திங்கள், 9 பிப்ரவரி, 2009

குமரகுருபரரின் சிந்தனைகள்

3. குமரகுருபரரின் சிந்தனைகள்

சிற்றிலக்கிய வேந்தர் என்ற பாராட்டுக்கு உரியவர் குமரகுருபரர். இவர் 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.


திமிரமது அகற்றுந் தெய்வக் கவிஞன்குமரகுருபரன் குரைகழல் வெல்க
என்ற தனிப்பாடலுக்கு ஏற்பத் தமிழ்க் கவிஞராகவும், தெய்வக் கவிஞராகவும் மலர்ந்து மணம் வீசியவர் குமரகுருபரர். மக்களின் அறியாமை இருளை அகற்றி அறிவு புகட்டிய தமிழ்க் கவிஞர்களுள் குமரகுருபரருக்கு என்று தனித்த இடம் தமிழிலக்கிய வரலாற்றில் உண்டு. இவர், பிற்காலத்தில் தோன்றிய மரபுக் கவிஞர்கள் முதல் பாரதிதாசன் வரை உள்ள வரிசையில் ஒருசேர வைத்து போற்றத்தக்கவர்.


திருவைகுண்டத்தில் பிறந்த இவர் ஐந்து வயது வரை வாய் பேசமுடியாத ஊமையாக இருந்தார். பின்னர் திருச்செந்தூர் முருகப் பெருமான் திருவருளால் பேசுகின்ற திறம் பெற்றார். கந்தர் கலி வெண்பா முதலாக 16 இலக்கியங்களைப் படைத்தருளினார். இவர் எழுதிய மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் நூலைக் கேட்டு மதுரை மீனாட்சியம்மையே நேரில் எழுந்தருளி வந்து அவருக்குத் தம் கழுத்தில் கிடந்த முத்து மாலையை அணிவித்து மகிழ்ந்தாள் என்று கூறுவர்.


இவர் எழுதிய நீதி நெறி விளக்கம் என்ற நூலின் துணை கொண்டு இவர்தம் சிந்தனைகளைத் தொடர்ந்து நோக்குவோம். நூலின் காப்புச் செய்யுளே மனித வாழ்க்கையைப் பற்றி மிக்க நேர்த்தியாக எடுத்துரைக்கிறது. அப்பாடல் இதுதான்;


நீரில் குமிழி இளமை நிறைசெல்வம்நீரில் சுருட்டும் நெடுந்திரைகள் - நீரில்எழுத்தாகும் யாக்கை நமரங்காள் என்னேவழுத்தாதது எம்பிரான் மன்று.

மனிதனின் இளமைப்¢பருவம், மனித உடல், அவனால் முயன்று சேர்க்கப்¢படும் செல்வம் ஆகியவற்றைப் பற்றிய குமரகுருபரரின் சிந்தனைகளை மனிதர்கள் ஒவ்வொருவரும் மனத்துள் இறுத்தினால் மனித வாழ்வில் பொய் இல்லை - புரட்டு இல்லை - மனிதனை மனிதன் ஏய்க்கும் அவலம் இல்லை.

நீர்க் குமிழிகள் ( Bubbles) தோன்றுவதும் தெரியாது - மறைவதும் தெரியாது - தோன்றிய மாத்திரத்திலேயே மறைந்துபோகும். இந்த நீர்க்குமிழி போன்றதுதான் மனிதனின் இளமைப் பருவம். இது தெரியாமல் மனிதர்கள் இந்த இளமைப்¢ பருவத்திலே என்னென்ன செயல்களிலே ஈடுபடுகின்றார்கள்?
தண்ணீரில் எழுத முடியுமா? முடியும் என்கிறார் குமரகுருபரர். ஆனால் அந்த எழுத்து நிலைத்து நிற்காது - எவருடைய கண்ணுக்கும் தெரியாது. நீரில் எழுத எழுத அழிந்து கொண்டே போகும். அது போன்றதுதான் மனித உடம்பு. நீர்க் குமிழி கூட கண்ணால் பார்க்க முடியும். சற்று நேரம் நிலைத்து நிற்கும். ஆனால், நீர் மேல் எழுதப்¢படும் எழுத்து அதனினும் வேகமாக அழிந்து போகக் கூடியது.

அரும்பாடுபட்டு மனிதர்கள் சேர்க்கும் செல்வத்தின் கதியோ அதோகதிதான். நீரில் தோன்றுகின்ற அலை போன்றதாம் மனிதர்கள் சேர்க்கும் செல்வம். நீரின் நடுவே தோன்றுகின்ற அலை கரையை அடைவதற்குள் காணாமல் சிதைந்து போய்விடும். அதுபோல மனிதன் பாடுபட்டுத் தேடிய செல்வம் அவனுக்குப் பயன்படுவதற்கு முன்பே காணாமல் போய்விடும் அல்லது அதனைப் பயன்படுத்துவதற்கு முன்பே இவன் இல்லாமல் போய்விடுவான். இருப்¢பது போல இல்லாமல் போகும் அலைபோலவே செல்வமும் இருப்¢பது போல இல்லாமல் போய்விடும்.

எனவே, மனிதன் மிகவும் நம்பிக்கொண்டிருக்கின்ற தன் உடல், இளமை, செல்வம் ஆகியவை விரைந்து அழிந்து போகக் கூடியவை. அதனை நம்பி வாழ்க்கையைத் தொலைத்து நிற்க வேண்டாம் என்பது குமரகுருபரரின் கருத்தாக உள்ளது.

அடுத்து கல்வி பற்றிய அடிகளாரின் கருத்தினை நோக்குவோம்;
கல்வி இம்மைப் பயனாகிய அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றைத் தர வல்லது. கல்வியைப் போன்று மக்களுக்குத் துயர் மிக்க நேரத்தில் துணையாகும் பொருள் வேறு எதுவும் இல்லை. இதனை,
அறம்பொருள் இன்பமும் வீடும் பயக்கும் புறங்கடை நல்லிசையும் நாட்டும் - உறுங்கவலொன்றுஉற்றுழியும் கைகொடுக்கும் கல்வியின் ஊங்கில்லைசிற்றுயிர்க்கு உற்ற துணை என்ற பாடல் மூலம் உணர்த்துகிறார் அடிகளார்.

ஒரு மனிதன் காமத்தை விரும்புகிற அளவிற்குக் கல்வியை விரும்புகிறானா என்றால் இல்லை என்றே கூற வேண்டும். காமத்தைக் காட்டிலும் கல்வியே உயர்ந்தது எனபதை வலியுறத்த முனைகிறார் குமரகுருபரர். கல்வியானது தொடக்கத்தில் துன்பமாய் இருக்கும்; பின்னர் இன்பம் தரும். ஆனால் காமம் தொடக்கத்தில் இன்பமாய்; பின்னர் துன்பம் தரும். எனவே கலவி¢யைப் பற்றி வாழ வேண்டுமே ஒழிய மனிதர்கள் காம நெறியைப் பற்றி வாழ்தல் கூடாது என்று வலியுறுத்துவதற்காக பின்வரும்¢ பாடலைப் புனைந்துள்ளார்.
தொடங்குங்கால் துன்பமாய் இன்பம் பயக்கும்மடங்கொன்று அறிவகற்றும் கல்வி - நெடுங்காமம்முற்பயக்குச் சின்னீர இன்பத்தின் முற்றிழாய்பிற்பயக்கும் பீழை பெரிது.

கல்வியின் பயன் யாது எனில் அறிவு பெறுவதுதான். தான் அறிந்தவற்றைப் பிறர் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் எடுத்துரைக்கும் சொல்லாற்றல் இல்லையாயின் கற்ற கல்வியினால் யாதொரு பயனும் இல்லை என்று வள்ளுவத்தின் கருத்தை அடிகளார் வழிமொழிந்து கூறுகிறார்.
அவையின்கண் எடுத்துரைக்க அஞ்சுவார் பெற்ற கல்வியானது கல்லார் முன் பேசும் ஆரவாரச் சொல்லைப் போலவும், பிறருக்குக் கொடுத்துத் தானும் உண்ணாதார் செல்வம் போலவும், வறுமையில் வாடுபவர் பெற்ற அழகு போலவும் பயனற்றது என்பதை,

அவையஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியும் கல்லார்அவையஞ்சா ஆகுலச் சொல்லும் - நவையஞ்சிஈத்துண்ணார் செல்வமும் நல்கூர்ந்தார் இன்னலமும்பூத்தலின் பூவாமை நன்று

என்ற பாடல்வழி வலியுறுத்துகிறார். இதனை,
கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்நல்லார் அவையஞ்சு வார்
என்று வள்ளுவரும் கூறியிருப்¢பதைக் காணலாம்.

கற்றவற்றை நினைவில் வைத்திருத்தலும் மிக முக்கியமானது என்று அடிகளார் கருதுகிறார். அவ்வாறு கற்றவற்றை நினைவில் வைத்துக் கொள்ளாமல் மேலும் மேலும் புதிது புதிதாக கற்க நினைப்¢பது பாடுபட்டுத் தேடிய செல்வத்தைத் தொலைத்து விட்டு, மீண்டும் கடினப்¢பட்டு உழைத்துச் செல்வத்தை ஈட்டுதற்கு ஒப்பாகும்.

எனவே, கல்வியே பிற அனைத்தையும் விட சிறந்தது என்பதையும் அதனைக் கற்றவாறு நினைவில் வைத்து அதற்கேற்ப ஒழுகுதல் வேண்டும் என்பதும் குமரகுருபரரின் கருத்தோவியமாக இருப்¢பதை அறிய முடிகிறது.

கருத்துகள் இல்லை: