ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

படித்ததில் பிடித்தது - 4

எது தர்மம்? - சுகி. சிவம்

தர்மம் நிலைத்தது, மாறாதது. இன்றைய காலச்சூழலில் கட்டாயம் பின்பற்ற வேண்டியது என்பது இந்நூலின் மையப்பொருள்.

வனத்தை சிங்கம் காக்கிறது; சிங்கத்தை வனம் காக்கிறது. இதற்கு வனசிம்ம நியாயம் என்று பெயர். அது போல நாம் தர்மத்தைக் காக்க வேண்டும். தர்மம் நம்மைக் காக்க வேண்டும்.

இங்கு  'தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்' என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

தர்மம் என்றால் என்ன? என்று முதலில் விளக்க முற்படுகிறார் நூலாசிரியர். ஏனெனில் சிலருக்குத் தர்மமாகத் தெரிவது சிலருக்கு அதர்மமாகப் போகிறது. சிலருக்கு அதர்மமாக இருப்பது சிலருக்குத் தர்மமாக இருக்கிறது என்று கூறும் இவர், 'உண்டாலம்ம இவ்வுலகம்' என்ற புறநானூற்று 182 ஆம் பாடலை மேற்கோள்காட்டி,
1. பகிர்ந்துண்ணுதல்,   2. கோபம் கொள்ளாமை,   3. கண்ணயராது காரியமாற்றுதல்   4. அஞ்சுவன அஞ்சல்  5. புகழெனின் உயிர் கொடுத்தும் காரியமாற்றல்,  6. பாவகாரியங்களை செய்யாதிருத்தல் 7. சுயநலத்திற்காக அன்றி பொதுநலத்திற்காக செயலாற்றுதல்   

இதுவே அறம் என்று கூறி விளக்குகிறார்.

மேலும் தர்மமா? தருமமா? என்பதையும் முன் வைப்பதோடு அறமும் தர்மமும் வெவ்வேறா? என்று கேள்வி எழுப்பி, தர்மம் என்பது வடசொல்லாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளலாம் என்று கருத்துரைக்கிறார். தர்மம் என்ற வடசொல்லுக்கு ஏறக்குறைய ஒத்த சொல்லாக அறம் என்ற தமிழ்ச் சொல்லைக் கருதலாமே ஒழிய இரண்டும் ஒன்று எனக் கூற முடியாது என்பது இவரது கருத்தாகும்.

இந்நூல்,  வேதசாஸ்திரங்களில்  குறிப்பிடப்படும் பத்து வகை தர்மங்களை விளக்கமாக எடுத்துரைக்கிறது. அவை:

1. வியக்தி தர்மம்              -            தனி மனித தர்மங்கள்
2. பரிவாரக தர்மம்            -           குடும்ப தர்மங்கள்
3. சமாஜ தர்மம்                 -            சமூக தர்மங்கள்
4. ராஷ்ட்ர தர்மம்              -           தேச தர்மங்கள்
5. மானவ தர்மம்               -           மனுஷ தர்மங்கள்
6. வர்ணாஸ்ர தர்மம்     -            வர்ணாஸ்ரங்கள் பின்பற்ற வேண்டிய தர்மங்கள்
7. ஆபத் தர்மம்                   -          ஆபத்துக் கால தர்மங்கள்
8. யுக தர்மங்கள்                -         இது நான்கு வகைப்படும்

  • கிருதயுகம்  - முழுக்க முழுக்க தர்மவான்கள் வாழ்ந்த காலம்                                                         (பசு நான்கு கால்களுடன் வாழ்ந்த காலம்)
  • திரேதாயுகம் - நான்கில் மூன்று பங்கு தர்மவான்கள்  வாழ்ந்த காலம்                                   (பசு ஒரு கால் ஊனமாகி மூன்று  கால்களுடன் வாழ்ந்த காலம்)
  • துவாபரயுகம்  - பாதி அளவு தர்மவான்கள்  வாழ்ந்த காலம்                                    (பசு இரண்டு கால்கள்  ஊனமாகி இரண்டு  கால்களுடன் வாழ்ந்த காலம்)
  • கலியுகம் -நான்கில் ஒருபங்கு மட்டுமே தர்மவான்கள் வாழ்கின்ற  காலம்                   (பசு மூன்று கால்கள் ஊனமாகி ஒரு காலுடன் வாழ்கின்ற காலம்)
9. ஆஸ்ரம தர்மம் - மனித வாழ்க்கயின் வெவ்வேறு காலக்கட்டங்கள்
  • பிரமசரியம்                      - மாணவப் பருவம்
  • கிருகஸ்தம்                     - இல்லற வாழ்க்கை
  • வானப் பிரஸ்தம்           - ஓய்வு வாழ்க்கை 
  • சந்நியாசம்                       - ஆன்மீக வாழ்க்கை
10. ராஜதர்மம்    - நாட்டை ஆளக்கூடியவர்கள் பின்பற்ற வேண்டிய தர்மங்கள்


இவற்றுள் சில இக்காலத்திற்குப் பொருந்தாதவை போல தோன்றினாலும் சற்று மாற்றி பின்பற்ற வேண்டியவை என்றும் மனிதர்கள் மேற்சொன்னவற்றை முழுவதுமாக இல்லாவிட்டாலும்  இயன்ற அளவாவது பின்பற்ற வேண்டும் என்றும் ஆசிரியர் வேண்டுகோள் விடுக்கிறார்.

நூலின் முத்தாய்ப்பாக 'உங்களுக்குப் பிறர் எதையெல்லாம் செய்ய வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்களோ அதை நீங்கள் பிறருக்கு செய்யுங்கள், அதுவே தர்மம்  என்று வரையறை செய்கிறார்.

தங்கம் மாறாது; தங்க நகைகளின் வடிவங்கள் மாறுவது போல் 
தர்மங்கள் மாறாது; தர்மங்களின் வடிவங்கள் மாறும் 

என்று முடிக்கும் சுகி. சிவம் அவர்களின் இந்நூல் அவரது சொற்பொழிவைக் கேட்ட இன்பத்தை அள்ளித் தந்தது.

கருத்துகள் இல்லை: