கரர். அதுவே வடமொழியில் 'மாத்ருகா பஞ்சகம்' என்று கொண்டாடப்படுகிறது.

பட்டினத்தாருக்கும் இதே நிலைதான். தாய் இறந்ததை அறிந்து ஓடோடினார். சுடுகாட்டில் தாயின் உடலுக்குத் தீ மூட்டும் நிலையில் மூடப்பட்டிருந்த்து. உடல் மேல் விழுந்து அழுது புரண்டார். உடல் மேல் அடுக்கி இருந்தவற்றைத் தூக்கி வீசிய அவர் பச்சை வாழை இலைகளை உடல் மேல் இட்டு சான நெருப்பால் எரித்தார், தாயின் தியாகம் குறித்து அற்புதமான 10 பாடல்களைப் பாடினார்.

இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது இறுதிமூச்சில் தன் தாயை நினைந்து கொண்டார்.

நபிகள் தாயின் காலடியில் தான் சொர்க்கம் உள்ளது என்று நபிகள் நவின்றார். (தாய்மை)
 அமைதியான குடும்ப வாழ்க்கை இன்றியமையாதது. ஆனால் அது அனைவருக்கும் வாய்ப்பது அரிதாக இருக்கிறது.
மில்டன்- சுவர்க்க நீக்கம் எழுதியவர் - அரச குடும்பத்துப் பெண்ணை (மேரி) மணந்தார். ஏழ்மையான இவருடன் வாழ முடியாது என்று மனைவி விவாகரத்து வாங்கிச் சென்று விட்டார். மில்டன் அதன் பிறகு இரண்டு திருமணங்கள் செய்து கொண்டார். முழுப் பார்வையை இழந்த இவர் இறுதி வரை குடும்பத்தில் அமைதியில்லாமலே இறந்து போனார்.

டால்ஸ்டாய் - சோன்யாவை மணந்தார் - அன்னா கரீனாவைத் தவறில்லாமல் எழுதி முடிக்க அவருக்கு மூன்று ஆண்டுகள் ஆனது. இரவில் நீண்ட நேரம் விழித்திருந்து அவரது தெளிவற்ற எழுத்துகளைத் திருத்தமாக எழுதிக் கொடுத்தவர் அவரது மனைவி சோன்யா. அதனை வெளியிடும் உரிமையை அவரது மனைவிக்குக் கொடுத்திருந்தார். பின்னர் எனது எழுத்தை நான் விற்க விரும்பவில்லை என்று கூறியது அவரது மனைவிக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவரது வாழ்க்கையில் சூறாவளி ஆரம்பமாயிற்று. எனவே, என்னைத் தேடி வராதே என்று 80 வயதில் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டைவிட்டு வெளியே போய்விட்டார் டால்ஸ்டாய்.  இறுதிவரை அவரது மனைவியின் முகம் பார்க்காமலே இறந்து போனார்.

நட்பு என்ற தலைப்பில் கர்ணன் - துரியோதனன், இராமன் - குகன், பாரி - கபிலர், கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார், ஏங்கல்ஸ் - காரல்மார்க்ஸ் ஆகியோரின் நட்புச் சிறப்பை வியந்து போற்றி இது போன்ற நட்பே வாழ்க்கைக்குத் தேவை என்று பறைசாற்றுகிறார்.

இங்ஙனம்,  தமிழிலக்கியங்கள், ஆங்கில இலக்கியங்கள், சமூக அறம் போன்ற பல்வேறு செய்திகளின் களஞ்சியத் தொகுப்பாக இந்நூல் உள்ளது. இந்நூல் தமிழருவி மணியனின் அறிவார்ந்த புலமைக்குக் கட்டியங்கூறுவதாக இருக்கிறது.
இந்நூலைப் படித்ததில் எனக்கு மிகுந்த மனநிறைவும் தெளிவும் கிட்டியது என்பதை மகிழ்வுடன் பதிவு செய்கிறேன்.

நீங்களும் படித்துப் பாருங்களேன்.

கருத்துகள் இல்லை: